தமிழ்த்தேசிய அரசியலில் வலுப்பெறும் சிவில் சமூக ஒன்றிணைவு சதிக்கோட்பாடுகளால் புறந்தள்ளப்படுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்த்தேசிய அரசியலில் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவதே கொதிநிலையான விவாதத்தை உருவாக்கியுள்ளது. தேசிய இனமொன்றின் விடுதலைப்போராட்டத்தில் வெளிப்புறத்திலிருந்து அதிகளவு நெருக்கடிகள் வருவது இயல்பானதாகும். எனினும் தமிழ்த் தேசிய இனத்தினை பொறுத்தவரை, தமிழ்த்தேசிய இனத்தின் இராஜதந்திர முயற்சிகள் உள்புறத்திலேயே அதிக நெருக்கடிகளுக்குள்ளேயே பயணிக்க வேண்டி உள்ளது. கடந்த காலங்களில் ஏமாற்றங்களை எதிர்கொண்டவர்களாக புதிய முயற்சிகளை சந்தேகத்துடன் ஆராய்வது ஆரோக்கியமானதாகும். அதுசார்ந்த விவாதங்களும் வினைத்திறனான முன்னேற்றங்களுக்கு வழி ஏற்படுத்தக்கூடியதாகும். எனினும் இங்கு சந்தேகங்கள் சதிக்கோட்பாடுகளை உருவாக்கி, முயற்சிகளுக்கு தடைகளை உருவாக்கக்கூடியதாக அமைவது ஆபத்தானதாகும். தற்போது தமிழ் பொதுவேட்பாளர் என்ற கருத்தியல்சார் நடைமுறையாக்கத்தை சிவில் சமூக குழுக்களே முன்னெடுத்துவருகின்றது. இக்கட்டுரை அரசியல் பரப்பில் சிவில் சமூகத்தின் அரசியல் முக்கியத்துவத்தை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் பரப்பில் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முதல் கருத்தியல் பரப்பில் பொதுவேட்பாளர் எனும் கோட்பாடு நிலைபெற்று வருகின்றது. எனினும் அரசியல் கட்சிகளிடையே 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலிலேயே விவாதத்தை உருவாக்கி உள்ளது. தமிழ்த்தேசிய பரப்பில் அரசியல் கட்சிகள் பிளவுபட்டு உள்ளமையால், தனித்து அரசியல் கட்சிகளுக்குள் பொதுவேட்பாளர் கருத்தாடல் சுருங்குகையில் அதன் செயற்பாட்டு வீச்சு பொதுவேட்பாளர் தத்துவத்தை பிரதிபலிக்கப்போவதில்லை. 1982ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலம் மற்றும் 2019ஆம் ஆண்டு எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ் வேட்பாளர்களாக களமிறங்கிய நிகழ்வை ஒத்ததாகவே அமையக்கூடியதாகும். எனினும் பொதுவேட்பாளர் எனும் பெயர்ப்பலகை பிரச்சாரத்தினூடாக பொதுவேட்பாளர் கருத்தியல்ரீதியாக சிதையக்கூடிய நிலைமைகளே காணப்படும். கடந்த காலங்களிலும் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயர்பலகையை கோட்பாட்டுக்கு முரணாக தமிழ் அரசியல் கட்சிகள் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இத்தகையை நடைமுறை சவால்களை கருத்திற்கொண்டே பொதுவேட்பாளர் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் கருத்தியலாளர்கள் ஒரு தொகுதியினர் இணைந்து பொதுவேட்பாளர் கருத்தியலின் நடைமுறையாக்கத்தை தமக்குள் உள்வாங்கியுள்ளார்கள்.

