செல்வநாயகத்தின் அரசியல் அணுகுமுறையும் தமிழ்த்தேசியத்திற்கான கூட்டுப்பலமும்! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிலங்கையில் பிரதான கட்சிகள் பகுதியளவில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் நிலையான முடிவுகளை வெளிப்படுத்தி வருகின்றது. தமிழ்த்தரப்பில் தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான உரையாடல் காணப்படுகின்ற போதிலும், அரசியல் கட்சிகள் உறுதியான முடிவுகளை வெளிப்படுத்த தவறி வருகின்றது. அண்மையில் தமிழ் சிவில் சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கருத்தியலாளர்கள் இணைந்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்த பொதுக்கட்டமைப்பினூடாக தமிழ் பொதுவேட்பாளர் கருத்தியலை முன்னிறுத்துவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. தேர்தல் நலன்களுக்குள் இயங்கும் தமிழ் அரசியல் கட்சிகளை, தமிழ்த்தேசியத்தின் தேவையை முன்னிறுத்தி செயற்பாட்டு தளத்தில் ஒன்றிணைப்பதும் பெரும் சவாலுக்குரியதாகவே அமைகின்றது. தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஒப்பீட்டடிப்படையில் அதிக பாராளுமன்ற பிரிதிகளை கொண்டுள்ள தமிழரசுக்கட்சியின் உட்கட்சி மோதலுக்குள் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலும் சிக்குண்டுள்ளது. இந்நிலையிலேயே தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சி உத்தியோகபூர்வ தீர்மானத்தை வெளியிட இருவார கால அவகாசத்தை கோரியுள்ளதுடன், மத்திய குழுவை கூட்டி ஆராயவுள்ளது. மத்திய குழுவும் இரு அணிகளாக பிளவுபட்டுள்ளமையால், தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானம் மக்கள் நலனை சிந்தித்து செயற்படுமா அல்லது தனிநபர் நலனுக்குள் பிரவேசிக்குமா எனும் குழப்பம் பொதுப்பரப்பில் காணப்படுகின்றது. இக்கட்டுரை தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்துவதில் தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் அணுகுமுறையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் தமிழரசுக்கட்சியினுள் காணப்படும் பூசல்களை நியாயப்படுத்த எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் அரசியல் அணுகுமுறைகளை தவறாக திரிவுபடுத்தும் போக்கு காணப்படுகின்றது. ஏப்ரல்-2அன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 47வது நினைவேந்தல் நிகழ்வு  திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் யாழ்ப்பாணம்-கிளிநாச்சி தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகையில், 'தந்தை செல்வாவின் அரசியல் அணுகுமுறையும் அவரின் சொந்தக் குணாதிசயமும் ஒன்றாகவே இருந்தது. அவர் ஒத்து ஓடுகின்றவர் அல்லர். அதாவது அடம்பன்கொடி திரண்டு இருக்க வேண்டும் என்பதற்காகச் சேரக் கூடாதவர்களோடு சேருபவர் அல்லர்' எனத்தெரிவித்திருந்தார். குறிப்பாக 1949ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸினுள் ஜி.ஜி.பொன்னம்பலத்தோடு செல்வநாயகத்திற்கு ஏற்பட்ட கொள்கை முரண்பாட்டையும் செல்வநாயகம் வெளியேறி புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியே செல்வநாயகம் திரட்சியை முதன்மைப்படுத்தவில்லை என்ற சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். எனினும் இதன் நியாயப்பாடு செல்வநாயகத்தின் பிற்கால தமிழரசுக்கட்சியின் அரசியல் செயற்பாடு மற்றும் தமிழ்த்தேசிய இருப்புக்கான அரசியல் அணுகுமுறைகளில் வேறுபடுகின்றது. தமிழரசுக்கட்சிக்குள் தேர்தல் எழும் சூழல்களை தவிர்த்த போதிலும், 1972ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்ட போதிலும் தமிழ்த்தேசியத்தின் இருப்பிற்கு கூட்டுப்பலம் தேவை என்பதையே செல்வநாயகம் உணர்ந்திருந்தார்.  

