கொழும்பு-புதுடில்லி உறவும் இந்திய இந்து – இலங்கை பௌத்த நாகரீகப் பிணைப்பு -ஐ.வி.மகாசேனன்-
சமகால உலக அரசியல், நாகரீகங்களின் ஆதிக்கத்துக்குள் பயணிக்க ஆரம்பித்துள்ளது. டிசம்பர் முதல் வாரம் தனது 100வது வயதில் மரணித்த அமெரிக்க இராஜதந்திரி ஹென்றி கீசிங்கரும் பனிப்போருக்கு பின்னரான உலக ஒழுங்கை நாகரீகங்களின் மோதலாகவே அடையாளப்படுத்தியிருந்தார். இருபத்தொரம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் சீனாவின் எழுச்சியும், தற்போதைய இந்தியாவின் எழுச்சியும் நாகரீக அரசு (Civilization State) என்ற பெயரிடலிலேயே குறிப்பிடப்படுகின்றது. இதன் பின்னணியிலேயே இந்திய அரசியன் வெளியுறவுக்கொள்கையில் ஆதீக்கம் செலுத்தும் நாகரீக தொடர்புகளை அவதானிக்க வேண்டி உள்ளது. குறிப்பாக இலங்கையில் முதன்மைபெறும் மதங்களான பௌத்தம் மற்றும் இந்து ஆகிய இரண்டுமே இந்தியாவுடன் நாகரீகப்பிணைப்பில் இணைகின்றது. எனினும் இந்திய அரசிடமிருந்து உயரளவிலான நலன்களை அனுபவிப்பதாக இலங்கையின் பௌத்த மதமே காணப்படுகின்றது. சமகாலத்தில் ஈழத்தமிழரசியலிலும் இந்து மதத்தை முன்னிறுத்தி, இலங்கையின் வடக்கு-கிழக்கில் பௌத்தத்தின் ஆக்கிரமிப்புக்குள் சிதைக்கப்படும் இந்து மதத் தொன்மைகளை பாதுகாப்பதற்கான கோரிக்கைகளை இந்தியாவை மையப்படுத்தி உரையாடுவதற்கான வாதம் மேலெழுந்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் பௌத்தம் இந்துதுத்துவ அரசில் எவ்வாறு காணப்படுகின்றது என்பது இப்பந்தில் உரையாடப்பட்டது. இக்கட்டுரை இலங்கையின் பௌத்தம் மற்றும் இந்து மதத்தை இந்தியாவின் இந்துத்துவ அரசு பார்க்கும் நோக்குநிலையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
நாகரீக அரசு என்ற கருத்தாடல் மேற்கத்தேயத்துக்கு புறம்பான அரசியல் சிந்தனையாக மேலெழுந்துள்ளது. தேசிய-அரசுகள் ஒரு மேற்கத்திய கண்டுபிடிப்பாக அமைகின்றது. இயற்கையாகவே மேற்கத்திய செல்வாக்கால் பாதிக்கப்படக்கூடியவை. நாகரீகங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு மாற்றாக உள்ளன. ஒரு நாகரீக அரசு, அரசியலை விட கலாச்சாரத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஒரு நாகரீகத்துடன் இணைக்கப்பட்ட, ஒரு குறிப்பிட்ட கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் முக்கிய பணி அரசுக்கு உள்ளது. அந்த கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து பகுதிகளையும் அதன் அணுகல் உள்ளடக்கியது. இந்தியாவின் நாகரீக அரசு சிந்தனைக்கு சான்றாக ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ராம் மாதவ் போர்த்துக்கல் அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் ப்ருனோ மாகெய்ஸ் (Bruno Maçães) உடன் பகிர்ந்து கொண்ட கருத்து காணப்படுகின்றது. இந்தியாவின் நாகரீக அரசு தன்மையை குறிப்பிடுகையில், 'இனிமேல், ஆசியா உலகை ஆளும். அது எல்லாவற்றையும் மாற்றுகிறது. ஏனெனில் ஆசியாவில் நாடுகளை விட நாகரீகங்கள் உள்ளன' என விளக்கியுள்ளார். இந்தியாவின் அண்டைநாடுகளுடனான வெளியுறவுக்கொள்கையிலும் அதன் நாகரீக தன்மையே முதன்மைப்படுத்தப்படுகின்றது. ஒரு நாகரிக அரசுக்கு, குடியுரிமையின் சட்டபூர்வ நிலையை விட கலாச்சார உறவுகள் மிகவும் முக்கியமானவையாக அமைகின்றது. இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் 2019இல் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில், இந்திய குடியுரிமையை யார் பெறலாம் என்பதை கலாச்சாரம் தீர்மானித்திருந்தது. இந்த மசோதா பாகிஸ்தான், வங்களாதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவிற்குள் குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமையை வழங்குகிறது. ஆனால் அவர்கள் முஸ்லீம்களாக இருந்தால் மறுக்கிறது. இது இந்திய நாகரீக அரசின் இயல்பை அடையாளப்படுத்தும் எடுத்துக்காட்டாக அமைகின்றது.
