இலங்கையின் மத நல்லிணக்கமும் சிங்கள பௌத்த அதிகார அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிலங்கையில் அரசியல் பொருளாதார நெருக்கடியை தாண்டி சமகாலத்தில் முதன்மைபெறும் உரையாடலாக மதவிவகாரம் அமைகின்றது. குறிப்பாக இலங்கை அரசியலமைப்புரீதியாக பாதுகாப்பு அளிக்கப்படும் சிங்கள பௌத்தத்திற்கு ஆபத்து என்ற செய்தியை தென்னிலங்கை அரசியல்வாதிகள் முதன்மைப்படுத்தி வருகின்றனர். இந்த பின்னணியில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை உருவாக்கி வருவதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். இக்கட்டுரை சமகாலத்தில் தென்னிலங்கையில் மத அடிப்படைவாத அபாயத்தை பற்றிய உரையாடலின் அரசியலைத் தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இனப் பிரத்தியேகவாதம் மற்றும் மத தீவிரவாதத்தின் உலகளாவிய மற்றும் பிராந்திய எழுச்சிக்கு இலங்கை விதிவிலக்கல்ல. இலங்கை அரசியலமைப்பின் விதிகளின் அடிப்படையில் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு, மத நல்லிணக்கம் என்ற உரையாடலில் ரணில் விக்கிரமசிங்க-பொதுஜன பெரமுன அரசாங்கம் சமகாலத்தில் அதிக முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சிங்கள நகைச்சுவை நடிகர் நதாஷா எதிரிசூரிய பௌத்த மதத்தை அவமதித்ததன் அடிப்படையில், பௌத்த விவகார ஆணையாளர் நாயகத்தினால் முறையான முறைப்பாட்டுக்கு அமைய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பௌத்தம் உள்ளிட்ட மதங்களை அவமதித்ததற்காக, தற்போது வெளிநாட்டில் இருக்கும் சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, இங்கு வந்தவுடன் கைது செய்யப்பட உள்ளார். இந்நிலையில் நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தி, நாட்டை மீண்டும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் சில குழுக்கள் திட்டமிட்டு செயல்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் குழுக்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க விசேட பொலிஸ் பிரிவு ஒன்றை ஸ்தாபிக்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இலங்கையின் அமைச்சர்கள், தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் பௌத்த மத துறவிகள் என பலரும் தொடர்ச்சியாக மத நல்லிணக்கம் பற்றிய செய்திகளை முதன்மைப்படுத்தி வருகின்றனர். பௌத்த மத அடிப்படைவாதத்தை மையப்படுத்தி அதிக சர்ச்சைக்குள்ளான பொதுபல சேனவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், இன, மதவாதப் பிரச்சினைகளுக்கு  எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

பௌத்த மதத்திற்கு எதிரான அவதூறல் பேச்சுக்களை முதன்மைப்படுத்தி, மத நல்லிணக்கத்திற்கான அச்சுறுத்தலாக அபாயக்குரல் மேலோங்கும் தென்னிலங்கையின் செயற்பாடுகள் கடந்தகால அனுபவங்களில் அதிக சந்தேகங்களை எழுப்புகின்றது. எவ்வாறாயினும், மக்களைத் தூண்டிவிட்டு, மத சகவாழ்வை சீர்குலைக்க முயல்பவர்கள் அனைவரும் சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும் வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டிற்கு இன-மத பிரச்சனை மூலோபாய நகர்வாக தென்னிலங்கை அரசாங்கத்திற்கு தேவைப்படுகிறதா என்ற சந்தேகமும் பொதுவெளியில் மேலெழுகின்றது. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, மத நல்லிணக்க சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் நடாஷh ஆகியோரின் செயற்பாட்டுகளுக்கு பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் காணப்படுகின்றதா என்ற சந்தேகத்தை முன்வைத்துள்ளார். எனவே, வரலாற்று பின்புலத்தில் இலங்கையில் மத முரண்பாட்டு சூழமைவை நுணுக்கமாக அறிதல் அவசியமாகின்றது.

