மேற்குலக பல்கலைக்கழக போராட்டங்கள் மேற்குலக அரசுகளின் வெளியுறவு கொள்கையை சீர்செய்யுமா? -ஐ.வி.மகாசேனன்-

ஒரு சில போராட்டங்கள் மேற்குலக அரசியலை ஸ்தம்பிக்க செய்யும் ஆற்றலை காலத்துக்கு காலம் வெளிப்படுத்தி வருகின்றது. இறுதியாக அமெரிக்காவில் இடம்பெற்ற ஜார்ஜ் பிலாய்ட் எனும் கறுப்பின இளைஞரின் படுகொலைக்கு எதிரான போராட்டம் Black Lives Matter எனும் பெயரில் மேற்குலக அரசியல் தரப்பினரை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்ரின் ரூட்டோ தரையில் மண்டியிட்டார்கள். தற்போது பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தினூடாக மேற்குலக நாடுகளின் தலைவர்கள் மீளவும் தமது அரசியல் கொள்கைளை மீள்சரிசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். காசா நிலப்பரப்பில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலால் நிகழ்த்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டங்கள் மேற்குலக நாடுகள் முழுமையாக பரவியுள்ளது. சில பல்கலைக்கழகங்களில் பொலிஸாரை பிரயோகித்து போராட்டங்களை முடக்க முற்பட்டு அது வன்முறையாக மாறியுள்ள செய்திகளையும் சர்வதேச அரசியல் பரப்பில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை மேற்குலக அரசியலின் வெளியுறவுக்கொள்கையில் தாக்கம் செலுத்தியுள்ள பல்கலைக்கழக மாணவர் போராட்டங்களின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனியக் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது முன்னோடியில்லாத வகையில் அக்டோபர்-7 அன்று நடத்திய தாக்குதலால் காசா பகுதியில் போர் தூண்டப்பட்டது. இதன் விளைவாக 1,170க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மறுபுறம் ஹமாஸை அழிப்பதாக உறுதியளித்து, இஸ்ரேல் பழிவாங்கும் தாக்குதலைத் தொடங்கியது. இது காசாவில் குறைந்தது 34,789 பேரைக் கொன்றுள்ளதாகவும், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஹமாஸ் நடத்தும் பிராந்தியத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் காசா பகுதியில் இனப்படுகொலையை நிகழ்த்துவதாக தென்னாபிரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. மேலும் கொலம்பியா, பொலிவியா மற்றும் பெலிஸ் ஆகிய இலத்தின் அமெரிக்க நாடுகள் இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் நிகழ்த்தும் இனப்படுகொலை தாக்குதல்களை கண்டித்து இராஜதந்திர உறவை துண்டித்துள்ளனர். எனினும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ச்சியாக இராணுவ மற்றும் ஆயுத உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். பெப்ரவரி-08அன்று அமெரிக்க செனட் 95 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவிப் பொதிக்கு வாக்களிக்கத்திருந்தது. இவ்உதவி தொகையில், இஸ்ரேலுக்கு 14 பில்லியன் டொலர் உதவி உட்பட உக்ரைன் மற்றும் இந்தோ-பசிபிக் நட்பு நாடுகளுக்கான உதவித்தொகைகளும் உள்ளடங்கியிருந்தது. இந்நிலையிலேயே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மக்களிடையே தமது அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கை தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலின் காரணமாக, இஸ்ரேலிய நிறுவனங்களுடனான கூட்டுறவை நிறுத்தக் கோரி, அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஏப்ரல் நடுப்பகுதியில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அமெரிக்க பல்கலைக்கழக ஆர்ப்பாட்டங்களால் ஈர்க்கப்பட்ட பல்வேறு ஐரோப்பிய பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக அரங்குகள் மற்றும் வசதிகளை ஆக்கிரமித்து வருகின்றனர். ஆரம்பத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் காசா ஒற்றுமை முகாம் எனத் தொடங்கியது. அங்கு மாணவர்கள் தங்கள் நிறுவனத்தை இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து விலக்கி வைக்க வளாகத்திற்குள் முகாமிட்டனர். பின்னர் இது கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களுக்கும் பரவியது. தற்போது, அமெரிக்காவில் உள்ள 20இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த ஆயுதமேந்திய பொலிசாரை பல்கலைக்கழக நிர்வாகம் வரவழைத்துள்ளது. ஏப்ரல்-18அன்று நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதற்கட்ட கைதுகளில் இருந்து 2,700 க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கல்லூரி வளாகங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் ஈடுபாடு மாணவர் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