அனுபவத்தின் முதிர்ச்சி அணுகுமுறைகளையும் தீர்மானிக்கின்றது. செல்வநாயகத்தின் அனுபவ முதிர்ச்சி 1949இல் தமிழரசுக்கட்சி உருவாக்கத்தின் பின்னர் கொள்கையளவிலும் செயற்பாட்டிலும் நிறைய மாறுதல்களை வெளிப்படுத்தியிருந்தது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஜனநாகவாதியாக செயற்பட்ட போதிலும், கட்சிக்குள் பிளவு ஏற்படாக்கூடாதெனும் அடிப்படையில் கட்சி நிர்வாகத்தெரிவில் தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் ஜனநாயக பொறிமுறைக்குள்ளேயே தமிழ்த்தேசிய அரசியலை நகர்த்தியிருந்தார். குறிப்பாக, 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டிய செல்வநாயகம் தனது பாராளுமன்ற உறுப்புரிமைய இராஜினாமா செய்திருந்தார். 1975ஆம் ஆண்டு இடைத்தேர்தலை 1972ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு எதிரான தமிழ் மக்கள் ஆணையாக எதிர்கொண்டு வெற்றி பெற்றிருந்தார். 1975ஆம் ஆண்டு இடைத்தேர்தல் வெற்றி வெற்றி தொடர்பில் அறிக்கை வெளியிட்ட செல்வநாயகம், '1972ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட புதிய அரசியல் சட்டம் அவர்களால் முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்பதை ஆட்சியாளர்களுக்கும், இந்நாட்டு மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்காட்டுவதற்காகவே இந்த இடைத்தேர்தல் என்னால் உருவாக்கப்பட்டதென்பதை உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டியதில்லை. புதிய அரசியல் சட்டத்தை நிராகரித்து நீங்கள் அளித்துள்ள மிகப்பெரும்பான்மையான தீர்ப்பின் மூலம், நான் எடுத்த நிலையும் எனது மக்கள் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மிகவும் சரியானது என்பதை உறுதிப்படுத்திவிட்டீர்கள்' எனத்தெரிவித்திருந்தார். இது செல்வநாயகத்தின் ஜனநாயக அரசியல் ஈடுபாட்டையே உறுதி செய்கின்றது. தமிழரசுக் கட்சிக்குள் தொடர்ச்சியாக தலைமைத்துவ மாற்றங்களை ஏற்படுத்தி வந்த போதிலும், தேர்தல் ஒன்றுக்குள் செல்லக்கூடாது என்பதில் செல்வநாயகம் விழிப்பாக இருந்தார். கட்சிக்குள் அணிகள் உருவாக்கம் கட்சியின் கூட்டுப்பலத்தை சிதைக்க கூடியது என்ற அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார். 1973ஆம் ஆண்டு அன்றைய வட்டுக்கோட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராஜதுரை ஆகியோர் கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரையொருவர் போட்டியிட்ட நிலையில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருந்தது. இந்த மோதல் கட்சியில் விரிசல் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்பட்டது. செல்வா தலையிட்டு இராஜதுரையை போட்டியில் இருந்து விலகும்படி வற்புறுத்தினார். பிளவுபடுத்தும் தேர்தலைத் தவிர்ப்பதும், ஒருமித்த உடன்படிக்கைக்கு வருவதும் ஜனநாயக தர்மம் எனும் அணுகுமுறையை செல்வா பின்பற்றினார். 1949இல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் ஏற்பட்ட அணி பிளவு தமிழரசுக்கட்சிக்குள் ஏற்படக்கூடாது என்பதிலும், கூட்டுப்பலமே தமிழரசுக்கட்சி தென்னிலங்கை அரசாங்கங்களோடு பேரம் பேசுவதற்கு வலுவானது என்பதிலும் செல்வநாயகம் உறுதியாக இருந்தார்.