ஒன்று, இலங்கையில் மத அடிப்படைவாதம் நீண்ட வரலாற்று பாரம்பரியத்தை உடையது. இலங்கையின் காலணித்துவகால தேசியவாதம் என்பதே மதத்தினடிப்படையிலேயே கட்டியெழுப்பப்பட்டது. அநாகரிக தர்மபாலாவின் பௌத்த மறுமலர்ச்சி இயக்கம், ஆறுமுக நாவலரின் இந்து மறுமலர்ச்சி இயக்கம் மற்றும் சித்திலெப்பவின் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கங்களே காலணித்துவ கால இலங்கை தேசியவாதத்தின் ஆரம்ப இயக்கங்களாகும். காலனித்துவ காலப்பகுதியில் நிலவிய அரசியற் சூழலில் பௌத்தம் அரசியல்மயப்பட்டதன் விளைவிலேயே, பின்-காலனித்துவ இலங்கையில் பௌத்தம் மதமாகவன்றி அரசியலாகப்பார்க்கப்படும் நிலை வளர்ச்சியடைந்தது. சிங்களத்தலைவர்கள் இலங்கையர்கள் அரசியல் விடுதலையை அடைய வேண்டுமானால் முதலில் மத விடுதலையை அடைய வேண்டும் என்ற பொதுப்புரிதலை உருவாக்கினார்கள். இந்த உணர்வெழுச்சியே சிங்கள பௌத்த தேசியவாதமாகப்பரிணமித்தது. இந்த உணர்வெழுச்சியை கொலினல் ஒல்கொட், அநகாரிக தர்மபால மற்றும் சில பௌத்த பிக்குகளும் ஒருசேர வளத்தெடுத்தனர். காலனித்துவ இலங்கையில் எழுந்த இப்பண்பாட்டுத் தேசியவாதத்தின் உண்மையான நோக்கம் காலனித்துவ சக்திகளிடமிருந்து பௌத்த மதத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி காலனித்துவ சக்திகளிடமும் ஏனைய சிறுபான்மையினரிடமும் நாட்டின் உரிமம் சிங்கள பௌத்தர்களுக்கேயுரியது என்ற ஒற்றைத்தேசிய அடையாளத்தைப் பரப்புவதாகவுமே இருந்தது. இவ்வளர்ச்சியின் போக்கையே இன்று பௌத்தத்துக்கான அச்சுறுத்தலை மத நல்லிணக்க அபாயமாக பிரச்சாரம் செய்யும் தரப்பினராலேயே குறுகிய கால இடைவெளியிலேயே, இஸ்லாம் மதம் மீது கடுமையான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டமையில் அவதானிக்கலாம். இலங்கையின் முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கம் பர்தா அணிவதைத் தடை செய்வதாகவும், நாட்டில் உள்ள 1,000 இஸ்லாமியப் பள்ளிகளை மூடுவதாகவும் அறிவித்தார். புர்கா என்பது 'மத தீவிரவாதத்தின் அடையாளம்' என்றும் தேசிய பாதுகாப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் மேற்கோள் காட்டினார். இது அரசாங்கத்தின் மத நல்லிணக்கத்திற்கெதிரான செயலாகும்.

இரண்டு, வரலாறுதோறும் இலங்கை அரசாங்கங்கள் நெருக்கடி உரையாடலை நீர்த்து போக செய்யவும், தமது அரசியல் இருப்பை பலப்படுத்தவும் மத அடிப்படைவாதத்தையே முன்னிறுத்தி வந்துள்ளது. 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை சுதந்திர கட்சி முதல் 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரையில் இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் தமது அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள மதஅடிப்படைவாதத்தையே பிரதான மூலோபாயமாக கைக்கொண்டுள்ளது. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்;கா 1956ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தனிச்சிங்கள சட்டம் மற்றும் பௌத்தத்தை அரச மதமாக்குதல் எனும் பிரச்சாரத்தை முன்னகர்த்தியிருந்தார். இவ்பிரச்சார அலை உயரளவில் பண்டாரநாயக்காவிற்கான ஆதரவை அதிகரிக்கையில் அன்றைய பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவும் பௌத்தத்தை முதன்மைப்படுத்தும் வகையில் செயற்பட ஆரம்பித்தார். புத்த பெருமானின் ஞானோதயத்தின் 2,500 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் புத்த ஜெயந்தியை அரச விழாவாக கொண்டாடுவதில் டி.எஸ்.சேனநாயக்க முக்கிய பங்காற்றினார். அவர் மகா சங்கத்தினருடனான முதல் சந்திப்பை ஆரம்பித்து வைத்தார். மேலும், திரிபீடகம் அச்சிடுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் டி.எஸ்.சேனநாயக்கவின் முன்னுரிமையாக இருந்தது. இவ்வாறே ராஜபக்ஷhக்களின் பொதுஜன பெரமுனாவின் எழுச்சிக்கு பின்னால் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலும் முஸ்லீம்களுக்கெதிரான அலையுமே காரணமென்பதே பரவலான கருத்தாக உள்ளது.