இந்த பின்னணியிலேயே இந்திய அரசின் நாகரீக அரசின் முதன்மைப்படுத்தலை நோக்கி ஈழத்தமிழர்களின் அரசியலை குவிப்பதற்கான பிரயத்தனத்தை ஒரு தரப்பு உயரளவில் முதன்மைப்படுத்தி வருகின்றது. நாகரீக அரசு தனது கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து பகுதிகளிலும் அதன் அணுகலை உள்ளடக்கியது எனும் இயல்புக்குள் ஈழத்தமிழர்களின் இந்து மதத்தை உள்சேர்க்க வாதங்கள் முன்வைக்கப்படுகின்றது. எனினும் இந்தியாவின் இந்துத்துவ நாகரீகத்துக்குள் பௌத்தத்தின் தன்மையை கடந்த வாரம் இதே பகுதியில் விளக்கப்பட்டிருந்தது. இப்பின்னணியில் இலங்கை தொடர்பான இந்தியாவின் நாகரீக பிணைப்பின் ஆதாரத்தை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியது அவசியமாகின்றது.
முதலாவது, இந்தியா-இலங்கை அரசுகள் பௌத்த மத்திலான கலாச்சார பிணைப்பினை ஆழமாக முதன்மைப்படுத்துவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் இணையத்தளத்தில் இரு நாட்டுக்குமிடையிலான கலாசார உறவு பற்றிய பதிவின் முகவுரையில், 'இந்தியாவும் இலங்கையும் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று, கலாச்சார, மத, ஆன்மீகம் மற்றும் மொழியியல் உறவுகளின் பகிரப்பட்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன.' எனக்குறிப்பிட்டுள்ளது. இது அடிப்படையில் பௌத்திரின் பிறப்புடன் ஒருங்கிணைந்ததாகவே அமைகின்றது. மேலும், இலங்கையின் மன்னன் தேவநம்பிய திஸ்ஸாவின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியப் பேரரசர் அசோகர் தனது புதல்வர்களான மகிந்த தேரர் மற்றும் சங்கமித்தை ஆகியோர் புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காக அனுப்பிய காலத்திலிருந்து இரு நாடுகளையும் நாகரிகங்களையும் இணைக்கும் வலுவான தூண்களில் பௌத்தம் ஒன்றாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான பதிவு இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் இலங்கையுடனான நாகரீக உறவான பௌத்தத்தை முதன்மைப்படுத்தி கட்டமைக்கப்படுவதனையே அறுதியாக வெளிப்படுத்துகின்றது. இந்தியாவும் இலங்கையும் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் பௌத்த மதத்தை மையப்படுத்திய கலாசார பெறுமதிகளை பகிர்ந்து வருகின்றன. குறிப்பாக, 2012ஆம் ஆண்டு புத்த பகவான் ஞானம் பெற்ற 2600வது ஆண்டை (சம்புத்தத்வ ஜெயந்தி) நினைவு கூர்ந்தனர். அதில் இந்தியாவில் காணப்படும் புத்த பெருமானின் புனித கபிலவஸ்து நினைவுச்சின்னங்கள் இலங்கையில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும், 2020 ஜூன் மாதம் பௌத்தர்களின் புனித நகரமான குஷpநகரில் சர்வதேச விமான நிலையத்தை அமைக்க இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, 2021 ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்தியாவின் இலங்கை பௌத்த உறவுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இந்த விமான நிலையத்திற்கான முதல் தொடக்க விமானம் இலங்கையில் இருந்து 100 பேர் அடங்கிய தூதுக்குழுவுடன் இளைய ராஜபக்ஷh நாமல் விஜயம் செய்திருந்தார். அதுமட்டுமன்றி இலங்கையின் பௌத்தத்தை பாதுகாப்பதற்கான நிதி உதவிகளையும் இந்தியா அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. இலங்கையின் அரசியலை பௌத்த நாகரீக பிணைப்புக்குள்ளாலேயே இந்திய அரசாங்கம் பேணி வருகின்றது.
