தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையின் கைதும் ஈழத்தமிழரது கட்சி அரசியலும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியலில் தமிழ்த்தேசியத்தின் உரிமைக்கான போராட்டச் சூழுலை மற்றும் போராடுபவர்களை பேரினவாத அரச தரப்பினர் ஒடுக்குவது மற்றும் அழிப்பது வரலாற்றின் நீட்சியாகவே அமைகின்றது. 1977ஆம் ஆண்டு தமிழினப்படுகொலைகளுக்கு பின்னால் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் பாராளுமன்ற உரை ஆதிக்கம் செலுத்தியது. ஜே.ஆர் பாராளுமன்ற உரை 'போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்' என்று பல இடங்களிலும் பதிவு செய்யப்பட்டது. இதன் விளைவு சிங்களக் காடையர்களுக்குத் தமிழ் மக்களைக் கொல்லவும், தமிழர் சொத்துக்களைச் சூறையாடவும் தமிழர் வீடுகளுக்குத் தீ வைக்கவும் ஜே.ஆர் அரசினால் வழங்கப்பட்ட பகிரங்க அனுமதியாகவே அவதானிக்கப்பட்டது. இவ்வாறானதொரு அரசியல் தொடர்ச்சியே கடந்தவாரம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான இலங்கை காவல்துறையின் அச்சுறுத்தலுமாகும். இதற்கு தமிழ் அரசியல் தலைமைகள் பலரும் தமது கண்டன உரைகளை நிகழ்த்தியிருந்தார்கள். இக்கட்டுரை கஜேந்திரகுமாரின் கைதுக்கான தமிழ் அரசியலின் எதிர்வினையின் வடிவத்தையும் அவசியத்தையும் தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜூன்-8அன்று காலை கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சிக்கு அழைத்துவரப்பட்டு, மாலை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தினால் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மருதங்கேணியில் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் காவல்துறையினருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். அதேவேளை ஜூன்-02அன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்த போது புலனாய்வாளர் தாக்கிச் சுட முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக காணொளிகள் வெளியாகியது. இந்நிலையில் தன்மீதான தாக்குதல் தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து பாராளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து ஜூன்-8அன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் மருதங்கேணி சம்பவத்துடன் தொடர்புறும் வகையில் ஜூன்-5அன்று மருதங்கேணி காவல்துறையினரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித் தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரன் மற்றும் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளரான உதய சிவம் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
கஜேந்திரகுமார் மீதான இலங்கை காவல்துறையின் செயற்பாடுகளுக்கு தென்னிலங்கை, தமிழரசியல் மற்றும் சர்வதேச அரசியல் தளங்களில் பலமான கண்டன உரைகளும் எதிர்ப்பு போராட்டங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கடந்த காலங்களில் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொலைக்குற்றச்சாட்டில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையிலேயே பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளமை எதிர்க்கட்சிகளின் கண்டனங்களில் முதன்மையான உள்ளடக்கமாக காணப்பட்டது. பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, 'கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் ரீதியிலான செயல்படுகள் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. அது வேறு விடயம். ஆனால் அவர் நாடாளுமன்றம் வருவதற்கு முன்னர் கைது செய்தமை நியாயமான செயல் இல்லை. நாடாளுமன்ற சிறப்புரிமைகள் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.' எனத்தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் கஜேந்திரகுமார் கைது தொடர்பான தங்கள் எதிர்ப்புக்களை உரையாக வெளியிட்டிருந்தார்கள். அவ்வறே தமிழ்த்தேசிய முலாமுடன் இயங்கும் அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாணக்கியன், சுமந்திரன், சித்தார்த்தன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தமது கண்டன உரைகளையும் வெளியிட்டிருந்தார்கள். மேலும், பிரித்தானிய தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோபன் மெக்டொனாக், 'பாரிய அட்டுழியங்கள் இனப்படுகொலைகளிற்கான நீதி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து குரல்கொடுக்கும் தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிற்கு பாதுகாப்பு இல்லை என்பதை இந்த கைது அச்சம் தரும் விதத்தில் வெளிப்படுத்தியுள்ளது' என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்துள்ளார்.
