தமிழரசுக்கட்சியில் வலுப்பெறும் தனிநபர் ஆதிக்கமும் ஈழத்தமிழர்களுக்கான நிபுணர்குழு கட்டமைப்பின் தேவைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

தேசியம் என்பது திரட்சியினாலேயே கட்டமைக்கப்படுகின்றது. ஈழத்தமிழரசியல் களத்தில் அரசியல் கருத்தியலாளர்கள் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களின் இலக்குகள் காலந்தாழ்த்தப்படுவதற்கு பின்னால் ஈழத்தமிழர்களின் திரட்சித்தன்மையின்மையை தொடர்ச்சியாக அடையாளப்படுத்தி வருகின்றனர். எனினும் ஈழத்தமிழர்களிடையே திரட்சியை உருவாக்குவதற்கான எவ்வித ஆக்கபூர்வ செயற்பாடுகளையும் தமிழரசியல் தலைமைகள் செய்ய தயாரில்லை. மாறாக தமது தேர்தல் அரசியலுக்காக ஈழத்தமிழர்களை மேலும் மேலும் சிதறடிக்கும் செயற்பாடுகளையே முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். சுயநிர்ணய உரிமைக்காக போராடி, பல உயிர்த்தியாகங்களை அளித்துள்ள தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் தொடர்ச்சியாக அற்ப பதவிகளுக்கான இலக்கை மையப்படுத்தியே நகருகின்றது. குறிப்பாக 2024ஆம் ஆண்டு இலங்கையின் தேர்தல் ஆண்டாக எதிர்பார்க்கின்ற நிலையில், அரசியல் கருத்தியலாளர்கள் இவ்வாய்ப்பை ஈழத்தமிழர்களின் அரசியல் இலக்குக்கு வாய்ப்பாக நகர்த்தும் அறிவுபூர்வமான அரசியலை உரையாடுகின்றார்கள். எனினும் தமிழ் அரசியல் தலைமைகள் தமது குறுகிய நலன்களுக்குள்ளேயே இயங்கி வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை ஈழத்தமிழரிசியல் அறிவியில்தளத்தில் இயங்க வேண்டிய தேவையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தென்னிலங்கை இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி கூட்டணிகள் பற்றிய உரையாடல்களை நகர்த்த ஆரம்பித்திருந்தது. மாறாக ஈழத்தமிழர் அரசியல் களத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ போட்டியே சூடான விவாதத்தை உருவாக்கியது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழரசுக்கட்சி தமிழ்த்தேசிய செயற்பாடுகளில் பாரிய இடைவெளியை உருவாக்கி வந்தது. எனினும் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வாக்குகளை மையப்படுத்தியாவது தமிழ்த்தேசிய உரையாடலை தொடர்ச்சியாக தக்க வைத்திருந்தனர். இந்நிலையிலேயே தமிழரசுக்கட்சியினை உரையாடல் தளத்திலாவது தேசிய பாதைக்குள் பாதூகாக்க வேண்டிய இடர், புதிய தலைமைத்துவத்துக்கான தேர்தல் களம் உருவாக்கியிருந்தது. இப்பின்னணியிலேயே தமிழ்த்தேசிய ஆதரவாளர்களின் செயற்பாட்டினூடாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைத்துவ தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். தேர்தலின் பின்னரும் தமிழரசுக்கட்சி தொடர்பான வாதம் முடிவில்லா தொடர்ச்சியாகவே அமைகின்றது. குறிப்பாக செயலாளர் மற்றும் ஏனைய நிர்வாக தெரிவில் தமிழரசுக்கட்சியின் குழு அரசியல் தாக்கம் செலுத்தியுள்ளது. அதன் விளைவாய் ஜனவரி-28அன்று நடைபெறவிருந்த தமிழரக்கட்சியின் 17வது மாநாடு பிற்திகதியில்லாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜனவரி-31அன்று தமிழரசுக்கட்சியின் முன்னாள் பிரதிச்செயலாளர் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கு எழுதியுள்ள கடிதம், தமிழரசுக்கட்சியின் நெருக்கடியை மேலும் பூதாகாரமாக்கியுள்ளது. தமிழரசுக்கட்சி தனி ஒருவருக்கு அதிக பலத்தை கொடுத்து, அவரை கட்சியினதும் தமிழ்த்தேசியத்தினதும் பேரிடராக