மே மாதம் முதல் வாரங்களில் மேற்கு ஐரோப்பா முழுவதும் காசா யுத்தம் தொடர்பாக இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டிக்குமாறு பல்கலைக்கழகங்களைக் கோரி மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மோதல்கள் மற்றும் டஜன் கணக்கான புதிய கைதுகளைத் தூண்டியுள்ளது. நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்திருந்தனர். பாலஸ்தீனத்திற்கான ஆம்ஸ்டர்டாம் மாணவர்களின் அமைப்பின் உறுப்பினரான மாயா, 'கூடார முகாம்கள் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களால் ஈர்க்கப்பட்டதாகவும், அவர்களுடன் அவர்கள் ஒற்றுமையாக நிற்கிறார்கள்' என்றும் தெரிவித்துள்ளார். கிழக்கு ஜேர்மனிய நகரமான லீப்சிக்கில், 50 முதல் 60 பேர் வரையிலான மாணவர்கள் விரிவுரை மண்டபத்தை ஆக்கிரமித்து, 'இனப்படுகொலைக்கு எதிரான பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு' என்று எழுதப்பட்ட பதாகைகளை அசைத்ததாக பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பேர்லினின் இலவச பல்கலைக்கழகத்தில், 80 பேர் வரை வளாகத்தின் முற்றத்தில் ஒரு எதிர்ப்பு முகாமை அமைத்ததை அடுத்து, காவல்துறை ஆர்ப்பாட்டத்தை அகற்றியது. பிரான்ஸில், புகழ்பெற்ற சயின்ஸ் போ பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபத்தில் தங்களைத் தாங்களே முற்றுகையிட்ட சுமார் 20 மாணவர்களைக் கலைக்க இரண்டு முறை காவல்துறை தலையிட்டது. மேலும் சுமார் 13 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், லொசேன், ஜெனிவா மற்றும் சூரிச் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு எதிர்ப்புகள் பரவின. ஆஸ்திரியாவில், டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் வியன்னா பல்கலைக்கழக வளாகத்தில் முகாமிட்டுள்ளனர். 

இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்த பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பை கையாள மேற்குலக நாடுகள் பல வியூகங்களை திட்டமிடுகின்ற போதிலும், அதன் முடிவுகள் எதிர்வினையாகவே அமைகின்றது. சில பல்கலைக்கழக தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மாணவர் எதிர்ப்புகளை கடுமையாக கண்டனம் செய்து, 'யூத எதிர்ப்பு' என்று அழைத்தனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டை நிராகரிக்கிறார்கள். பல யூத ஆர்வலர்கள் மற்றும் சில ஆர்த்தடாக்ஸ் யூதர்களும் பாலஸ்தீன விடுதலையை மையப்படுத்திய போராட்டத்தில் இணைந்துள்ளனர். 'ஹோலோகாஸ்டில் இருந்து தப்பியவர்களின் குழந்தையாக, நாங்கள் அனுபவித்த சிலவற்றை எனது சொந்த மக்கள் செய்வதைப் பார்ப்பது என் மனதைத் தொந்தரவு செய்கிறது' என்று யூத போர் எதிர்ப்பு போராட்டக்காரர் சாம் கோப்ராக் அல் ஜசீராவிடம் ஒரு வளாக கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிலும் ஆங்காகங்கே போருக்கு எதிரான மக்கள் போராட்டம் இடம்பெறுவது தொடர்பில் சர்வதேச செய்திகள் வெளிப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்களிடையே ஆம்பிக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் வியாபித்துள்ளது போன்றே, பல்கலைக்கழக ஆசிரியர்களையும் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. பல துணிச்சலான ஆசிரிய உறுப்பினர்கள் தங்களை நெருப்பு வரிசையில் ஈடுபடுத்தியுள்ளனர். ஏப்ரல்-22 அன்று, நியூயார்க் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பாலஸ்தீன ஒற்றுமை முகாமைச் சுற்றி ஒரு சங்கிலியை உருவாக்கியிருந்தனர். நியூயார்க் காவல் துறை, முகாமை அகற்றுவதற்காக வளாகத்திற்குள் நுழைந்தபோது சட்ட அமலாக்கத்துடன் ஆசிரியர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அவர்கள் தங்கள் மாணவர்களை, முழு ஆயுதம் ஏந்திய கலகக் காவலர்களுக்கு எதிராக வெறுமனே பாதுகாப்பதாக சாட்சிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, பல துறைகளைச் சேர்ந்த நியூயார்க் பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியூயார்க் காவல் துறையின் தலையீட்டைக் கண்டித்து பல்கலைக்கழகத் தலைமைக்கு கடிதங்கள் எழுதினர். நியூயார்க் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் ஆசிரியர்களின் கடிதம் காவல்துறையின் தலையீட்டை 'பல்கலைக்கழகத்தின் மீது ஒரு கறை' என்று அழைத்துள்ளனர். அவ்வாறே மே-1அன்று, விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் முகாமிட்ட போராட்டக்காரர்களுக்கு எதிராக மாநில கால்துறை ஈடுபட்ட போது, ஆசிரியர்கள் முன் வரிசையில் இருந்தனர். இதன்போது பல பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் தாக்குதலால் பேராசிரியர் தாமரியின் கை மற்றும் விலா எலும்புகள் உடைந்தன. ஒரு அறிக்கையில், 'நான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு மருத்துவர் என்னிடம் கூறினார்; என் நுரையீரல் துளைக்கப்பட்டிருக்கலாம், அவர்கள் என்னைத் தவறாகப் பயன்படுத்தியதால் நான் தரையில் இறந்திருக்கலாம்.' எனத்தெரிவித்துள்ளார். மாணவர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கு இடையில் நின்று, இந்த ஆசிரிய உறுப்பினர்கள் கல்வியாளர்களாக நமது பொறுப்புகளை நினைவூட்டியுள்ளனர்.

