ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி | தமிழ் மக்களின் தன்னார்வ எழுச்சியை சிதைக்கிறது! -ஐ.வி.மகாசேனன்-
ஜனாதிபதி தேர்தல் அது சார்ந்த விளைவுகள் மற்றும் அரசியல் தாக்கங்களை மதிப்பீடு செய்வதற்கு முன்னரே, குறுகிய கால இடைவெளியில் பாராளுமன்ற தேர்தலுக்கான திகதியும் குறிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி, வெற்றி அலையை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு வார கால இடைவெளிக்குள் வேட்பு மனு தாக்கலுக்கான திகதியும், அதிலிருந்து ஐந்து வார கால இடைவெளியில் பொதுத் தேர்தலையும் திகதியும் இடப்பட்டுள்ளது. இப்பின்னணியில் இலங்கையில் அனைத்து கட்சிகளும் கூட்டணிகளுக்கான பேரம் பேசல்களையும், தமது வெற்றிக்கான தந்திரங்களையும் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். ஈழத் தமிழ் அரசியலிலும் தமிழ் பொது வேட்பாளர் ஏற்படுத்திய அரசியல் எழுச்சியை ஒரு சில அரசியல் கட்சிகள் தமக்குள் சுருக்கம் முயற்சிக்கும் அலங்கோலமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களிடையேயும், பொதுவேட்பாளரை ஆதரித்தோர் இடையேயும் விசனத்தை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் புரிந்துணர்வு உடன்டிபடிக்கையை மீறுவதால் ஏற்படக்கூடிய தமிழ்த்தேசிய சீரழிவை தேடுவதாவே உருவாக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர்-24அன்று திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலூடாக, அன்றைய தினம் இரவு 12 மணியுடன் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அறிவித்திருந்தார். மேலும் அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த வர்த்தகமானியில், ஒக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் எனவும், எதிர்வரும் நவம்பர் மாதம்-14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய பாராளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, தேர்தல் திணைக்களம் பொதுத்தேர்தலுக்கான முன்னாயர்த்தங்களை ஆரம்பித்துள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேரங்களையும், வெற்றிக்கான தந்திரங்களையும் ஆரம்பித்துள்ளது. அவ்வாறே பிராந்திய அரசும் தமக்கு இசைவான ஆளுந்தரப்பை உருவாக்கும் முனைப்பில் சில சந்திப்புகளையும் உரையாடல்களையும் முன்னகர்த்தி வருகின்றது.
ஈழத்தமிழர் அரசியல் தரப்பில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான முன்னாயர்த்தங்கள் தமிழ் மக்களை முகஞ்சுழிக்க செய்வதாக அமைந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் தேசியத்திற்கான திரட்சி என்பது தமிழ் மக்களின் தன்னெழுச்சியாகவே அமைந்திருந்தது. அதேவேளை தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்தியிருந்த தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பிலும், தமிழ் மக்களின் தன்னார்வ எழுச்சியின் உந்துதலாலேயே தமிழ் அரசியல் கட்சிகள் சில தம்மை வலிய இணைத்து கொண்டு செயற்பட்டிருந்தன. எனினும், இதய சுத்தியுடன் தமிழ்ப் பொதுவேட்பாளரின் வெற்றிக்காக செயற்பட்டிருக்கவில்லை என்ற விமர்சனமும் பொதுவெளியில் காணப்படுகின்றது. தற்போது தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர், தமிழ்ப் பொதுவேட்பாளரின் வெற்றியை தமது வெற்றியாக உரிமை கோருவதுடன், அதனை தமது பொதுத்தேர்தலுக்கான முதலீடாக பயன்படுத்துவதற்கு முயற்சி எடுத்துள்ளார்கள்.
