தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைமையாவது தமிழ்த்தேசியத்துடன் பயணிக்குமா? -ஐ.வி.மகாசேனன்-
தமிழ்த்தேசியம் தனது உரிமைக்காக போராடிய செய்திகள் முன்னிலைப்படுத்தப்பட்ட அரசியல் ஒழுங்கில், கட்சிகளுக்கிடையிலான போட்டிகள் முதன்மைப்படுத்தப்பட்டு, இன்று கட்சிக்குள்ளே இடம்பெறும் அதிகாரப் போட்டி முதன்மைப்படும் நிலைக்கு பரிணமிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான போட்டியே இன்று ஈழத்தமிழரசியலில் முதன்மையான செய்தியாக காணப்படுகின்றது. ஜனநாயக அரசியலில் தேர்தலூடாக தலைமையின் தெரிவு சாதாரணமாயினும், தேசிய அரசியலில் கட்சித்தலைமையின் தெரிவுக்கு தேர்தலை நாடுவது ஒற்றுமை சீர்குலைவுக்கு காரணமாகிவிடுமென்பதுவே பலரதும் அச்சமாக காணப்படுகின்றது. தமிழ் சிவில் சமுகத்தினரால் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்தலை தவிர்த்து புதிய தலைமையை தெரிவு செய்ய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது கட்சிக்குள்ளும் அத்தகைய கோரிக்கைகள் எழ ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் தமிழரசுக்கட்சியின் தலைமை தெரிவு தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்படுத்தக்கூடிய அரசியல் தாக்கங்களை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
தேசியம் என்பது மக்கள் திரட்சியால் கட்டமைக்கப்படும் ஓர் உணர்வுசார்ந்த விடயமாக காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் தமிழ்த்தேசியத்தை நிறுவுகையில் மக்கள் அவர் பின்னால் ஓரணியில் அணிதிரண்டமையே காரணமாகின்றது. தொடர்ச்சியாக மக்களினை ஓரணியாக திரட்டியமையினாலேயே தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியத்தின் பலமான கட்சியாக வளரவும் காரணமாகியது. அவ்ஒழுங்கிலேயே பின்னாளில் செல்வநாயகம் தமிழர் விடுதலைக்கூட்டணி எனும் கூட்டணி உருவாக்குத்திற்கும் உந்துதலாக இருந்தார். இதன்தொடர்ச்சியாகவே 2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் உருவாகியது. இவ்அனுபவங்களில் தமிழ்த்தேசியம் தனது நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள வரலாறு தோறும் மக்கள் திரட்சியை வலுப்படுத்துவதனை உறுதிப்படுத்தி வந்துள்ளது. மக்கள் திரட்சியை உறுதிப்படுத்துவதில் தமிழரசுக்கட்சியும் பிரதான வகிபாகத்தை வகித்திருந்தது. எனினும் 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு திசைதிருப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் திரட்சி அரசியல் கட்சிகளால் தொடரச்சியாக சிதைக்கப்பட்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் கூட்டமைப்புக்குள் இணைந்திருந்த கட்சிகள் கொள்கை பிளவுகளாலும், ஆசன முரண்பாடுகளாலும் பிளவுபட்டனர். இது தமிழ் மக்களின் திரட்சியை பிரதிநிதித்துவ அரசியலில் சிதைத்திருந்தது. குறிப்பாக 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தென்னிலங்கை கட்சியின் வேட்பாளர் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தது. எனினும் கூட்டமைப்பின் பிளவுகள் தமிழ்த்தேசியத்தை சிதைக்கின்றமையை சிறிதும் கருத்திற்கொள்ளாத தமிழ் அரசியல்வாதிகள், 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவுப்புடன் 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை முழுமையாக சிதைத்துள்ளனர். 2009ஆம் ஆண்டுக்கு பின்னால் தமிழ் மக்களின் திரட்சி சிதைக்கப்படுவதிலும் தமிழரசுக்கட்சியே பிரதானமாகின்றது.
