ரணில் விக்கிரமசிங்காவை வலுப்படுத்த முயலுகிறதா அமெரிக்க இராஜதந்திரம்!
2012ஆம் ஆண்டுக்கு பிறகு இலங்கையின் அரசியல் போக்கில் மார்ச் மாத காலப்பகுதி என்பது மனித உரிமை விவகாரங்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. 2009ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்த ஆயுதப்போரில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை மையப்படுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் காலத்துக்கு காலம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளது. ஒரு தசாப்தங்களை கடந்துள்ள போதிலும், மனித உரிமை விவகாரங்களுக்கு நேர்த்தியானதொரு பொறிமுறையை கட்டமைக்க இலங்கை அரசாங்கம் தவறி வருகின்றது. சர்வதேச சமூகமும் தமது நலன்களுக்குள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், இலங்கை அரசாங்கத்துடன் ஒத்திசைந்து செல்வதாகவும் தீர்மானங்களை நெறிப்படுத்தி வருகின்றது. அதுமட்டுமன்றி போர்க்குற்றங்கள் என ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமை உரையாடல் 2018களில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னரான கலவரங்களை மையப்படுத்தியும், 2022களிற்கு பிற்பட பொருளாதார நெருக்கடிசார் மனித உரிமை விவகாரங்களை முதன்மைப்படுத்தியும் வடிவம் கொண்டுள்ளது. தற்போது நிகழ்நிலை சட்டம் சூடான விவாதத்தை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை இலங்கையின் மனித உரிமை விவகாரங்களை மையப்படுத்திய சர்வதேச கவனிப்பை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அதன் ஐம்பத்தைந்தாவது வழக்கமான கூட்டத்தை 2024 பெப்ரவரி 26 முதல் ஏப்ரல் 5 வரை நடத்தவுள்ளது. இலங்கை விவகாரம் கூட்டத்தொடரின் இரண்டாம் வாரத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் மார்ச்-6அன்று, உலகெங்கிலும் உள்ள சமீபத்திய மனித உரிமைகள் முன்னேற்றங்கள் குறித்து மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் வாய்மொழி புதுப்பிப்பை பொதுச்சபை கேட்கும். இவ்நிகழ்ச்சி நிரலிலேயே இலங்கையின் விவகாரமும் உள்வாங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷிப், இலங்கை தொடர்பான எழுத்துமூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி, தூதுவர் ஹிமாலி அருணதிலக, 'இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை' என்ற தலைப்பிலான எழுத்துப்பூர்வ புதுப்பிப்பை நிராகரித்தது, அதன் முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன், உள்நாட்டு நிறுவனங்களின் மூலம் உறுதியான முன்னேற்றத்தை தொடர்வதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும், நாட்டின் உண்மையான கள நிலைமையை பிரதிபலிக்காத எழுத்துப்பூர்வ புதுப்பிப்பின் உள்ளடக்கம் குறித்து கவலைகளை எழுப்பும் அதே வேளையில், கடந்த ஆண்டில் எட்டப்பட்ட பொருளாதார, சமூக மற்றும் நிதி ஸ்திரத்தன்மை உள்நாட்டிலும் வெளியிலும் உள்ள நிபுணர்களால் பாராட்டப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது எனக்குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் 55வது கூட்டத்தொடரில் செப்டெம்பருக்கு பின்னரான இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை வாய்மொழி அறிக்கையிடும் சம்பிரதாயபூர்வமான நிகழ்வே இடம்பெற உள்ளது.