ஏப்ரல்-30அன்று வவுனியாவில் ஒன்றுகூடிய பொதுவேட்பாளர் கருத்தியலை முன்னிறுத்தி ஒன்றிணைந்திருந்த 30இற்கும் மேற்பட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் கருத்தியலாளர்கள், தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுக்கட்டமைப்பினூடாகவே பொதுவேட்பாளர் கருத்தியலை நகர்த்த தீர்மானித்துள்ளனர். இந்த பின்னணியிலேயே கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்படுப்பதற்கு ஒரு குழுவையும் உருவாக்கி கொண்டனர். இப்பொறிமுறை எவ்வித கட்டமைப்பு வடிவத்தையும் இதுவரை கொண்டிருக்கவில்லை. தனியன்களாய் பொதுவேட்பாளர் கருத்தியலை ஆதரித்து ஒன்றிணைந்துள்ளனர். அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பொதுக்கட்டமைப்புசார் முயற்சியை ஆரம்பித்துள்ளனர். இதுவரை பொதுக்கட்டமைப்புக்குரிய வடிவத்தை பெற்றிருக்கவில்லை. பொதுவேட்பாளர் கருத்தியலை ஆதரித்து ஒன்றிணைந்துள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் கருத்தியலாளர்கள் இணைந்து தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையையே முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொதுக்கருத்தியலுக்குள் ஒன்றிணைகையிலேயே சிவில் சமூக பிரதிநிதிகள், கருத்தியலாளர்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்த பொதுக்கட்டமைப்பு சாத்தியமாகும். இப்பொதுக்கட்டமைப்பே பொதுவேட்பாளர் கருத்தியலையும் முன்னகர்த்தக்கூடியதாகும். தற்போது பொவேட்பாளர் கருத்தியலை ஆதரித்து ஒன்றிணைந்துள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் கருத்தியலாளர்கள் பொதுவேட்பாளர் கருத்தியலின் நடைமுறையாக்கத்திற்கான ஆரம்ப புள்ளியே அன்றி முடிந்த முடிவல்ல. தமிழ் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர் யார்? தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் என்ன? என்பது தொடர்பில் தமிழ் சிவில் சமூகங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைவில் உருவாக்கப்பட உள்ள பொதுக்கட்டமைப்பே தீர்மானிக்க உள்ளது. கடந்த கால அனுபவங்கை வெளிப்பாடாக, தமிழ்த்தேசிய கருத்தியலை பாதுகாக்கும் வகையில் தமிழ்ப்பொதுவேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்ற மையக்கோரிக்கையிலேயே சிவில் சமூகத்தினர் மற்றும் கருத்தியலாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். 

ஆரம்ப நிலையில், எவ்வித முழுமையான கட்டமைப்பு உருவாக்கமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பொதுவேட்பாளர் கருத்தியலை ஆதரித்து ஒன்றிணைந்துள்ள சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் கருத்தியலாளர்கள் மீது வைக்கப்படும் அவதூறுகள் தமிழ்த்தேசிய பயணத்தில் சிவில் சமூக செயற்பாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்க கூடியதாக அமையும். அரசியல் கட்சிகள் சமூகப்பார்வையின்றி கட்சிக்காரர் என்ற உணர்வுடனேயே பொதுப்பிரச்சினைகளை நகர்த்த கூடியது. 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான தமிழ் அரசியல் கட்சிகளின் நகர்வில், தமிழ் மக்களின் பிரச்சினைகளில் உண்மைத்தன்மையில் செயற்படுவதற்கு பதிலாக கட்சி நலன் சார்ந்து கட்சிக்காரர்களை முன்னிறுத்தி செயற்பட்டதன் விளைவாகவே மக்கள் கட்சிகள் மீது நம்பிக்கையை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தென்னிலங்கை கட்சியின் பிரதிநிதிகள் வடக்கு-கிழக்கில் பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளை பெற்றுக்கொண்டமை தமிழ் அரசியல் கட்சிகள் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை இழப்பையே உறுதி செய்கின்றது. இவ்வாறான பின்புலத்தில் மக்களின் தேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்படும் அரசு சாரா பொறிமுறையான சிவில் சமுக செயற்பாடுகளையும் சுயநல அரசியலுக்காக பழிசுமத்தி புறமொதுக்குவது தமிழ்த்தேசிய அரசியல் இருப்பை கேள்விக்குட்படுத்துவதாகவே அமையக்கூடியதாகும். மக்கள் அரசியலில் சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.

