இந்தியாவின் இந்துத்துவத்தில் பௌத்தத்தின் நிலை! -ஐ.வி.மகாசேனன்-

இந்தியாவில் 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த மாதம் இடம்பெற்ற 5 மாநில தேர்தல்களில் மூன்றில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது அடுத்த ஆண்டு தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்நிலையிலே வலுப்பெறும் இந்தியாவின் இந்துத்துவ அரசியலுக்கூடாக இலங்கையில் பௌத்ததால் சிதைக்கப்படும் இந்து பண்பாட்டை பாதுகாத்துஇ தமிழ்த்தேசியம் மீதான ஆக்கிரமிப்புக்களை நிறுத்தலாம் என்ற வகையில் ஈழத்தமிழரசியல்  உரையாடவும் செயற்படவும் ஆரம்பித்துள்ளது. எனினும் மறுதளத்தில் இந்திய மத்திய அரசுடனான அணுகலை ஈழத்தமிழரசியலின் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மத அரசியலை புகுத்தும் செயற்பாடாக அமையுமென்ற விமர்சனங்களும் சமகாலத்தில் ஈழத்தமிழரசியலில் வலுப்பெற்று வருகின்றது. இக்கட்டுரை இந்தியாவின் இந்துத்துவ அரசியலில் பௌத்தத்தின் நிலையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் காலத்துக்கு காலம் இந்தியாவின் அரசியல் ஆதிக்கங்கள் இலங்கை அரசியலில் பாரிய மாறுதல்களை ஏற்படுத்தி வந்துள்ளது. அத்தகையதொரு மாறுதலே கி.மு 3ஆம் நூற்றாண்டில் இந்தியப்பேரரசர் அசோகரின் புதல்வன் மகிந்த தேரரின் இலங்கை வருகையை அடுத்து இடம்பெற்றதாக வரலாற்று ஆவணங்கள் உறுதி செய்கின்றன. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பௌத்தம் வருகை தந்தது. அவ்வாறே பின்னாளில் தமிழ்நாட்டில் சோழர்களின் எழுச்சி பக்தி இலக்கிய வரலாற்றின் வளர்ச்சி வடக்கில் தமிழ் பௌத்தத்தின் அழிவுக்கும் காரணமாகியதாய் சான்றுகள் உறுதி செய்கின்றன. இத்தகைய வரலாற்று தொடர்ச்சியிலேயே இன்று இந்திய மத்திய அரசியலில் எழுச்சி பெறும் இந்துத்து அரசியலின் உறுதுணையுடன் வடக்கு-கிழக்கில் இடம்பெறும் இந்து ஆலயங்கள் மீதான பௌத்த ஆக்கிரமிப்பை தடுப்பதற்கான எண்ணங்கள் தமிழ் அரசியலில் வாதப்பொருளாகியுள்ளது. எனினும்இ இந்தியாவின் இந்துத்துவ அரசியலில் பௌத்தத்தின் நிலையினை நுணுக்கமாக அறிதல் தமிழ்ப்பரப்பிற்கு அவசியமானதாக அமைகின்றது.

முதலாவது, இந்தியாவின் ஜனநாயகத்தின் வரலாற்று பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக பௌத்தம் முதன்மை பெறுகின்றது. இந்தியா தன்னை ஜனநாயகத்தின் தோற்றமாக (Mother of Democracy) பிரகடனம் செய்கின்றது. மார்ச் 2023இல் அமெரிக்கா, கோஸ்டாரிகா, நெதர்லாந்து, தென்கொரியா மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் இணைந்து நடாத்திய ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி 'பண்டைய இந்தியாவில் பரம்பரையாக இல்லாத குடியரசு அரசுகளை பற்றிய பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. இந்தியா உண்மையில் ஜனநாயகத்தின் தாய்' எனத்தெரிவித்திருந்தார். இத்தகைய உரையாடலை செப்டெம்பர் 2021இல் ஐக்கிய நாடுகள் பெர்துச்சபையிலும் மோடி வலியுறுத்தியிருந்தார். இதனை நிருபிக்கும் வகையிலான இந்திய ஆய்வுகளில் பௌத்தத்தை மையப்படுத்திய கருத்தியல் வலுப்பெறுகின்றது. குறிப்பாகஇ கி.மு 5ஆம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் நிறுவப்பட்ட பௌத்த சங்கம் (Sangha), ஆரம்பகால ஜனநாயக நடைமுறைகளை எடுத்துக்காட்டுவதாக இந்திய அரசறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்இ இந்த வருடம் பு20 மாநாட்டை தழுவி இந்தியாவின் பண்டைய ஜனநாயக மரபுகள் மற்றும் விழுமியங்களை எடுத்துரைக்கும் 'ஜனநாயகத்தின் தாய்' என்ற கண்காட்சி இடம்பெற்றது. இந்தியாவின் ஜனநாயக மரபு, சமத்துவம், நல்லிணக்கம், சுதந்திரம், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அவை பண்டைய காலங்களிலிருந்து இன்றுவரை இந்திய கலாச்சாரத்தில் ஒருங்கிணைந்தவை என்பதை வெளிப்படுத்தும் வகையில் சிந்து-சரஸ்வதி நாகரீகம், வேதகாலம், இராமாயணம், மகாபாரதம், மகா ஜனபதம், கந்தந்திரம், ஜைனம் மற்றும் பௌத்தத்தின் வருகை, கௌடில்யர் மற்றும் அர்த்தசாஸ்திரம், இந்தியாவின் மெகஸ்தனிஸ், பேரரசர் அசோகரின் வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இதில் பௌத்தத்தின் உள்ளடக்கம் இந்துத்துவத்திற்குள்ளே பௌத்தமும் உள்ளடக்கப்படுவதன் சாட்சியமாகவே அமைகின்றது.

