ஜே.வி.பி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிகொள்ளக் கூடிய வலிமையையும் இந்திய விஜயமும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கை அரசியல், சமூக, பொருளாதாரத்தில் இந்தியாவின் செல்வாக்கு வரலாற்றில் நிலையான வடிவத்தை பெற்றுள்ளது. கடந்த காலங்களில் சுதந்திர இலங்கையின் ஆட்சியாளர் தேர்தல்களிலும் இந்தியாவின் செல்வாக்கு முடிவுகளை தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஆட்சியாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறானதொரு அனுபவத்தின் தொடர்ச்சியை சமகால தேர்தல் முன்னகர்வுகளுக்கு சமாந்தரமாக இந்திய அரசின் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கான வரவேற்பிலும் அவதானிக்கப்படுகின்றது. குறிப்பாக, இந்திய எதிர்ப்பினூடாக கட்டமைக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வந்த ஜே.வி.பியினை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்துள்ளமையும், ஜே.வி.பியினரின் இந்தியாவுக்கான பயணமும் தென்னிலங்கை அரசியலின் சில ஆரூடங்களை உறுதி செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. அதாவது, அரகலயாவிற்கு பின்னர் தென்னிலங்கையில் ஜே.வி.பி மீதான மக்கள் நம்பிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்அதிகரிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நம்பிக்கை, ஆட்சி அதிகாரத்துக்கு ஜே.வி.பியினரை கொண்டுவருவதற்கு போதுமானதாக அமையுமா என்பதில் அரசியல் அவதானிகளிடையே முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றது. இலங்கையின் அரசியல் கலாசாரம் ஜே.வி.பி மீதான நம்பிக்iயை வாக்காக மாற்றுவதற்கு உடன்படுமா என்பதில் சந்தேகங்களே காணப்படுகின்றது. இக்கட்டுரை இலங்கையில் ஜே.வி.பிக்கான கள அரசியல் சூழலை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியின் அழைப்பின் பேரில் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்து, நாடு திரும்பியுள்ளது. 'இந்திய விஸ்தரிப்புவாதத்திற்கான எதிர்ப்பு' என்பது ஜே.வி.பியின் சித்தாந்தத்தின் அடிக்கல்லாகும். மறுபுறம் பாராளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஜே.வி.பி, மிக சமீபத்தில் வரை ஒரு விளிம்பு அரசியல் கட்சியாகவே கருதப்பட்டது. இப்பின்னணியில் ஜே.வி.பியின் இந்திய விஜயம் முக்கியத்துவமான அரசியல் காரணிகளை முன்னிறுத்துகிறது. ஒன்று, 1980களின் பிற்பகுதியில், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொலைவெறியில் இறங்கிய ஜே.வி.பியின் கருத்தியல் திருப்பத்தை இந்த விஜயம் குறிக்கிறது. இரண்டு, ஜே.வி.பிக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ அழைப்பு பொதுமக்களிடையே அவர்கள் பெற்றுள்ள புகழைக் கருத்தில் கொண்டதாக அமைகின்றது. இந்திய ஊடக செய்திகளும் அதனையே உறுதி செய்கின்றது. இந்தியாவின் பிரதான ஊடகமாக தி ஹிந்து உட்பட முதன்மையான இந்திய ஊடகங்களில், கொழும்பை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின் முடிவுகளை முதன்மைப்படுத்தி அனுரகுமார திசாநாயக்கா மீது மக்களிடம் அதிகரித்து வரும் நம்பிக்கையை உறுதி செய்துள்ளன.
சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனத்தின் சமீபத்திய (டிசம்பர்-2023) கருத்துக்கணிப்பின்படி, 2024இல் நடைபெறக்கூடிய ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்கா மிகவும் விருப்பமான வேட்பாளராக காணப்படுகின்றார். பதிலளித்தவர்களில் 50சதவீதமானோர் அவருக்கு வாக்களிப்பதாகக் கூறியுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை 33சதவீதமானோரும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 9சதவீதமானோரும், பொதுஜன பெரமுனவை 8சதவீதமானோரும் தேர்ந்தெடுத்துள்ளனர். டிசம்பர்-2023இல் 522 பேரையும், 2021 முதல் 14 941 பேரை நேர்காணல் செய்த பெறுபேறுகளூடாகவே இக்கருத்துக்கணிப்பு முடிவுகளை தொகுத்துள்ளதாக சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த செப்டெம்பரில் வெளியிடப்பட்ட கருத்து கணிப்பிலும் அநுர குமார திஸாநாயக்காவே முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டு காலிமுகத்திடலில் ஏற்படுத்தப்பட்ட அரகலயாவிற்கு பின்னரான அரசியல் சூழலில் அனுரகுமார திசாநாயக்க மீதான அரசியல் பார்வை அதிகரித்துவரும் பிரச்சாரமே பொதுவெளியில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
எனினும் எதிர்க்கட்சிகளிடையே இக்கருத்துக்கணிப்பு தொடர்பில் எதிரான விமர்சனங்கள் காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், 'அனுரகுமார திசாநாயக்கவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளமை பிழையான கணக்கெடுப்பின் முடிவு' என கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அரசியல் அவதானிகளிடையே முரண்பட்ட வாதங்கள் காணப்படுகின்றது. இது 500 நபர்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு நிறுவனத்தால் நடத்தப்பட்டது என்ற அடிப்படையில், இது தவறான கணக்கெடுப்பு குறித்த வாதத்தில் சில நியாயம் உள்ளதென சிலர் ஆதரவளித்துள்ளனர். அதேவேளை எவ்வாறாயினும், இந்தியா போன்ற ஒரு நாடு இதுபோன்ற அற்பமான விடயத்தால் வழிநடத்தப்படும் என்று கருதுவது கேலிக்கைக்குரியதென எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை நிராகரிக்கும் உரையாடல்களும் காணப்படுகின்றது. இப்பின்னணியில் ஜே.வி.பிக்கு உள்ள களச்சூழலை இலங்கையின் அரசியல் கலாச்சார கடந்த கால அனுபவங்களுடன் தொடர்புபடுத்தி அவதானிக்க வேண்டியது அவசியமாகின்றது.
முதலாவது, ஜே.வி.பி. தனது சொந்த அதிகாரத்தின் கீழ் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் போதுமான மக்கள் ஆதரவைத் திரட்டத் தவறியதற்கு ஒரு முக்கிய காரணம், அது பனிப்போர் காலத்தின் புரட்சிகர சித்தாந்தத்தை ஆதரிக்கும் சாயம் பூசப்பட்ட மார்க்சிஸ்டுகளின் அலங்காரமாக பரவலாகக் காணப்படுகிறது. இலங்கையின் காலணித்துவ மரபும் உலகமயமாக்கல் சித்தாந்தத்தின் விளைவுகளும் இலங்கை மக்களிடையே தாராளவாத எண்ணங்களே இயல்பான மனநிலையாக காணப்படுகின்றது. மாறாக இடதுசாரி சித்தாந்தங்களை உள்வாங்கும் அரசியல் கலாசாரத்தை பின்தொடராத நிலையே காணப்படுகின்றது. இடதுசாரி மரபு அதிகம் கல்வி பாரம்பரியத்துடனேயே நெருங்கிய பிணைப்பை பகிர்கின்றது. அனுரகுமார திசாநாயக்க மீதானதொரு நம்பிக்கையும் அத்தகைய சமுகத்திடையே அதிக பிணைப்பை உருவாக்கியுள்ளது. சுகாதாரக் கொள்கைக்கான நிறுவனத்தின் கருத்துக் கணிப்பை விமர்சிக்கும் சிரேஷ;ட ஊடகவியலாளர் குசல் பெரேரா, 'இந்த நகர்ப்புற போக்கில் சிக்கி, கொழும்பை மையமாக வைத்து வாக்காளர்களின் கருத்துக் கணிப்புகளைக் கணக்கிடும் நிறுவனங்களும் ஜே.வி.பிஃஎன்.பி.பி.க்கு பெரும் செல்வாக்கைக் கொடுக்கும் சதவீதங்களைக் கொண்டு வந்துள்ளன' எனக்குற்றஞ்சாட்டியுள்ளார். இக்குற்றச்சாட்டு அதிக கவனத்தை பெறுகின்றது. பயன்படுத்தப்பட்ட மாதிரிகள் மற்றும் அவற்றின் மக்கள்தொகை மற்றும் புவியியல் பிரதிநிதித்துவங்கள் தெளிவாக இல்லாத நிலையில் தலைநகருக்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைய வாய்ப்புகள் உள்ளது. கடந்த காலங்களிலும் தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களில் ஜே.வி.பி ஆதிக்கம் காணப்பட்ட போதிலும், ஆட்சிப்பரப்பில் அதனை பிரதிபலிக்க இயலாத நிலையே காணப்பட்டது. பாமர மக்களிடையே போதிய விழிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசியல் கலாசாரத்தை இலங்கையில் இடதுசாரிகள் உருவாக்காத நிலையே தொடர்கின்றது.
