சிங்கள பௌத்த அரசுக்கான சர்வதேச நெருக்கடியும் வடக்கின் பௌத்த மேலாதிக்கமும்! -ஐ.வி.மகாசேனன்-

சமகாலத்தில் இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கருத்துக்களும், அதற்கு எதிரான தமிழ் அரசியல் தரப்பினது கருத்துக்களுமே ஆழமாக நிறைந்து உள்ளது. இலங்கை வரலாறு காணாத அரசியல் பொருளாதார நெருக்குவாரத்தினை எதிர்கொள்கின்றது. மறுதளத்தில், ஈழத்தமிழர் அரசியல்பரப்பில் ஜெனிவாவை மையப்படுத்திய அரசியல் களம் காணப்படுகின்றது. எனினும், தென்னிலங்கை மற்றும் தமிழ் அரசியல் தரப்பினரிடையே யாவற்றையும் மிஞ்சி சிங்க பௌத்த பேரினவாத அரசியலே பிரதான உரையாடலாக காணப்படுகின்றது. தமிழரசியலும் தென்னிலங்கையின் இனவாதத்தினை கண்டனம் செய்வதுடன் தமது எதிர்ப்பு அரசியலினை பதிவு செய்து நகர்ந்து செல்கின்றார்கள். மாறாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வீச்சு அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறியவும் பகிரங்கப்படுத்தவும் வினைத்திறனான அரசியலை முன்னகர்த்த தயாரில்லாதவர்களாக காணப்படுகின்றார்கள். இக்கட்டுரை சமகாலத்தில் உயர்வீச்சுப் பெறும் சிங்கள பௌத்த பேரினவாத பிரச்சார தேவைப்பாடுகளை தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசாங்கங்கள் வரலாறுதோறும் சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலை பகுதியளவில் பேணி வருகின்றது. டி.எஸ். சேனநாயக்கா அரசாங்கம் முதல் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் வரை அவ்ஒழுங்கிலேயே இயங்கி வருகின்றது. சமகால இலங்கை அரசாங்கத்தில் தொல்லியல் திணைக்களம் மற்றும் அதுசார்ந்த புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலை வெளிப்படையாக முன்னெடுத்து வருகின்றது. தொல்லியல் திணைக்களம் பௌத்த துறவிகளின் நிதி உதவியுடன் வடக்கு-கிழக்கில் தமிழர்களின் பூர்விக காணிகள் மீது தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. அதுமட்டுமன்றி புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கா இலங்கையில் பொதுச்சட்டத்துக்கு புறத்தே புத்த சாசனமும் செயற்பாட்டிலுள்ள சட்டமாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவ்வாறே அரசாங்கத்துக்கு வெளியே ஞானசார தேரர், அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத்வீரசேகர போன்ற தென்னிலங்கை அரசியல்வாதிகளும் பௌத்தத்தை மையப்படுத்தி சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை சமகாலத்தில் அதிக வீச்சுடன் முன்னெடுக்கின்றனர். குறிப்பாக கடந்த வாரம் பிவித்ரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, சிங்கள பௌத்த பேரினவாத குழுவுடன் தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு விகாரை நிர்மாண குருந்தூர் மலைக்கு விஜயம் செய்திருந்தார். 

இவ்வாறான பேரினவாத நிகழ்ச்சி நிரலினை வெறுமனவே தென்னிலங்கை அரசியல்வாதிகளின் தேர்தலை மையப்படுத்திய வாக்கு சேகரிப்புக்கான உத்தியாக கடந்து செல்ல முடியாது. இலங்கை அரசாங்கங்கள் சிங்கள பௌத்த அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்களில் திரட்சியாக சிங்கள பௌத்த பேரினவாதத்தை முதன்மைப்படுத்துவதனூடாக தமது அரசை பாதுகாத்து வந்துள்ளார்கள். இலங்கையின் சமகால வெளிப்புற அரசியல் நிகழ்வுகள் இலங்கையின் சிங்கள பௌத்த அரசுக்கு அபத்தமான சமிக்ஞைகளையே வெளிப்படுத்தி வருகின்றது. எனவே, இதனடிப்படையிலேயே சிங்கள பௌத்த பேரினவாத பிரச்சாரம் தென்னிலங்கை அரசியலில் முதன்மைப்படுத்தப்படுகின்றதோ எனும் சந்தேகங்களை அரசியல் ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். இலங்கையின் சிங்கள பௌத்த அரசுக்கு அபத்தமாக கட்டமைக்கப்படும் வெளிப்புறச்சூழலை நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது. 

