தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் தேசியத்துக்கான திரட்சியை பயன்படுத்திக்கொள்ளுமா! -ஐ.வி.மகாசேனன்-
ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசியத்தின் செல்நெறி தொடர்பில் பலமான சந்தேகங்கள் சமீபகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தென்னிலங்கை அரசியல் கட்சியை சார்ந்தவர் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற போது ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசிய செல்நெறி பலவீனமடைந்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. எனினும் வலுவான போராட்டங்கள் மற்றும் நினைவேந்தல்களுக்கான ஒன்று கூடல்களில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது தமிழ்த்தேசியம் மீதான உறுதிப்பாட்டை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்தவாரம் இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தலின் தமிழர் தாயக பதிவுகளும் அதனையே உறுதிசெய்கின்றது. எனினும், ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசிய உறுதிப்பாட்டை பயன்படுத்தி வலுப்படுத்தக்கூடிய செயற்றிட்டங்களை தமிழ் அரசியல் கொண்டுள்ளனவா என்பதிலேயே அரசியல் அவதானிகள் வலுவான கேள்விகளை எழுப்புகின்றனர். இக்கட்டுரை தமிழ் மக்களின் மாவீரர் தின எழுச்சியின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் என்பது ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் தேசியத்தின் ஓர் கூறாக பண்பாட்டு நிகழ்வாக பரிணாமம் பெற்றுள்ளமையையே ஒடுக்குமுறைகளுக்கு மத்தியிலும் கூடிய மக்கள் எழுச்சி அடையாளப்படுத்தியுள்ளது. எந்தவொரு சமுகத்திலும் அதன் பண்பாட்டை எளிதில் அச்சமூகத்தை விட்டு பிரிக்க முடியாது. அவ்வாறானதொரு பிணைப்பிலேயே ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் மாவீரர் நினைவேந்தலும் அமைகின்றது. நெருக்கடிகளுக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தலை மையப்படுத்தி மக்களின் எழுச்சி தமிழ்த்தேசிய அரசியலின் செல்நெறியில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கான வழித்தடத்தை அடையாளப்படுத்துவதாகவே காணப்படுகின்றது. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகும்.
முதலாவது, உலக வரலாற்றில் மெய்யியல்கள் புதைகுழிகளிலிருந்தே தொடங்குகின்றது. இழப்புகளின் அல்லது இறப்புகளின் பின்பே மெய்யியல்கள் பரந்த அளவில் அடையாளப்படுத்தப்படுவது உலக வழக்கமாக அமைகின்றது. அவ்வாறானதொரு மெய்யியல் தடத்தையே மாவீரர் நினைவேந்தலை மையப்படுத்திய தமிழ் மக்களின் உயிர்ப்பான எழுச்சி அடையாளப்படுத்தப்படுகின்றது. விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக முன்னெடுத்த போராட்டத்தை மற்றும் அவர்களின் உயரளவிலான அர்ப்பணிப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வதுடன் அதனை பொதுவெளிக்கு பகிரங்கப்படுத்தம் நடவடிக்கையாகவே மாவீரர் தினத்தில் இலங்கை பொலிஸாரின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டமை காணப்படுகின்றது. ஈழத்தமிழர்கள் தங்களது கூட்டுரிமைக்கான கூட்டுணர்வை மாவிரர் நினைவேந்தலில் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதுவொரு தொடர்ச்சியான வெளிப்பாடாக அமைகின்றது. குறிப்பாக 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட சர்வதேச நெருக்கடியின் விளைவிற்கு பின்னராக இவ்வெளிப்பாட்டை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஈழத்தமிழர்கள் சரியான நெறிப்படுத்தலற்றவர்களாகவும், பாதுகாப்பு கட்டமைப்பற்றவர்களாகவுமே 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் காணப்படுகின்றார்கள். எனினும் இலங்கை பொலிஸார் தடைகளை நெருக்கடிகளை ஏற்படுத்துகின்ற போதிலும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை கொண்டு மாவீரர்களின் தியாகத்துக்கான தமது நன்றியுணர்வை வெளிப்படுத்தி வருகின்றார்கள். அதனோர் உச்ச வடிவத்தையே இவ்வாண்டு மாவீரர் நினைவேந்தலில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அதாவது தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கான மெய்யியல் அடையாளமாகவே மாவீரர் தியாகத்துக்கான திரட்சி வெளிப்படுத்தியுள்ளது.
இரண்டாவது, 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னரான அரசியல் சித்தாந்த மாறுதல்களை தமிழ் மக்கள் புறக்கணித்துள்ள செய்தியும் மாவீரர் நினைவேந்தலுக்கான திரட்சியின் பின்னால் ஆழமாக பொதிந்துள்ளது. விடுதலைப்புலிகளின் புதைகுழிகளிலிருந்து நெறிப்படுத்தப்படும் அவர்களது தியாகத்தை கோலோச்சி அவர்களது மெய்யியலுக்கான அங்கீகாரம் என்பது சமகால தமிழ் அரசியல் கட்சிகளின் போலியான மெய்யியல் புறக்கணிப்புக்கான செய்தியாகவே காணப்படுகின்றது. தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் கோரிக்கைகளை சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வகையிலான சமஷ்டியிலிருந்தும் கீழிறங்கி ஏக்கிய ராச்சியத்துக்குள்ளும், 13இனை அடிப்படையாக கொள்ளும் முயற்சிகளுக்கும் அரசியல் சித்தாந்தத்தை வடிவமைத்துள்ளனர். இச்சித்தாந்தங்களின் புறக்கணிப்பாகவே கடந்த தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளின் வீழ்ச்சி காணப்படுகின்றதேயன்றி, தமிழ்த்தேசியத்துக்கான வீழ்ச்சி இல்லை என்பதுவே மாவீரர் நினைவேந்தலின் மக்கள் எழுச்சி வெளிப்படுத்துகின்றது. மேலும் அண்மைக்காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் சிவில் போராட்டங்களில் தமிழ் மக்களின் பங்குபற்றல்கள் காணப்படுவதில்லை. எனினும் பொலிஸாரின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாவிரர்களின் நினைவேந்தலில் தமிழ் மக்களின் திரட்சி என்பது தமிழ் அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்களின் வெறுப்பும், 2009க்கு முன்னரான அரசியலை தியாகத்தை 2009க்கு பின்னரான அரசியலில் நிரப்பீடு செய்ய முடியவில்லை என்பதே உணர்த்தப்படுகின்றது. இச்செய்தியை ஆழமாக புரிந்து கொண்டே விடுதலைப்புலிகளை மையப்படுத்தி ஈழத்தமிழரசியலை குழப்பும் வகையிலான செய்திகள் தொடர்ச்சியாக திட்டமிட்டு நகர்த்தப்படுவதனை அவதானிக்கலாம்.
