வெளியுறவுக்கொள்கையை மையப்படுத்திய மோடியின் தேர்தல் பிரச்சாரம்; இந்தியா 'சர்வதேச சக்தி' எனும் விம்பத்தை உருவாக்குகிறதா! -சேனன்-

2024ஆம் ஆண்டு இந்தியா பொதுத்தேர்தலை நோக்கி நகருகின்றது. 2023ஆம் ஆண்டு நடுப்பகுதியிலேயே தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துள்ள பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கத்திற்கு முடிவு கொண்டுவர எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து இருந்தனர். I.N.D.I.A எனும் மெஹா கூட்டணியையும் அறிவித்தனர். இக்கூட்டணி 2024இன் ஆரம்பத்திலேயே தேர்தலுக்கு முன்னர் மெலிந்து வர ஆரம்பித்துள்ளது. மறுபக்கத்தில் ஆளுங்கட்சியாக மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகளை தேர்தல் இலக்கிற்கான பிரச்சாரமான நகர்த்த ஆரம்பித்துள்ளனர். இது பெருமளவுக்கு மோடி 3.0இற்கான வாய்ப்பையே அதிகம் புலப்படுத்துவதாக இந்திய அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இக்கட்டுரை தேர்தலை மையப்படுத்தி இந்திய அரசாங்கம் கட்டமைக்கும் கொள்கை பிரச்சாரத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

2023இல் ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் மூன்றில் பா.ஜ.கவின் அமோக வெற்றி, தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது பா.ஜ.க மற்றும் அதன் சின்னமான பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான உறுதியான முறையீட்டைப் பிரதிபலிக்கின்றன. மேலும், நீதிமன்ற தீர்ப்பினூடாக கட்டப்பட்டு, 2024 ஜனவரியில் திறக்கப்பட்ட அயோத்தியில் ராமர் கோவிலின் திறப்பினை பா.ஜ.க இந்து வாக்குகள் மீதான பிடிப்பாக உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளக காரணிகளில் கடந்த பத்தாண்டு ஆட்சியில் நிலையான செல்வாக்கை பா.ஜ.க அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையிலே மோடி தனது மூன்றாவது அதிகாரத்திற்கான போட்டியில் பாரம்பரிய முறைமையிலிருந்து மாற்றத்தை அடையாளப்படுத்த முயல்கின்றார். இந்திய தேர்தல்களில் வெளியுறவுக் கொள்கை ஒரு புறக்கணிக்கத்தக்க காரணி என்று வாதிடும் பாரம்பரிய கருத்தியலாக காணப்படுகின்றது. தென்னாசிய மரபில் வாக்காளர்கள் முதன்மையாக பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அடையாளக் கேள்விகளில் அக்கறை கொண்டுள்ளனர். இதுவே நீண்டகால வரலாற்றின் அனுபவமாக காணப்படுகின்றது. எனினும், இந்திய தென்னாசியாவின் பிராந்திய அரசு என்ற விம்பத்துக்கு வெளியே சர்வதேச அரசியல் சக்தியாக காட்சிப்படுத்த சமகாலத்தில் முற்படுகின்றது. இது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை முதன்மைப்படுத்துகின்றது.

அமெரிக்காவின் தேர்தலில், உள்ளக அரசியல் பொருளாதார நிகழ்வுகளுக்கு சமாந்தரமாகவே போட்டியாளர்களின் வெளியுறவுக்கொள்கையையும், உலக ஆதிக்கத்தையும் அமெரிக்க பிரச்சாரத்தில் முதன்மையாக காணப்படுகின்றது. வாக்காளர்களும் வேட்பாளர்களின் வெளியுறவுக்கொள்கையின் நிலைப்பாடு தொடர்பில் அதிக கரிசணை செலுத்தப்படுவதுண்டு. அவ்வாறானதொரு விம்பத்தை பா.ஜ.க இந்திய அரசியலிலும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் விதைக்க முயல்வதனையே அண்மைய நிகழ்வுகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 2019 தேர்தலில் தேசிய பாதுகாப்பு கேள்விகளை முன்வைத்த தேர்தல் பிரச்சாரத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்பது நினைவுகூரத்தக்கது. புல்வாமா தாக்குதல் மற்றும் இந்திய விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, தேசிய பாதுகாப்பு மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு ஆகியவை முக்கியமான தேர்தல் பிரச்சினைகளாக மாறியது. பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுத்தார் என்று வாக்காளர்களில் கணிசமான பகுதியினர் நம்பினர். மேலும் இந்த கருத்து பாஜகவுக்கு ஆதரவாக மிகப்பெரிய ஆணையுடன் தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்தது. இந்நிலையிலேயே 2024இல் பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரத்தின் பின்னணியை நுணுக்கமாக அவதானிக்க வேண்டியது அவசியமாகின்றது.