கஜேந்திரகுமார் கைது மற்றும் ஒடுக்குமுறை முயற்சிகள் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப்போராட்டத்துக்கான பேரினவாத அரச இயந்திரத்தின் வரலாற்று நீட்சியான அடக்குமுறையின் வடிமேயாகும். இதில் கஜேந்திரகுமார் என்பது ஓர் அடையாளம் என்ற பார்வைகளுடனேயே தமிழரசியல் புரிதல் அவசியமாகின்றது. கஜேந்திரகுமாருக்கு எதிரான கொலைமுயற்சியயை கண்டித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், 'பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நேர்ந்த கதி நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும். தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அச்சுறுத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் இந்த நாட்டில் இயல்பானதே.' எனக்குறிப்பிட்டார். இந்த தெளிவினை தமிழ் அரசியல் தலைவர்கள் உணர்ந்து செயலாற்றுகின்றார்களா என்பதை நுணுக்கமாக நோக்குதல் வேண்டும்.
ஒன்று, தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் அரச புலனாய்வாளரினால் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார் என்பது, ஈழத்தமிழர்களின் பாதுகாப்புசார் மற்றும் இருப்புசார் நெருக்கடியையே அடையாளப்படுத்துகின்றது. அவ்வாறானதொரு அரசியல் பிரச்சாரம் தமிழ் மக்களின் உரிமை போராட்டத்திற்கு வலுவானதாகவும் அமையக்கூடியதாகும். எனினும் தமிழரசியல் பரப்பில் கஜேந்திரகுமார் மீதான கொலை முயற்சி மற்றும் கைது என்பவற்றை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரின் கைதாகவே நோக்கப்படுகின்றது. கொலை முயற்சியை கண்டித்து தமிழரசியல் பரப்பில் வெறுமனவே உரைகளே இடம்பெற்றுள்ளது. பாரியளவில் எதிர்ப்பு போராட்டத்தினை கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் கட்சியினரோ அல்லது தமிழ்த் தேசிய முலாமுடன் இயங்கும் ஏனைய கட்சிகளோ செய்ய முன்வரவில்லை. மாறாக கொலை முயற்சியை நாடகமாக சித்தரித்தும், புலனாய்வாளனின் செயற்பாட்டை வரவேற்கும் வகையில் காழ்ப்புணர்ச்சி அரசியல் பதிவுகளையே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகளில் அரச இயந்திரத்தின் ஒடுக்குமுறை காலத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்களும் இவ்வாறதொரு காழ்ப்புணர்ச்சி அரசியலையே கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தார்கள் என்பதுவும் தமிழரசியின் தமிழ்த்தேசிய பலவீனமான அரசியலை வெளிப்படுத்துகின்றது.
இரண்டு, தமிழ்த்தேசியத்துக்கு அச்சுறுத்தலான விடயங்களில் தேசபக்தி மற்றும் ஒற்றுமையின் நிரூபணங்கள் வெளிப்படுவது அவசியமாகின்றது. அரசியல் கட்சிகள் உள் அரசியலில் சட்டப்பூர்வமாக உடன்படவில்லை என்றாலும், தமிழ்த்தேசியத்தை நோக்கி, கட்சி அரசியலைக் கடந்து, துருப்புச் செலுத்தும் ஒரு பொதுவான ஆர்வம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஆதரிக்கும் பட்சத்தில் வெளி உலகிற்கு ஒரு வலுவான உறுதியான சமிக்ஞை அனுப்பப்படுகிறது. அதேசமயம் அத்தகைய ஆதரவு இல்லாதது பலவீனமாக விளங்கும். எனவே அரசியல் கட்சிகள் முழுவதும் தமிழ்த்தேசிய கருத்தாக்கத்தில் அதிகபட்ச ஆதரவைப் பெறுவது சமூகத்தின் நலனுக்காகும். கஜேந்திரகுமார் மீதான காவல்துறையின் ஒடுக்குமுறையில் கஜேந்திரகுமார் ஒர் அடையாளம் என்பதையும், இங்கு முன்னிறுத்த வேண்டியது தமிழ்த்தேசியத்துக்கான சவால் என்பதையும் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னகர்த்த தவறியுள்ளார்கள். கஜேந்திரகுமாருக்கு முன்னரும் பல தமிழரசியல் தலைமைகள் அரச பயங்கரவாத்தினூடாக கொலைசெய்யப்பட்டுள்ளார்கள். குமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவரை நீதி கிடைக்கவில்லை. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1950ஆம் ஆண்டு காலி முகத்திடலில் போராட்டத்தில் சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டு, தலையில் ஏற்பட்ட காயத்துடன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது சிங்கள அரசியல்வாதிகள் 'சண்டை என்றால் காயம் ஏற்படும்' என எள்ளி நகையாடினார்கள். இவ்வரிசையில் தமிழினத்தின் போராட்டத்திற்கெதிரான ஒடுக்குமுறையின் ஓர் அங்கமே கஜேந்திரகுமார் மீதான காவல்துறையின் நடவடிக்கைகளாகும். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானது. இதனை சிறிதரன் தனது பாராளுமன்ற உரையில் உள்வாங்கிய போதிலும் செயற்பாட்டு தளத்தில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக பாரிய எதிர்ப்பினை ஒருங்கிணைக்க முடியாமை பலவீனமானதாகும்.
