தென்னிலங்கையால் முன்வைக்கப்பட்டதே சமஷ்டித்தீர்வு! -ஐ.வி.மகாசேனன்-

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய உரையாடல்களே இலங்கை அரசியலில் சமகாலத்தின் மைய உரையாடலாக காணப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தமிழ் கட்சிகளுடன் உரையாட உள்ளதாத அறிவித்துள்ளார். பிரதமர் சர்வ கட்சி கூட்டத்துக்கான அழைப்பை சபாநாயகரூடாக முன்னெடுப்பதாகவும் செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தமிழ் கட்சிகள் சமஷ்டி பற்றிய உரையாடல்களையும் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் ஒற்றையாட்சிக்குள் 13, 13பிளஸ் மற்றும் மாவட்ட அபிவிருத்தி சபைகளை பற்றியும் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள முரண்பாட்டு எண்ணங்கள் ஒரு தளத்தில் பயணிக்குமா? தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு 75வது சுதந்திர தினத்துக்குள் சாத்தியப்படுமா? என்பதில் சந்தேகங்களும் ஐயப்பாடுகளுமே மீதமாகிறது. இக்கட்டுரை தமிழர்கள் முன்வைக்கும் சமஷ்டி கோரிக்கை தான் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பதனை தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முன்னிலைப்படுத்தி உள்ளமையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

சமஸ்டி என்றால் நாடு ஒன்பது துண்டாகி விடும் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், 'சிங்களவர்களுக்கு ஒரே நாடே இலங்கை. இதனாலேயே இலங்கையை 'சிங்களே' என்று முன்னைய காலத்தில் அழைத்துள்ளனர். நாடு சமஷ்டியாகி 9 துண்டுகளாகினால் வடக்கு, கிழக்கில் சாசனத்தை பாதுகாக்க முடியாது.' என சமஷ்டி கோரிக்கைக்கு எதிரான பேரினவாத மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார். தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் அதிகாரத்துக்காக விதைத்துள்ள விதையாகவே சமஷ்டி பிரிவினைவாத கருத்தியல் அமைகின்றது. 

பல்லின சமூக கட்டமைப்புடைய தேசங்களில் நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வடிவமாக சமஷ்டி சர்வதேசரீதியில் முதன்மை பெறுகின்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா நாடுகள் தமது உள்ளக மோதலை சமஷ்டி அரசியலமைப்பு மூலம் தீர்த்துக் கொண்டது. 1950களில் தமிழ் அரசியல் சமஷ்டி கோரிய காலத்திலிருந்து, சிங்கள அரசியல் நாட்டின் தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என்று நிராகரித்தே வருகிறது. சமஷ்டி என்பது பிரிவினைக்கான முதல் படியாக அமைகின்றது என்ற பிரச்சாரத்தை முதன்மைப்படுத்தி வருகின்றார்கள். முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் யூகோஸ்லாவியாவின் எடுத்துக்காட்டுகள் பிரிவினைக்கான முன்னுதாரணங்களாகவும் எடுத்தியம்ப முயலுகின்றார்கள். மறுபுறம், ஒற்றையாட்சி அரசாங்கம் நாட்டை பிளவுபடாமல் பாதுகாக்கும் என்பதே சிங்கள பேரினவாத தரப்பின் வாதமாக உள்ளது.  இருப்பினும், சூடான் (தெற்கு சூடானாகப் பிரிக்கப்பட்டது) மற்றும் செர்பியா (கொசோவோ) போன்றன ஒற்றையாட்சி கட்டமைப்பின் பலவீனத்தால் தனி அரசுகள் உருவாகிய அண்மைய உதாரணங்களாகும். சூடான் மற்றும் செர்பியாவில் தங்கள் தேசிய இனங்களின் உறவுகளை ஆக்கபூர்வமான முறையில் நிர்வகிக்காதான் விளைவினதாகவே ஒற்றையாட்சி நாடுகள் கூட பிரிக்கப்பட்டுள்ளன. இப்புரிதலுக்குள் தென்னிலங்கை பயணிக்க தவறுகின்றது.

சர்வதேச அனுபவங்களுக்கு புறத்தே இலங்கையின் சமஷ்டி பற்றிய உரையாடலை ஆரம்பத்தில் முன்னிறுத்தியவர்களாக சிங்கள சமூகமே காணப்படுகின்றது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, சமஷ்டி பற்றிய சிங்கள சமூகத்தின் அணுகுமுறை வேறுபட்டது. சில சிங்களவர்கள் சமஷ்டியை முன்னிறுத்தினர். சிலர் ஆதரித்தனர். இன்னும் சிலர் பின்னாட்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறிமுறையில் சமஷ்டி இயல்புகளை உள்வாங்கியிருந்தனர். சமஷ்டிக்கான நியாயப்பாட்டை தென்னிலங்கை அரசியலின் வெளிப்பாட்டில் நுணுக்கமாக பார்ப்பது அவசியமாகிறது. 