தற்போது தமிழரசுக்கட்சிகுள்ளும் புதிய தலைமை தெரிவில் தேர்தலை நாடி இருப்பது மேலும் தமிழரசுக்கட்சியையும் பிளவுபடுத்தும் அரசியல் நிகழ்ச்சி நிரலை நகர்த்துமா என்ற அச்சமே தமிழ்த்தேசிய பரப்பில் மேலோங்கி காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான போட்டியில் யாழ்ப்பாணம்-கிளிநொச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சுமந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ஜனநாயக முறைமையில் தேர்தல் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையினும், தேர்தலை மையப்படுத்தி எழுந்துள்ள அநாகரீகமான பிரச்சாரங்கள் ஏற்படுத்தக்கூடிய அரசியல் தாக்கங்கள் தமிழரசுக்கட்சியை மாத்திரமன்றி தமிழ்த்தேசியத்தையும் சிதைக்கக்கூடிய ஆபத்தை உருவாக்கியுள்ளது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, பிரதேசவாத கருத்தியல்கள் தமிழரசு கட்சியின் தலைமைக்கான தேர்தலில் மேலோங்கி உள்ளது. வடக்கு-கிழக்கு தமிழர் தாயக கோட்பாட்டினை சிதைப்பதற்கு தென்னிலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு உத்திகளையும் பிரதேசவாத பிரச்சாரங்களையும் முன்னகர்த்தி வருகின்றது. எனினும் வடக்கின் இருப்பு கிழக்கை தங்கியும், கிழக்கின் இருப்பு வடக்கை தங்கியும் இருப்பதனை ஆழமாக உணர்ந்துள்ள தமிழ் மக்களிடையே தென்னிலங்கையும் முயற்சிகள் பலனளித்திருக்கவில்லை. கடந்த காலங்களில் கிழக்கில் தென்னிலங்கை சார்பு கட்சி பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ள போதிலும், அவர்களது பிரதேசவாத பிரச்சாரங்களை மக்கள் உள்வாங்கியிருக்கவில்லை. இதனை தமிழ்த்தேசியத்திற்கான போராட்டங்களில் வடக்கு-கிழக்கு மக்களின் இணைவு உறுதி செய்துள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் தென்னிலங்கை சார்பு கட்சி பிரதிநிதிகளின் வெற்றி என்பது தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல்வாதிகளின் பலவீனங்களையே குறித்து நிற்கின்றது. தமிழ் மக்கள் பிரதேசவாத பிரச்சாரங்கள் தொடர்பில் தெளிவான எண்ணங்களுடன் இருக்கையில் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளால் கட்சியின் தலைமைப்போட்டியில் பிரதேசவாத கருத்துக்களை முதன்மைப்படுத்துவது தமிழரசுக்கட்சிக்கு மாத்திரமன்றி தமிழ்த்தேசியத்துக்கே ஆபத்தான விளைவுகளையே உருவாக்கக்கூடியதாகும். கடந்த காலங்களில் தமிழரசுக்கட்சியின் தலைமைகளின் தெரிவில் வடக்கு-கிழக்கு முகங்கள் பிரதிபலிக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த்தேசியத்தின் தேவைகருதியே தலைமைத்தெரிவும் இடம்பெற்றுள்ளது. தெரிவுகளின் பின்னால் தலைமைகள் தமிழ்த்தேசியத்தினை புறந்தள்ளிய வரலாறுகள் காணப்படினும், தெரிவுகளின் பிரதேசவாத முகங்களை தாண்டி தமிழ்த்தேசியத்தின் தேவைப்பாடே முன்னிறுத்தப்பட்டிருந்தது. எனினும் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு சார்ந்த உரையாடல்கள் மேலோங்குவது ஆபத்தானதாகும்.