மூன்று, தென்னிலங்கை அரசாங்கம் அரச இயந்திரத்தினூடாக உள்நாட்டில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளினூடாக தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதுடன், சர்வதேசத்தில் நல்லிணக்கம் பற்றிய திரையூடாக சர்வதேச ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதிலும் தெளிவான இராஜதந்திர நகர்வுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றது. தென்னிலங்கை மக்களை திசை திருப்புவது தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு எளிதான பணியாக அமைகின்றது. ஒரு இனவாத பிரச்சார வித்தை மட்டுமே தந்திரம் செய்யும். கஜேந்திரகுமார் கைதினை தென்னிலங்கை இனவாத தரப்பு வெகுவாக பாராட்டி வருகின்றன. பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, 'பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்தமை மகிழ்ச்சி' எனத்தெரிவித்துள்ளார். தென்னிலங்கை அரசாங்கம் தனது இனவாத அரசியல் நகர்வை தந்திரோபாயமாக கையாள்கின்றது. இந்நிலையில் தமிழரசியல் மக்கள் பிரதிநிதி மீதான அச்சுறுத்தல் இலங்கையின் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இன ஒடுக்குமுறையையே அம்பலப்படுத்துகின்றது. தமிழர்களின் காணிகள் தொல்பொருள், பாதுகாப்பு படைகளால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதுசார்ந்து குரலெழுப்பும் மக்கள் பிரதிநிதி மீது அரசாங்கம் ஒடுக்குமுறையை மேற்கொள்கின்றது. ஒடுக்குமுறையை மேற்கொள்பவரையே அதுதொடர்பான விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கின்றது. இது உள்ளக விசாரணையின் அபத்தங்களையும் நல்லிணக்கத்தின் செயலற்ற தன்மையையுமே அடையாளப்படுத்துகின்றது. இவ்வாறான சூழலை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்த வாய்ப்பான சந்தர்ப்பங்களை கட்சி அரசியல் நலனுக்குள் சிந்தித்து தவறவிடுவார்களாயின் தமிழ்த்தேசிய அரசியல் இருப்பு ஆபத்தானதாகவே அமையும்.
எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான ஒடுக்குமுறை தமிழரசியலில் அதிகம் கட்சி நலனுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உரையாடலை பெற்றுள்ளது. இது தமிழ்த்தேசிய உரிமைப்போராட்ட அரசியலினை பலவீனப்படுத்தக்கூடியதாகும். அண்மைக்காலமாக தமிழ்த்தேசியத்துக்கான போராட்டங்கள் பலவற்றிற்கும் கட்சி அரசியல் ஆதிக்கத்தால் தமிழ்த்தேசிய போராட்டங்கள் மலினப்படுத்தப்படுவதனையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உரிமைக்காக போராடும் தேசிய இனத்தில் அரசியல் கட்சி என்ற குறுகிய வரையறைகளை கடந்து தேசியம் பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும். அதுவே தமிழ் சமூகத்தின் இருப்பை பாதுகாக்கக்கூடியதாகும். மாறாக தேர்தல் அரசியல் நலன்களை மையப்படுத்தி இயங்கும் தமிழரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய பாதுகாப்பை புறந்தள்ளி, கட்சி நலனையே முன்னிறுத்துவார்களாயின் தமிழ்த்தேசியத்தின் அழிவு தமிழரசியல் கட்சிகளினாலேயே கட்டமைக்கப்படுவதாக அமையும்.
Comments
Post a Comment