ஜனாதிபதியின் தமிழ்ப் பௌத்த உரையாடலும் ஈழத்தமிழர் அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியலில் மதமும் மதம் பீடித்த ஆட்சியாளர்களின் ஆட்சிமையும் தொடர்ச்சியான நீடித்த வரலாற்றை பகிருகின்றது. இதன் விளைவாக இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடியும் கட்டவிழ்க்க முடியாத இறுகிய பிணைப்பை கொண்டுள்ளது. இந்த சூழலிலே அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்லியல் திணைக்கள அதிகாரிகரிகளுடன் உரையாடிய தொல்லியல் வரலாற்றில் தமிழ் பௌத்தம் பேரினவாத அரசியலிலும் தமிழ்த்தேசிய அரசியல் பரப்பிலும் அதிகமான வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. சுதந்திர இலங்கையின் 75ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சியதிகாரத்தை உறுதிப்படுத்தி கொள்ள சிங்கள பௌத்த பேரினவாத அரசியலையே முதன்மைப்படுத்தி வந்துள்ளனர். அதன்விளைவான கடுமையான அரசியல் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ள சமகாலத்தில் ஜனாதியின் தமிழ் பௌத்த வரலாறு தொடர்பான பார்வை தமிழ்த்தரப்பிலும் அதிக சந்தேகங்களையே உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுடனான உரையாடல் மற்றும் அதன் அரசியல் வகிபாகத்தினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
சமகாலத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு வைரலான காணொளியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழுவிற்கு இடையிலான சந்திப்பின் போது, தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மனதுங்கவிடம், தொல்பொருள் தளத்திற்கு காணிகளை வழங்குவது தொடர்பான பிரச்சினை எழுந்தபோது, 'நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா?? அல்லது நான் கற்பிக்க வேண்டுமா?' என்றவாறு கேள்வி எழுப்பியுள்ளார். ஜூன்-08அன்று நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதியால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பேராசிரியர் அனுர மனதுங்க, அதுதொடர்பான காணொளி ஜூன்-12அன்று வெளியான நிலையில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலை தொல்பொருள் இடத்திற்காக காணியை சுவீகரிப்பது தொடர்பில் அரசாங்கத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அனுர மானதுங்க தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக கருத்துக்கள் முதன்மைப்படுகின்றது. இவ்வாறான கருத்தின் பின்னணியில் சிங்கள பௌத்த பேரினவாத தரப்பினர் சிங்கள பௌத்தத்துக்கு அச்சுறுத்தல் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துவருகின்றனர். மறுதளத்தில் தமிழரசியல் தரப்பினாலேயே இக்காணொளி வெளிவந்துள்ளதுடன், ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் மீது பகுதியளவில் நம்பிக்கையை வெளிப்படுத்துவதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அரசியலில் நிகழ்வுகளை வெளிப்பார்வையில் நின்று நோக்குவது எதிர்காலத்தை சூனியமாக்கும் சூழலை உருவாக்கக்கூடியதாகும். அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அரசியலை என்றும் உள்வலமாக பார்க்க வேண்டும் என வலியுறுத்துவார். சமகால ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தந்திரோபாயத்தை நுணுக்கமாக விளங்கிக்கொள்வதற்கு, ரணில் விக்கிரமசிங்காவின் தொல்லியில் திணைக்கள அதிகாரியுடனான முரண்பாட்டு கருத்துநிலையையும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நிலைப்பாடுகளையும் உள்வலமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, சமகால இலங்கையின் அரசியல் சூழல் தென்னிலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பாக ஜனாதிபதிக்கு நல்லிணக்க அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.
