ஜனாதிபதியின் ஒன்றுபட்ட இலங்கைக்கான அழைப்பும் ஈழத்தமிழர் மீதான பேரினவாத அச்சுறுத்தலும்! -ஐ.வி.மகாசேனன்-
தென்னிலங்கை கடந்த வாரம் 76ஆம் ஆண்டு சுதந்திர தினத்தினை வெகுவிமர்சையாக கொண்டாடியிருந்தது. சுதந்திர தினத்தில் ஜனாதிபதியின் சிறப்புரை தவிர்க்கப்பட்டு, வாழ்த்து செய்தியுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்கபட்டிருந்த ஜனாதிபதியின் சிறப்பு உரை ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் ஆரம்பித்தில், ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையில் அடங்கியிருந்தது. ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி மற்றும் கொள்கை பிரகடன உரை இரண்டினதும் சாரம்சம் ஒன்பட்ட இலங்கைக்கான அழைப்பாகவே அமைகின்றது. மறுபுறம் வடக்கு-கிழக்கில் தமிழ் மக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமுகத்தினர் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனத்தியதுடன், தமிழர்களின் சுதந்திரம் முடக்கப்படுவதற்கு எதிராக வடக்கு-கிழக்கு முழுவதும் போராட்டங்களை ஒருங்கிணைத்திருந்தார்கள். இவ் முரண்பாட்டு யதார்த்தத்தின் வெளிப்பாடாக, ஜனாதிபதியின் உரைகள் நடைபெறவுள்ள தேர்தலை இலக்கு வைத்த பிரச்சார உத்தி என்பதே அரசியல் அவதானிகளது விமர்சனமாக காணப்படுகின்றது. இக்கட்டுரை ஜனாதிபதியின் பிரச்சாரங்களில் முதன்மைப்படும் ஒன்றுபட்ட இலங்கைக்கான அழைப்பிற்கான, கள யதார்த்தத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இலங்கையர்களையும் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு தங்களின் அதிகபட்ச ஆற்றலை பங்களிக்குமாறு அழைப்பு விடுத்தார். அவ்வாறே பெப்ரவரி-7அன்று நடைபெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் கொள்கைப்பிரகடனத்தில், 'கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல்வேறு மதங்கள் இனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர வேண்டிய முக்கியமான தருணம் வந்துள்ளது' எனத்தெரிவித்திருந்தார். மேலும், நாட்டைக் கட்டியெழுப்ப அரசு ஆரம்பிக்கும் வேலைத் திட்டத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்தால் மாத்திரமே இந்த வேலைத் திட்டத்தை மேலும் விரைவுபடுத்த முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பதவிகளைப் பெற கனவு காணும் சிலர், நாட்டுக்குப் பொய்யான கருத்துக்களை வெளியிடுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
இங்கு ஜனாதிபதியும் நடைபெறவுள்ள தேர்தலை கருத்திற்கொண்டு பொய்யான பிரச்சாரங்களை முன்னெக்கிறார்கள் என்ற விமர்சனமே பொதுவெளியில் காணப்படுகின்றது. ஒற்றுமையுடன் இணைந்து பயணிப்பதற்கான அழைப்பை விடும் ஜனாதிபதி, அதற்கான ஏற்பாடுகளை கடந்த இருவருட ஆட்சியில் செய்துள்ளாரா என்பதில் கேள்விகளே காணப்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா 2022இன் இறுதியில், 75வது சுதந்திர தின நிகழ்வுகளுக்கு முன்னர் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் 2022இன் வருட இறுதியில் சர்வ கட்சி மாநாடு மற்றும் 2023இன் ஆரம்பத்தில் தமிழ்க்கட்சிகளுடனான மாநாடுகளை ஆரம்பித்திருந்தார். எனினும் 76வது சுதந்திர தின நிகழ்வுகளும் நிறைவடைந்து விட்டது எனினும் ஜனாதிபதி தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் உரைகளை கடந்து எவ்வித முன்னேற்றையும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இவ்வாறான அனுபவ பின்னணியில் ஒன்றுபட்ட இலங்கைக்கான ஜனாதிபதியின் அழைப்பின் யதார்த்தத்தை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தாங்கள் உள்வாங்கப்படவில்லை என்பதனையே உணருகின்றார்கள் என்பதற்கான அண்மைய சாட்சியமே கரிநாள் போராட்டமாகும். பல தசாப்தங்களாக இலங்கை அரசின் அடக்குமுறையை நினைவுபடுத்தும் நிகழ்வாக தமிழர்கள், இலங்கையின் சுதந்திர தினத்தை 'கறுப்பு நாளாக' அடையாளப்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இவ்வருடம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சுதந்திர தின விழாக்களை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தனர். அரசியல் கட்சிகளும் சிவில் சமுகத்தினரும் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். கரிநாளுக்கான நியாயப்பாட்டை வெளிப்படுத்திய அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் தம்பிராசா செல்வராணி, 'பெப்ரவரி-4 ஆம் திகதி சுதந்திர தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற போதிலும் தன்னைப் போன்ற பலருக்கு இது எந்தக் கொண்டாட்டமும் அற்ற கறுப்பு தினமாகும். தமிழர்கள் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்படாத சுதந்திர தினத்தை ஏன் கொண்டாட வேண்டும்? நாம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அல்லது அமைதியாக இருக்க முடியாது. தமிழர்களாகிய நாம் இன்னும் சுதந்திரம் பெறவில்லை.' எனக்குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான நிலையிலேயே, தென்னிலங்கையில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், வடக்கு கிழக்கு முழுவதும் தமிழர்கள் போராட்டத்தை நடத்தி இருந்தார்கள்.