வளர்த்துள்ளார்கள் என்பதையே கடிதத்தின் உள்ளடக்கம் உறுதிசெய்கின்றது. தமிழரசுக்கட்சியின் முன்னைய தலைவர் தங்கியிருந்த அரசியலையே புதிய தலைவரும் தொடருகின்றாரா என்ற அச்சத்தை உருவாக்குகின்றது. இதன்பின்னணியில் தமிழ் அரசியல் தலைமைகள் சுதந்திர இலங்கையின் 75 வருடங்களில் அறிவியல்ரீதியாக செயற்படாமையின் தொடர்ச்சியையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, கடந்த காலங்களிலிருந்து படிப்பினையை பெறுவதில் ஈழத்தமிழரசியல் தலைமைகள் பின்நிற்கும் நிலையே காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் மற்றும் இயங்கு நிலை சார்ந்து எழுந்துள்ள பாரிய நெருக்கடியானது, தமிழரசுக்கட்சி முழுமையாக ஒருவரை தங்கி இருப்பதேயாகும். கடந்த காலங்களில் தமிழரசுக்கட்சியின் முன்னைய தலைவரும் அவ்வாறான தவறையே செய்திருந்தார். தமிழரசுக்கட்சியின் முன்னைய பிரதிச்செயலளாரின் உரைகள் தமிழரசுக்கட்சிக்கு நெருக்கடிகளை மற்றும் வாக்கு வங்கி வீழ்ச்சியை உருவாக்கிய போதிலும், அவருக்கு எதிராக உரிய விசாரணை பொறிமுறையை மேற்கொள்ள தவறியிருந்தார். முன்னாள் தமிழரசுக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் போன்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழரசுக்கட்சி முன்னாள் பிரதிச்செயலாளரின் செயற்பாடுகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை செய்ய முற்படாமையானது, அவரை சார்ந்தே முன்னாள் தலைவர் செயற்பட்டிருந்தார் என்பதையே உறுதி செய்கின்றது. எனினும், 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் பின்னர் விழிப்படைந்தாலும், முன்னாள் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் கட்சி இல்லாமல் போய்விட்டது. முன்னாள் பிரதிச்செயலாளர் மத்தியகுழுவை தமக்கு சார்பாக கட்டமைத்திருந்தார். ஆதலால் முன்னாள் தலைவர் அதிகாரம் மற்றும் ஆதரவற்ற தலைவராகவே இருந்தார். முன்னாள் தலைவரின் தோல்வியை புதிய தலைவர் புரிந்து கொள்ளவில்லை என்பதையே மத்திய குழு தெரிவில் புதிய தலைவரின் நடத்தை உறுதி செய்கின்றது. பிரதி செயலாளரின் கடிதத்தின் வெளிப்பாடாக, 'மத்திய செயற்குழுக் கூட்டத்தின் ஆரம்பத்தில் சுமந்திரனை கூட்டத்தின் பின்புறத்திற்கு அழைத்துத் தனியாகப் பேசிய சிறிதரன் இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் கட்சி ஒன்றித்து பயணிக்க வேண்டும் என்ற கருத்தை சொன்னபோது, அப்படி நிகழ்வதாக இருந்தால் சிறிதரன் தலைவராகவும், சுமந்திரன் பொதுச் செயலாளராகவும் இருந்தால் மாத்திரமே அதுசாத்தியமாகும் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். பின்னர் கூட்டத்தின் ஆரம்பத்தில் சிரேஷ்ட உபதலைவர் பதவியை சிறிதரன் சுமந்திரனுக்கு கொடுப்பதாக பிரேரித்த போது, சுமந்திரன் அதனை நிராகரித்தததாகவும், பின்னர் சுமந்திரன் ஆதரவு அணியை சேர்ந்தவரை சிறிதரன் தமது ஆதரவாளர்களின் இணக்கத்துடன் செயலாளராக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டதாக' அமைகின்றது. இவ்நிகழ்வு சிறிதரன் மீளவும் முன்னைய தலைமையின் பாணியில் பிரதிச்செயலாளரின் தயவை நாடுவதையே வெளிப்படுத்தி நிற்கின்றது. மாறாக பொதுவெளியில் முன்னாள் பிரதிச்செயலாளர் மீதான தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படும் தமிழ்த்தேசிய நீக்க அரசியல் குற்றச்சாட்டை புதிய தலைவரும் உள்வாங்கவில்லை என்பதையே உறுதி செய்கின்றது.