தமிழ்ப் பொதுவேட்பாளரை முன்னிறுத்தி கட்டமைக்கப்பட்ட தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பிலேயே பொதுத்தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர் தெரிவித்திருந்தனர். பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருந்த தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்த சங்கு சின்னத்தில் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதேவேளை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி தமது குத்துவிளக்கு சின்னத்துக்கு மாற்றீடாக பொதுவேட்பாளருக்கு பயன்படுத்தப்பட்ட பொதுச்சின்னமான சங்குக்கு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது பொதுப்பரப்பில் ஏற்பட்ட விசனத்தை தொடர்ந்து, தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பில் சமதரப்பு அதிகாரத்தை கொண்ட தமிழ் மக்கள் பொதுச்சபை, செப்டெம்பர்-29அன்று திருகோணமலையில் ஒன்றுகூடி, 'பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பாக பங்கு கொள்வதில்லை; சங்கு சின்னத்தை தவிர்க்குமாறும் கோரிக்கையும் விடுத்துள்ளது.' எனினும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியினர் தமிழ் மக்கள் பொதுச்சபையின் கருத்தை உள்வாங்குவதாக தெரியவில்லை. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) செப்டெம்பர்-30அன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலே, 'நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக குத்துவிளக்குக்குப் பதிலாக சங்கு சின்னத்தில் தாங்கள் களமிறங்கவுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார். இது தமிழ் மக்கள் பொதுச்சபையின் சிவில் தரப்பினருக்கும், தன்னெழுச்சியாக பொதுவேட்பாளரின் பின்னால் அணிதிரண்ட தமிழ் மக்களிடையேயும் விசனத்தை உருவாக்கியுள்ளது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியினர் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் புரிந்துணர்வு உடன்படிக்கையை உதாசீனம் செய்து, தமிழ் மக்கள் பொதுச்சபையை ஏமாற்றி உள்ளார்கள். ஜூலை-22அன்று தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பில் இணைவதற்கு உடன்பட்ட 7 தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் வடக்கு-கிழக்கு சிவில் சமுகங்களின் கூட்டிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டிருந்தனர். இப்புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரமே தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இவ்புரிந்துணர்வு உடன்படிக்கையில்,
'தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும்'
எனத் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் கால பிரச்சாரங்களிலும் இவ்விடயம் பொதுமக்களிடம் மீள மீள வலியுறுத்தப்பட்டது. தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்த பா.அரியநேத்திரனும் தொடர்ச்சியாக தம்மை ஒரு குறியீடாகவே வெளியப்படுத்தி வந்தார். தேர்தல் முடிவுகளின் பின்னர், பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகித்த ஒரு தொகுதி கட்சிகளின் கூட்டணியான ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி பொது நிலைப்பாட்டுக்கான குறியீட்டை தமக்குரியதாக மாற்ற முயல்வது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறும் செயலாகவே அமைகின்றது. இது தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் கூட்டு நம்பிக்கையை சிதைப்பதாகவே அமைகின்றது. கடந்த காலங்களில் தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள், தேசிய இனப்பிரச்சினை சார்ந்து தமிழ் அரசியல் தரப்புக்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, தமது நலன்களை ஈடேற்றி கொண்ட பின்னர் ஏமாற்றிய வரலாறுகள் உண்டு. பண்டா-செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி-செல்வா ஒப்பந்தம் ஆகியன அதன் சான்றுகளாக அமைகின்றது. தற்போது தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியினர் உதாசீனம் செய்வதனூடாக, வடக்கு-கிழக்கு சிவில் சமுக தரப்பினரையும், பொதுநிலைப்பாட்டில் சங்கின் பின்னால் அணிதிரண்ட தமிழ் மக்களினையும் ஏமாற்றுவதாகவே அமைகின்றது.
இரண்டு, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியினர் பொதுநிலைப்பாட்டின் குறியீடான சங்கை தமக்குரியதாக மாற்றுவதனூடாக, தமது தேர்தல் அரசியல் நலனுக்காக, தமிழ் மக்களின் பொது நிலைப்பாட்டை உதாசீனப்படுத்துவதாகவே அமைகின்றது. தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான உரையாடல் பொதுவெளியில் 2024-ஏப்ரல் மாதத்திற்கு பின்னரே முதன்மையான விவாதத்தை உருவாக்கியிருந்தது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் அரசியல் குறியீடாக, தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதற்கான நம்பிக்கைகள், ஆகஸ்ட்-08அன்று தமிழ்ப் பொதுவேட்பாளரை அறிவித்த பின்னரே பொதுத்தளத்தில் உருவாகியிருந்தது. பொதுவேட்பாளருக்கான பிரச்சாரங்களில், 'இது தமிழ் மக்களின் தேசிய அபிலாசையை திரட்சியை அடையாளப்படுத்துவதற்கான குறியீட்டு அரசியல்' என்பது பிரதானமாக காணப்பட்டது. இவ்அடிப்படையில் சங்கு சின்னமும் 'தமிழ் மக்களின் தேசிய அபிலாசைக்கான பொது நிலைப்பாட்டுக்கான குறியீடாகவே' விம்பப்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறுகிய காலத்தில், தமிழ்ப் பொதுவேட்பாளர் சங்கு சின்னத்துக்கான இரண்டு இலட்சத்து இருபத்தாறாயிரத்து முந்நூற்று நாற்பத்தி மூன்று வாக்குகளும் தமிழ் மக்களின் பொதுநிலைப்பாட்டுக்கான குறியீடாகவே அமைந்திருந்தது. இது தேர்தல் பிரச்சாரத்தின் மையக் கருத்தான 'நமக்காக நாம்' என்பதை பிரதிபலித்து, தமிழ் மக்களிடம் ஏற்பட்ட தன்னெழுச்சியாலேயே சாத்தியமாகியது. தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புக்கு வெளியே இருந்தும் பலரும் தமிழ்ப் பொதுவேட்பாளரின் வெற்றிக்காக உழைத்துள்ளார்கள். இவ்வெற்றியை, தமிழ் மக்களின் பொதுநிலைப்பாட்டை அதன் குறியீட்டை தனியொரு கட்சி தனக்குரியதாக மாற்ற முயல்வதும், உரிமை கோருவதும் தமிழ் மக்களின் தன்னெழுச்சியை உதாசீனப்படுத்துவதாகவே அமைகின்றது. தமிழ் மக்கள் தன்னார்வமாக தமது தேசிய அபிலாசையை முன்னிறுத்திய செயற்பாட்டை ஒரு கட்சிக்குள் சுருக்கி, பொது நிலைப்பாட்டை தோற்கடிக்கும் செயலாகவே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் செயல் அமைகின்றது.
