ஈழத்தமிழர்களின் பொதுவேட்பாளர் கோரிக்கை பொதுவாக்கெடுப்பை பலப்படுத்தும்! -ஐ.வி.மகாசேனன்-

ஜனாதிபதி தேர்தலை தமிழ்த்தரப்பு கையாள்வது தொடர்பாக தமிழ்த்தேசிய அரசியலில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது. கருத்தியலாளர்கள் மத்தியில் உரையாடப்பட்டு வந்த தமிழ் பொதுவேட்பாளர் சித்தாந்தம், 2024இல் தமிழ் அரசியல் கட்சிகளிடையே முதன்மையான உரையாடலை பெற்றது. எனினும் தமிழ் சிவில் சமுகங்களின் அமைதியும், தமிழ் மக்களிடையே பொதுக்கட்டமைப்பின்மையாலும் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை சிதைத்திடுவார்களா என்ற அச்சம் கருத்தியலாளர்களிடம் காணப்பட்டது. எனினும் கடந்தவாரம் தமிழ் கருத்தியலாளர்கள் மற்றும் தமிழ் சிவில் சமுக கட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளர் சித்தாந்தத்தை பொறுப்பெடுத்துள்ளார்கள். அவர்கள் தமது ஊடக அறிக்கையில் தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை பொது வாக்கெடுப்புடன் பிணைத்துள்ளார்கள். இக்கட்டுரை தமிழ் மக்கள் பொதுவாக்கெடுப்பு எனும் கோரிக்கையை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதனூடாக சாத்தியப்படுத்த கூடிய முறையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளளது.

கடந்த வாரம் தமிழ் பொதுவேட்பாளர் உரையாடலை முன்னிறுத்தி நிகழ்நிலையில் ஆரம்பிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் ஒன்றிணைவு, குறுகிய கால இடைவெளியில் ஏப்ரல்-30அன்று வவுனியாவில் ஒன்றுகூடி தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் உறுதியான அறிவிப்பை அறிவித்துள்ளனர். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது என கூட்டத்தின் முதன்மையான தீர்மானமாக அறிவித்துள்ளது. மேலும், ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்காக சிவில் சமூகமும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. இது தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பிலான ஆரோக்கியமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்திய பொதுவாக்கெடுப்பு நீண்ட காலமாகவே புலம்பெயர் செயற்பாட்டாளர்களிடம் மற்றும் தமிழக அரசியல்வாதிகளிடம் உரையாடலை பெற்று வருகின்றது. 2013 மார்-27இல் தமிழகத்தின் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஈழத்தை உருவாக்குவது தொடர்பான பொது வாக்கெடுப்பு உட்பட இலங்கைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றம் வலியுறுத்தி இருந்தது. மேலும், ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென்று தமிழக சட்ட சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறே 2023 ஜனவரியில் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமாகத் தீர்வு காண தமிழர்களுக்கு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ஆறு முக்கிய தமிழ் அமெரிக்க அமைப்புகள் கூட்டாக அமெரிக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

புலம்பெயர் தளத்திலும் தமிழகத்திலும் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி பொதுவாக்கெடுப்புக்காக உரையாடல்கள் வலுப்பெறுகின்ற போதிலும், தாயகத்தில் அது போதிய கவனத்தை பெறாத நிலைமையே காணப்படுகின்றது. தமிழ சட்டசபையில் பொதுவாக்கெடுப்பிற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு தசாப்தங்களை கடக்கின்ற போதிலும் செயற்பாட்டு பெறுமதியை பெறவில்லை. அதற்குரிய முன்னேற்றகரமான அரசியல் தந்திரோபாயத்தை ஈழத்தமிழ் அரசியல் தரப்பினரும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. புலம்பெயர் தளத்தில் காணப்படும் அரசியல் சுதந்திரம் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்புக்கான வாய்ப்பை வழங்கக்கூடியதாக அமைகின்றது. எனினும் தாயகத்தில் பொதுவாக்கெடுப்பின் சாத்தியப்பாடு பெரும் சந்தேகத்திற்குரியதாகவே அமைகின்றது. ஈழத்தமிழர்கள் தமக்கான அரசியல் வாய்ப்புக்களை தந்திரோபாயமாக நகர்த்துவதனூடாக மாத்திரமே ஈழத்தமிழர்களின் பொதுவிருப்பினை வெளிப்படுத்துவதனூடாக பொதுவாக்கெடுப்புக்கு ஒத்த சூழலை உருவாக்க முடியும். அவ்வாறானதொரு களமாக இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை கையாள வேண்டுமென்பதே சிவில் அமைப்புக்களின் கூட்டுத் தீர்மானமாக அமைகின்றது. இவ்தந்திரோபாய நகர்வை சாத்தியப்படுத்துவதிலேயே ஈழத்தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு தங்கியுள்ளது.