இரண்டாவது, 75 ஆண்டு கால வரலாற்றை பகிரும் தமிழரசுக்கட்சி இன்றும் தனி ஒருவரை முதன்மைப்படுத்துவதற்கு பின்னால், தமிரசுக்கட்சி தேர்தல் அரசியல் நலன்களுக்கு புறத்தே அறிவுபூர்வமாக நெறிப்படுத்தக்கூடிய அறிவியல் தளத்தை கட்டமைக்க தவறியமை காரணமாகின்றது. நேர் மற்றும் எதிர் தாக்கங்கள் என்பதற்கு அப்பால் தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடம் அவ்வாறான அறிவியல் கட்டமைப்புக்கள் காணப்படுகின்றது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷாவை அரங்கிற்கு கொண்டு வந்தது முதல் கோத்தபாய ராஜபக்ஷாவின் வெற்றியின் பின்னால் வியத்கம என்ற அமைப்பின் செயற்பாடு முதன்மையானதாக உரையாடப்பட்டது. குறிப்பாக கோத்தபாய ராஜபக்ஷாவின் தேர்தல் வெற்றிக்கு பின்னால் இருந்த மிலேனியம் உடன்படிக்கைக்கு எதிரான பிரச்சாரங்களை அறிவியல்ரீதியாக நகர்த்தியமையில் வியத்கம தனது அறிவை வழங்கி இருந்தது. அவ்வாறே ஐக்கிய மக்கள் சக்தியினை நெறிப்படுத்தும் அறிவியல் களமாக மக்களுக்கான புத்திஜீவிகள் ஒன்றியம் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக அண்மையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர்களில் மக்களுக்கான புத்திஜீவிகள் ஒன்றியம் முக்கிய வகிபங்கை வகிக்கின்றது. இது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான எதிராளிகளான பொதுஜன பெரமுனவின் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான தீர்ப்புக்கு காரணமாகியது. இவ்வகையில் அரசுடைய தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தமது அரசியல் நலன்களுக்கு அறிவியல் தளங்களை கட்டமைத்து இயங்கி வருகின்றது. எனினும், உரிமைக்காக போராடும் தேசிய இனத்தின் அரசியல் கட்சிகள் தனிப்பட்ட நலன்களை கொண்ட தனிநபர்களை சார்ந்து இயங்கி வரும் துர்ப்பாக்கியத்தில் காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சி மாத்திரமின்றி தமிழ்ப்பரப்பில் தேசிய முலாம் பூசி இயங்கும் எந்தவாரு அரசியல் கட்சிகளும் அறிவியல் தளத்துடன் இணைந்து பயணிக்க தயாரில்லை. அரசியல் கருத்தியலாளர்களின் கருத்துக்களையும் உள்வாங்கும் மரபு காணப்படுவதில்லை.

மூன்றாவது, அறிவியல் தள செயற்பாட்டின்மையால் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைப்போராட்டம் அரசியல் செயற்பாட்டின் விளைவில் பூச்சிய நிலையிலேயே காணப்படுகின்றது. 1980களுக்கு பின்னர் 2009ஆம் ஆண்டு வரையில் தனித்தமிழீழத்தை முன்னிறுத்திய விடுதலைப்புலிகள் அமைப்பு அதனை இலக்காக கொண்டு ஆயுதப்போராட்டத்தை முன்னகர்த்தியிருந்தார்கள். தமிழர்கள் மீதான ஒடுக்கமுறை மற்றும் தமிழர்களின் அபிலாசையை சர்வதேச வெளிக்கு கொண்டு சென்றார்கள். இன்று கனடா போன்ற நாடுகளில் தமிழர் மீதான இனப்படுகொலை தீர்மானம் வரையில் நகர்த்தப்படுகின்றதாயின், அது ஆயுதப்போராட்டம் ஏற்படுத்திய விளைவாகவே அமைகின்றது. எனினும் தமிழர்களுக்கான சமஷ்டித்தீர்வை முன்வைத்து அரசியல் நகர்த்தும் தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் மற்றும் அரசியல் தாக்கங்கள் கேள்விக்குரியதாகவே அமைகின்றது. தமிழர்களுக்கான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையிலேயே சாத்தியமானது என்பதை முதலில் முன்னிறுத்தி 1949ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக்கட்சி, தமது 75 ஆண்டு கால அரசியல் பயணத்தில் சமஷ்டியை கோரிக்கையை முன்னிறுத்தி ஏதேனும் போராட்ட வழிமுறையை தொடர்ச்சியாக பேணியுள்ளார்களா என்பதை தேட வேண்டியுள்ளது. ஒடுக்குமுறைகளுக்கெதிராக விளைவுசார் அரசியல் கோரிக்கைகளே தமிழரசியல் போராட்டங்களில் நிறைந்து காணப்பட்டது. மாறாக, சமஷ்டி என்பது கட்சி மாநாட்டு உரையின் உள்ளடக்கமாகவும், தேர்தல் விஞ்ஞாபனங்களின் உள்ளடக்கமாகவுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 75 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தமிழரசுக்கட்சியால் சமஷ்டித்தீர்வுக்கான இலக்கும் வழிவரைபடத்தை உருவாக்க முடியவில்லை. இது தமிழரசுக்கட்சியின் அறிவியல் தள செயற்பாட்டின்மையின் பலவீனமாகவே அமைகின்றது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழரசுக்கட்சியின் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை குற்றஞ்சாட்டி வெளியேறி 'இரு தேசம் ஒரு நாடு' என அடிப்படையில் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் அறிவுபூர்மாக அறிவியல் தளத்தில் இலக்கும் வழிவரைபடமின்றியே செயற்படுகின்றார்கள். இப்பின்னணியிலேயே தமிழரசியல் கட்சிகளின் செயற்பாடு பூச்சிய நிலையில் காணப்படுகின்றது. தமிழ் அரசியல் போராட்டத்தின் அறிவியல் தள பலவீனத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, 'இலங்கை தமிழர்கள் தமது போராட்டத்தை அறிவியல்மடுத்தப்பட்ட தவறிவிட்டார்கள்' எனச்சுட்டிக்காட்டியிருந்தார்.