முதலாவது, இலங்கையிலிருந்து சமஷ்டிக்கான முதல் கோரிக்கை 1926களில் கண்டிச்சிங்கள சமூகத்திடமிருந்து குறிப்பாக எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாராநாயக்காவினாலேயே முன்வைக்கப்பட்டது. பின்னாட்களில் சிங்கள பேரினவாதத்திற்கு உரமூட்டும் வகையில் பௌத்த சிங்கள மேலாதிக்கங்களை அரசியலமைப்புரீதியாக கட்டமைத்த பண்டாரநாயக்கா அவர்களே இலங்கையில் முதலில் சமஷ்டிக்கோரிக்கையை முன்வைத்தவராக காணப்படுகின்றார். பிரதானமாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஓர் அலகாகவும், மலைநாட்டு மாகாணங்கள் இன்னொரு அலகாகவும், கரையோரச் சிங்களவர்கள் செறிவாக வாழ்ந்து வரும் தென் மற்றும் மேல் மாகாணங்கள் பிறிதொரு அலகாகவும் மூன்று சுயாட்சி அலகுகள் வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1926ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு தனது முதல் விஜயத்தின் பின்னர், சுதந்திரத்திற்குப் பிறகு சிங்களவர்களும் தமிழர்களும் ஒன்றாக வாழ்வதற்கான ஒரே கௌரவமான வழி சமஷ்டி முறை என்று அவர் வாதிட்டிருந்தார். தமிழ் அரசியல் தரப்பில்  1949இலேயே சமஷ்டியை முதன்முதலில் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 1954இல் இலங்கை சுதந்திரக் கட்சி அரசியல் அதிகாரத்தினை கைப்பற்றியபோது, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா எப்படி திடீரென சிங்களவர்களுக்காக வாதிட்டார் என்ற கேள்வி, அவர் இலங்கையின் தேசிய நலன்களை விட தனது தனிப்பட்ட நலன்களையே முதன்மைப்படுத்தினார் என்பதே உறுதியாகிறது. அந்த முடிவின் பேரழிவு விளைவுகளை இன்றுவரை நீள்கிறது. 

இரண்டாவது, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை தேசியச் சங்கம் இணைந்து இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் ஓர் ஆவணமாக 1944.10.02இல் ஓர் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. குறித்த அறிக்கை தமிழ்த்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து சமஷ்டி அலகின் நியாயயப்பாட்டை வலியுறுத்தியது. குறித்த அறிக்கையில், இலங்கை மக்களின் சமத்துவத்தையும் இறைமையையும் அங்கீகரித்தல்ளூ சிங்கள தமிழ் தேசிய இனங்களுக்கு சுதந்திரமும் சுயநிர்ணய உரிமையும் உண்டு என்பதை அங்கீகரித்தல்ளூ மேற்படி தேசிய இனங்கள் தமக்கென தனியான அரசை நிறுவ விரும்பினால் அதற்கான உரிமையை அங்கீகரித்தல் எனும் விடயங்கள் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது, 1956ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் மற்றும் 1965ஆம் ஆண்டு டட்லி-செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றின் உள்ளடக்கங்கள் அதிகாரப்பகிர்வே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதனை ஏற்றுக்கொள்ளும் நடைமுறைகளாக காணப்படுகின்றது. குறிப்பாக 1956ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் அரசாங்கத்தின் பிரதேச சபைகள் மசோதாவை ஆராய்ந்து, அதன் கீழ் தமிழரசுக் கட்சி கருத்திற் கொண்டிருக்கும் சில விடயங்களை நியாயமாக உள்ளடக்கக் கூடியதாக ஏற்பாடுகள் செய்ய இயலுமா என்று பார்க்குமாறு பிரதமர் ஆலோசனை கூறினார். அங்கு ஏற்பட்ட உடன்படிக்கையே பண்டா-செல்வா ஒப்பந்தமாக முனையப்பட்டது. அவ்வாறே டட்லி-செல்வா ஒப்பந்தத்திலும் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் தமிழ் நிர்வாக கடமைக்கான அங்கீகாரங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

