ராஜபக்ஷா குடும்பம் ஜனரஞ்சக அரசியலில் மீளெழுச்சி பெறுமா? -ஐ.வி.மகாசேனன்-
20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் சர்வதேச அரசியலில் ஜனரஞ்சகவாத அரசியல் பற்றிய சொல்லாடல் ஜனநாயகத்தின் சுமையாக விவாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், இங்கிலாந்தில் பொரிஸ் ஜோன்சன், இந்தியாவில் நரேந்திர மோடியின் ஆட்சிகள் ஜனரஞ்சகத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டதாக அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. சமகாலத்திலேயே இலங்கையில் ராஜபக்ஷhக்கள் தவிர்க்க முடியாத ஜனரஞ்சக அரசியல் தலைவர்களாக எழுச்சி பெற்றார்கள். பொதுஜன பெரமுன கட்சியின் குறுகிய காலத்திலான பரந்த பரிமானமும் அதன் சான்றாகவே அமைந்தது. எனினும் ஜனரஞ்சக அரசியல் தலைமைகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை, இலங்கை மக்கள் 2021ஆம் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியினூடாக பெற்றுக்கொண்டார்கள். ஜனரஞ்சக தலைவர்கள் அரகல்யா எனும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் எழுச்சியினூடாக ஆட்சியிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார்கள். எனினும் மீள ஜனரஞ்சக அரசியலை முன்னிறுத்தி ராஜபக்ஷாக்கள் தலைமையில் பொதுஜன பெரமுன மீளெழுச்சி பெறுகின்றதா என்பதே தென்னிலங்கை அரசியலின் சமகால அரசியல் வாதமாக அமைகின்றது. இக்கட்டுரையும் பொதுஜன பெரமுனவின் அரசியல் மாநாடு ஏற்படுத்தக்கூடிய அரசியல் தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர்-15அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இடம்பெற்றது. தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மகிந்த ராஜபக்ஷா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பொதுஜன பெரமுன ஆளும் தரப்பாக பாராளுமன்ற பெரும்பான்மையை கொண்டுள்ள போதிலும் பொருளாதாரத்தை திவாலாக்கி, பொதுமக்களுக்கு சொல்லொணா இன்னல்களை ஏற்படுத்தி, மக்கள் எழுச்சிக்கு மத்தியில் ஆட்சியை விலகி சென்றனர். இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு பொதுஜன பெரமுன ஆட்சியாளர்களின் பொறுப்புக்கூறலற்ற செயற்பாடே காரணம் என்பதை சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உறுதி செய்தது. இந்நிலையிலேயே கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டை பெரும் செலவில் கொழும்பு மாநாகர தெருக்களில் காட்சிப்பதாகைகள் நிறுவப்பட்டு, சுகததாச உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக நடாத்தி முடித்துள்ளார்கள். முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷா தவிர்ந்து ஏனைய ராஜபக்ஷாக்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
பொதுஜன பெரமுன தலைவர்கள் மாநாட்டு உரையில், தற்காலிக பின்னடைவுகள் என்று கூறினாலும், அரசியல் முன்னணியில் எந்த சவால்களையும் சமாளிக்கும் அளவுக்கு தாங்கள் பலம் வாய்ந்தவர்கள் என்று தற்பெருமை காட்டினர். பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷா, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் தமது கட்சி வெற்றிபெறும் என நம்புவதாக அறிவித்தார். மேலும், தமது ஆதரவாளர்களை அச்சுறுத்தவோ அல்லது சிறுமைப்படுத்தவோ வேண்டாம் என அரசியல் போட்டியாளர்களை எச்சரித்தார். அவ்வாறே கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷா போர் வெற்றியின் பெருமைகளை தனது உரையில் முதன்மைப்படுத்தியிருந்தார். இப்பின்னணியில் பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு தென்னிலங்கை அரசியலில் அதிக உரையாடலை பெற்றுள்ளது. அரகல்யா எனும் மக்கள் எழுச்சியால் முடக்கப்பட்டதாக நம்பப்பட்ட அரசியல் குடும்பத்தின் எழுச்சிக்கான ஆரம்ப நகர்வாக பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு தென்னிலங்கை அரசியலில் முதன்மையான விவாதத்தை பெற்றுள்ளது. இவ்விவாதத்தின் தன்மையை விளங்கிக்கொள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டின் அரசியல் முக்கியத்துவத்தை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, போர் வெற்றி மற்றும் மகிந்த ராஜபக்ஷாவை முன்னிலைப்படுத்துவதனூடாக மீள ஜனரஞ்சக அரசியலூடாக அரசியலதிகாரத்தை கைப்பற்ற பொதுஜன பெரமுன