சிவில் சமூகக் கருத்து, அரசியல் கோட்பாட்டிலிருந்து பெறப்பட்டது. சமீபத்தில் அரசியலில் வளர்ச்சி பற்றிய கொள்கை உருவாக்கம் மற்றும் பிரச்சாரங்களில் சிவில் சமூகத்தின் ஈடுபாடு முதன்மை பெறுகின்றது. குடும்ப உறவுகள் மற்றும் அரசின் அதிகார தர்க்கங்களால் அல்லது சந்தை நலன்களால் இயக்கப்படாத நோக்கங்களுடன் அரசால் கட்டுப்படுத்தப்படாத வழிகளில் ஒழுங்கமைக்கப்படுவதை விபரிக்கும் கட்டமைப்பாக சிவில் சமூகம் அமைகின்றது. சிவில் சமூக அரங்கில், பொது நலன்களைப் பாதுகாக்க அல்லது சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்காக மக்கள் தானாக முன்வந்து ஒழுங்கமைக்கிறார்கள். இது மக்களாட்சியின் மூன்றாவது சக்தி எனக்குறிப்பிடப்படும். இத்தகைய சிவில் சமூகங்கள் சிறப்பாக இயங்குவதற்கு சுதந்திரமான செயற்பாட்டு வெளி ஒன்று சமூகத்தில் அவசியமானது. இவ்வெளி சுருங்கி அல்லது மூடி உள்ள சூழ்நிலையில் மிகச்சில அமைப்புக்களே மிகுந்த அழுத்தங்களுக்கு மத்தியில் இயங்க முயல்வதை அவதானிக்க முடியும். பொதுநலனை மையப்படுத்தி சுயாதீனமான இயங்க வருவோர் மீது அழுத்தங்களை பிரயோகிக்கையில் அவர்கள் புறமொதுங்குவது இயல்பானதாகவே அமைகின்றது.

சிவில் சமூகத்தின் முக்கியத்துவம் தொடர்பில் அமெரிக்க அரசறிவியலாளர் ராபர்ட் டி.புட்னம், தனது 'டீழறடiபெ யுடழநெ: யுஅநசiஉய'ள னுநஉடiniபெ ளுழஉயைட ஊயிவையட' (1995) என்கிற ஆய்வுக் கட்டுரையில், சிவில் சமூகம் ஜனநாயகத்துக்கு இன்றியமையாதது என்றார். ஏனெனில் அவை கலாச்சார, நம்பிக்கை, மதிப்புகளை உருவாக்குகின்றன. அரசியல் சமூகத்தை ஒன்றிணைக்க உதவுகின்றன. சிவில் சமூகத்தின் கருத்து ஜனநாயகம் பிரதிநிதித்துவத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்கிறார். ஜனநாயகம் தேசியத்துடன் இணைந்த கருத்தியலாகும். அமெரிக்க தேசிய விடுதலைப்போராட்டமே அமெரிக்காவில் ஜனநாயகத்தை தோற்றுவித்ததுடன், பிரெஞ்சுப்புரட்சியில் ஜனநாயக கருத்துக்களான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உள்வாங்கவும் காரணமாகியது. ஜனநாயகத்திற்கான பயணத்தில் தேசியவாதம் ஒரு கட்டமென தமிழ்த்தேசிய அரசியல் பரப்பின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தனது தேசியமும் ஜனநாயகமும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தேசியவாதமானது ஜனநாயகத்தை அடைவதற்கான ஒரு வடிவமும், ஜனநாயகத்தை காவிச்செல்லும் ஒரு வாகனமும் ஆகும். தேசியவாதம் எனும் காலகட்டக்கருவியை கையில் ஏந்தாமல் ஜனநாயகத்தை பிரசவிக்க முடியாதென்கிறார். எனவே ஜனநாயகத்தில் சிவில் சமூகம் இன்றியமையாததாக அமைகின்றதாயின், தேசியவாதத்தை பாதுகாப்பதிலும் சிவில் சமூகம் பிரதான நிலையையே பெறுகின்றது. தேசியத்தை பாதுகாப்பதனூடாகவே சிவில் சமூகம் ஜனநாயக பொறிமுறைகளையும் பாதுகாக்கக்கூடியதாகும். தேசிய இனங்களின் கலாசார, நம்பிக்கை, மதிப்புக்களை அரசியல் அரங்கில் நேர்மையாக ஒருங்குசேர்ப்பதில் சிவில் சமுகத்தின் தேவைப்பாடு பிரதானமாகின்றது. பல தேசிய இனங்களின் விடுதலைப்போராட்டங்களும் சிவில் சமூக செயற்பாடுகளிலேயே பரிணமிக்கப்படுன்றது.