நான்காவது, 1956களில் பண்டா-செல்வா ஒப்பந்தம் பிரதேச சபைக்குள் அதிகாரங்கள் பகிரப்படுகையில் பாதயாத்திரை மூலம் அதனை தென்னிலங்கையில் பிரிவினைவாதமாக பிரச்சாரப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்த்தனாவே பின்னாளில் சமஷ்டி பண்பான அதிகார பகிர்வை இலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ளும் நிலை காணப்பட்டது. குறிப்பாக 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 13ஆம் திருத்தத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ள மாகாணசபை முறைமை இலங்கையின் ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் காணப்படுகின்ற போதிலும், அதிகாரப்பகிர்வே இலங்கை தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையுமென்ற தார்ப்பரியத்தை தென்னிலங்கை அரசியல் உணர்ந்துள்ளமையின் வெளிப்பாடாகவே அமைகின்றது. பின்னாட்களில் ஓய்வுநிலை அரசியலில் ஜே.ஆர். ஜெயலர்த்தனாவிடம் சமஷ்டியே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ற கருத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற 1983ஆம் ஆண்டு இனக்கலவரம் தொடர்பில் லண்டன் டெய்லி டெலிகிராப்க்கு அளித்த நேர்காணலில், 'யாழ்ப்பாண மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. இப்போது அவர்களைப் பற்றி சிந்திக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் அபிப்பிராயத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள்.. உண்மையில் நான் தமிழர்களைப் பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.' எனக்குறிப்பிட்டுள்மையும் கவனத்திற்குரியதாக அமைகிறது. 

ஐந்தாவது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் தீர்வுப்பொதி தேசிய அரசியல் பிரச்சினைக்கு அடிப்படையான ஒற்றையாட்சியை நிராகரித்து பிராந்தியங்களின் ஒன்றியம் எனும் மாற்றீட்டை முன்மொழிந்தது. உள்பொதி வலுவான அதிகார பகிர்வை கொண்டிராத போதிலும் ஒற்றையாட்சி நிராகரிக்கப்பட வேண்டும் என்ற முன்யோசனை தென்னிலங்கையில் எழுந்தது என்பது ஆரோக்கியமான விடயமாகும். குறிப்பாக இன்று பேரினவாத சிங்கள தரப்பின் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஸ்தாக தலைவர் ஜி.எல்.பீரிஸ் அவர்களே குறித்த தீர்வுப்பொதி உருவாக்கத்தின் மூலவர்களில் ஒருவர் என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும். அதேநேரம் அன்றைய சந்திரிக்காவின் ஒற்றையாட்சி நிராகரிக்கப்ட்ட தீர்வுப்பொதியை பாராளுமன்றில் கிழித்தெறிந்தவரே இன்று ஜனாதிபதியாக இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, இன்று பேரினவாதம் பிரிவினையாக பிரச்சாரம் செய்யும் சமஷ்டி என்பது தென்னிலங்கை சிங்கள சமுகத்தின் எண்ணங்களிலிருந்தே உதயமாகியது. அதுமட்டுமன்றி இன்றுவரை தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது சமஷ்டி அடிப்படையிலானது என்பதை தென்னிலங்கை இனவாதிகளும் புரிந்தே உள்ளனர். எனினும் சந்தர்ப்பவாத அரசியலில் இலங்கை தேசியத்தை தாண்டிய சுயநல அரசியல் ஈடுபாட்டால் தென்னிலங்கை சமஷ்டியை பிரிவினையாக பிரச்சாரப்படுத்தி தங்களை இனப்பற்றாளர்களாக காட்சிப்படுத்தி சிங்கள மக்களையே ஏமாற்றி வருகின்றார்கள்.  எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 1926ஆம் ஆண்டு, 'சமஷ்டி முறைக்கு எதிராக ஆயிரத்து ஒரு ஆட்சேபனைகள் எழுப்பப்படலாம். ஆனால் ஆட்சேபனைகள் களையப்படும்போது, ஏதேனும் ஒருவகையான சமஷ்டி அரசாங்கமே ஒரே தீர்வு என்று நான் உறுதியாக நம்புகிறேன்' எனத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.  பண்டாரநாயக்காவின் சமஷ்டி தொடர்பிலான தெளிவான வார்த்தைகளே உண்iமாயானவை. மற்றும் இப்புரிதல் தென்னிலங்கை அரசியல் தலைமைகளிடம் உண்டு என்பதுமே உண்மையாகும். பண்டாரநாயக்கா போன்றே தொடர்ச்சியாக வந்துள்ள தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் இனவாதிகளாய் காட்சிப்படுத்தி சந்தர்ப்பவாத சுயநல அரசியலில் தமிழ் மக்களை மாத்திரமின்றி சிங்கள மக்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளார்கள். இலங்கை நாட்டையே பேரழிவுக்குள்ளும் தள்ளியுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-