இரண்டாவது, அரகலயாவை மையப்படுத்தியே ஜே.வி.பி தொடர்பான எழுச்சி உரையாடப்படுகின்றது. இந்நிலையில், அரகலயா முழு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தா என்பதில் தெளிவை பெற வேண்டியுள்ளது. காலிமுகத்திடலுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட அரகலயா மட்டுப்படுத்தப்பட்ட சமுக பிரதிநிதித்துவத்தையே வெளிப்படுத்துகின்றது. முழுமையாக வடக்கு-கிழக்கு தமிழர்கள் அரகலய பங்குபற்றலை நிராகரித்திருந்தார்கள். தென்னிலங்கையிலும், கெர்ழும்பை தளமாக கொண்ட மத்தியதர வர்க்கத்தின் ஈடுபாடே அரகலயவை நிரப்பியிருந்தது என்பதுவே அரசியல் அவதானிகளது கருத்தாக அமைந்தது. நாடு தழுவிய அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரத்தை மறுசீரமைப்பதற்கு பதிலாக, காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மிகவும் குறுகிய புவியியல் பகுதியான காலிமுகத்திடல் கடற்கரை மீது கவனம் செலுத்தியிருந்தனர். இது போராட்டத்தின் வலிமையையும் ஈடுபாட்டாளர்களையும் மட்டுப்படுத்தியதாகவே அமைந்தது. இதுதொடர்பில் அரகலய காலத்தில் கருத்துரைத்துள்ள சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் மோதல் தீர்வுத் துறையின் தலைவர் பேராசிரியர். எஸ்.ஐ.கீதபொன்கலன், 'ஆக்கிரமிப்பு காலிமுகத்திடல் இயக்கம் மேல்த்தட்டு வர்க்க பொழுதுபோக்காக மாறுகிறது. அதை உயர்தர நுழைவுச் செயலாக மாற்றுவதற்கு நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள் உள்ளன. ஆபத்து என்னவென்றால், அது மற்றொரு வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கமாக மாறக்கூடும், இது உடனடி பரவசத்திற்குப் பிறகு சிதறியது.' எனக்குறிப்பிட்டிருந்தார். மாணவர் ஒன்றியங்களின் ஈடுபாடும் போராட்டங்களுமே அரகலயவில் பெரிய அதிர்வலை விம்பத்தை உருவாக்கியிருந்தது. இறுதியில் இலங்கையின் பல மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமையும், சேதமாக்கப்பட்டமையும் எதிர்ப்பரசியல் விளைவாக அரகலயவிற்கு மீறிய செயலாகவே அமைந்திருந்தது. அரகலயவின் எழுச்சியை ஜே.வி.பியின் வளர்ச்சியாக ஆருடம் சொல்வது மட்டுப்படுத்தப்பட்ட எழுச்சியை முழு இலங்கைத்தீவில் எழுச்சியடைந்துள்ளதாக மாயையை உருவாக்குவதாகவே அமையும்.