இச்சம்பிரதாயபூர்வ நிகழ்விலும், ஈழத்தமிழர்களின் உரிமைக்கோரிக்கைகள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளின் கோரிக்கை நீர்த்துப்போனதொன்றாகவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சமீபத்திய அறிக்கைகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, சட்டத்திற்குப் புறம்பான பல கொலைகள் மற்றும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களை விளைவித்த போதைப்பொருள் வியாபாரிகளை ஒடுக்குவதற்காக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் நடவடிக்கை அமர்வுகளின் போது கொண்டுவரப்படும். மேலும், நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட விவகாரங்களுமே முதன்மை பெறக்கூடிய வாய்ப்புகளை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜெனீவாவில் உள்ள இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்கு தமது அறிக்கைகளுடன் வருவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம் ஆனால் உண்மையில், பிரஜைகளின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், காணாமல் போனோர் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு அரசாங்கம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டியுள்ளது. எனினும் இலங்கை அரசியலின் சமகால போக்கில் சர்வதேச சமூகமும் அதிக நெருக்கடியை வழங்காது என்பதே பொதுவான அரசியல் அவதானமாக காணப்படுகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை கருதி மேற்குசார்பு நாடுகள் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் அதிக நெருக்கத்தை பேண முயல்வதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்து சமுத்திர பிராந்தியத்தின் புவிசார் அரசியலில் தீவாக இலங்கை முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் ஈரானின் மூத்த அதிகாரிகளின் முக்கியப் பிரச்சினைகளில் தங்கள் நிலைப்பாட்டிற்கு ஆதரவைப் பெறுவதற்காகவும், இந்தியப் பெருங்கடலில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இலங்கையுடன் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளும் பயணங்களில் இது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் பொது விவகாரங்களுக்கான துணை செயலாளர் எலிசபெத் எம். அலென், இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சர் மிரி ரெகெவ், மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹெய்ன் ஆகியோர் கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக இலங்கைக்கு வந்திருந்தார்கள். மேலும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிட்ட சில கருத்துக்கள் முக்கியமானவையாகவும் அமைகின்றது. டொனால்ட் லூ, இந்திய நாளிதழான ஹிந்துஸ்தான் டைம்ஸிற்கு வழங்கியதொரு செய்தியில், இந்தியா போன்ற பங்காளிகளுடன் இணைந்து அமெரிக்க நிர்வாகத்தின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் வெற்றிக்கு இலங்கையை ஒரு உதாரணமாகக் காட்டினார். மேலும் இலங்கையை பற்றிய குறிப்பில், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் ஆழத்தில் இருந்து இலங்கை மீண்டு வருவதை 'மீண்டும் திரும்பும் கதை' எனவும், இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக நண்பர்களின் சிறிய உதவியால் இந்த திருப்பம் நிகழ்ந்தது எனவும் லூ சுட்டிக்காட்டினார். இது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை பொருளாதாரத்தின் மீட்பாராக காட்டுவதனூடாக, பாதுகாக்கும் உத்தியாகவே காணப்படுகின்றது. இவ்வாறானதொரு இராஜதந்திர உறவில் பைடன் அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடியை வழங்க முன்வரப்போவதில்லை என்பதே உறுதியாகின்றது.
இரண்டாவது, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் பொது விவகாரங்களுக்கான துணை செயலாளர் எலிசபெத் எம். அலென் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் ஆகியோர் நிகழ்நிலை சட்டத்தை எதிர்ப்பது மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கைக்கான நெருக்கடியை திசைதிருப்பக்கூடியதாகும். எலிசபெத் அலென் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், 'நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டதன் பின்னணியில் நெருக்கடியிலுள்ள இலங்கையிலுள்ள பத்திரிகையாளர்களுக்கு அமெரிக்க ஆதரவை' அறிவித்தார். எனினும் முழுமையான உரை இலங்கை அரசாங்கத்துடனொரு மென்போக்கையே வெளிப்படுத்தியிருந்தது. ஜனநாயகத்தில் ஊடகங்களின் பங்கு பற்றிய தலைப்பிற்கு பொருத்தமானதாக 'மக்ரேக்கர்' (muckraker) என்ற வார்த்தையின் அமெரிக்க பிரயோகத்தை சுட்டிக்காட்டினார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, அமெரிக்க ஊடகங்கள் ஊழலை அம்பலப்படுத்தும் சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்த பத்திரிகையாளர்களுக்கு 'மக்ரேக்கர்' என்ற வார்த்தையை உருவாக்கியது. இந்தச் சொல் சற்றே எதிர்மறையான பொருளைக் கொண்டிருந்தாலும், இன்று இந்த ஊடகவியலாளர்களை வெறும் 'வதந்தி பரப்புபவர்கள்' என்று முத்திரை குத்தி, அவர்களை புலனாய்வுப் பத்திரிகையின் முன்னோடிகளாகக் கருதுகிறோம். அமெரிக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்க சமூக மற்றும் அரசியல் சீர்திருத்த காலமான முற்போக்கு