இரண்டாவது, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற முதுமொழிக்கேற்பவே தமிழ்த்தேசியத்தின் திரட்சியை உறுதி செய்ய 1972ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கத்திற்கு செல்வநாயகம் உறுதி பூண்டு செயற்பட்டார். செல்வநாயகம் முதன்முதலில் நாற்பதுகளில் அரசியலில் வெளிப்படையான ஆர்வத்தை வெளிப்படுத்தினார். தமிழ் காங்கிரஸின் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார். மேலும் 1946இல் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் துணைத் தலைவராகக் கருதப்பட்டார். கொள்கை வேறுபாடுகளால் காங்கிரஸிலிருந்து வெளியேறிய பின்னர் செல்வநாயகம்-பொன்னம்பலம் தமிழ் அரசியலில் பிரதான எதிரிகளாக செயற்பட்டனர். 1949இல் தமிழரசுக்கட்சியின் அங்குரார்ப்பண கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்த காங்கிரஸ் கட்சியினால் ஏற்படுத்தப்பட்ட இடையூறல்களை தொடர்ந்தே கொழும்புக்கு மாற்றப்பட்டது. பல செயற்பாடுகளில் இரு தரப்பின் போட்டியும் முரணாக வெளிப்படுத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக தமிழர் தாயகத்தில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படுவது தொடர்பான அரசாங்க தீர்மானத்திற்கு செல்வநாயகம் கிழக்கை பரிந்துரைக்கையில், பொன்னம்பலம் முரணாக யாழ்ப்பாணத்தை பரிந்துரைத்திருந்தார். இத்தகைய எதிர்ப்பு அரசியலை வெளிப்படுத்திய போதிலும், தமிழ் அரசியல் தரப்பு கூட்டு பலத்தை பெற வேண்டியதை உணர்ந்த சந்தர்ப்பத்தில், 1972இல் ஜி.ஜி.பொன்னம்பலம் வீடு சென்று செல்வநாயகம் கூட்டணிக்கு அழைத்திருந்தார். செல்வநாயகம் 1949இல் பொன்னம்பலத்தோடு கொள்கை முரண்பாட்டில் பிளவுபட்டாலும், தனது சகல அணுகுமுறை முயற்சியும் தென்னிலங்கை அரசாங்கத்தால் பலவீனப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் கூட்டுப்பலமே தமிழ்த் தேசத்திற்கு அவசியமானது என்ற முடிவை வெளிப்படுத்தியிருந்தார். 

மூன்றாவது, அனுபவ முதிர்ச்சியில் தமிழ்த்தேசியத்தின் தேவை உணர்ந்து கொள்கையளவில் மாற்றங்களை உள்வாங்குவதற்கு செல்வநாயகம் தயக்கம் காட்டியதில்லை. சுதந்திரத்திற்குப் பிந்தைய காலப்பகுதியில் இலங்கைத் தமிழ் அரசியலின் தொனியிலும் நடத்தையிலும் தீவிரமான மாற்றத்தை செல்வநாயகத்தின் அரசியல் அணுகுமுறை முன்வைத்தது. ஜி.ஜி.பொன்னம்பலத்தால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட போது செல்வநாயகம் 50:50 என்ற கொள்கையுடன் நுழைந்தார். சோல்பரி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை வழங்கிய ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான குழுவில் செல்வநாயகமும் அங்கம் வகித்தார். 1949இல் தமிழரசுக்கட்சியினை ஸ்தாபித்து, தமிழ்த் தேசியத்தை மொழிவழியில் வகுத்து, அதை தெளிவாக வரையறுக்கப்பட்ட பிரதேசமாக மாற்றினார். அதன் மூலம் ஒரு பிராந்திய பரிமாணத்தை வழங்கினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகங்களாக அடையாளப்படுத்தி, இந்த மாகாணங்கள் ஒரு தன்னாட்சி தமிழ் மாநிலமாக அமைக்கப்படும். இந்த மாநிலம் எஞ்சிய சிங்கள மாநிலத்துடன் ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டிற்குள் வந்து இலங்கை ஒன்றியத்திற்குள் இருக்குமென சமஷ்டி கோட்பாட்டை தமிழ் அரசியலில் முன்னிறுத்தினார். ஏறத்தாழ 23 வருடங்கள் சமஷ்டிக்கொள்கையை முன்னிறுத்தி பல வழிகளில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தார். சமாந்தரமாக 56ஆம் ஆண்டிலிருந்து எழுச்சிபெற்ற தனிநாட்டு கோரிக்கையை நிராகரித்திருந்தார். 1970ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் பொதுத்தேர்தல் அறிக்கையிலேயே தனிநாட்டு கோரிக்கையை முன்வைப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களை முழுமையாக நிராகரித்த நிலையில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ முடியாது எனும் யதார்த்தத்தை புரிந்து கொண்டு கொள்கையளவில் மாற்றத்தை ஏற்றுக்கொள்கின்றார். 1975ஆம் ஆண்டு இடைத்தேர்தல் வெற்றியின் பின்னரான அறிக்கையில், 'தமிழ்த்தேசிய இனம், தனக்குள்ள சுயாதிபத்திய அரசுரிமையை பிரயோகித்து தனது சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே இந்த தேர்தல் மூலம் மக்கள் எனக்கு இட்ட கட்டளையாகும். இதை எனது மக்களுக்கும் நாட்டுக்கும் அறியத்தருகிறேன். துமிழர் கூட்டணி இந்தக்கட்டளையை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடும் என்று உறுதி கூறுகிறேன்' என செல்வநாயகம் தெரிவித்திருந்தார். இறுதிக்காலத்தில் மக்கள் ஆனையை உள்வாங்கி சுதந்திர நாட்டுக் கோரிக்கையையே தனது கொள்கையாக வெளிப்படுத்தியிருந்தார். 