இரண்டாவது, தமிழரசுக்கட்சியின் தலைமை தமிழ் மக்களுடனும் தமிழ் சிவில் சமுகத்தினருடனும் இணைந்து பயணிக்கக்கூடியதாக அமைதல் வேண்டும். கடந்த காலங்களில் தமிழரசுக்கட்சியின் தலைமையின் தீர்மானங்கள் பலவும் எதேச்சதிகாரமாக அமைந்துள்ளது. அதன் விளைவாகவே தமிழரசுக்கட்சியின் வாக்கு சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தமிழ்த்தேசியத்தின் பிரதிநிதித்துவமும் குறைவடைந்து வருகின்றது. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ் மக்கள் சார்ந்த பல தீர்மானங்களை தன்னிச்சையாவும், ஊடகப்பேச்சாளர் சுமந்திரனுடனும் இணைந்தே எடுத்துள்ளார்கள். பொது அரங்கில் சிவில் சமுகத்தினர் மற்றும் கருத்தியலாளர்கள் மத்தியில் அது தொடர்பாக விமர்சனங்கள் வருகின்ற போது அதனை உதாசீனப்படுத்தும் போக்கினையே வெளிப்படுத்தியிருந்தார்கள். குறிப்பாக ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்துடனான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இதயபூர்வ ஒப்பந்தம் அவ்வாறானதொன்றாகவே காணப்படுகின்றது. மேலும், தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தால் யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் தமிழரசுக்கட்சியின் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பில் எழுந்த கேள்விக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியுறவுக்கொள்கைகள் இரகசியமானது அதனை பொதுவெளியில் கலந்துரையாட முடியாதென தங்களுடைய எதேச்சதிகார செயலை நியாயப்படுத்தும் வகையிலேயே உரையாற்றியிருந்தார். மேலும், 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து ஊடகப்பேச்சாளரை மாற்றுவது தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வந்த போது இரா.சம்பந்தன் அதனை இழுத்தடிப்பு செய்து தவிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய எதேச்சதிகார போக்குடைய இயல்புடையோரை மீள தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு தெரிவு செய்யப்படின் தமிழரசுக்கட்சி மக்களிடமிருந்து முழுமையாக விலகிச்செல்லும் போக்கு காணப்படும். இது ஒப்பீட்டளவில் தமிழர் தாயகத்தில் செறிவான தாக்கத்தை கொண்ட தமிழரசுக்கட்சியை அழிப்பதுடன் தமிழ்த்தேசியத்தை சுருங்கச்செய்வதாகவே அமையக்கூடியதாகும்.
மூன்றாவது, தமிழ்த்தேசிய கொள்கை தமிழரசுக்கட்சியின் தலைமையிடம் இறுகப்பற்றாக இருக்க வேண்டியது அவசியமாகின்றது. தமிழரசுக்கட்சியின் தலைமைப்போட்டியை அவர்களின் கொள்கைகளூடாகவே அவதானிக்க வேண்டி உள்ளது. கொள்கைகள் மீதான விமர்சனமும் பார்வையுமே தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசியத்துடன் பயணிக்கக்கூடிய தலைமையை தெரிவு செய்ய ஏதுவானதாக அமையும். 