இரண்டாவது, புத்தரின் போதனைகள் இந்தியாவின் அரசியல் தத்துவத்தின் ஒரு பகுதியாக பிரச்சாரப்படுத்தப்படுகின்றது. சுதந்திர இந்தியா அஹிம்சையை தமது அடையாளமாக சித்தரித்து வருகின்றது. இந்தியாவின் சுதந்திர போராட்டம் மற்றும் காந்தியின் ஈடுபாட்டை வலியுறுத்தி இந்தியாவின் வடிவமாக அஹிம்சை உரையாடப்படுவது பொதுப்பார்வையாகும். எனினும் சமகால மோடி அரசாங்கம் சர்வதேச அரங்கில் அஹிம்சையை இந்திய வரலாற்றில் ஆழமாக பொதிந்துள்ள அரசியல் தத்துவமாக பிரச்சாரப்படுத்துகின்றனர். இதற்கு கௌதம புத்தரின் உரைகளையே சான்று பகிர்கின்றமையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 2019ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி புத்தபெருமானின் நற்செய்தியின் முதன்மையான உதாரணமாகஇ அமைதிக் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொண்டதில் பெருமிதத்தை வெளிப்படுத்தியிருந்தார். உரையில், 'உலகிற்கு யுத்தத்தை (Yuddh) அல்ல புத்தரை (Buddh) வழங்கிய நாடு இந்தியா' என்று தெரிவித்திருந்தார். பலம், காலநிலை, பேரிடர் மற்றும் அமைதிக்கான இந்தியாவின் அணுகுமுறையை விளக்குவதில் பிரதமர் மோடியால் புத்தர் அடிக்கடி தூண்டப்படுகிறார். மேலும், ஜனநாயக விழுமியங்களில் முதன்மைப்படுத்தப்படும் சுதந்திரம், சமத்துவம் என்பவற்றை புத்தரின் சங்கங்களிலிருந்து அடையாளப்படுத்தப்படுகின்றது. இவற்றினூடாக இந்தியாவின் நீண்ட அரசியல் தத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக பௌத்தத்தை முதன்மைப்படுத்துவதனை அவதானிக்கலாம். 