இரண்டாவது, இலங்கையின் சுதந்திர தினத்தன்று தமிழர்கள் முன்னெடுத்த ஜனநாயக போராட்டத்தில் பொலிசாரின் அராஜக நடவடிக்கைகளும், தமிழர்களை ஒன்றுபட்ட இலங்கைக்குள் உள்வாங்க நிலைமைகளையே உணர்த்தி இருந்தது. தமிழர்கள் முன்னெடுத்த கரிநாள் போராட்டங்களை தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாண பொலிசார், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களைத் தடுப்பதற்காக யாழ்ப்பாண நீதவானிடம் தடை உத்தரவைக் கோரியிருந்தனர். எனினும், சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்காத வரையில் போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று கூறி அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனினும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் இலங்கையின் சுதந்திர தின நாளைக் கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, கிளிநொச்சியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த கறுப்பு தினப் பேரணி மீது பொலிசார் மிலேச்சத்தனமாக செயற்பட்டிருந்தனர். பேரணியின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், தடியடியும் மேற்கொள்ளப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் தரதரவென வீதியில் இழுத்துச் செல்லப்பட்டனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாணவர்களைக் காப்பாற்ற முயன்ற போது, பொலிசாரால் தாக்கப்பட்டிருந்தார். மேலும், ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர். ஜனநாயக போராட்டத்தை முடக்குவதற்கான பொலிசாரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமற்ற நிலையிலேயே வாழ்கின்றார்கள் என்பதனையே தொடர்ச்சியாக உறுதி செய்கின்றது.
மூன்றாவது, சிங்கள பேரினவாத அரசாங்க உறுப்பினர்கள் தமிழர்களின் எண்ணங்களை புறக்கணித்து, போலியான விம்பங்களை உருவாக்குவது தொடர்ச்சியாக தமிழர்களை ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து புறந்தள்ளும் செயற்பாடாகவே அமைகின்றது. தமிழர்களின் உரிமைகள் சுதந்திர இலங்கையில் புறக்கணிக்கப்படுவதை குறிப்பிட்டு சுதந்திர தினத்தை கரிநாளாக புறக்கணித்து தமிழர் பகுதிகளில் எதிர்ப்பு பேரணிகள் ஒழுங்குபடுத்தியிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அரசாங்க உறுப்பினரின் ஆதரவில் மக்களை வெளியிலிருந்து அழைத்து வந்து சுதந்திர பேரணி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஒரு சில வருடங்களாக இவ்வாறான போலி விம்ப உருவாக்கம் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் அரசாங்க ஆதரவுடன் நடைபெற்ற சுதந்திர பேரணியில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, 'இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்' எனத் தெரிவித்திருந்தார். மேலும், 'தமிழ் மக்களின் இந்த சுதந்திரமான நிலைமையினை குழப்புவதற்கு ஒரு பிரிவினர் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றார்கள். வடக்கில் தற்பொழுது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்கின்றேன்' எனக்குறிப்பிட்டிருந்தார். இவ்வாறே, வவுனியா நகர் முழுவதும் அரச ஆதரவுடன் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. தமிழ் மக்களின் எண்ணங்களை புறந்தள்ளி தமக்கு சாதகமான போலியான விம்பங்களை அரசாங்கம் உருவாக்க முயலுவது தொடர்ச்சியாக தமிழ் மக்களின் அபிலாசைகளை புறந்தள்ளும் செயற்பாட்டின் தொடர்ச்சியாகவே அமைகின்றது.