சகாப்தத்தை ஏற்படுத்துவதில் இந்த மக்ரேக்கர்கள் முக்கிய பங்கு வகித்தனர். அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் கூட அவர்களை 'மக்ரேக்கர்கள்' என அழைத்தாக குறிப்பிட்டார். இது அரசாங்க தலைவரின் செயல்களை கடந்துபோக சொல்லும் தூண்டலை வழங்குகின்றதா எனும் விமர்சனப்பார்வையையும் வழங்குகின்றது. மேலும், இலங்கை அரசாங்கத்தால் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மூலமாக கொண்டுவரப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் மீதான தடையை உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் ஊடக சுதந்திரத்திற்கான சவாலாக பொதுக்கவலையாகவே அலென் சுட்டிக்காட்ட முயலுகின்றார். மேலும், அலெனின் இலங்கைக்கான விஜயம், 'பங்காண்மைகள் மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் அசையாத அர்ப்பணிப்பை' வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
மூன்றாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மேற்கு நாடுகள் மற்றும் பிராந்திய சக்தியான இந்தியாவை தவிர்த்து அமெரிக்காவை நோக்கி பயணிக்கிறது. இந்தியா ஜே.வி.பி குழுவை அழைத்தமையும், ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கத்திய அரசாங்கங்களை விமர்சித்து, இங்கிலாந்தில் அல்லது ஜேர்மனியில் சர்வதேச விசாரணைகள் ஏதேனும் உள்ளதா என ரணில் விக்கிரமசிங்கா கேட்டமையும் அதனையே உறுதி செய்கின்றது. அமெரிக்காவும் ஜே.வி.பியை புறந்தள்ளி ரணில் விக்கிரமசிங்கா போன்றவரை மீள ஜனாதிபதியாக கொண்டுவருவதிலேயே முனைப்பாக இருக்கின்றது. இப்பின்னணியிலேயே ஜே.வி.பி.யின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங், ரணில் விக்கிரமசிங்காவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்து, இருவரையும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி.யை வெற்றிபெறச் செய்யத் தூண்டும் செயல்களில் ஈடுபடுகின்றார். ஜே.வி.பி குழு இந்தியாவிற்கு அழைக்கப்பட்ட ஒரு சில வாரங்களில் அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் பொது விவகாரங்களுக்கான துணை செயலாளரின் இலங்கைக்கான வருகையும் இலங்கை-அமெரிக்க-இந்திய இராஜதந்திர நெருக்கடிகளை சார்ந்ததாகவே அமைகின்றது. ரணில் விக்கிரமசிங்காவை இந்தியாவுடன் அணுசரித்து இயங்குவதற்கான தூண்டலை அமெரிக்க விரும்புகின்றது. இதனை தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, ஜோ பிடன் நிர்வாகத்தின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் இரண்டு ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், அமெரிக்க அமைதிக் கழகத்தின் (USIP) ஒரு சிந்தனைக் குழுவில், வெளியுறவுத் துறை, தேசிய பாதுகாப்பு சபை மற்றும் பென்டகன் ஆகியவற்றின் மற்ற நிர்வாக அதிகாரிகளுடன் கூடிய உயர் அதிகாரம் கொண்ட குழுவில் இந்து சமுத்திரத்தில் இந்திய-இலங்கை உறவு பற்றி பேசிய விடயத்தில் அவதானிக்கலாம். டொனால்ட் லூ, இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவின் தலைமைத்துவத்தை அங்கீகரித்ததுடன், பிராந்திய நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்காக இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தல்கள் பற்றிய ஒரு குறிப்பில் இதனைக்குறிப்பிட்டார். மேலும், இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்காவின் பயணமும் இந்தியாக்கு இசைவானதாகவே இருக்குமென டொனால்ட் லூ சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, 55வது ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான ஆணையாளரின் வாய்மூல அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு பஞ்சு மெத்தையலான ஒத்தளமாகவே இருக்கக்கூடிய சூழலே சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் புலப்படுத்துகிறது. அமெரிக்க தனது தேசிய நலனை கருத்திற்கொண்டு, இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை அமெரிக்க பயன்படுத்த ஏதுவான அரசாங்கத்தை உருவாக்கும் வகையிலேயே இலங்கை மீதான அறிக்கையை நகர்த்தும் வாய்ப்புக்களே ஏதுவாக உள்ளது. இலங்கை தொடர்பான அமெரிக்க இராஜதந்திர மட்ட உயர் அதிகாரிகளினது உரைகளும் இலங்கைக்கான விஜயங்களும் வெளிப்படுத்தி நிற்கின்றது. மறுபுறம் ரணில் விக்கிரமசிங்காவின் அண்மைய வெளிநாட்டுப் பயணங்களும், புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புகளும், மீண்டும் வடக்கு, கிழக்கு மக்களை பயன்படுத்தும் செயலாகவே அமைகின்றது. கனடா மற்றும் இங்கிலாந்தில் உள்ள அறியப்படாத புலம்பெயர் உறுப்பினர்கள் சிலர் இலங்கையை எந்த விலையிலும் பாதுகாப்போம் என்று உறுதியளித்து செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். இப்பின்னணியில் ஈழத்தமிழர்களின் கோரிக்கையான யுத்த குற்றங்கள் புறந்தள்ளப்பட்டு, முழு இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமும், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு எதிரான யுக்திய செயற்பாடுகளுமே ஐ.நா மனித உரிமைகள் அரங்கை நிரப்பக்கூடியதாகும். இதனையே அமெரிக்காவும் விரும்புகின்றமையே புலப்படுகின்றது. சர்வதேச விவகாரங்கள், 'qui pro quo' பற்றியே உள்ளது. அதாவது 'ஏதோ ஒன்று' என்ற பரிமாற்ற உறவிலேயே தங்கியுள்ளது.
-ஐ.வி.மகாசேனன்-
Comments
Post a Comment