முதலாவது, இந்திய நீண்டகாலமாக தன்னை பிராந்திய சக்தியாக முதன்மைப்படுத்தும் நிலையில் பிராந்திய அரசியல் ஆதிக்கத்தில் பெரியண்ணாவாக தொடர்ச்சியாக உறுதி செய்வது தேர்தலில் முக்கிய பிரச்சாரமாக அமைகின்றது. கடந்த 2019 தேர்தலில் பா.ஜ.க அரசாங்கத்தின் குடியுரிமை சட்டம் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசில் உள்ள இந்து சிறுபான்மையினரின் நிலையில் கரிசணையை பிரதிபலித்தது. பிராந்தியக் கட்சிகளும் தேசிய எல்லைகளுக்கு வெளியே உள்ள இனப்பிரச்சினைகளை முக்கிய கருத்துக் கணிப்புகளாக மாற்றியுள்ளன. 2009 தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மாநிலங்களில் 18 மாநிலங்களை மாத்திரமே திராவிட முன்னேற்றக் கழகம் வென்றதில் இலங்கைத் தமிழர் பிரச்சினை முக்கியப் பங்காற்றியது. எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு எப்போதும் ஒரு முக்கிய தேர்தல் பிரச்சினையாகும். சமகாலத்தில் இந்திய-மாலைதீவு நெருக்கடியில் இந்தியாவின் இறுக்கமான முடிவுகள் மாலைதீவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் பிரச்சாரங்களை பா.ஜ.க முதன்மைப்படுத்தியுள்ளது. குறிப்பாக மாலைதீவின் சுற்றுலா வருவாயிற்கு சவாலிடும் வகையில் இந்திய லட்சதீவுகளை சுற்றுலாவின் பிரதான தளமாக விம்பப்படுத்துவது பிராந்திய அரசியலில் இந்தியாவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாகவே அமைகின்றது. 2024-2025 இடைக்கால வரவு-செலவுத்திட்ட அறிக்கையிலும் லட்சதீவுகளின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி முதன்மையான விடயமாக உள்வாங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது, சீன எதிர்ப்பு விம்பத்தை மூலோபாய போட்டியாக பரந்த அளவில் கட்டமைத்துள்ளது. 2014ஆம் ஆண்டு பதவிக்கு வருவதற்கு முன்பு, சீனாவை விரிவாக்க நாடு என்று மோடி பிரச்சாரப்படுத்தினார். குஜராத்தின் முதலமைச்சராக இருந்த மோடி, இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதில் தோல்வியடைந்ததற்காகவும், பெய்ஜிங்கிற்கு மென்மையான அணுகுமுறைக்காகவும் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை அடிக்கடி விமர்சித்தார். இப்போது தலைகீழாக மாறிவிட்டன. இராணுவ சமச்சீரற்ற தன்மை இந்தியாவை சீனாவுடன் போரில் ஈடுபட விடாமல் தடுக்கும் அதே வேளையில், வெறித்தனமான உள்நாட்டு அரசியல் அமைதியின் ஆடம்பரத்தையும் அனுமதிக்காது என்பதை வரவிருக்கும் தேர்தல் மேலும் எடுத்துக்காட்டுகிறது. சீனாவுடன் விரோத உறவைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற நாடுகளுடன் மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவதில் இந்தியா இப்போது தெளிவாக உள்ளது. முந்தைய அரசாங்கங்களை விட சீனா-கட்டுப்பாட்டு கூட்டணியின் ஒரு பகுதியாக வருவதில் இது மிகவும் குறைவான அக்கறை கொண்டது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதில், அரசாங்கம் முயற்சிகளை ஆழப்படுத்தியுள்ளது.