நான்காவது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் பயணிப்பதென்பது நல்லிணக்கத்தின் விளைபொருளாகும். எனினும் இலங்கை அரசாங்கம் கடந்த கால இனப்படுகொலைகள் மற்றும் இனவழிப்பு செயற்பாடுகளுக்கு ஈழத்தமிழர்களுக்கு இதுவரை எவ்வித பரிகார நீதியையும் வழங்க தயாரில்லை. குறைந்தபட்சம் ஒரு தசாப்தத்தை அண்மிக்கும் காணமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்துக்கு கூட எவ்வித முடிவுகளையும் இலங்கை அரசாங்கம் வழங்க தயாரில்லா நிலையிலேயே உள்ளது. குறைந்தபட்சம் ஈழத்தமிழர்களின் அன்றாட பிரச்சினைகளுக்காவது தீர்வினை வழங்கி நல்லிணக்கத்திற்கான எவ்வித முன்னாயர்த்தங்களையும் செய்யாத நிலையிலேயே தொடர்ச்சியாக மாயையான ஒன்றுபட்ட இலங்கைக்கான அழைப்பை ஜனாதிபதி விடுத்துள்ளார். இவ்வாறான மாயைகளை கட்டமைப்பதில் இன்றைய ஜனாதிபதி மிகவும் தேர்ச்சியானவராகவே வரலாற்றில் காணப்படுகின்றார். 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மைத்திரி-ரணில் அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நல்லிணக்கத்துக்கான தீர்மானத்தை ஏற்றுக்கொண்டிருந்தது. எனினும், நல்லிணக்க தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் காலத்தையே இழுத்தடித்திருந்தார்கள். எவ்வித நல்லிணக்கத்துக்கான சூழமைவையுமே உருவாக்காது, அன்று பிரதமராக இருந்த இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியல் ஒரு நிகழ்வில் 'மறப்போம் மன்னிப்போம்'-இற்கான அழைப்பையும் விடுத்திருந்தார். இவ்அழைப்பின் பிரதிபலிப்பாகவே இன்றைய ஒன்றுபட்ட இலங்கைக்கான அழைப்பும் காணப்படுகின்றது. எனினும் நல்லிணக்கத்திற்கான ஆரம்ப சமிக்ஞைகளை கூட நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செய்ய முன்வரவில்லை. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாத போதிலும், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட் சீர்திருத்தமாக 13ஆம் திருத்தம் காணப்படுகின்றது. ஏற்கனவே அரசியலமைப்பில் காணப்படும் 13ஆம் திருத்தத்தையே நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியாக முழுமையாக நடைமுறைப்படுத்தாது தமிழ் மக்களையும், தமிழ் அரசியல் தலைமைகளையும் ஏமாற்றும் செயற்பாட்டையே ரணில் விக்கிரமசிங்கா மேற்கொண்டு வருகின்றார்.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் ஒன்றுபட்ட இலங்கைக்கான அழைப்பின் தார்ப்பரியம் அவரது கொள்கைப்பிரகடன உரையிலேயே காணப்படுகின்றது. அதாவது, பதவிகளைப் பெற கனவு காணும் ரணில் விக்கிரமசிங்காவின் பொய்யான கருத்தாகவே ஒன்றுபட்ட இலங்கைக்கான அழைப்பு காணப்படுகின்றது. யதார்த்தத்தைப் புறக்கணித்து கனவுகளின் பாதையில் பயணித்தால் நாடு மீண்டும் பெரும் ஆபத்தில் தள்ளப்படும் என்ற எச்சரிக்கையை விடும் ஜனாதிபதியே யதார்த்தத்தை புறந்தள்ளியே செயற்படுகின்றார். யதார்த்தத்துக்குள் பயணிப்பதாயின் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கான பரிகார நீதியை வழங்குவதனூடாக நல்லிணக்கத்துக்கான சமிக்ஞையை ஜனாதிபதியும் அரசாங்கமும் வழங்க வேண்டும். நல்லிணக்கத்துக்கான சமிக்ஞையை புறக்கணிக்கும் வரையில் ஒன்றுபட்ட இலங்கைக்கான அழைப்பு யதார்த்த்தை புறக்கணிக்கும் மாயைப் பிரச்சாரமாகவே அமையக்கூடியதாகும். நல்லிணக்கத்துக்கான சமிக்ஞையில் பேரினவாதம் பெரும் தடையாக உள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் புலம்பெயர் தமிழர்களை இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி, சிங்கள பேரினவாதத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து இலங்கையின் தொலைத்தொடர்பு சேவை மற்றும் விமான சேவையை புலம்பெயர் தமிழ் பொருளதாரா முதலாளிக்கு வழங்குவதை நிராகரித்து வருகின்றார். இது உரைக்கும் செயற்பாட்டுக்கும் பொருத்தமற்ற யதார்த்தத்தையே வெளிப்படுத்தி நிற்கின்றது. ஜனாதிபதி ஒன்றுபட்ட இலங்கையை உளப்பூர்வமாக விரும்புபவராயின் பேரினவாத அச்சுறுத்தலுக்கு அடிபணியும் இலங்கை அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். இதனூடாகவே ஈழத்தமிழர்களுடான நல்லிணக்க சூழலை உருவாக்க முடியும். அதனூடாக ஒன்றுபட்ட இலங்கையையும் கட்டமைக்க முடியும்.
Comments
Post a Comment