முதலாவது, இலங்கை அரசாங்கமானது தனது அரசியல் பொருளாதார நெருக்கடி மீட்சிக்காக அதிகளவு சர்வதேச நாணய நிதியத்தையே சார்ந்து உள்ளது. மறுதளத்தில் சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் பொருளாதார செயற்பாடுகளில் நிபந்தனைகளையும் மாற்றத்தின் வெளிப்பாடுகளையும் எதிர்பார்க்கின்றது. இலங்கை கடந்தகால கொள்கைத் தவறுகளாலும் பின்னுக்குப் பின் பொருளாதார அதிர்ச்சிகளாலும் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இலங்கை மக்கள், குறிப்பாக வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் மீதான நெருக்கடியின் தாக்கம் அதிகரித்தது. இந்நிலையிலேயே மார்ச்-20அன்று, இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதற்காக சர்வதேச நாணய நிதியம் நிறைவேற்று வாரியம் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அனுமதித்தது. நெருக்கடியைத் தீர்ப்பதில் இது ஒரு முக்கியமான படியைக் குறித்தது. விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டிலிருந்து இலங்கை உடனடியாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆரம்ப பட்டுவாடாவைப் பெற்றது. இது ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி உட்பட புதிய வெளி நிதியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது இலங்கையின் கடந்த கால அரசியல் பொருளாதார கொள்கைகளை சீரமைக்கும் நிபந்தனையுடன் தொடர்புடையதாகும். இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கு பின்னால், இலங்கையின் நீடித்த தேசிய இனமுரண்பாடு ஆழமான நிலையை பெறுகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகளும் பிரதானமாக அமைகின்றது. அதனைத்தழுவியே இலங்கை அரசாங்கமும் தமிழ் அரசியல் கட்சிகளுடான நல்லிணக்கத்துக்கான பேச்சுவார்த்தை என்பதையும் முன்னெடுத்து வருகின்றது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு என்பது சிங்கள பௌத்த அரசை இல்லாமல் செய்வதாகவே அமையக்கூடியதாகும். அதனை தென்னிலங்கையின் எத்தரப்பும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதுவே கடந்தகாலங்களின் நிதர்சனமான உண்மையாகும். பண்டா-செல்வா ஒப்பந்தம் முதல் சந்திரிக்காவின் தீர்வுத்திட்டம் வரையிலான தீர்வு முயற்சிகளின் எதிர்வினைவுகள் அதனையே உறுதி செய்கின்றது.

இரண்டாவது, கடந்த பத்தாண்டு காலமாக இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கி வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடரின் வாய்மொழி மூல அறிக்கையில் இலங்கை அரசாங்கத்துக்கு சிறிதளவு நெருக்குவாரத்தை ஏற்படுத்தும் வகையிலான சொற்பிரயோகங்கள் கையாளப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிலங்கை அரசாங்கங்கள் கடுமையாக எதிர்த்துவரும் சர்வதேச விசாரணை பொறிமுறைக்கான வாய்ப்புகள் உருவாகுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடரில் கடந்த ஜூன்-23அன்று ஐ. நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நாடா அல்-நஷிப், 'கடந்த கால மீறல்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறல் செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதுவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க முடியும்' என வாய்மொழிமூல அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், 'நம்பகமான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும்' எனவும் சுட்டிக்காட்டினார். இது சர்வதேச வெளியில் இலங்கை அரசுக்கு அதிகரிக்கும் நெருக்குவாரத்தையே உறுதி செய்கின்றது.

