தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒஸ்லோ நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது? -ஐ.வி.மகாசேனன்-
ஜனாதிபதி தேர்தல், ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தகைமையை நிரூபிப்பதே இலங்கை அரசியலின் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. தமிழ்ப்பரப்பில் தமிழ்ப்பொதுவேட்பாளர்கள் கடந்த காலங்களிலிருந்து முன்னேற்றகரமான விவாதத்தை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் உருவாக்கியுள்ள போதிலும், அரசியல் கட்சிகளின் குழப்பமான கருத்துக்கள் தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பில் தவறான பார்வையை ஏற்படுத்த முனைவதாக அமைகின்றது. குறிப்பாக அண்மையில் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் தெரிவித்ததாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடர்ச்சியாக தமிழ்ப் பொதுவேட்பாளரை நிராகரிக்கும் தொனியில் கருத்துரைத்துரைத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் நேரடியாக தெரிவிக்காத நிலையில், அத்தகைய கருத்துக்களை அவர் தெரிவித்தாரா என்பதிலேயே பொதுவெளியில் பலமான சந்தேகங்கள் காணப்படுகின்றது. எனினும் இக்கட்டுரை சம்பந்தன் தெரிவித்திருந்தாரா? இல்லையா? ஏன்ற வாதத்துக்கு அப்பால், சம்பந்தன் தெரிவித்துள்ளதாக சுமந்திரன் ஊடகப்பரப்பில் வெளியிட்டுள்ள, 'தமிழ்ப் பொதுவேட்பாளரினூடாக ஒஸ்லோ இணக்கப்பாட்டை சிதைக்க இடைமளியாதீர்' எனும் கருத்தின் உண்மைத்தன்மையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில் (19.05.2024) தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பில் ஆராய நிகழ்ச்சி நிரலிட்ட நிலையில், கடந்த வார இறுதியில் (16.05.2024) தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடமும் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலை தமிழரசு ஆதரிக்கக்கூடாது என்ற கருத்தை முன்வைத்துள்ளாரென எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். மேலும், 'உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு-கிழக்குக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன் கூடிய தீர்வு என்பதுதான் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கிக் கொண்ட கடைசி விடயம். அதற்கு பாதிப்பு - குந்தகம் ஏற்படுத்தும் விதத்திலான முடிவு எதையும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விஷப்பரீட்சை ஊடாக செய்வதற்குத் தமிழரசுக் கட்சியினர் இணங்கி விட - இறங்கி விடக் கூடாது' என தெரிவித்திருந்தார். இங்கு சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசு சேர்ந்து இணங்கிக்கொண்டதாக 2002-2003 காலப்பகுதியில் நோர்வே மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற ஒஸ்லோ பேச்சுவார்த்தையையே சம்பந்தன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலத்துக்கு பின்னர் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களிடையே தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய உரையாடலும், வரலாற்றை திரும்பி பார்க்கும் இயல்பையும் அவதானிப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் தமிழ் பொதுவேட்பாளர் எனும் கருத்தியல் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதாகவும் மற்றும் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை, இணைந்த வடக்கு-கிழக்கு மற்றும் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வுக்கு சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள விடயங்களை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, ஒஸ்லோ இணக்கப்பட்டின் உண்மையான அர்த்தத்தை விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இராஜதந்திர பொறிமுறையில் வார்த்தைகளுக்கு கணதியான நிலை காணப்படுகின்றது. பேச்சுச் சட்டக் கோட்பாடு, வார்த்தைகள் செயல்களுக்கு தீப்பொறியைக் கொடுக்கும் திறனைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், பல அறிக்கைகள் தங்களுக்குள் செயல்களாகும் என்பதை நிரூபிக்கிறது. ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் இணக்கம் எவ்வித பிரகடனமாகவும் சர்வதேச மத்தியஸ்தத்துடன், இருதரப்பு ஒப்பந்தத்துடன் வெளியிடப்பட்டிருக்கவில்லை. இருதரப்பும் ஒரு பொதுவான அறிவிப்பை ஏற்றுக்கொண்டதாக நோர்வே அரசாங்கமே டிசம்பர்-05, 2002அன்று ஒரு ஆவணத்தை வெளியிட்டிருந்தனர். இவ் ஆவணம் ஒரு நிலைப்பாட்டு ஆவணமாகவே (oslo communique) பெயரிடப்பட்டுள்ளது. அவ்ஆவணத்தில், 'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் முன்மொழிவுக்குப் பதிலளித்த கட்சிகள், தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்களில் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு தீர்வை ஐக்கிய இலங்கைக்குள் ஒரு கூட்டாட்சி கட்டமைப்பின் அடிப்படையில் ஆராய ஒப்புக்கொண்டன. அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை கட்சிகள் ஒப்புக்கொண்டன.' (Responding to a proposal by the leadership of the LTTE, the parties agreed to explore a solution founded on the principle of internal self-determination in areas of historical habitation of the Tamil-speaking peoples, based on a federal structure within a united Sri Lanka. The parties acknowledged that the solution has to be acceptable to all communities.) என்றவாறே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழர்களின் அபிலாசைகளுக்கு இணக்கத்தை வெளிப்படுத்துவதனூடாக முற்போக்கான அரசியலை வெளிப்படுத்தியிருந்த போதிலும், இராஜதந்திர சொல்லாடல்கள் மூலம் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே உணர்த்தியிருக்கிறார்கள். குறிப்பாக தமிழர்களின் அபிலாசைகளை 'ஆராய்வதற்கே' (Explore) ஒப்புக்கொள்ளப்பட்டது. முடிந்த முடிவாக தீர்வாக இணக்கம் காணப்படவில்லை என்பதில் தெளிவடைதல் வேண்டும். அதுமட்டுமன்றி முடிவில் 'அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும்' என்பதில் அரசாங்க இணக்கமும் மக்கள் ஆணையூடாகவே உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அரசாங்கம் நழுவல் போக்கிலேயே ஒப்புக்கொண்டுள்ளது. அரசாங்கம் இராஜதந்திர சொல்லாடல்களூடாக கையாண்ட ஒஸ்லோ பேச்சுவார்த்தை நகர்வை, இன்று தமிழரசுக்கட்சியினர் தமது அரசியல் நலனுக்காக அரசியல் பிரச்சார மொழிகளில் நுணுக்கமான அர்த்தங்களை தவிர்த்து கையாள முற்பட்டுள்ளனர். இது தமிழரசுக்கட்சியின் கீழ்த்தரமான அரசியல் வெளிப்பாடாகவே அவதானிக்கப்படுகின்றது.
இரண்டாவது, தமிழரசுக்கட்சியினரே கடந்த காலங்களில் ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் உள்ளடக்கங்களை நிராகரித்தே அரசியலை முன்னெடுத்துள்ளனர். 2009க்கு பின்னரான இலங்கை அரசாங்கத்துடன் பலதரப்பு பேச்சுவார்த்தைகளை 2024 வரை தமிழரசுக்கட்சியினர் முன்னடுத்து வருகின்றனர். 2010-2015 காலப்பகுதியில் மகிந்த ராஜபக்ஷாவின் 13பிளஸ்க்கு இணங்கி தமிழரசியல் தரப்பு பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தனர். 2015-2019 காலப்பகுதிகளில் ரணில்-மைத்திரி அரசாங்கத்தில் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பை வடிவமைப்பதில் முதன்மையான ஆதரவை வழங்கியிருந்தார்கள். இன்று வரை ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு முயற்சிகளுக்கு உரிமை கோருபவர்களாகவே தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் காணப்படுகின்றார்கள். 2022 ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை தமிழரசுக்கட்சி முன்னெடுத்து வருகின்றன. ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் உள்ளடக்கப்பட்ட தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை, இணைந்த வடக்கு-கிழக்கு மற்றும் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு போன்ற விடயங்களை முற்றாக நிராகரித்து இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களின் இறைமைகளை புகுத்தும் செயற்பாடுகளையே தமிழரசுக்கட்சி கடந்த ஒரு தசாப்தமாக மேற்கொண்டு வருகின்றது. சம்பந்தன் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படும் ஒஸ்லோ இணக்கம் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசும் சேர்ந்து இணங்கி கொண்ட கடைசி விடயமெனில், அதற்கு பாதிப்பு – குந்தகம் ஏற்படுத்தும் செயலாகவே பௌத்தத்தை அரச மதமாக கொண்டு 2015ஆம் ஆண்டு முன்னகர்த்தப்பட்ட ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைபுக்கு தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணக்கம் ஆகும். 