அம்பேத்கர் - அநாகரிக தர்மபாலாவின் அரசியல் பௌத்தமும் தமிழக-ஈழத்தமிர் பௌத்த நிலைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

சமகால அரசியலில் மதம் முதன்மையான நிலையை பெறுகின்றது. அமெரிக்க அரசறிவியலாளரான சாமுவெல் பி. ஹண்டிங்டன் தனது புகழ்பெற்ற 1993 கட்டுரையிலிருந்து விரிவுபடுத்தப்பட்ட 'நாகரீகங்களின் மோதுகை' எனும் புத்தகத்தில் மதம், மதிப்புகள், கலாச்சாரம் மற்றும் வரலாற்றை உள்ளடக்கிய அடையாளத்தின் பரந்த மற்றும் மிக முக்கியமான நிலை நாகரிகங்கள் என விவரித்தார். பனிப்போருக்குப் பிந்தைய உலகில், 'நீங்கள் எந்தப் பக்கத்தில் இருக்கிறீர்கள்?' என்பதற்குப் பதிலாக, மிக முக்கியமான கேள்வி 'நீங்கள் யார்?' என்பதாகவே அமையுமென குறிப்பிட்டார். சமகால உலக ஒழுங்கும் ஹண்டிங்டனின் எண்ணங்களை உறுதி செய்யும் வகையில் மதங்களை மையப்படுத்தியே சுழலுகின்றது. மதங்களும் அரசியல் சூழலுக்கேற்ப வேறுபட்ட பரிமாணங்களையும் பெறுகின்றது. குறிப்பாக பௌத்த மதம் 32கி.மீ இடைவெளியில் ஒரே இனமக்களிடம் வேறுபட்ட விம்பங்களை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் இந்து மதத்தின் சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக ஒடுக்குமுறையிலிருந்து மீட்கும் கருவியாக பௌத்த மதம் முதன்மையான அரசியல் வகிபாகத்தை பெறுகின்றது. அதேவேளை ஈழத்தமிழர்களிடையே பௌத்தம் மதம், சிங்கள பேரினவாதத்தின் தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறைக்கருவியாக நோக்கப்படுகின்றது. இக்கட்டுரை தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பௌத்த மதத்தின் பரிமாணத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மஹாபோதி சமூகத்தில் 2554வது வெசாக் கொண்டாட்டத்தில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தனது தலைமை உரையில், 'நாம் 2600 புத்த ஜெயந்தியை நெருங்கி வருவதால் ஒரு சிங்கள பௌத்தராக, இது எதிர்காலத்திற்கான எனது தாழ்மையான கனவு. இலங்கையில் தமிழ் பௌத்த விகாரைகள் வர வேண்டும்; தமிழ் குழந்தைகள் பௌத்த துறவறத்தை தழுவ வேண்டும்; பௌத்தம் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும்; வீடுகளில் வழிபட வேண்டும். அந்த ஒற்றுமை இருக்க வேண்டும்.' எனக்குறிப்பிட்டிருந்தார். இது 1963ஆம் ஆண்டு வாஷிங்டனில் சுதந்திரத்திற்கான அணிவகுப்பின் போது லிங்கன் நினைவிடத்தின் படிக்கட்டுகளில் இருந்து மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆற்றிய 'எனக்கு ஒரு கனவு' என்ற புகழ்பெற்ற பேச்சுக்கு ஓரளவு ஒத்திருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், பேராசிரியர் சுனில் ஆரியரத்னவின் எதிர்காலத்தில் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய கனவு கடந்த காலத்திலேயே இருந்தது. நடைமுறையிலும் தமிழ் இனத்திடையே பௌத்த மதம் காணப்படுகின்றது. 