மூன்று, மத அடிப்படைவாதத்துக்கு எதிரான சட்டங்களை நேரிய முறையில் சமமான பார்வையில் இலங்கை அரசாங்கம் செயற்படுத்துமா என்பதில் வலுவான சந்தேகங்களையே முன்னைய அனுபவங்கள் உறுதி செய்கின்றது. மத பாகுபாடு குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அஹமட் ஷஹீட், இலங்கை அரசியலமைப்பு மத சுதந்திரத்தை பாதுகாக்கும் அதே வேளையில், பௌத்த மதத்திற்கு அரசால் முதன்மையான இடம் வழங்கப்படும் என்று அறிவிக்கிறது. இந்த விதியின் காரணமாக, அரசு மற்ற மதங்களை சமமான அடிப்படையில் நடத்த முடியாது என்று தாங்கள் கருதுவதாக ஷஹீட்-உடன் உரையாடியோர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பௌத்தர்களின் பிரசன்னம் குறைவாக உள்ள பிரதேசங்களில் கூட பௌத்த பிக்குகள் விகாரைகள் அல்லது பௌத்த சிலைகளை அமைக்க அரசை அனுமதிப்பதை மத சமூகங்கள் சுட்டிக்காட்டியதாகவும் ஷஹீட் கூறினார். சமகாலத்தில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துரைத்துள்ளதாக நதாஷா எதிரிசூரியவை கைது செய்துள்ளதுடன் ஜெரோம் பெர்ணான்டோவுக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், தாங்கள் கையாள வேண்டிய அத்துமீறல்களுக்கு அரசியல் தொடர்புகள் இருக்கும்போது இதுபோன்ற உயரளவிலான செயல்திறனை காவல்துறையினர் வெளிப்படுத்துவது இல்லை. காவல்துறை மற்றும் தொல்லியல் திணைக்கள பாதுகாப்பில் உள்ள வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய சிலைகள் தகர்க்கப்பட்டது. இதுவரை அக்குற்றத்தை மேற்கொண்டவர்களை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை என்பதுவே இலங்கையின் மதநல்லிணக்கம் தொடர்பான பார்வையாக காணப்படுகின்றது. மத நல்லிணக்கம் தொடர்பான அரசாங்கத்தின் முரணான செயற்பாட்டை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'நடாசா பௌத்தத்தை உள்நோக்கத்துடன் அவமதித்தமைக்காக கைதுசெய்யப்பட்டார் அவரை கைதுசெய்ய முடியும் என்றால் இஸ்லாமிய மதத்தை அவமதித்த தேவாலயங்களையும்  கிறிஸ்தவ வழிபாட்டு இடங்களையும் மசூதிகளையும் எரியூட்டிய ஞானசார தேரர் உட்பட ஏனைய பலரை ஏன் கைதுசெய்ய முடியாது. ...அவ்வாறு அவர் செயற்பட்டால் அதுவே உண்மையான ஜனநாயக நாடாக காணப்படும்' என முன்னாள் ஜனாதிபதி பதிவு செய்துள்ளார்.

எனவே, இலங்கையின் மத நல்லிணக்க உரையாடலானது ஜனநாயகத்துக்கானது அல்ல என்பதையே வரலாறுகள் உணர்த்துகின்றது. சமகால மத நல்லிணக்க சீர்குலைவு பிரச்சாரங்கள் அரசியல் பின்புலங்களுடனேயே பலமான உறவை பிரதிபலிக்கின்றது. இலங்கை அரசாங்கம் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போதெல்லாம், அதன் தலைவர்கள் மக்கள் ஆதரவை மீளப் பெறுவதற்காக தங்கள் மதத்தை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள். மதங்களின் பாதுகாவலர்களாக தங்களை அடையாளப்படுத்த முற்படுகின்றார்கள். சிலைகளிலிருந்து கதிர்கள் அதிசயமாக வெளிப்படும் கதைகள் பரப்பப்படுகின்றன. புதைகுழி காட்சிகள் நடத்தப்படுகின்றன மற்றும் அதிகாரத்தில் உள்ள தேசபக்தர்கள் என்று தங்களைத் தாங்களே அறிவித்துக்கொள்பவர்கள் பௌத்தத்தைப் பாதுகாப்பதற்காக சிலுவைப் போர்களை நடத்துகிறார்கள். அவ்வரலாற்று தொடர்ச்சியே சமகாலத்திலும் பிரதிபலிக்கப்படுவதே பரவலாக அவதானிக்கப்படுகின்றது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-