2015ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளின் போது அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, 'புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் விடயத்தில் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளன' எனத்தெரிவித்திருந்தார். அதுமட்டுமன்றி ஒருமித்த அரசு, பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பதை இரா. சம்பந்தன் ஏற்றுக்கொண்டமையை வரவேற்ற ஆளுந்தரப்பு அமைச்சர்கள், 'பௌத்தத்தை முதன்மையாக ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சியையும் ஏற்றுக்கொண்ட ஒரு தமிழ் தலைவர் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து வரமாட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள்.' என்றவாறு கருத்துரைத்துள்ளனர். அச்சந்தர்ப்பத்திலேயே இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவருக்குரிய வாசஸ்தலத்தை பெற்று, இன்று அதனை அவருக்கரியதாகவே பெற்றுள்ளார். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை விலைபேசியே கடந்த ஒரு தசாப்தகாலமாக தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தமது நலன்களை ஈடேற்றி கொண்டுள்ளார்கள். மாற்றம் வரவேற்கத்தக்கது. இரா. சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சியினர் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாக்க வேண்டும் எனும் கரிசணை ஆரோக்கியமானது. எனினும் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை முன்னிறுத்தி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வெளிப்படுத்தக்கூடிய பொதுவேட்பாளர் கருத்தியலை நிராகரிப்பது, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை பேசி மீளவும் தமது தனிப்பட்ட நலன்களை பாதுகாக்க அரசியல் செய்கின்றார்களா எனும் சந்தேகத்தையே உருவாக்குகிறது.
மூன்று, தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் ஒஸ்லோ உள்ளடக்கத்தினை தமிழ் மக்கள் சார்பில் பலப்படுத்தக்கூடியதாகும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வெளிப்படுத்துவதற்கான கருவியாகவே காணப்படுகின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் தமிழ் மக்களின் தேசியம், இறையாண்மை என்பவற்றினடிப்படையில் சுயநிர்ணய உரிமையை பிரதிபலிப்பதாகவும் மக்கள் ஆணையூடாக அதனை வெளிப்படுத்தும் பொறிமுறையாகவே தமிழ்ப் பொதுவேட்பாளர் காணப்படுகின்றது. ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணத்தில், 'இலங்கை அரசாங்கம் ஆராய்வதற்கு இணக்கம் காணப்பட்ட தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை, இணைந்த வடக்கு-கிழக்கு மற்றும் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான தீர்வு அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் காணப்பட வேண்டும்' என்றவாறே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்வதென்பது மக்கள் ஆணையூடாகவே வெளிப்படுத்தக்கூடியது. எனினும் இதுவரை இலங்கை அரசாங்கங்கள் அத்தகையதொரு மக்கள் ஆணைக்கு செல்லத்தயாரில்லை. அத்துடன், சர்வதேச மற்றும் இலங்கை அரசின் சூழ்ச்சியால் தமிழர்களின் ஏகபிரதிநிதியாக செயற்பட்டிருந்த விடுதலைப்புலிகள் ஒஸ்லோ பேச்சுவார்த்தையிலிருந்து இடைவிலகியமையால் ஒஸ்லோ நிலைப்பாட்டு ஆவணம் தீர்வுப்பொதிக்குரிய வடிவத்தையும் பெறவில்லை. சமகால ஜனாதிபதி தேர்தலில் முதன்மைபெறும் தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல்ரீதியாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வெளிப்படுத்தும் கருவியாகவே காணப்படுகின்றது. மேலும், கருநிலையில் காணப்படும் தமிழ்ப்பொதுவேட்பாளர் எனும் கருத்தியலை நடைமுறைப்படுத்த முயலும் சிவில் சமுக கூட்டுக்களின் ஆரம்ப அறிக்கையும் தமிழ்ப் பொதுவேட்பாளரின் கொள்கையாக சுயநிர்ணய உரிமையை வெளிப்படுத்துவதனையே குறிப்பிட்டிருந்தது. சிவில் சமுக கூட்டுக்களின் ஆரம்ப பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் முதன்மையானதாக, 'தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது' என்பதையே குறிப்பிட்டிருந்தனர். அத்துடன் தமிழ்ப்பொதுவேட்பாளர் தமிழ் அரசியல் பரப்பில் கருத்தியல் தளத்திலேயே விவாதிக்கப்படுகின்றது. நடைமுறையில் பொதுவேட்பாளர் யார்? மற்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கங்கள்? என்பவை சிவில் சமுகங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டாக உருவாக்கப்பட உள்ள பொதுக்கட்டமைப்பினூடாகவே தீர்மானிக்கப்பட உள்ளது. தமிழ்ப்பொதுவேட்பாளர் தொடர்பான குற்றச்சாட்டுகள் நல்விதையொன்று நாட்டப்பட்டு வளர்வதற்கு முன்னரே அம்மரத்தினை வெட்டுவதற்கு திட்டமிடுவதாகவே அமைகின்றது.