தமிழகத்தின் இன்றைய பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு பின்னால் அயோத்திதாசர் மற்றும் அம்பேத்கரின் கருத்துக்கள் முதன்மையான நிலை பெறுகின்றது. அயோத்திதாசரால் முன்வைக்கப்பட்ட சீர்திருத்த பௌத்தம் பலவகையான தொடக்கமுயற்சிகளாக தேங்கிவிட்டது. அம்பேத்கரின் அரசியல் பௌத்தம் சமகாலத்தில் பெரும் வீச்சை பெற்றுள்ளது. அதன் எல்லைகள் கண்கூடானவை. இந்தியாவில் இந்து மதத்தின் சனாதனதர்மம் தலித் சமூகத்தைத் தீண்டாமையின் பெயராலான ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வருவதனால், அச்சமூகத்தின் அரசியல், சமூகவியல், பொருளியல் வகைப்பட்ட மேம்பாடுகளுக்கும் பெரும் தடையாக உள்ளது. இப்பின்னணியிலேயே இந்து மதம், கல்வி உரிமை மற்றும் சொத்துரிமை ஆகியவற்றை மறுத்து தலித் மக்களை தொடர்ந்து கீழ்மட்டத்திலேயே வைத்திருக்க விரும்புகிறது எனக்குற்றம்சாட்டிய அம்பேத்கர், தலித் மக்கள் எதிர்பார்க்கும் அறம் சார்ந்த, உளவியல் சார்ந்த விடுதலையை அளிக்கவல்ல மதமாக பௌத்தத்தை அடையாளப்படுத்தினார். அம்பேத்கர் அடையாளப்படுத்திய பௌத்தம் மாறுபட்டது. இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் மீது கட்டமைக்கப்பட்டுள்ள சமூகக் கட்டமைவுகளை மாற்றியமைத்து சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த சமதள பாதையில் செலுத்த முற்படும் சமூக இயக்க மனப்பான்மை உடையதாகும். புத்தரின் கொள்கைகளுக்கு அரசியல் வடிவம் கொடுத்து, இந்திய இந்து சனாதனதர்ம ஒடுக்குமுறை எதிராக அம்பேத்கரால் கண்டெடுக்கப்பட்ட அப்பௌத்தம் நவயான பௌத்தம் (Neo-Buddhism) என்று அழைக்கப்படலாயிற்று. 

அம்பேத்கர் தான் முதன்மைப்படுத்தும் பௌத்த மார்க்கம் பற்றி குறிப்பிடுகையில், 'நான் மேற்கொள்ள உள்ள பௌத்தம் பகவான் புத்தர் போதித்த கொள்கைகளின்படி இயங்கும். பண்டைய பௌத்த மதப் பிரிவுகளான ஹீனயானம், மகாயானம் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் என் மக்களை ஈடுபடுத்த மாட்டேன். என்னுடைய பௌத்த சமயம் ஒருவகையான புதிய பௌத்தமாக அல்லது 'நவயானவாக' இருக்கும்' எனக்குறிப்பிட்டார். மேலும், இந்து மதத்திற்கு மாற்றாக புத்த மதத்தை நவீன வடிவத்தில் மீட்டுருவாக்கம் செய்து அதற்கான கோட்பாடுகளை வகுத்தளித்ததுடன் புத்தரது வாழ்க்கை மற்றும் அவரது அறநெறி போதனைகளை எடுத்தியம்ப 'புத்தரும் அவர் தம்மமும்' என்றொரு நூலையும் வடிவமைத்துக் கொடுத்தார். அந்நூலில் குறிப்பிட்டுள்ள, 'கடவுள், ஆன்மா, பிரார்த்தனை, தொழுகை, சடங்குகள், பூசைகள், பலி யாகங்கள் ஆகியவைகைளை மட்டுமே உடையது மதம். ஆனால் புத்த தம்மத்தில் இவற்றுக்கெல்லாம் இடமில்லை. இவற்றின் இடத்தில் ஒழுக்கம் மட்டுமே இருக்கிறது' எனும் வாசகம் அம்பேத்கரின் புத்த மதம் பிற மதங்களினின்றும் மாறுபட்டு பகுத்தறிவு வயப்பட்டது என்பதையே உறுதி செய்கின்றது.