மூன்றாவது, ஜே.வி.பி அதன் புரட்சிகர மையத்திற்கும், வெளித்தோற்றத்தில் நெகிழ்வான மற்றும் நடைமுறைச் சுற்றளவுக்கும் இடையிலான மோதலில் இருந்து எழும் அடையாள நெருக்கடி மக்களிடையே எதிரான விமர்சனங்களுக்கு காரணமாக அமைகின்றது. ஜே.வி.பியின் உருவாக்கம் சீன கொம்யூனிசத்தையும், இந்திய விஷ;தரிப்பு எதிர்ப்பையும் ஆதாரமாக கொண்டதாக அமைகின்றது. எனினும் தென்பூகோள அரசியல் கலாசாரத்திற்கு ஏற்ப நிலையற்ற அரசியல் கொள்கையை காலத்துக்கு காலம் வெளிப்படுத்தி வந்துள்ளது. இந்திய எதிர்ப்புவாதத்தில் மாறல் 2024இல் அனுரகுமார திசாநாயக்க காலத்தில் ஏற்பட்டதல்ல. மாறாக இந்திய எதிர்ப்புவாதத்தில் மாற்றத்தை ஜே.வி.பி ஸ்தாபக தலைவர் ரோகன விஜயவீர வெளிப்படுத்தியுள்ளார். ஜே.வி.பியின் முன்னாள் பொதுச்செயலளார் கலாநிதி லியோனல் போபேஜ், '1980களின் முற்பகுதியில் நரசிம்மராவ் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவரை சந்திக்க ரோகண விஜேயவீரவையும் அழைத்துச்சென்றதாக' குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டிலும் நிலையற்ற கொள்கையையே ஜே.வி.பி வெளிப்படுத்தி வந்துள்ளது. 1970 பொதுத் தேர்தலில், அது இலங்கை சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணியை ஆதரித்தது. ஆனால் அடுத்த ஆண்டு அவ்அரசாங்கத்திற்கு எதிராகவே ஆயுதம் ஏந்தியது. 1970களின் பிற்பகுதியில், ஜே.வி.பி.க்கு 'ஜயவர்தன-விஜேவீர பெரமுனா' என்று பெயரிடும் அளவுக்கு, அதன் தலைவர்களை சிறையிலிருந்து விடுவித்த ஜெயவர்த்தன ஆட்சியுடன் நல்லுறவில் இருந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது இரண்டாவது கிளர்ச்சியை நடத்தியது. இவ்வாறே தொடர்ச்சியாக சந்திரிக்கா மற்றும் மகிந்த ராஜபக்ஷh அரசாங்கங்களுடனும் உறவை அமைப்பதும் எதிர்ப்பதுமாக கொள்கை முரண்பாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளது. தற்போது அனுரகுமார திசாநாயக்காவின் சமகால கொள்கையின் மாறுதல்களும் அதிகம் சந்தேகத்துடன் பார்க்கும் நிலையே பொதுமக்களிடம் காணப்படுகின்றது. பாரம்பரிய தார்மீக, நெறிமுறை நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளின் இழப்பில் அரசியலின் சிக்கல்களை வழிநடத்த ஒருபோதும் தயங்க வேண்டாம் என்று மச்சியாவெல்லி ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜே.வி.பி அதனை ஒவ்வொரு ஆட்சிக்காலப்பகுதியிலும் பயன்படுத்தி வந்துள்ளது.
நான்காவது, ஜே.வி.பி முழுமையாக சிங்கள முகத்தையே கொண்டுள்ளது. ஒட்டுமொத்த இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக தன்னை அடையாளப்படுத்த தவறியுள்ளது. இடதுசாரி புரட்சிகர சித்தாந்தத்தை ஆதாரமாக கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல் இயக்கமாக ஜே.வி.பி அடையாளப்படுத்தப்படுகின்ற போதிலும், செயற்பாட்டளவில் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக விரோதமான அரசியல் கொள்கையையே கடைப்பிடித்து வந்துள்ளது. மகாவம்ச மனோநிலையில் தென்னிலங்கையின் இந்திய எதிர்ப்பு வாதம் என்பது ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்பதையே அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரவு வலியுறுத்தியுள்ளார். இப்பின்னணியில் ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்பு என்பது ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுகளுக்கும் வரலாற்று ரீதியாக எதிர்ப்பையே வெளிப்படுத்தி வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சி என்பது இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதனை எதிர்ப்பதாகவே அமைந்தது. ரோகண விஜேவீர, 1986ஆம் ஆண்டு தனது 'தமிழீழப் போராட்டத்திற்கான தீர்வுகள்' என்ற புத்தகத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுடன் இணைந்தாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையினை சித்தரித்திருந்தார். 2004 பாராளுமன்றத் தேர்தலில், ஜே.வி.பி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணிப் பங்காளியாக மாறியதுடன், புலிகளுடன் தொடர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எதிராக நின்றது. மேலும், இறுதி யுத்தத்தில் இலங்கை அரசின் முன்னணி படைவீரர்களாக ஜே.வி.பியினரே செயற்பட்டனர் என்ற உரையாடலும் காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு எந்தவொரு அதிகாரப் பகிர்வையும் பல தசாப்தங்களாக உறுதியாக எதிர்த்து வந்துள்ளது. இப்பின்னணியில் சிங்கள பேரினவாத முகத்தினூடாகவே கடந்க கால பாராளுமன்ற ஆசனங்களையும் பெற்றிருந்தது. இலங்கையின் ஜனாதிபதி பேரினவாத வாக்குகளில் மாத்திரம் வெற்றி பெறக்கூடிய சூழல் சமகாலத்தில் இல்லை என்பதே அரகலயா ஏற்படுத்திய விளைவாக அமைகின்றது.