பொதுவாக்கெடுப்பு என்பது ஜனநாயகத்தின் தூய்மையான வடிவமாகவும், பிரதிநிதித்துவ சபையின் சட்டத்தை விட மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. ஜனநாயக மற்றும் ஜனநாயகமற்ற நாடுகளில் உலகின் பல பகுதிகளில் பொதுவாக்கெடுப்பு அரசியல் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. முதல் உலகப் போருக்குப் பிறகு, குறிப்பாக சர்வதேச சங்கம் நிறுவப்பட்ட பிறகு, பல்வேறு பிராந்திய மோதல்களைத் தீர்க்க பொதுவாக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டு ஸ்பெயினில் உள்ள கேட்டலோனியர்களும்,  ஈராக் குர்துகளும் தங்கள் சுயநிர்ணய உரிமையை வெளிப்படுத்த இந்த ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தினர். இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலை மற்றும் தொடர்ச்சியான கட்டமைப்பு இனப்படுகொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இத்தகைய நெருக்கடிகளுக்கு தீர்வினைப்பெற ஜனநாயக மற்றும் அமைதியான முறையில் அரசியல் மாற்றுகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்பின்னணியில் ஈழத்தமிழரசியலில் பொதுவாக்கெடுப்பின் முக்கியத்துவத்தை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, பொதுவாக்கெடுப்பு அரசியல் பொறிமுறை என்பதற்கு அப்பால் முதன்மையான அடிப்படை மனித உரிமைசார் தொகுதியாகும். சர்வதேச சட்டம் தனி மனிதன் தான் விரும்பும் அரசியல் அலகின் கீழ் வாழ உரித்துடையவனாக அங்கீகரிக்கின்றது. அதாவது சுயநிர்ணய உரிமை கருத்தியலை ஆதரிக்கிறது. புகழ்பெற்ற சட்ட அறிஞரான யோரம் டின்ஸ்டீனின் கருத்துப்படி, சுயநிர்ணயம் என்பது 'ஒவ்வொரு மக்களும் தனது எதிர்கால போக்கை சுதந்திரமாக தீர்மானிக்க உரிமை உண்டு' என்பதாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, காலனித்துவ மக்களிடையே சுயநிர்ணய உரிமையை மேம்படுத்துவது ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக மாறியது. அத்துடன் மக்களே அரசும் தேசமும் ஆகும். மக்கள் இறையாண்மை கொண்டவர்கள். சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். சுயநிர்ணயமும் ஜனநாயகமும் இறுகப்பிணைந்த அரசியல் கோட்பர்டுகளாகும். சுயநிர்ணயம் என்பது ஜனநாயகத்தின் யோசனையில் உள்ளடங்கியதாகக் கருதப்படலாம். ஒவ்வொரு மனிதனின் உரிமையும் அவர் சார்ந்துள்ள அரசியல் அலகின் விவகாரங்களைப் பற்றி ஆலோசிக்க அங்கீகரிக்கப்பட்டால், அலகின் வடிவம் மற்றும் அளவு குறித்து ஆலோசிக்க அவருக்கு சம உரிமை இருப்பதாகக் கருதலாம். எனவே, அரசையும் தேசத்தையும் பாதிக்கும் அனைத்து விஷயங்களையும் மக்கள் வாக்கு மற்றும் எளிய பெரும்பான்மை மூலம் இறுதி விகிதமாக முடிவு செய்யும் உரிமை அவர்களுக்கு உள்ளது. அவ்அடிப்படையிலேயே தமிழ் மக்களும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். தமது ஆணையை வெளிப்படுத்துவதற்கான அடிப்படை உரிமையை கொண்டுள்ளார்கள். தமது அரசியல் அபிலாசைகளை பொதுவாக்கெடுப்பு எனும் ஜனநாயக பொறிமுறையூடாக நெறிப்படுத்த முழு ஆற்றலும் உடையவர்களாக காணப்படுகின்றார்கள். எனினும் இலங்கையின் பேரினவாத அரசாங்கம் தமிழ் மக்களின் இறைமையை சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை தமக்கான பொதுவாக்கெடுப்பாக கையாள்வது தந்திரோபாயமான ஜனநாயக வெளிப்பாடாகும்.

இரண்டாவது, தேசிய இனப்பிரச்சினைகளுக்கான தீர்வாக பொதுவாக்கெடுப்பு சர்வதேச உலக ஒழுங்குக்கு உட்பட்டதாக அமைகின்றது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஏறத்தாழ 22 அரசுகளில் பொதுவாக்கெடுப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு அடையாளங் காணப்பட்டுள்ளது. இவை சட்டப்பூர்வ பொது வாக்கெடுப்புகளின் எடுத்துக்காட்டுகளாகும். இவை புதிய இறையாண்மை கொண்ட நாடுகளின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. கியூபெக் (1980, 1995), மாண்டினீக்ரோ (2006), 1991இல் பல முன்னாள் சோவியத் மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நாடுகள் மற்றும் தெற்கு சூடான் (2011) என்பன உள்ளடங்குகின்றது. மேலும் சில பொதுவாக்கெடுப்பில் மக்கள் ஓர் அரசுக்குள் வாழும் இணக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். 2014இல் ஸ்கொட்லாந்து இந்த பதிலின் மிகச் சமீபத்திய உதாரணமாகும். இவ்அனுபவங்களில் பொதுவாக்கெடுப்பு என்பது முழுமையான பிரிவினைவாத கருத்து என்பது சர்வதேச பரப்பில் ஏற்றுக்கொள்ள இயலாத வாதமாகவே காணப்படுகின்றது. பொதுவில் தேசிய இனங்கள் தமது அரசியல் தீர்வை தாமாகவே தீர்த்துக்கொள்ள கையாளும் வழிமுறையாகவே பொதுவாக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்பின்னணியிலேயே ஈழத்தமிழர்களும் தமது அரசியல் தீர்வினை தாமே தீர்க்கும் வகையிலான பொதுவாக்கெடுப்பு அணுகுமுறை முதன்மையான உரையாடலை பெறுகின்றது.