மூன்றாவது, இந்தியா அரசாங்கம் தமது வெளியுறவுக்கொள்கையில் பௌத்தத்தின் இந்திய தோற்றத்தை முதன்மைப்படுத்துவதையும் மோடி அரசாங்க காலப்பகுதியில் தொடர்ச்சியாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்தியா ஆசியா நாடுகளின் உறவை வலுப்படுத்துவதில் பௌத்தத்தைப் பயன்படுத்திக் கொள்கிறது. பிராந்தியத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான மென்மையான சக்தி கருவியாக மதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. ஐ.நாவுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜிஇ 'இந்தியாவும் ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு இடையே நமது பொதுவான பௌத்த பாரம்பரியத்தால் உருவாக்கப்பட்ட பண்டைய இணைப்புகளை நமது வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்த முயன்றது. உலகை ஒரு குடும்பமாக அல்லது வசுதைவ குடும்பமாகப் (Vasudhaiva Kutumbakam) பார்க்கிறது' எனத் தெரிவித்துள்ளார். இந்தியா பௌத்தத்தை மையப்படுத்தி கட்டமைக்கும் வெளியுறவுக்கொள்கையை பல ஊடகங்களும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய செய்தி நிறுவனமாகிய ANI, 'இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தனித்துவமான பகுதியாக பௌத்தத்தை பிரதமர் மோடி முன்னிறுத்துகிறார்' எனக்குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் புத்த பாரம்பரியத்தை மூலோபாய சொத்தாக மாற்றி மோடி தனது வெளியுறவுக்கொள்கையை வடிவமைத்துள்ளார். பௌத்தர்கள் இந்தியாவின் மக்கள்தொகையில் ஒரு சிறிய சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தலாம்இ ஆனால் இந்திய பௌத்த மத நம்பிக்கையின் பிறப்பிடமாக மட்டுமல்லாமல்இ புத்த காயா, நாளந்தா மற்றும் சாரநாத் உட்பட ஏராளமான புனித தலங்களின் தாயகமாகவும் உள்ளது. இந்தியா எனும் தெற்காசிய நாட்டை 6ஆம் நூற்றாண்டில் உலகிற்கு திறந்து வைத்தது என்ற அடிப்படையில் பௌத்தம் இந்தியாவின் மிக வெற்றிகரமான ஏற்றுமதியாகும் என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். ஆசிய பிராந்தியத்தில்இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்புவதற்கும் மேம்படுத்துவதற்கும் பௌத்தத்தை சரியான கருவியாக கருதுவதாக மோடி தனது சொல்லாட்சி மற்றும் கொள்கைகளில் தெளிவுபடுத்தி வருகின்றார். கடந்த மாதம் இலங்கைக்கு வந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால பௌத்த தொடர்புகளை வலுப்படுத்துவதற்காக இலங்கைக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதேவேளை திருக்கோணேஸ்வர புனரைமப்புக்கான கோரிக்கை கடிதத்தை இந்தியாவிற்கு சமர்ப்பிக்க கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில், தீவிர இந்து தேசியவாத எழுத்தாளரும் அரசியல் ஆர்வலருமான விநாயக் தாமோதர் சாவர்க்கரின் கூற்றே இந்தியாவின் இந்துத்துவத்தில் பௌத்தத்தின் நிலையை அடையாளப்படுத்த வலுவான சான்றாகும். விநாயக் தாமோதர் சாவர்க், 'இந்திய தேசம் அதன் மையத்தில் ஒரு இந்து தேசமாக உள்ளது. ஒரு இந்து, இறையாண்மை கொண்ட இந்தியப் பிரதேசத்தை தனது தாய்நாடாகவும் (பித்ரிபூமி) மற்றும் புனித பூமியாகவும் (புண்யபூமி) கருதுபவர்.'  எனக்குறிப்பிடுகின்றார். அவரது கூற்றின் தொடர்ச்சியாக, 'இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்கள் இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்கிறார்கள். அதே சமயம் கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்சிகள் மற்றும் முஸ்லிம்கள் இந்த மத குழுக்களின் உறுப்பினர்கள் இந்தியாவை தங்கள் உண்மையான புனித பூமியாக கருதுவதில்லை.' எனத்தெரிவித்துள்ளார். விநாயக் தாமோதர் சாவர்க்கரின் கருத்து இந்தியாவின் இந்துத்துவத்தில் பிணைந்துள்ள மதங்களையும் முரணாகும் மதங்களையும் அடையாளப்படுத்துவதாக அமைகின்றது. 

எனவே, இந்தியாவின் இந்துத்துவ அரசியலின் அடையாளங்களில் ஒன்றாக முதன்மைப்படுத்தப்படும் பௌத்தத்தின் மீது இந்திய அரசாங்கம் எதிர்வினையாற்றுமா என்பது தொடர்பில் தமிழரசியலில் போதிய விளக்கம் அவசியப்படுகின்றது. ஈழத்தமிழரசியலில் இனப்படுகொலையாளியாக சித்தரிக்கப்படும் மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷhவை பௌத்த பிரதிநிதியாக குஷி விமான நிலைய திறப்பு விழாவில் இந்தியா பிரதமர் மோடி வரவேற்றிருந்தமை இந்துத்துவம் ஈழத்தமிழரை தாண்டி பௌத்தத்துடன் கொண்டுள்ள உறவையும் பிணைப்பையுமே உறுதி செய்கின்றது. இந்தியாவை இந்திய அரசியல் போக்கை கற்பது ஈழத்தமிழருக்கு முதலில் தேவையானதொரு விடயமாக அமைகின்றது. டிசம்பர்-1அன்று டில்லி பல்கலைக்கழகத்தில் ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடி தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கருத்தரங்கின் முடிவில் விருந்தினர்கள் சந்திப்பில் தெரிவித்த கருத்து நடைமுறைபெறுவது அவசியமானதாகும். புதுடில்லியில் தமிழ்த்தேசிய அரசியலை நகர்த்துவதற்கான இராஜதந்திர கட்டமைப்பு அலுவலக பொறிமுறையுடன் நிறுவ தமிழ்த்தேசியம் தவறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இனிவரும் காலங்களிலாவது இவ்வாறானதொரு கட்டமைப்பை உருவாக்குவார்களாயின் சில தேவையற்ற வாதங்களையும் நம்பிக்கைகளையும் தவிர்த்து ஆக்கபூர்வமாக இந்தியாவுடன் அரசியலை நகர்த்த பயனுடையதாக அமையும்.

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

கொழும்பு-புதுடில்லி உறவும் இந்திய இந்து – இலங்கை பௌத்த நாகரீகப் பிணைப்பு -ஐ.வி.மகாசேனன்-