எனவே, ஜே.வி.பி எழுச்சி தொடர்பான உரையாடல்கள் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் பிரம்மையாகவே காணப்படுகின்றது. மாறாக மாற்றத்திற்கான எழுச்சிக்குரிய அடையாளத்தை கொண்டிருக்கவில்லை. புரட்சியை ஆதாரமாக கொண்டு கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அடிப்படையில் நெருக்கடி காலங்களில் எழுச்சிக்குரிய விம்பத்தை கொண்டுள்ளது. இவ்எழுச்சி ஆட்சியதிகாரத்துக்கான வாக்குகளாக மாறக்கூடிய வலிமையை கொண்டிருக்கவில்லை. தமிழ்ப்பரப்பில் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டு காலத்தில் பாராளுமன்றத்தில் ஜே.வி.பியினரின் ஆசனங்களும் அதிகரிக்கட்டு வந்தது. 2004 பாராளுமன்ற தேர்தலில் 39 ஆசனங்கள் வரை உயர்வடைந்தது. முiபெ ஆயமநசள-ஆக செயற்பட முடிந்த போதிலும், ஆட்சியதிகாரத்தை ஜே.வி.பியினால் பெற முடியவில்லை. 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் அரசியல் நெருக்கடி தளர்த்தப்பட்ட நிலையில் ஜே.வி.பியும் தோற்கடிக்கப்பட்டனர். மீள 2022ஆம் ஆண்டு ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி தென்னிலங்கையின் புரட்சிகர இயக்கமான ஜே.வி.பியின் எழுச்சியை அடையாளப்படுத்துகின்றது. இது ஆட்சியதிகாரத்திற்கான வாக்காக மாறும் என்பது முரணான விளக்கமாகவே அமைகின்றது. இதில் இந்தியாவின் ஈடுபாட்டை ஆட்சியதிகாரத்திற்கு போட்டியிடுவோருக்கு விடப்படும் எச்சரிக்கையாகவே நோக்க வேண்டியுள்ளது. 1980களில் இலங்கை அரசுக்கு எச்சரிக்க ஈழத்தமிழர்களை பயன்படுத்திய இந்திய அரசு, 2024களில் ஜே.வி.பியினை ஆட்சியாளர்களுக்கான எச்சரிக்கையாக பயன்படுத்த முனைகின்றது என்பதையே உணரக்கூடியதாக உள்ளது. ஜே.வி.பியின் இந்திய விஜயம் தென்னிலங்கை அரசியல் கட்சிகளிடையே ஏற்படுத்தியுள்ள கொந்தளிப்பும் அதனையே உறுதி செய்கின்றது. ஜே.வி.பி.யின் உள்ளார்ந்த இந்திய-எதிர்ப்பு உள்ளூர் அரசியலை மீறி, புதுடில்லியும் ஜே.வி.பியும் அரசியல் ஆதாயத்திற்காக ஒருவரையொருவர் அனுசரித்துக்கொள்ள தங்கள் விருப்பத்தை காட்டுகின்றன.
Comments
Post a Comment