நான்காவது, தமிழ் அரசியல் கட்சிகள் தேசியம் தொடர்பான தமது நழுவல்களை மக்கள் மீது சுமத்துவதனையே தமிழ்ப்பொதுவேட்பாளர் கருத்தியல் தோற்கக்கூடியதெனும் விமர்சனத்தில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தமிழ் பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை முன்னிறுத்தி மக்களின் திரட்சியை வெளிப்படுத்துவதற்கான கருவியாகவே பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது தமிழ் மக்களின் தேசியம் தொடர்பான பற்றுறுதியை வெளிப்படுத்தும் கருவியாகவே தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சுயாதீனமாக ஜனநாயக போராட்டங்கள், ஒன்றுகூடல்களில் தமது தேசிய வேட்கையை வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக எழுக தமிழ் பேரணிகள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் தின நினைவேந்தல்களில் அரச இயந்திரத்தின் தடைகள் காணப்படுகின்ற போதிலும் தமிழ் மக்கள் தன்னார்வமாக தமது திரட்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவ்வாறே கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்களிடையே வெளிப்படுத்தப்பட்ட ராஜபக்ஷ எதிர்ப்பு வாதமும் தமிழ்த்தேசியயத்தின் திரட்சியையே குறித்து நிற்கின்றது. மாறாக தமிழ் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகள் கடந்த காலங்களில் ஏற்பட்ட சரிவுகளுக்கு, அவர்களது தேசிய முலாம் அரசியலில் தமிழ் மக்களிற்கு அவநம்பிக்கை ஏற்பட்டதே ஆகும். தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தல்களில் தென்னிலங்கை கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை கொண்டு தமிழ் மக்கள் தேசியத்துக்கு வெளியே நகர்ந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானதாகும். தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகள் மீதே அவநம்பிக்கை கொண்டுள்ளனர். தமிழ்த்தேசியம் மீது தீரா பற்றுறுதியுடனேயே செயற்படுகின்றார்கள். தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் தமிழ்த்தேசியத்தை வெளிப்படுத்த பலமான கருவியெனும் கருத்தியலை தமிழ் மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்குமிடத்தில் தமிழ் மக்கள் தமது தேசியத்திற்கு பின்னால் தமது திரட்சியை நிச்சயமாக வெளிப்படுத்துவார்கள். தமிழ் மக்கள் தேசிய கருத்தியலை தோற்கடித்துவிடுவார்கள் என தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகளே கூறுவது அவர்களது அரசியல் பலவீனத்தையே வெளிப்படுத்தி நிற்கிறது.
எனவே, தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியல் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைசார் தேசிய அபிலாசையை வெளிப்படுத்தும் ஒஸ்லோ நிலைப்பாட்டு உள்ளடக்கத்தை பலப்படுத்தக்கூடிய கருவியாகவே அமைகின்றது. ஒஸ்லோ பற்றிய சரியான புரிதலின்றியே தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் வரலாற்றை தமது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்கு ஏற்ப திரிவுபடுத்த முயலுகின்றார்கள். இச்செயல் இரா.சம்பந்தன் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் குறிப்பிட்ட It’s a silly idea (முட்டாள்தனமான யோசனை), Crazy idea too (பைத்தியக்காரத் தனமான திட்டமும் கூட) என்பதாகவே அமைகின்றது. அதுமட்டுமன்றி தமது தனிப்பட்ட நலன்களை ஈடேற்றிக்கொள்வதற்காக வரலாற்று தகவலை திரிவுபடுத்தி தமிழ் மக்களை முட்டாளாகவும் பைத்தியக்காரராக்கும் செயற்பாடாகவே அமைகின்றது.
Comments
Post a Comment