திட்டமிடுகிறது. பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கமும் கடந்தகால வளர்ச்சியும் வெற்றிகளும் மகிந்த ராஜபக்ஷா எனும் ஆளுமையின் ஆட்சிக்காலத்தில் வெற்றிகொள்ளப்பட்ட கடந்த முப்பதாண்டு போரின் வெற்றிப்பிரச்சாரமே ஆகும். தென்னிலங்கையின் போர் வெற்றியின் விளைவாகவே பொதுஜன பெரமுனவின் அரசியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. போர் வெற்றியினை மையப்படுத்திய அரசியல் முழுமையானதொரு ஜனரஞ்சக அரசியல் வெளிப்பாடாகவே அமைகின்றது. ஜனரஞ்சக அரசியலின் ஆபத்தான பக்கமாக பன்மை எதிர்ப்பு நிறைந்த மேலதிகாரமாக அரசறிவியலாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர். ஜனநாயக பன்மைத்துவத்தை நிராகரித்து, அதன் தலைவரும் கட்சியும் மட்டுமே மக்கள் விருப்பத்தின் உண்மையான, சட்டபூர்வமான வெளிப்பாடு எனும் ஜனரஞ்சகவாதம் ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறுகிறது. மேலும், ஜனரஞ்சகத்தின் எதிர்மறையான அம்சம், குடிமக்களிடையே உள்ள உறவுகளின் நாகரீகத்தை அது குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். இது அரசியல் எதிரிகள் மற்றும் சிறுபான்மை குழுக்களின் கண்ணியத்திற்கு மதிப்பைக் குறைக்கிறது மற்றும் நியாயமான விவாதங்களின் கலாச்சாரத்தை பலவீனப்படுத்துகிறது. தமிழர், சிங்களவர், முஸ்லீம் மற்றும் பறங்கியர் என பல்லின சமுகம் வாழும் இலங்கையில் சிங்கள பௌத்தத்தை முதன்மைப்படுத்தி, ஒரு தேசிய இனம் தோற்கடிக்கப்பட்ட வரலாற்றை வெற்றி பெருமிதமாக கருதி அறுவடை செய்யும் களமாகவே பெரமுன தொடர்ச்சியாக ஒழுங்கமைக்கப்படுகின்றது. தேசிய மாநாட்டில் மகிந்த ராஜபக்ஷா, 'தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியும் முன்வரவில்லை. ஆனால், நான்தான் அவரை நேருக்கு நேர் எதிர்கொண்டேன்' என மீளப்போர்வெற்றிப்பிரகடனத்தை மேற்கொண்டார். இது ஜனரஞ்சக அரசியலில் அறைகூவலாகவே அமைகின்றது. அரகலயா பொதுஜன பெரமுன இடையே எவ்வித சுயமதிப்பிடலையோ மாறுதல்களையோ உருவாக்கியிருக்கவில்லை.
இரண்டாவது, பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு அடுத்த வருடம் நடைபெறலாமென எதிர்வுகூறப்படும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தை தேர்தல் பிரச்சாரங்களுக்கான மென்மையான துவக்கமாக இருந்தது. ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் 2024இல் நடத்தப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் 2025இல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் அடுத்த ஆண்டு தேசியத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மக்கள் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளன. இந்நிலையிலேயே பொதுஜன பெரமுன அரகலய மூலம் சிதைக்கப்பட்ட விம்பத்தை உயர்த்திக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நேரடி வேட்பாளரை நிறுத்தும் எண்ணங்கள் காணப்படாவிடினும், ரணில் விக்கிரமசிங்காவை தமது எண்ணங்களுக்குள் பயணிக்க வைக்க ராஜபக்ஷhக்களுக்கு பெரமுனவின் விம்பத்தை உயர்த்தி காட்ட வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதற்கான களமாகவே பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு ராஜபக்ஷாக்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாற்றாக 2016ஆம் ஆண்டில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷா தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து காலி முகத்திடலில் மாபெரும் மே தினக் கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் பொதுமக்கள் கூட்டம் கடலாக மாறியது. இவ்விம்பத்தை கொண்டு 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் தேசிய அரசாங்கத்தை தோற்கடித்தது. மேலும் 2019 மற்றும் 2020இல் முறையே ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. இப்பின்னணியிலேயே அடுத்த ஆண்டு தேர்தலை இலக்காக கொண்டு இரண்டாவது தேசிய மாநாட்டையும் பொதுஜன பெரமுன ஒழுங்கமைத்திருந்தது. பொதுஜன பெரமுன தலைவர்களது உரைகளும் தேர்தல்களை மையப்படுத்திய பிரச்சாரமாகவே அமைந்தது. எவ்வாறாயினும், இலக்கை விட குறைவான விம்ப எழுச்சியையே பொதுஜன பெரமுனவால் வெளிப்படுத்த முடிந்தது என்பது தென்னிலங்கை அரசியல் அவதானிகளின் கருத்தாக அமைகின்றது.