நான்காவது, தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் செல்வநாயகம் தென்னிலங்கை அரசாங்கங்கங்களிடமிருந்து தமிழர்களின் உரிமையை பெற்றுக்கொள்வதற்கு சகல வழிமுறைகளையும் பயன்படுத்தி தோற்றுப்போன நிலையிலேயே தனிநாட்டு கோரிக்கையை மக்கள் ஆணையாய் முன்னிறுத்தியதுடன் கடவுளிடம் பாரப்படுத்தினார். செல்வநாயகம் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களை கையாளும் போது அஹிம்சை போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தை என்ற உத்திகளை கையாண்டிருந்தார். 1949 முதல் 1972 வரை செல்வநாயகம் சமஷ்டிக் கொள்கையை முன்னிறுத்திய போதிலும் அதனை படிமுறையாய் அடைந்து கொள்வதற்கு உச்சபட்ட விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராக இருந்தார். உதாரணமாக, முறையான கூட்டாட்சி அமைப்பிற்கு பதிலாக பிராந்திய சபைகள் மற்றும் மாவட்ட சபைகளுக்கு ஏற்றதாக இருந்தது. நிலையான அலுவல் மொழி அந்தஸ்துக்குப் பதிலாக தமிழ் மொழியைப் பயன்படுத்துவது தொடர்பான சிறப்பு விதிகளுக்குத் தீர்வு காண தயாராக இருந்தார். இந்த பின்னணியிலேயே 1957ஆம் ஆண்டு பிரதமர் பண்டாரநாயக்காவுடன் பண்டா-செல்வா ஒப்பந்தமும், 1965ஆம் ஆண்டு பிரமதர் டட்லி சேனநாயக்காவுடன் டட்லி-செல்வா ஒப்பந்தத்தையும் செல்வநாயகம் மேற்கொண்டிருந்தார். எனினும், இரண்டு பிரதமர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் சிங்கள தீவிரவாத எழுச்சியால் செயலிழக்கப்பட்டன. செல்வநாயகம் போன்ற தலைவர்கள் மூலம் அகிம்சை வடிவில் தமிழர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டிருந்தால் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆயுத வன்முறை தலைதூக்கியிருக்க வேண்டியதில்லை என பல தென்னிலங்கை முற்போக்கு புத்திஜீவிகள் சுட்டிகாட்டியுள்ளனர்.  செல்வநாயகம் தமிழர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தவறிய போதிலும் தமிழ் மக்கள் அதனை அவரது தவறாகக் கருதவில்லை. செல்வநாயகத்தை காட்டிக்கொடுத்த சிங்களத் தலைவர்களின் பிழையாகவே தமிழ் மக்கள் உணர்ந்தனர். இதற்கு பிரதான காரணமாக அமைவது, இத்தகைய அனுபவங்களின் பின்னர் தமிழ் மக்களின் ஆணையை முன்னிறுத்தி செல்வநாயகம் தனது கொள்கையளவில் மாற்றத்தை உள்வாங்க தயாராக இருந்தமையாகும்.