மூன்றாவது, சர்வதேச நாடுகளில் இலங்கை அரசுக்கு எதிராகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் அரசியல் தலைவர்களால்  முன்வைக்கப்படும் இனப்படுகொலை தீர்மானங்கள் மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் இலங்கையின் சிங்கள பௌத்த அரசிற்கு எதிரானவையாகவே அமைகின்றது. குறிப்பாக கனடா இலங்கையின் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் பல்வேறு செயற்பாடுகளை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முன்னெடுத்து வருகின்றது. 2023, மே-18அன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ, இலங்கையில் தமிழர்களுக்கெதிராக இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்று சாரப்பட கருத்துரைத்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு கனடா பாராளுமன்றத்தில் மே-18இனை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்ரேலியா கிறீன்ஸ் கட்சியின் செனட்டர் டேவிட் சூபிரிட்ஜ் தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாக கடந்த வாரம் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளிடையே ஈழத்தமிழர் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகளினூடாக அதிகரிக்கப்படும் ஆதரவுத்தளத்தை கருத்திற்கொண்டு ஈழத்தமிழர் புலம்பெயர் அமைப்புக்கள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பொதுவாக்கெடுப்புக்கானதொரு முயற்சியை சர்வதேச வெளியில் ஆரம்பித்துள்ளனர். குறித்த பொதுவாக்கெடுப்புக்கான சாத்தியப்பாடுகள் இலங்கையில் இல்லாத போதிலும் சர்வதேச பரப்பில் பொதுவாக்கெடுப்பை நடாத்துவதனால், ஈழத்தமிழர்களின் தீர்வுப்பொதி கனதியான வடிவத்தை பெறக்கூடிய சூழலும் காணப்படுகின்றது. இது இலங்கையில் சிங்கள பௌத்த அரசின் இருப்பியலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழலாகவே அவதானிக்கப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில், சர்வதேச அரசியலை தனது பொருளாதார நெருக்கடிக்கான மீட்சிக்காக மாத்திரமே பயன்படுத்த தென்னிலங்கை அரசாங்கம் முயலுகின்றது. மாறாக சர்வதேசம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு பற்றிய உரையாடல்களை முன்னெடுக்கையில், இலங்கையின் உள்ளக பேரினவாதத்தை சமூக சூழலாக சித்தரித்து விலகுவதற்கான உத்தியாகவே சமகால பேரினவாத பிரச்சாரத்தை இலங்கை தந்திரோபாயமாக நகர்த்துகின்றதா என்ற சந்தேகங்களையே இலங்கையின் புறச்சூழல் நிலைமைகளும் கடந்த கால வரலாறுகளும் வெளிப்படுத்துகின்றது. தென்னிலங்கை பௌத்த அட்டையை முன்னிலைப்படுத்துவதில் அடிக்கடி தந்திரோபாயத்தை கைக்கொள்கிறார்கள். எவ்வாறாயினும், இலங்கை பௌத்தர்கள், இலங்கை மீதான தமது நம்பிக்கையைப் பாதுகாத்து நிலைநிறுத்த வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் அதற்காக புனிதமான சபதம் எடுத்துள்ளனர் என்றும் உறுதியாக நம்புகின்றனர். பௌத்தத் தலைவர்கள் நம்பிக்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகக் குரல் கொடுக்கும்போது, இது மிகவும் சக்திவாய்ந்த மற்றும் உணர்ச்சிகரமான செய்தியாக மாறுகின்றது.

எனவே, இலங்கையில் அதிகரித்துவரும் சிங்கள பௌத்த பேரினவாத பிரச்சாரமானது இலங்கையின் புறச்சூழலால் சிங்கள பௌத்த அரசுக்கு எதிரான நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலாகவே அமைகின்றது. பௌத்தத்தின் இருத்தலியல் அச்சுறுத்தலை பெரிதுபடுத்தும் முயற்சிகளூடாகவே கடந்த காலங்களிலும் சிங்கள பௌத்த பேரினவாதம் தனது சிங்கள பௌத்த அரசை பாதுகாத்து வந்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வதனையும் கூட்டாட்சி அல்லது அதிகாரப் பகிர்வை பௌத்தத்தின் இருத்தலியல் அச்சுறுத்தலாக பிரச்சாரம் செய்வதனூடாக இனவாத மதவாத அலைகளை உருவாக்கும் தந்திரோபாயத்தை முதன்மையாக கொண்டுள்ளார்கள். சமகால நிகழ்வுகளும் அதன் தொடர்ச்சித்தன்மையையே உறுதிசெய்கின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-