தமிழ் சிவில் சமூகம் கடந்த காலங்களில் வெளிப்புறத்தே நிலவிய ஆட்சியியல் நெருக்கடியால் 2009-2015இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மிகப் பலவீனமானதாகவே இயங்கி வந்தது. ஆயினும் 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்பு விரிவடைந்த சமூக வெளியைப் பயன்படுத்தி பல சிவில் அமைப்புக்கள் செயற்பாட்டு தளத்துக்கு முன்னேறியிருந்தது. இந்த பின்னணியிலேயே தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும் அமைந்திருந்தது. தமிழ்ப்பேரவை ஒரு பொதுக்கட்டமைப்பு கருத்தியலாகவே செயற்பட்டிருந்தது. மாறாக சிவில் சமுக இயங்கு தளத்தை கொண்டிருந்த பெரும்பாலானவை நிதியங்களாக, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாக, கழகங்களாகவே அமைவதையும் தமிழ் மக்களின் சமகால அரசியல் தேவைகள் பற்றிய புரிந்துணர்வு குன்றியவையாகவே காணப்பட்டிருந்தது. இளையோர்கள் பலரும் தன்னார்வமாக சமூக சேவைகளை மையப்படுத்தி பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உருவாக்கி இருந்தனர். தமிழ் மக்கள் நிறுவன உருவாக்கிகளாக வரலாறு தோறும் நிலைபெற்றுள்ளார்கள். எனினும் நிறுவனங்கள் பலதும் தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து விலகியே செயற்பட்டது. அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட ஒருசில சிவில் அமைப்புக்களும் தம்மை பாதுகாத்து கொள்ளும் வகையில் தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து ஒதுங்கி கிளை அரசியல் செயற்பாட்டுகளையே முதன்மைப்படுத்தியிருந்தார்கள்.