2009ஆம் ஆண்டுக்க பின்னர் தமிழரசுக்கட்சியின் தலைமையிடம் தமிழ்த்தேசிய பற்றுறுதி சீராக காணப்படாத நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சிதறடிக்கப்பட்டது முதல் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படவும் காரணமாகியது. தமிழரசுக்கட்சியின் தலைமை 2009களுக்கு பின்னர் புலிநீக்க அரசியல் என்ற போர்வையில் தமிழ்த்தேசிய அரசியலை நீர்த்து போகும் நிகழ்ச்சி நிரலையை முன்னெடுத்திருந்தனர். தமிழ்த்தேசிய அரசியலின் வரலாற்றில் செல்நாயகத்தின் அரசியலின் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகளின் காலம் ஒரு குறிப்பிட்ட காலமாக அமைகின்றது. அதனை அகற்ற அல்லது தவிர்க்க முற்படுவது தமிழ்த்தேசியத்தின் மீதான பேரினத்தின் ஒடுக்குமுறையை காப்பாற்றுவதாகவே அமையக்கூடியதாகும். அதனையே 2009களுக்கு பின்னர் தமிழரசுக்கட்சியின் தலைமை மேற்கொண்டு வருகின்றது. மேலும், 2015-2019ஆம் ஆண்டு தேசிய அரசாங்க காலப்பகுதியில் பகுதியிளவில் அரசாங்க பிரதிநிதிகளாக செயற்பட்டு தமது வளத்தை பெருக்கி கொண்டார்களேயன்றி தமிழ் மக்களின் நலன் சார்ந்த அரசியலை புறமொதுக்கியிருந்தார்கள். இன்றும் பேஸ்புக் தளங்களில் அதிகம் பகிரப்படுவது, 'காணமலாக்கப்பட்டோரின் தாய் ஒருவர் ரணிலின் காலில் விழுந்து அழுகையில் சுமந்திரன் அருகில் இருக்கின்றார்;.' இத்தகைய அரசாங்க நிகழ்ச்சி நிரலில் இயங்கக்கூடியோர் தமிழரசுக்கட்சிக்கு தலைமை தாங்குகையில், தமிழ்த்தேசியத்தை பேரினவாதத்தின் கால்களில் விழச்செய்யும் அவலமே தொடரும். தீர்வற்ற இமயமலை பிரகடனம் இத்தகைய அரசாங்க நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கும் தமிழரசுக்கட்சியின் பினாமி அரசியல் செயற்பாடெனும் விமர்சனமும் பொதுவெளியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தெரிவு என்பது தமிழ்த்தேசியத்துடன் பிணைந்ததொரு நிகழ்வாகும். தனிப்பட்ட கட்சியின் நிகழ்வாக புறமொதுங்கி செல்ல இயலாது. அவ்வாறானதொரு விம்பத்தை அல்லது விமர்சனங்களை முன்வைப்போர் தமிழ்த்தேசியத்துக்கு வெளியே தமிழரசுக்கட்சியை நிறுத்தி உரையாடும் தரப்பினராகவே காணப்படுகின்றார்கள். ஒடுக்கப்படும் இனமாக தேசிய விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் அரசியல் நிகழ்வுகள் யாவும் தேசிய அரசியலுடன் பிணைந்ததே ஆகும். இப்பின்னணியிலேயே கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் மணிவண்ணன் அணிக்கு இடையில் எற்பட்ட பிளவு தொடர்பிலும் அதனை ஒன்றிணைப்பது தொடர்பிலும் அரசியல் அவதானிகள் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இன்றும் அத்தகையதொரு அரசியல் முக்கியத்துவம் கருதியே தமிழரசுக் கட்சியின் தலைமைப்போட்டி தமிழ்த்தேசியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பக்கங்களை வெளிப்படுத்தி வருகின்றார்கள். தமிழரசுக்கட்சியின் புதிய தலைமை 2009களுக்கு பின்னர் தமிழரசு கட்சியின் மீதான விமர்சனங்களை களைந்து ஸ்தாபக தமிழரசு கட்சியின் கொள்கைகளுக்குள் பயணிக்கக்கூடிய தெரிவாக அமைதல் வேண்டும். இதனை கருத்திற்கொண்டு தமிழ்த்தேசியத்தை பாதுகாக்கக்கூடியதாக, தமிழ்த் தேசிய கட்சிகளிடைய நல்லுறவை பேணி தமிழ் மக்களின் திரட்சியை வலுப்படுத்தக்கூடிய ஆளுமையை ஏகமனதாக தெரிவு செய்யும் முறைமைக்குள் தமிழ் மக்களின் நலனை சிந்திக்கும் தரப்பும் முயல வேண்டும்.
Comments
Post a Comment