மூன்றாவது, தமிழ் மக்கள் தங்களது இருப்பை மற்றும் தமிழ்த்தேசியத்தை பாதுகாக்கக்கூடிய தலைமைக்கான ஏக்கத்தை வெளிப்படுத்தும் களமாகவும் மாவீரர் துயிலுமில்லமும் மாவீரர் நினைவேந்தலும் அமைந்துள்ளது. 2009களுக்கு பின்னர் தமிழ் மக்கள் மேய்ப்பானற்ற மந்தைகளாகவே காணப்படுகின்றார். 2009களுக்கு பின்னர் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகளுக்கு ஊடாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும் தமிழ் மக்களுக்கு அரணை கட்டமைக்க திராணியற்றவர்களாகவே தமிழ் அரசியல் கட்சிகள் காணப்படுகின்றனர். நில ஆக்கிரமிப்புக்கள் என்பதை தொடர்ந்து சமகாலத்தில் பண்பாட்டை சிதைக்கும் வகையில் போதைக்கலாச்சாரமும் வடக்கு-கிழக்கில் திட்டமிட்ட வகையில் அதிகரித்து வருகின்றத. எனினும் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களினையும் தேசியத்தையும் பாதுகாக்கும் வகையில் எந்தவொரு செயற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. எனினும் 2009களுக்கு முன்னர் ஈழத்தமிழர்களின் பண்பாடு உயர்வாக பேணப்பட்டு வந்தது என்பது பொது மக்களிடம் காணப்படும் பரவலான பொதுக்கருத்தாகும். இந்த பின்னணியிலேயே இன்று தம் இருப்பை பாதுகாக்க இயலாமையின் இழப்பின் துயரத்தின் வெளிப்பாடாகவே மாவீரர் நினைவேந்தலில் மக்களின் எழுச்சி அரசியல் அவதானிகளால் நோக்கப்படுகின்றது.
எனவே, மாவீரர் நினைவேந்தலும் அதுசார்ந்து வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் எழுச்சியானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடையாளப்படுத்தியுள்ளது. இது தமிழ் அரசியல் கட்சிகளின் கையறுநிலையை சுட்டிக்காட்டி, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழ் அரசியல் கட்சிகள் தமது அரசியல் நலனை முன்னிறுத்தி போட்டிபோட்டு மாவீரர் தினங்களை முன்னெடுக்க ஆர்வம் காட்டுகின்ற போதிலும், மக்களின் திரட்சி தமிழ் அரசியல் கட்சிகளுக்கான படிப்பினையாகவே அமைகின்றது. கடந்த காலங்களில் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னெடுத்த அரசியல் போராட்டங்களில் மக்கள் திரட்சியை வெளிப்படுத்தியிருக்கவில்லை. மாறாக மாவீரர் நினைவேந்தலின் மக்கள் திரட்சியானது மாவீரர்களுக்கானதாகவே அமைகின்றது. இதனூடாக தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் அரசியல் நலன் பூர்த்தியடைய போவதில்லை. 2001-2009க்கு இடைப்பட்ட தேர்தல் காலங்களில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தவர்களிடம் பொருளாதார நலன்களை பெற்றுக்கொண்டு தமிழ்த்தேசியத்துக்கு வாக்களித்த வரலாறுகள் காணப்படுகின்றது. அவ்வாறானதொரு அனுபவப்பகிர்வே மாவீரர் நினைவேந்தலில் தமிழ் அரசியல் கட்சிகளிற்கு மீதமாகக்கூடியதாகும். தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள அரசியலை புரிந்து கொண்டு 2009க்கு முற்பட்ட தமிழ் மக்களை பாதுகாக்கக்கூடிய அரசியலை தமிழ் அரசியல் கட்சிகள் பிரதிபலிப்பதன் மூலமே தமிழ்த்தேசியத்தின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும். தமிழ்த்தேசியம் பற்றுறுதி தமிழ் மக்களிடம் நிலையானதாகவே காணப்படுகின்றது. எனினும் அதனை திரட்டி பெற்றுக்கொள்ளக்கூடிய திராணியில் தமிழ் அரசியல் கட்சிகளின் மெய்யியல் காணப்படவில்லை என்பதுவே மாவீரர்கள் நினைவேந்தலின் தமிழ் மக்களின் எழுச்சி வெளிப்படுத்தும் அரசியல் முக்கியத்துவமாக அமைகின்றது.
Comments
Post a Comment