இரண்டாவது, ஈழத்தமிழர்களின் ஒரு பகுதியினர் தற்போது தமது இந்து அடையாளத்தை முதன்மைப்படுத்தி இந்திய நாகரீக அரசுடன் உறவுகளை கட்டமைக்க முயற்சிகளை மேற்கொள்கின்ற போதிலும், ஈழத்தமிழரின் நாகரீக தொடர்பு தொடர்பில் இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக சந்தேகத்தையே பேணி வருகின்றது. ஈழத்தமிழர்களின் இந்து மதக்கூறும் பண்பாட்டு மரபுகளும் இந்திய நாகரீக பண்பாடுகளிலிருந்து வேறுபட்டதாக அமைகின்றது. யாவற்றையும் கடந்து ஈழத்தமிழர்களிடம் மதச்சார்பின்மை பற்றிய எண்ணங்கள் தெளிவான நிலையில் காணப்படுவதனை இந்தியா அடையாளம் கண்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் இந்தியாவில் இந்துத்துவ சித்தாந்தத்தை முதன்மைப்படுத்தும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து ஈழத்தமிழர் நிலப்பரப்பினும் இந்துத்துவ செயற்பாட்டை முதன்மைப்படுத்தும் பல அமைப்புக்கள் வேறுபட்ட கோணங்களில் உருவாக்கப்பட்ட போதிலும், இந்தியாவின் இந்துத்துவம் ஈழத்தமிழர்களிடம் ஆழமாக வேரூன்ற முடியவில்லை. அதிக இந்து மக்களை கொண்ட ஈழத்தமிழ் பரப்பு தமது தமிழ்த்தேசியத்தின் தந்தையாக கிறிஸ்தவ மதத்தை பின்பற்றிய செல்வநாயகத்தையே முதன்மைப்படுத்தி வருகின்றது. இது ஈழத்தமிழர்களின் தனித்துவமான மதச்சார்பின்மை இயல்பாகும். இவ்இயல்புகளின் பின்னணியில் இந்திய நாகரீகத்துக்குள் ஈழத்தமிழர்களை ஒன்றினைப்பதில் இந்திய அரசாங்கம் தயக்கம் காட்டுவதனையே அதன் அரசியல் செயற்பாடுகளும் வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக, 2019ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் மேற்கொண்ட குடியுரிமை திருத்த சட்டத்தில் பாகிஸ்தான், வங்களாதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லீம் மக்களை புறக்கணித்து இந்து மக்களுக்கு குடியுரிமை வழங்கியது. 2009ஆம் ஆண்டு வரையிலான முப்பதாண்டு ஈழப்போர் மற்றும் அதன் விளைவுகளால் தமிழகத்தில் அகதிகளாக தலைமுறைகளை கடந்து இன்னும் பல ஈழத்தமிழர்கள் அகதி முகாம்களில் வாழ்கின்றனர். எனினும் இந்திய அரசாங்கம் குடியுரிமை திருத்த சட்டத்தில் ஈழத்தமிழர்களின் இந்து பண்பாட்டை கருத்திற் கொள்ளவில்லை. மேலும் பௌத்தர்களின் புனித நகரமான குஷpநகரில் ஒரு வருட காலப்பகுதியினுள் சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டடது. ஈழத்தமிழர்களின் இந்து மத அமைப்புக்களினாலேயே இந்தியாவின் காரைக்கால் இந்து மதப்பண்பாட்டுடன் தொடர்புடைய புனித பகுதி என்ற அடிப்படையில் காங்கேசன்துறை-காரைக்கால் கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இக்கோரிக்கை ஆண்டுகள் கடக்கின்ற போதிலும் தொடர்ச்சியான சேவையை ஆரம்பிக்க முடியவில்லை. நீண்ட இழுபறிகளுக்கு பின்னால் இவ்வருடம் ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் ஒரு வார சேவையுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா அரசின் நாகரீக அரசுக் கருத்தியலுக்குள் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து இடைவெளியுடனேயே இருக்கின்றார்கள்.