1956, அக்டோபர் 14ஆம் நாள் அம்பேத்கர் 6 இலட்சம் மக்களுடன் பௌத்தம் தழுவியமை இந்திய வரலாற்றில் பெரும் பதிவாகியது. அவ்வாறான வரலாற்று தொடர்ச்சியை சமகாலத்தில் தமிழகத்தில் அதிகமாக அவதானிக்க முடிகின்றது. அம்பேத்கரின் அரசியலை அதிகமாக முன்னிறுத்தி அரசியல் செய்யும் தொல். திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி பௌத்த ஏற்பு விழாவை பெருவிமர்சையாக கொண்டாடி வருவதுடன், தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறையின் மீட்பு கருவியாக பௌத்தத்தை முன்னிறுத்தி வருகின்றனர். 'பௌத்தம் - சனாதனத்தை வேரறுக்கும் ஆயுதம்' எனும் புத்தகத்தையும் தொல். திருமாவளவன் எழுதியுள்ளார். குறிப்பாக 2014ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய மத்திய அரசில் பாரதீஜ ஜனதாக்கட்சி ஆதிக்கம் முதன்மை பெற்ற நிலையில் தமிழ்நாட்டில் இந்து மதத்திற்கு எதிரான தலித்திய போராட்டம் முதன்மை பெற்றுள்ளதுடன், அம்பேத்கரின் அரசியல் பௌத்த கருத்தியலை முன்னெடுத்து இந்து மதம் துறக்கப்பட்டு பௌத்தத்தை ஏற்றுக்கொள்ளுதல் பெரிய விழாவாக தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும் வரலாற்றுரீதியாக இலங்கையின் அரசியல் பௌத்தம் அடிப்படைவாதத்தையே கட்டமைத்து வந்துள்ளது. இலங்கையின் நவீன அரசியல் பௌத்தத்தின் மூலாதாரமாக அநாகரிக தர்மபால காணப்படுகின்றார். இலங்கையில் பௌத்தம் மடாலயங்களின் சடங்குகளில் நின்றுவிட்டிருந்தது. ஒரு 'மக்கள் பௌத்தத்தை' உருவாக்க தர்மபாலா வாழ்நாளெல்லாம் முயன்றார். அதை ஆய்வாளர்கள் 'செயல்படும் பௌத்தம்' என்றும், கேணல் ஒல்கொர்ட்டின் தொடர்ச்சி என்ற வகையில் 'புரட்டஸ்தாந்து பௌத்தம்' என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அநகாரிக தம்மபாலாவின் பங்களிப்பு பௌத்தத்தை பல மரபான சடங்குகளில் இருந்து விடுவித்தது. பௌத்த தத்துவ இயல் மேல் மேலும் கவனம்  உருவாகச் செய்தது. மூலநூல்கள் சார்ந்து பௌத்தம் மறுவாசிப்புக்கு உள்ளாகியது. ஆனால் பௌத்தத்தில் அடிப்படைவாதம் உருவாகவும் அவரே காரணமாயினர். மத அடிப்படைவாதம் எப்போதுமே மதச்சீர்திருத்த இயக்கங்களில் இருந்தே தொடங்கும். மதச்சீர்திருத்தவாதம் 'மூலநூல்களுக்கு திரும்புவோம்' என்னும் கோஷத்தையே முன்வைக்கும். விளைவாக மூலநூலை மறுக்கமுடியாத ஒன்றாக ஆக்கும். அந்த மையப்படுத்தல் வழியாக 'நாம் – பிறர்' என கட்டமைக்கும். விளைவாக அடிப்படைவாதம் உருவாகும். மதச்சீர்திருத்தம் எப்போதுமே அதிகார அரசியலுடன் தொடர்புள்ளது. ஆகவே விரைவிலேயே அது மதஅரசியலாக மாறும். இலங்கையில் பௌத்தம் காலணித்துவத்திற்கெதிரான மதச்சீர்திருத்த இயக்கம் என்ற வளர்ச்சியிலேயே அடிப்படைவாதத்தைச் சென்றடைந்தன. அநாகரிக தர்மபாலாவின் அரசியல் பௌத்தத்தின் கருத்தியலான 'நாடு, தேசியம், சமயம்' என்ற கோஷமே சமகாலத்தில் இலங்கையின் ஏனைய தேசிய இனங்கள் மீதான பேரினவாதத்தின ஒடுக்குமுறைக்கான ஆதாரமாக அமைகின்றது.