மூன்றாவது, பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு வெளியே இடம்பெற்ற நிகழ்வுகள் சில பொதுஜன பெரமுனவிற்கான எச்சரிக்கையும் வழங்கி இருந்தது. அரகல்யா எனும் மக்கள் எழுச்சியினூடாக விலக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தமது மீளெழுச்சியை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு எதிராக அஹிம்சையான எதிர்ப்பு கொழும்பு மாநகரிலும் சமுக வலைத்தளங்களிலும் இடம்பெற்றிருந்தது. Cloud Nine எனும் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு எதிரான 'வைக்கோல் புல் போராட்டம்' (Grass-Hay Protest) புதியதொரு வடிவில் விமர்சனப்போக்கில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பொதுஜன பெரமுன தலைவர்கள் மற்றும் அணியினர் தங்கள் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டிற்கு செல்லும் வழியில் வைக்கோல் மற்றும் புல் மூட்டைகளை போராட்டக்காரர்கள் தொங்க விட்டிருந்தனர். இது அரசாங்க உறுப்பினர்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் அகிம்சை வழியில் கேலி செய்வதையே தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், தற்போது இயங்குநிலையில் உள்ள எல்பிட்டிய பிரதேச சபையில் பொதுஜன பெரமுனவின் வரவு-செலவுத்திட்ட அறிக்கை இரண்டாவது தடவையாகவும் டிசம்பர்-18அன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் 29ஆசனங்களில் 17 ஆசனங்களை பெற்று பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றியது. எனினும் தற்போது பிரதேச சபையில் பொதுஜன பெரமுன தரப்பு ஆட்சியை இழந்துள்ளது. 2016இல் உருவாக்கப்பட்ட பெரமுன குறுகிய காலத்தில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றக்கூடிய பிரதான கட்சியாக உருவாகுவதில் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றி பிரதான காரணமாகும். அதுமட்டுமன்றி சிறிசேனா-ராஜபக்ஷா அரசியல் சதி முறியடிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக்கப்பட்டு, சிறிது வாரங்களிலேயே எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் வெற்றி பொதுஜன பெரமுனவிற்கு தேர்தலுக்கான நம்பிக்கையை வழங்கியிருந்ததென அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில் ஏனைய பிரதேச சபைகளின் காலம் முடிவடைந்த நிலையில் இயங்குநிலையில் உள்ள எல்பிட்டிய பிரதேச சபையில் பொதுஜன பெரமுனவின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டமை அதன் வீழ்ச்சிக்கான எதிர்வுகூறலாகவே அவதானிக்கப்படுகின்றது. உள்நாட்டில் மட்டுமன்றி ராஜபக்ஷாக்களின் சீன முகம் சர்வதேச வல்லாதிக்க அரசு போட்டிக்குள் தள்ளப்படுவதும் பெரமுன எழுச்சிக்கு நெருக்கடியாகவே கருதப்படுகிறது.
எனவே, டிசம்பர்-15அன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலிந்து ஜனரஞ்சக அரசியலூடாக ஆட்சியதிகாரத்தை தக்கவைப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள போதிலும், பெரமுன அரகலயவின் தாக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளை முழுமையாக தவிர்த்து செல்ல முடியாத நிலையில் உள்ளமையையே வெளிப்புற அரசியல் வெளிகள் உணர்த்தி நிற்கின்றது. சமாந்தரமாக சர்வதேச அரசியல் வெளியிலும் இலங்கைக்கு ஒத்த அரசியல் நடப்பியலை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. எனினும் கொலராடோ உச்ச நீதிமன்றம் ஜனவரி-6, 2021அன்று அமெரிக்க தலைநகர் மீதான தாக்குதலைத் தூண்டும் வகையில் செயற்பட்ட ட்ரம்ப், அமெரிக்க அதிபராக பணியாற்ற தகுதியற்றவர் என்று தீர்ப்பளித்துள்ளது. எனினும் ட்ரம்ப் தனது ஜனரஞ்சக அரசியல் இயல்புகளூடாக 2024ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றார். இது அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவ்வாறே இலங்கையில் பொதுஜன பெரமுன ஜனரஞ்சக அரசியலை முன்னிறுத்தி ஆட்சியை தக்கவைக்க முனைவது இலங்கையின் ஜனநாயகத்தை சிதைக்கும் என்பதை தாண்டி ஈழத்தமிழர்களுக்கும் இலங்கையின் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் நெருக்கடிகளை உருவாக்கக்கூடிய அபாயத்தையே உணர்த்தி நிற்கின்றது. குறிப்பாக மகிந்த ராஜபக்ஷா தனது உரையில் போர் வெற்றியை முதன்மைப்படுத்தி உரையாற்றுகையில் இலங்கையின் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கும் சக்தியாக தம் சார்ந்த பொதுஜன பெரமுனவையே அடையாளப்படுத்தியிருந்தார். இலங்கை மக்கள் தற்போது அரசியல் பொருளாதார நெருக்கடிகளையே எதிர்கொண்டுள்ளனர். பாதுகாப்பு நெருக்கடி சார்ந்த எண்ணங்களுக்கு வாய்ப்பில்லை. கடந்த ஜனாதிபதித்தேர்தலிலும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலினை பாதுகாப்பு அச்சுறுத்தலாக பிரச்சாரப்படுத்தியே கோத்தபாய ராஜபக்ஷா வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே ஈஸ்டர் குண்டு தாக்குதல் போன்ற அரசியல் இலாபங்கருதிய வன்முறைகள் மீள கட்டமைக்கக்கூடிய அபாயத்தை மகிந்த ராஜபக்சாவின் உரை வெளிப்படுத்துகின்றதா என்பதில் இலங்கையின் சிறுபான்மை தேசிய இனங்கள் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
Comments
Post a Comment