எனவே, உலகம் நாகரீகத்தின் போக்கிற்குள் இயங்க முற்படுகையில் இந்தியாவின் நாகரீக அரசின் ஒருங்கிணைவு இலங்கையை பொறுத்தவரை பௌத்தத்தினை சார்ந்ததாகவே அமைகின்றது. ஈழத்தமிழர்கள் இந்திய நாகரீகத்திலிருந்து வேறுபட்டபவர்கள் என்பதில் இந்திய அரசு தெளிவான சிந்தனையுடனேயே பயணிக்கின்றது. தமது நாகரீகத்துக்குள் பௌத்தத்தை உள்வாங்கும் ஓர் அரசிடம் பௌத்தத்தின் ஆக்கிரமிப்பை முறையாடி நியாயாதிக்கத்தை கோருவது, ஈழத்தமிழரிசயலினுள் பயனுடைய விளைவுகளை தருமா என்பதில் சிந்திக்க வேண்டி உள்ளது. ஈழத்தமிழர்கள் அதிகம் இந்தியாவை தமிழகத்துடன் மட்டுப்படுத்தி அணுகுகையில், கொழும்பு-புதுடில்லி உறவு நாகரீக இணைவில் வலுப்பெற்றுள்ளது. இந்திய அரசியலை பொறுத்தவரை புதுடில்லியின் பார்வையில் தமிழகத்தையே இந்திய நாகரீகத்திலிருந்து வேறுபட்ட கூறான உரையாடல்கள் அரசறிவியலாளர்கள் தளத்தில் முன்வைக்கப்படுவதனை அவதானிக்கலாம். தமிழகத்துக்கான பயணங்களிலேயே இந்திய மத்திய அரசாங்கமும் ஈழத்தமிழர்களினை இணைத்து உரையாடுவதனை அவதானிக்கலாம். இப்பின்னணியில் தமிழகத்தின் நாகரீகத்தொடர்ச்சியாகவே ஈழத்தமிழரசியல் இந்திய வெளியுறவுக்கொள்கையில் காணப்படுகின்றது. இப்பின்னணியிலிருந்து புதுடில்லி நாகரீக அரசுடன் ஈழத்தமிழரசியலை பொருத்த நினைப்பது உடனடி சாத்தியமற்றதாகவே அமைகின்றது. இந்தியா தொடர்பிலான சில அடிப்படையான அரசியல் புரிதல்களை ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர் பெறுவதனூடாகவே இந்திய அரசியலுக்குள் ஈழத்தமிழர்களின் நலன்களை ஒன்றிணைக்க முடியும். இந்தியா தமிழகம் மாத்திரம் என்ற விம்பத்தை களைந்து, தமிழக-புதுடில்லி அரசியல் வேறுபாடுகளை மூலோபாயமாக கையாண்டே ஈழத்தமிழர் இந்திய அரசியலை அணுக வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது. அதற்கு பொருத்தமான இராஜதந்திர கட்டமைப்பை கட்டமைக்க தவறின் தொடர்ச்சியாக யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியலிலேயே ஈழத்தமிழரசியல் நகர்வது தவிர்க்க முடியாததாகும்.
Comments
Post a Comment