இலங்கையில் பௌத்தம் மகாவம்ச மனநிலையில் சிங்கள பேரினவாதத்தின் ஆதிக்க அரசியலாகவே வளர்க்கப்பட்டு வந்துள்ளது. அதன்சாட்சியமாகவே சமகால தொல்லியல் ஆக்கிரமிப்புக்களும் அதுசார் அதிகாரிகளது கருத்துக்களும் அமைகின்றது. இலங்கை ஒரு தேசம் ஒரு நாடு எனும் தேசிய கொள்கையை அரசாங்கங்கள் பிரச்சாரம் செய்து வருகையில் இலங்கையின்  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இலங்கையில் இரு சட்டங்கள் நடைமுறையிலுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அண்மையில் அமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தொன்றில், 'அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளது. பௌத்த மதத்திற்கும் சாசனத்திற்கும் ஒரு சவால் இருப்பதைக் காணமுடிகிறது. நம் நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும். புத்தரின் சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அரச சட்டம் மறுபக்கம் உள்ளது. இவை இரண்டையும் மாற்றியமைக்க வேண்டும்.' என்று தெரிவித்துள்ளார். இது இலங்கையின் பொது சட்டத்துக்கு அப்பால் பௌத்த சட்டமும் நடைமுறையாக்கம் பெறுவதனையே உறுதி செய்கின்றது. இவ்நடைமுறையாக்கம் இயல்பாக அரசியல் அதிகாரத்தை பௌத்த மதத்திற்கு வழங்குவதனூடாக ஏனைய மதங்கள் மீதான ஆதிக்க ஒடுக்குமுறை கருவியாக பௌத்தத்தை பேணுகின்றது. இதுவே ஈழத்தமிழர்கள் பௌத்த விகாரைகளையும் தொல்லியல் சான்றுகளையும் புறமொதுக்க காரணமாகின்றது.

எனவே, தமிழர்கள் பௌத்தத்துக்கு எதிரானவர்கள் இல்லை என்பதையே தமிழகத்தில் பௌத்தத்தின் அதிகரித்த பெருக்கம் உறுதி செய்கின்றது. எனினும் பௌத்தத்தின் வடிவ வேறுபாடுகள் ஈழத்தமிழர்களிடையே பௌத்தம் தொடர்பான அச்சத்தை உருவாக்கியுள்ளது. மதங்களின் அடிப்படைகள் என்றும் பிறழ்வை பகிர்வதில்லை. 32கி.மீ இடைவெளியில் ஒரே மொழி பேசும் இனத்தாரிடம் புத்தர் இருவடிவம் பெறுகிறாராயின், மதத்தை காவும் மனிதர்களின் எண்ணங்களே பிறழ்வை பகிர்கின்றது. இந்தியாவில் அம்பேத்கரின் அரசியல் பௌத்தம் ஒடுக்குமுறைக்கு எதிரான கருவியாக ஆழமான நிலையை பெற்ற அதேவேளை, இலங்கையில் அநாகரிக தர்மபாலாவின் அரசியல் பௌத்தம் சிங்கள பேரினவாதத்தின் இனஒடுக்குமுறை கருவியாக நிலைபெற்றுள்ளது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-