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள், அமெரிக்காவின் ஆதிக்க கொள்கைக்கு எதிராக வரலாறு தோறும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்துள்ளமையின் ஒரு பகுதியாகவே இஸ்ரேல் எதிர்ப்பும் பாலஸ்தீன ஆதரவும் காணப்படுகின்றது. கடந்த 60 ஆண்டுகளில், வியட்நாம் போர், நிறவெறி தென்னாப்பிரிக்காவுடனான உறவுகளின் கேள்வி மற்றும் ஈராக் போர் உட்பட, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பொதுமக்கள் மீது கட்டாயப்படுத்திய ஒவ்வொரு பெரிய தார்மீகப் பரீட்சையையும் அது கடந்து வந்துள்ளது. கொலம்பியாவில் உள்ள மாணவர்கள், இஸ்ரேலிய அரசாங்கத்துடன் பெரிய ஒப்பந்தம் செய்துள்ள கூகுளிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களில் பட்டியலிட அனுமதிக்கும் Airbnb  நிறுவனத்திலும் தங்கள் பள்ளி பங்குகளை விற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 1980களில் தென்னாப்பிரிக்கா நிறவெறி ஆட்சியின் கீழ் இருந்தபோது அதனுடன் வணிகம் செய்த நிறுவனங்களை எதிர்ப்பாளர்கள் குறிவைத்தபோது மாணவர்கள் தற்போதைய இயக்கம் மற்றும் செயல்பாட்டிற்கு இடையே இணையை வரைந்துள்ளனர். 'நீங்கள் கொலம்பியாவிற்குச் செல்லும்போது, அமெரிக்க எதிர்ப்பு வரலாற்றில் ஒரு கௌரவமான இடத்தைப் பெற்றுள்ள ஒரு நிறுவனத்திற்கு நீங்கள் செல்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்' என்று போர்டாம் பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் ஆப்பிரிக்க மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்க ஆய்வுகள் பேராசிரியர் மார்க் நைசன் கூறினார். இன்றும் கொலம்பியாவில் ஆரம்பிக்கப்பட்ட பாலஸ்தீன ஆதரவு போராட்டமே மேற்குலக அரசுகளின் வெளியுறவுக்கொள்கையில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

எனவே, மேற்குலக பல்கலைக்கழகங்களில் தமது அரசாங்கங்களின் வெளியுறவுக்கொள்கைக்கு எதிராக பாலஸ்தீனத்தை ஆதரித்து மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தின் வளர்ச்சி பல்கலைக்கழகத்தின் முக்கிய செயல்பாடு மற்றும் அதில் நமது மாணவர்களின் பங்கைப் பாதுகாப்பதாக அமைகின்றது. பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தின் வளர்ச்சி நவதாராளவாத பல்கலைக்கழகத்தின் தர்க்கத்திற்கு எதிரான எழுச்சியை நிருபித்துள்ளது. நவதாராளவாத பல்கலைக்கழக சந்தை, அங்கு பட்டம் என்பது மாணவர்களை தொழிலாளர் சந்தையில் நுழையவும், வாழ்வாதாரத்தை ஈட்டவும், உயர்கல்வியைத் தொடரும்போது அவர்கள் செய்த நிதி முதலீட்டை ஈடுசெய்யவும் உதவும் ஒரு பொருளாகவே கட்டமைக்க முற்பட்டுள்ளது. எனினும் அரச பயங்கரவாதத்தை முறித்து எழுச்சி பெறும் பல்கலைக்கழக போராட்டங்கள் பல்கலைக்கழக தார்ப்பரியத்தை பாதுகாக்கக்கூடிய உந்துதலை வழங்கியுள்ளது. அமெரிக்க கல்வியாளர் ராபர்ட் மேனார்ட் ஹட்சின்ஸின் பல்கலைக்கழகத்தின் செயற்பாட்டை விபரிக்கையில், கல்வியின் நோக்கம் உண்மைகள், கோட்பாடுகள் மற்றும் சட்டங்களை கற்பிப்பதோ அல்லது மாணவர்களை சீர்திருத்தம் செய்து மகிழ்விப்பதோ அல்ல.  மாறாக, மாணவர்களுக்கு அவர்களின் மனதை குழப்பமிட, அவர்களின் அடிவானத்தை விரிவுபடுத்த மற்றும் அவர்களின் புத்தியை தூண்ட சிந்திக்க கற்பிப்பதாகும்' எனத்தெரிவித்துள்ளார். சிந்தனையின் தூண்டலே மேற்காசிய நிலப்பரப்பில் நிகழும் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்க ஐரோப்பிய கண்ட மாணவர்களை கொதிப்படைய செய்துள்ளது. மாணவர் புரட்சியின் வழிமுறைகளை ஒவ்வொரு தேசிய இனங்களும் கற்றுக்கொள்வது அவசியமாகிறது.

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-