ஒன்று, இலங்கையின் அந்நிய செலாவணி நெருக்கடியை ஈடுசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவியை கோரியுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை தென்னிலங்கை அரசியலுக்கு உண்டு. சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதனூடாக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினை வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்கவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவருகின்றார். குறித்த பேச்சுவார்த்தைகளில் தொல்லியல் திணைக்களத்தின் சமகால ஆக்கிரமிப்பு பேசுபொருளாக காணப்படுகையில் ஜனாதிபதி தனது பதிலை வெளிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதனடிப்படையிலேயே தொல்லியல் திணைக்கள பணிப்பாளருடனான வாக்குவாதமும் இராஜினாமாவும் அமைகின்றது. எனினும் திணைக்கள பணிப்பாளரை கடந்து திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு பொறுப்புடமை காணப்படுகின்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வடக்கு-கிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் பெயரில் இடம்பெறும் பல ஆக்கிரமிப்புக்களில் நேரடி பிரசன்னத்தை மேற்கொண்டுள்ளார். அத்துடன் தொல்பொருள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ சின்னம் ஸ்தூபியின் உருவமாகும். இது நாட்டின் பௌத்த பாரம்பரியத்தின் மிகவும் புலப்படும் கூறு ஆகும். இந்நிலையில் ஜனாதிபதி தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்கு பணிப்பாளரை மாத்திரம் சாடுவது, ஜனாதிபதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ள தொல்பொருள் பாதுகாப்பு கருதிய மற்றும் அவ்திட்டத்தின் மறுசீரமைப்புக்கான புதிய தேசிய திட்டத்தின் நம்பகத்தன்மையில் அதிக கேள்விகளை உருவாக்குகின்றது.
இரண்டு, அரசியல்வாதிகளின் செயற்பாடுகளில் அரசியல் இருப்பு அதுசார்ந்து தேர்தலினை மையப்படுத்திய நலன் முதன்மையாக காணப்படும். அவ்வகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்குகள் மூலம் அதிகாரத்தை தக்கவைக்கும் எண்ணங்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் ஆதரவு சிங்கள பேரினவாத வாக்குகளை திரட்டக்கூடியதாக அமையினும், 2019ஆம் ஆண்டு தேர்தல் போன்று தனிச்சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியை உருவாக்க இயலாத நிலையே எதிர்வரும் தேர்தலில் ஆரூடம் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் வாக்குகளை கவரும் இலக்கில் சில காட்சிகளை அரங்கேற்ற முற்படுவதன் பிரதிபலிப்பாகவும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளருடனான வாக்குவாதம் நோக்க வேண்டியுள்ளது. குறிப்பாக குறித்த காணொளி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடமிருந்து பகிரப்பட்டுள்ளமையும் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மீண்டும் மீட்பராக விம்பப்படுத்த முயலுகின்றார்களா என்ற சந்தேகங்களையே உருவாக்குகின்றது.
இரண்டாவது, இலங்கையின் ஆட்சியதிகாரம் ஆட்சியாளர்களை சிங்கள பேரினவாதிகளாகவே பேணி வந்துள்ளது. அரசியலமைப்புரீதியாகவே இலங்கை ஆட்சியாளர்களிடம் சிங்கள பௌத்த பாதுகாவலருக்கான பொறுப்பு ஒப்படைக்கப்படுகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தொல்லியல் திணைக்களத்தின் சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கான ஆக்கிரமிப்பினை கடுமையாக சாடுவது ரணிலின் போலியான லிபரல்வாத முகத்தின் வெளிப்பாடேயாகும். இலங்கையின் அரசியல் தலைவர்களிலேயே பௌத்த மரபுரிமைக்காக சொத்துக்களை அதிகம் தானம் செய்த குடும்பமாக ரணிலின் குடும்பமே காணப்படுகின்றது. அத்துடன் கடந்த காலங்களில் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலின் பாதுகாவலராக ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளும் அமையப்பெற்றுள்ளது. குறிப்பாக அண்மையில் அரசியல் ஆய்வாளர் என்.சரவணன் 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொதுநூலக எரிப்பின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்கவின் வகிபாகத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளார். 1981 யூன்-19 அன்று இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டீ.பண்டாரநாயக்க, நூலக எரிப்பு காலத்தில் காமினி திசாநாயக்க, சிறில் மேத்தியூ, பெஸ்டஸ் பெரேரா ஆகியோருடன் ரணில் விக்கிரமசிங்கவும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார் என்கிற விபரத்தைக் குறிப்பிடுகிறார். ரணில் விக்கிரமசிங்கவுக்கும் யாழ் நூலக எரிப்புக்கும் உண்மையில் நேரடி தொடர்பு இருந்ததா இல்லையா என்பது எவருக்கும் தெரியாது என்கிற போதும் இந்த விடயத்தில் ரணிலின் அன்றைய கண்டனங்களையோ, விமர்சனங்களையோ கூட காணக் கிடைப்பதில்லை. இவ்அடிப்படையில் ரணிலின் இனவாத அரசியல் வரலாறுகள் லிபரல்வாத முகத்தில் மறைக்கப்படுகின்றது. விவாதங்களுக்கு அப்பால் தற்போது இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க ஒரு தனித் நபர் அல்ல. நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தலைவர் என்பதே நிதர்சனமானதாகும்.