நான்காவது, கடந்த காலங்களில் தமிழரசுக்கட்சியின் எண்ணங்களுக்குள் அறிவியல் கட்டமைப்பு உருவாக்கம் பற்றிய உரையாடல்கள் காணப்பட்டுள்ளது. எனினும் அது வழமைபோன்றே பொதுவெளி கருத்தாடலின் பிரதிபலிப்பாகவும், பிரச்சாரமாக மாத்திரமே நீர்த்து போயுள்ளது. முன்று வருடங்களுக்கு முன்னர் யாழ்பாணத்தின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அன்றைய தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, 'தென்னாபிரிக்க அரசியல் செயற்பாட்டாளர் ஜஸ்மின் சூக்கா, மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையர் நவநீதம்பிள்ளை போன்றோரை உள்ளடக்கி தமிழ் தேசிய பேரவை உருவாக்கப்ப்ட வேண்டும்' என்ற விருப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் அதன் செயலாக்கம் வழமை போன்றே பூச்சியமாகவே காணப்பட்டது. எனினும், ஜஸ்மின் சூக்கா நவநீதம்பிள்ளை போன்ற உலகளாவிய ஆளுமைகளை இணைத்துக் கொண்டு செயற்படும் பொழுது தமிழ் மக்களின் பலம் அதிகரிக்கும். சட்ட பின்புலத்தை காரணங்காட்டி ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதியே ஈழத்தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை மறுத்த நிலையில், சர்வதேச நிபுணர்கள் இலங்கையின் நிகழ்ந்த இனப்படுகொலையை சுட்டிக்காட்டியுள்ளார்கள். இவ்வாறான நிபுணர்களை ஈழத்தமிழர்கள் தமது அரசியல் பலமாக ஒன்றிணைக்க தவறியுள்ளார்கள். இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஈழத்தமிழர்கள் தங்களுக்குரிய நிபுணர் குழுக்களை உருவாக்கும் செயற்பாட்டை விரைவாக நகர்த்த வேண்டிய தேவை தமிழரசின் புதிய தலைமைக்கு எழுந்துள்ளது. இதனையே தமிழரசுக்கட்சியில் பலம்பெறும் தனிநபர் ஆதிக்கம் உறுதி செய்கின்றது.

எனவே, தமிழரசுக்கட்சியின் தொடர்ச்சியான நெருக்கடிக்கு பின்னால் ஒட்டுமொத்த தமிழ் அரசியலின் பலவீனத்தின் பண்பே காணப்படுகின்றது. அதாவது தமிழ்த்தேசிய அரசியலை முன்னிறுத்தி அரசியல் கட்சிகளை நகர்த்தக்கூடிய அறிவியல் தளத்தின் இன்மையே, தனிநபர் ஆதிக்கம் முதன்மைபெற காரணமாகியுள்ளது. 75ஆண்டு கால தமிழரசியல் வரலாற்றையும், தமிழ்த்தேசிய பரப்பில் பரந்த கட்டமைப்பையும் கொண்டு இயங்கும் தமிழரசுக்கட்சி தனிநபரின் நலனுக்காக சிதைக்கப்படுவது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அதனை முன்னிறுத்தியே தமிழரசுக்கட்சியின் புதிய தலைமையின் தெரிவில் கட்சிக்கு புறத்தே தமிழ்த்தேசிய ஆதரவாளர்களும், கருத்தியலாளர்களும் சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர். முன்னைய அரசியல் கட்டுரைகளிலும் இவ்விடயம் தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமை மீளவும் தனிநபருக்கு முக்கியத்துவத்தை அளித்து தமிழரசுக்கட்சியையும், தமிழ்த்தேசியத்தையும் சிதைக்க உடந்தையாக இருப்பது தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிதரனும் இழக்கும் நிலையையே உருவாக்கக்கூடியதாகும். தமிழரசுக்கட்சியின் புதிய தலைமை தனிநபர் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த அறிவியல் கட்டமைப்பை உருவாக்குவதனூடாக, தமிழரசுக்கட்சியையும் தமிழ்த்தேசியத்தையும் உயிர்ப்புடன் பேணக்கூடியதாக அமையும்.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-