மூன்றாவது, மோடியின் கீழ், சீனாவின் எழுச்சியை எதிர்க்கும் மேற்குலகின் கொள்கைகளுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடனான புது தில்லியின் உறவுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இந்தியாவும் தன்னை உலகளாவிய தெற்கின் தலைவராக முன்னிறுத்தியுள்ளது. மாற்று விநியோகச் சங்கிலிகளைக் கண்டுபிடிப்பதற்கான மேற்கத்திய உந்துதலின் மத்தியில் இந்தியப் பிரதமர் இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாகத் தள்ளுகிறார். இந்தியாவின் அணிசேரா இயல்புகளை பா.ஜ.க அரசாங்கமும் நேர்த்தியாக அடையாளப்படுத்தி தெற்கின் தலைமையை நிறுவுகிறது. அரசாங்கம் இப்போது இந்தியாவை 'விஸ்வகுரு' (உலக ஆசிரியர்) என்று புகழ்கிறது. இது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் ஒரு முன்மாதிரி அரசாகும். 2024ஆம் ஆண்டு தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவின் G-20 தலைவர் பதவியானது, உலக அரங்கில் இந்தியா பெரும் வல்லரசுகளின் கூட்டமைப்பான நாடாக வருவதைக் குறிக்கும் வகையில் அரசாங்கத்தால் விளம்பரப்படுத்தப்பட்டது. பா.ஜ.க பிரச்சாரத்திற்கு தயாராகி வரும் நிலையில், இந்த செய்திகள் அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றது. குறிப்பாக இந்திய மக்களை கவரும் வகையில் சர்வதேச மாநாட்டு கருப்பொருளையும் இந்தியாவின் இந்தி மொழியிலேயே 'வாசுதேவ குடும்பக' என இந்தியாவின் பாரம்பரியம் என நம்பப்படும் ஒற்றுமையை உலகிற்கு போதிக்கிறது.

நான்காவது, உக்ரைன் மற்றும் காஸாவில் சமகாலத்தில் நடைபெறும் இரு போர்களும் இந்தியாவிலும் இழுவையை உருவாக்கியுள்ளன. ரஷ்யா-உக்ரைன் போரில், இந்திய மக்களின் பொதுவான கருத்தியலில் மாஸ்கோவிற்கு வெளிப்படையான பொது அனுதாபம் உள்ளது. இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களும் யுத்தம் தொடர்பான அரசாங்கத்தின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய சக்திகளுடன் இந்தியா இணைந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கும் எந்த அரசியல் போக்கும் இல்லை. அதேவேளை இந்து தேசியவாதம் வரலாற்று ரீதியாக பாலஸ்தீனத்திற்கான இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆதரவை விமர்சித்தது மற்றும் முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதாக முத்திரை குத்துகிறது. இருப்பினும் உண்மையில் அரபு உலகத்தை அந்நியப்படுத்தாத வலுவான நடைமுறை அடிப்படைகள் இருந்தன. அக்டோபரில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகியபோதும், உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. தொடர்ச்சியாக இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்கக் கோரும் ஐ.நா பொதுச் சபையில் டிசம்பர் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது. அதிகாரப்பூர்வமாக இந்தியா இரு மாநில தீர்வைத் தொடர்ந்தாலும், பா.ஜா.கவும் அதன் ஆதரவாளர்களும் தெளிவாக இஸ்ரேலுக்கு ஆதரவானவர்கள்; இந்து தேசியவாதம் சியோனிசத்தை ஒரு உறவினர் இயக்கமாக வரவேற்கிறது. மோதலின் தொடக்கத்திற்குப் பிறகு நிகழ்நிலையில் உருவாக்கப்படும் கொடூரமான வகுப்புவாத பேச்சு, தேர்தல் பிரச்சாரத்தில் நன்றாக ஊடுருவக்கூடும்.

எனவே, பா.ஜ.க 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் புதியதொரு பாரம்பரியத்தை இந்தியாவில் உருவாக்க முயலுகின்றது. குறிப்பாக இந்தியாவை சர்வதேச அதிகாரப்போட்டிக்குள் முதன்மை சக்தி எனும் விம்பத்தை மக்களிடையே உருவாக்க முயலுகின்றது. பிராந்திய சக்தி என்ற நிலையின் பரிணாமத்திற்கான மாயையை மக்களிடம் உருவாக்க முயலுகின்றது. 2014களில் இந்துத்துவ மாயை, 2019களில் தேசிய பாதுகாப்பு மாயை என்பதன் தொடர்ச்சியாக 2024ஆம் ஆண்டு சர்வதேச சக்தி எனும் மாயையை முன்னிறுத்தி பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்தை நகர்த்த முற்படுகின்றது. இதனையே பா.ஜ.க தனது உள்நாட்டுப் பிரபலத்தை உயர்த்துவதற்காக அதன் வெளியுறவுக் கொள்கை நற்சான்றிதழ்களை பெறுவதற்காக பிரச்சாரம் வெளிப்படுத்துகின்றது. மோடி வலிமையானவர் என்ற பிம்பத்திற்கு வெளியுறவுக் கொள்கை உயர்ந்த மையமாக உள்ளது. மோடியின் வெளிநாட்டு உரைகளில் முதன்மைப்படும் விஷ்வகுரு, வாசுதேச குடும்பக, ஜனநாயகத்தின் தாயகம் என்பன உள்ளக அரசியலை கட்டமைப்பதற்கான மோடியின் வெளியக தேர்தல் பிரச்சாரமாகவே அமைகின்றது.


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-