அரசற்ற ஒரு தேசமாகிய தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. இதனை முதன்மையாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் அரசியல் தலைமைகளுக்கே உரியதாயினும், ஆட்சியாளர்களின் அசமந்த போக்கினை சுட்டிக்காட்டி உரிமைகளை வலியுறுத்தி அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பெரும் பொறுப்பு ஒன்று தமிழ் சிவில் சமூகத்தின் தலையில் பொறிந்துள்ளது. இப்பின்னணியிலேயே பொதுவேட்பாளர் கருத்தியல் அரசியல் கட்சிகளின் முரண்பாட்டுக்குள் சிக்குவதை தவிர்க்கும் நோக்கில் ஒன்றிணைந்த சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் கருத்தியலாளர்கள் முன்வைந்தார்கள். தமிழ்த்தேசிய அரசியலில் மக்கள் பேரவையின் எழுக தமிழ்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி போன்ற குறிப்பிடத்தக்க ஒருசில எழுச்சிகளை சிவில் சமுகத்தினர் முன்னெடுத்த போதிலும், தமிழ்த்தேசிய அரசியலில் சிவில் சமுகத்தின் செயற்பாடு போதாமை பெரும் குறைபாடாகவே காணப்பட்டது. பொதுவேட்பாளர் கருத்தியலை ஆதரித்துள்ள ஒன்றிணைந்த சிவில் சமூக தரப்பினர் மற்றும் கருத்தியலாளர்கள் கடந்த காலங்களில் சிவில் சமூகத்தின் குறிப்பிடத்தக்க அடையவாக கருதப்படும் எழுக தமிழ்கள் மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிகளில் முன்னிலையில் செயற்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் ஒன்றிணைந்த முயற்சியை வரவேற்று விவாதிப்பதே பொருத்தமானதாகும். சிவில்-சமூகத் துறையானது 'சிவில் விழுமியங்களுக்காக' உழைக்கும் குழுக்களால் மட்டும் ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதும் பொதுவானதாகும். எனவே விவாதம் ஆரோக்கியமானது. மாறாக சந்தேகங்களை சதிக்கோட்பாடுகளாக முன்வைத்து அவர்களை புறமொதுக்க முயல்வது வெளிவரும் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டை மீள உறங்க செய்வதாகவே அமையக்கூடியதாகும்.

எனவே, சிவில் சமுக செயற்பாட்டை ஊக்குவிப்பதனூடாகவே தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ் மக்களின் பொது நலனை முதன்மைப்படுத்தக்கூடியதாக அமையும். சந்தேகங்கள், எதிர்விமர்சனங்கள் ஜனநாயக அரசியலில் ஆரோக்கியமானதே ஆகும். எனினும் சந்தேகங்கள் ஆதாரங்களுடன் அல்லது விவாதத்தினூடாக உறுதிப்படுத்துகையில் தமிழ்த்தேசிய அரசியலும் களைகள் நீக்கப்பட்டு வலுப்பெறும். மாறாக சந்தேகங்கள் எவ்வித ஆதாரங்களுமற்று சதிக்கோட்பாடுகளாக தரந்தாழ்த்தப்படுகையில் பொதுநலனுக்கான முன்வருவோரை புறமொதுக்குவதாகவே அமையக்கூடியதாகும். சிவில் சமூக அமைப்புகள் தமிழ்த்தேசிய அரசியலிற்கு தவிர்க்க முடியாத கூறாகும். சமூகத்தின் குரலற்ற பிரிவினருக்காகக் குரலாக சிவில் சமூகம் அமைகின்றது. சிவில் அமைப்புகள் பொதுக் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும்போது, அரசியல் கட்சிகளையும் பொறுப்பேற்க வைக்க முடியும். ஆரோக்கியமான அரசியல் சமூகமயமாக்கலுக்குச் சிவில் சமூகங்கள் உதவுகின்றன. சமூக நீதியை ஊக்குவிக்கின்றன. தமிழ்த்தேசிய அரசியலில் சிவில் சமூகத்தின் பங்கின் போதாமை தொடர்பில் விமர்சனங்கள் காணப்படும் சமதளத்தில், தன்னார்வமாக தமிழ்த்தேசிய அரசியலில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்த பொதுமுயற்சியை தரந்தாழ்ந்த சதிக்கோட்பாடுகளால் முளையிலேயே அழிக்க முயல்வது தமிழ்த்தேசியத்துக்கு ஆபத்தான அரசியல் செயற்பாடாகும்.

Comments

Popular posts from this blog

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை குற்றச்சாட்டு தோல்விகளும் இஸ்ரேல் மீதான தென்னாபிரிக்காவின் இனப்படுகொலை குற்றச்சாட்டு நகர்வும்! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி தமிழ் மக்களின் ஆட்சியுரிமையை கோருகிறது! -ஐ.வி.மகாசேனன்-