ஐந்தாவது, செல்வநாயகம் மக்களை தமிழ் மக்களை அரசியல்மயப்படுத்தும் வகையிலான அரசியல் போராட்ட அணுகுமுறையை பின்பற்றியிருந்தார். விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தில் அரசியல் தெளிவு அவசியமானதாகும். அரசியல் என்பது மக்களை அடிப்படையாகக் கொண்டதாகும். மக்கள் அரசியலிலிருந்து ஒதுங்குகையில் அவர்களது தேவைகள், நலன்கள் அரசியலில் பிரதிபலிக்கப்போவதில்லை. செல்வநாயகம் மற்றும் ஸ்தாபக தமிழரசுக்கட்சி தமிழ் மக்களின் எண்ணங்களை நேரடியாக அரசியல் அரங்கிற்கு கொண்டுவரும் வகையிலே மக்களை அரசியல்மயப்படுத்துவதினை முதன்மையாக கொண்டு செயற்பட்டனர். செல்வநாயகத்தின் கீழ் இருந்த தமிழரசுக்கட்சி அரசியல் எதிர்ப்பின் புதிய கலாச்சாரத்தை ஆரம்பித்தது. கண்டன ஊர்வலங்கள், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால்கள், புறக்கணிப்புகள், கடிதம் எழுதும் பிரச்சாரங்கள், நிர்வாக விதிமுறைகளை பின்பற்றாமை, தார் துலக்குதல் பிரச்சாரங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் சத்தியாகிரகங்கள் போன்ற பிற அகிம்சை நடவடிக்கைகள் அரசியல் வெகுஜன கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள் மற்றும் மாநாடுகளுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இது காந்திய தத்துவத்தை முன்மாதிரியாகக் கொண்ட வன்முறையற்ற போராட்டத்தை வெளிப்படுத்தியது. செல்வநாயகமும் ஏனைய தமிழரசுக்கட்சி தலைவர்களும் முன்னிலையில் செயற்படுவார்கள். இது மக்களிடையே செல்வநாயகம் மற்றும் தமிழரசுக்கட்சி தலைவர்கள் மீது நம்பிக்கையை வளர்த்தது. 1956ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் அரச கரும மொழிச் சட்டத்தின் மீது விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது காலி முகத்திடலில் சத்தியாகிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகளால் ஆதரிக்கப்படும் குண்டர்கள் சத்தியாக்கிரகிகள் மீது இரக்கமின்றி தாக்கினர். செல்வநாயகம் அசையாமல் அமர்ந்திருந்த போது அவரது மகன் தந்தையின் முன்னால் தாக்கப்பட்டார். இந்த செயற்பாடுகள் அனைத்தும் தமிழ் மக்களை மிகவும் அரசியல்மயப்படுத்தப்பட்ட சமூகமாக மாற்றியது. தலைவர்களின் பின்னால் மக்களையும் நம்பிக்கையுடன் பயணிக்க தூண்டியது. இவ்வாறான செயல்களுமே சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்ட போது செல்வநாயகத்துக்கு ஆதரவாக மக்களை இருக்க வைத்தது.

எனவே, செல்வநாயகத்தின் அணுகுமுறையை பொருள்கோட முற்படும் தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் அதனை தமது நலன்களுக்குள் சுருக்காது பொதுமையான பார்வையில் பார்க்க வேண்டும். அவ்வாறு பார்ப்பின், தமிழ் சிவில் சமுகத்தால் முன்னெடுக்கப்படும் பொதுக்கட்டமைப்பு மற்றும் பொது வேட்பாளருக்கு தமிழரசு கட்சியே முதன்மையான ஆதரவை கொடுத்து தமிழ் மக்களின் கூட்டுப்பலத்தை வெளிப்படுத்த செயற்படுத்த வேண்டும். கடந்த காலங்களிலிருந்து வரலாற்றை கற்பதனூடாகவே எதிர்காலத்தை திறம்பட வழிநடத்த முடியும். செல்வநாயகத்தின் நினைவு தினங்களில் மாத்திரம் அவரது கடந்த கால அரசியல் அனுபவங்களை உரையாடுவதை விடுத்து, அதனை உணர்ந்து தமிழ் அரசியல்வாதிகள் அரசியலை நகர்த்த வேண்டும். இதனூடாக தமிழ்த்தரப்பு பின்னோக்கிய அரசியலுக்கு செல்ல வேண்டிய தேவைகள் காணப்படாது. 1949-1972களில் செல்வநாயகம் பின்பற்றிய அரசியலையே 2009-2024களில் தமிழரசுக்கட்சி பின்பற்றி வருகின்றது. அதன் தோல்வியிலிருந்தே 1972இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ்அனுபவங்களை கொண்டே 2024ஆம் ஆண்டுக்கு உகந்த முதிர்ச்சியான அரசியல் மாற்றத்தை தமிழரசுக்கட்சியும் தமிழரசியல் தரப்பும் வெளிப்படுத்துவதே தமிழ்த்தேசியத்தின் இருப்பை பாதுகாக்கக்கூடியதாகும்.

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-