மூன்றாவது, ஈழத்தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு அனுபவங்கள் காணப்படுகின்றது. 1970 காலப்பகுதியில் இரண்டு முறை இலங்கை பாராளுமன்ற தேர்தலை தமிழ் மக்களின் பொது ஆணையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பொதுவாக்கெடுப்பு வியூகத்தை கையாண்டுள்ளனர். 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு ஈழத்தமிழர்களினை முற்றாக நிராகரிக்கும் அரசியலமைப்பு என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழரசுக்கட்சியின் ஸ்தாப தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற இடைத்தேர்தலில் தமிழ் மக்கள் 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பை நிராகரிக்கின்றமையை வெளிப்படுத்தும் பொதுவாக்கெடுப்பாகவே தமிழரசுக்கட்சி நகர்த்தியிருந்தது. பெருவாரியான வெற்றியையும் பெற்றிருந்தது. அவ்வாறே 1977ஆம் ஆண்டு தேர்தலை தமிழர்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தினை தமிழ் மக்கள் அங்கீகரிப்பதாற்கான பொதுவாக்கெடுப்பாக கையாண்டிருந்தார்கள். இவையிரண்டும் உள்ளக பொறிமுறையையே கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கங்களிற்கு தமிழ் மக்களின் பொதுவிருப்பை வெளிப்படுத்தும் உத்தியாகவே பொதுவாக்கெடுப்பை பயன்படுத்தியிருந்தார்கள். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை பொதுவாக்கெடுப்பாக கையாள்வதனூடாக தமிழ் மக்கள் தமது அரசியல் தீர்வுக்கான அபிலாசைகளை ஜனநாயக முறையில் சர்வதேச வெளிக்கு உறுதிப்படுத்துவதாகவே அமைகின்றது. 

எனவே, இலங்கை ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் பொதுவாக்கெடுப்பாக கையாளும் பொறிமுறை முன்னேற்றகரமான தந்திரோபாய செயற்பாடாகும். இதில் சிவில் சமுகங்களுடன் தமிழ் அரசியல் கட்சிகளும் இணைவதனூடாகவே மக்களிற்கு நம்பிக்கையை உருவாக்குவதனூடாக தமிழ் மக்களின் திரட்சியையும் சாத்தியப்படுத்தக்ககூடியதாக அமையும். பொதுவாக்கெடுப்பு தொடர்பில் எதிர்மறையான கருத்துநிலைகளும் தமிழ்ப்பரப்பில் காணப்படுகின்றது. குறிப்பாக ஈராக் குர்திஸ்தான் (2005, 2017) மற்றும் கட்டலோனியா (2014) பொதுவாக்கெடுப்புகள் இலக்கினை அடைய முடியாமை சுட்டிக்காட்டப்படுகின்றது. பொதுவாக்கெடுப்பு உலக ஒழுங்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமமாக காணப்படுகின்ற போதிலும், பொதுவாக்கெடுப்பின் அங்கீகாரம் புவிசார் அரசியல் காரணிகளுக்குள்ளேயே தங்கியுள்ளது. அதனை சாதகமாக பயன்படுத்துவதிலேயே தமிழ் அரசியல் இராஜதந்திரத்தின் வெற்றி தங்கியுள்ளது. அரசியல் என்பது சாத்தியங்களுக்கு ஊடாக பயணிக்கும் இராஜதந்திர பொறிமுறையே ஆகும். ஆரம்பிப்பதற்கு முன்னரே நிராகரிப்பது பொருத்தமான பாதையை உருவாக்க வழி ஏற்படுத்தப்போவதில்லை. இலங்கையின் அமைவிடம் புவிசார் அரசியல் முக்கியத்துவம் பெற்றதாகும். சிங்கள தேசிய இனம் அரசுடைய தரப்பாக புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை பயன்படுத்துகையில், தமிழ் தேசிய இனம் ஓரணியில் திரண்டு தமது பலத்தை வெளிப்படுத்துவதனூடாக இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை பயன்படுத்தக்கூடிய வழி ஏற்படும். அதற்கான களத்தையே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி பொதுவாக்கெடுப்பாக கையாளுவதன் மூலம் உருவாக்க இயலுமென்பதே தமிழ் கருத்தியலாளர்களின் எதிர்பார்ப்பாக அமைகின்றது.

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-