மூன்றாவது, இலங்கையில் பௌத்த வரலாற்றினை தொல்லியல் திணைக்களத்தினர் கற்க வேண்டும் என்பதிலும் தமிழ் பௌத்தம் பற்றிய கூற்றிலும் நியாயப்பாடு காணப்படுகின்றது. இலங்கையில் தமிழ் பௌத்தத்தின் வரலாற்றுத்தன்மை, தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சமீபத்திய கருத்துக்கள் புதிய ஆர்வத்தைத் தூண்டியிருந்தாலும், குறைந்தபட்சம் தெற்கிலாவது பொதுமக்களின் கற்பனையைக் கைப்பற்றிய விடயமாக இல்லை. கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் அரசறிவியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜி.பி.வி.சோமரத்னவின் கூற்றுப்படி, இலங்கையில் தமிழர்கள் மத்தியில் பௌத்தத்தின் பண்டைய வரலாறு சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான மிக சமீபத்திய இனப்பிரச்சனையுடன் தொடர்புடைய தப்பெண்ணங்களுடன் சிக்கியுள்ளது. 'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட ஒரு கட்டுரையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பல பௌத்த தொல்பொருள் தளங்கள் சர்ச்சைக்குரிய கூற்றுக்களை உருவாக்கியுள்ளன. மேலும் மோதலின் தீவிரத்துடன் அரசியல்மயமாக்கப்பட்ட விளக்கத்திற்கு உட்பட்டுள்ளன என்று சோமரத்ன குறிப்பிடுகிறார். மேலும், தொல்லியல் துறையில் பிரபலமாக ஈடுபட்டுள்ள ஒரு முக்கிய பௌத்த பிக்கு உட்பட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சில தொல்பொருள் கண்டுபிடிப்புகளுக்கு சிங்கள பௌத்த வம்சாவளியைக் காரணம் காட்ட முயற்சித்துள்ளனர். மற்ற அறிஞர்கள் முழுத் தமிழ் பாரம்பரியம் அல்லது பௌத்த இடிபாடுகளின் தமிழர் உரிமையை விளக்கியுள்ளனர் எனவும் குறிப்பிடுகின்றார். அவ்அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் இலங்கை வரலாற்றை கற்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்தில் நியாயப்பாடு உள்ளது. வரலாற்றில் தமிழ் பௌத்தம், காலணித்துவ காலத்தில் அங்கிலிக்கள் பௌத்தம் என வேறுபட்ட வடிவங்களை தனதாக்கிய இலங்கையின் பௌத்தம், சமகாலத்தில் ஆதிக்க சக்தியாக மகாவம்ச மனோநிலை பௌத்தமாகவே தொல்லியல் திணைக்களத்தினூடாக செயலாற்றுகின்றது.
எனவே, இலங்கையின் ஜனாதிபதி தமிழ்ப் பௌத்தத்தை ஏற்றுள்ளார் என்பது வெறுமனவே செய்தியாகவும், தமிழருக்கானதாகவும் கடந்துவிட முடியாது. ஜனாதிபதியின் தமிழ்ப்பொளத்தம் தொடர்பான கருத்தாடலினுள் சமகால அரசியல் பொருளாதார நெருக்கடி சூழலை கடந்து செல்வதற்குரிய அரசியல் தந்திரோபாயமே வடிவமைக்கப்பட்டுள்ளது. செய்திக்கு அப்பால் இக்கருத்தினூடாக ஜனாதிபதியின் உள்ளார்ந்த அரசியல் தேவைப்பாடுகளை நுணுக்கமாக விளங்கிக்கொள்வதுடன், அதனை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது தமிழ் அரசியல் தரப்பினதும் ஊடகப்பரப்பினதும் கடமையாக அமைகின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரோபாய சூழ்ச்சி அரசியலின் அனுபவங்களை ஈழத்தமிழர்கள் நீண்ட காலமாக அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ரணில் ஒரு 'தந்திரி நரி' எனச்சாடியிருந்தார். ரணிலின் தந்திரத்தை உய்த்தறிந்து தமிழருக்கு சாதகமான அரசியல் கருத்தாடல்களை உள்ளீர்த்து பாதகமானவற்றுக்கு சரியான எதிர்வினையாற்றும் தந்திரோபாய அரசியலை நகர்த்துவது ஈழத்தமிழர்களின் இன்றைய உடனடி தேவைப்பாடாக அமைகின்றது.
Comments
Post a Comment