மூன்றாவது, ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் கூட்டுப் பொறுப்பை உறுதிப்படுத்தாமைக்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகள் பொறுப்புக்கூறாமை அவர்களது குறுகிய தேர்தல் நலன்சார்ந்த அரசியலை பிரதிபலிப்பதாகவே அமைகின்றது. ஒரு கட்டமைப்பில் அடிப்படையில் கூட்டுப்பொறுப்பு அவசியமானதாகும். அதேவேளை தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் கூட்டுப்பொறுப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது:
'தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகிய இரு தரப்பும், ஒரு பொதுக்கட்டமைப்பாக செயற்படுபவர்கள் எனும் அடிப்படையில் கூட்டுப் பொறுப்புடையவர்கள் என்பதில் இணக்கம் காணப்படுவதுடன், இதற்கான வழிகாட்டல் நெறிமுறை ஒன்றை உருவாக்கி கொள்வது என்றும் இணக்கம் காணப்படுகின்றது'
எனும் விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகித்திருந்த ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகள் பல சந்தர்ப்பங்களில் கூட்டுப்பொறுப்பை மீறியுள்ளார்கள். ஒன்று, ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்புக்கு ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவரிடமிருந்து சந்திப்புக்கான அழைப்பு வந்தது. ஏற்கனவே தமிழ்ப் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முன்னாயர்த்த வேலைகள் மேற்கொண்டுள்ளமையால், தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு இச்சந்திப்புக்களில் கலந்து கொள்வதில்லையென தீர்மானிக்கப்பட்டது. எனினும், பொதுக்கட்டமைப்பின் தீர்மானத்தை மீறி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்புக்கு வந்த அழைப்பை உள்வாங்கி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்திருந்தார்கள். இரண்டு, ரெலோ கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்பட்டிருந்தார். எனினும் கட்சி அவருக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏதும் எடுத்திருக்கவில்லை. மூன்று, ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரும் பொதுவேட்பாளருக்கான பிரச்சாரங்களில் பூரண ஈடுபாட்டை வழங்கியிருக்கவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பொதுநிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தமிழ்ப்பொதுவேட்பாளர் செயற்பாட்டில் கூட்டுப்பொறுப்பற்று செயற்பட்டவர்கள், பொதுத்தேர்தலில் பொதுக்கட்டமைப்பையும் தமிழ் மக்களின் தன்னார்வ எழுச்சியால் வெற்றி பெற்ற சங்கினையும் தமக்குரியதாக மாற்ற முனைவது தேர்தல் நலனுக்குள் இயங்குவதையே உறுதி செய்கின்றது. ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கட்சி ஆகிய இரண்டும் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் கூட்டுப்பொறுப்பை ஒப்பீட்டளவில் உயர்ந்தபட்சமாய் வெளிப்படுத்தியிருந்தார்கள். இவர்கள் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பின் கூட்டுப்பொறுப்பை உதாசீனப்படுத்திய தமது பங்காளி கட்சிகளான ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியவற்றை பொறுப்புக்கூற தூண்ட வேண்டும். கூட்டுப்பொறுப்பை உதாசீனப்படுத்தியவர்கள் பொதுக்கட்டமைப்பில் பொறுப்புக்கூறுவதே எதிர்காலத்தில் பொதுக்கட்டமைப்பின் இயக்கத்தினை உறுதிப்படுத்தும்.
எனவே, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியினர் தமிழ் மக்களின் பொதுநிலைப்பாட்டுக்கான குறியீடாகிய சங்கினை தமது குறியீடாக மாற்றுவது, தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை உதாசீனப்படுத்தி தோற்கடிக்கும் துரோக செயல் என்பதே உறுதியானதாகும். இது தமிழ் மக்களிடமிருந்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி முழுமையாக புறமொதுங்கும் நிலையையே உருவாக்கும். தமிழ் மக்கள் கட்சிகள், சின்னங்களை கடந்து சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனை 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் முதல் நடைபெற்றுள்ள அனைத்து தேர்தல் முடிவுகளும் உறுதி செய்துள்ளது. 'சங்கு சின்னம்' தமிழ் மக்களின் பொதுநிலைப்பாட்டின் குறியீடாக தமிழ் மக்களை தொடர்ச்சியாக தேசியத்தின்பால் ஒன்றிணைக்கும் கருவியாக பயன்படுத்துவதே பொருத்தமான அரசியலாகும். இக்கருவியை கையாளும் ஊடகமாக தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்புக்குள் நிறுவனமயப்படுத்துவதும் அவசியமாகின்றது. தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடும் தேசிய இனம் என்ற அடிப்படையில், தேர்தல் நலன்களை கடந்த பொது இயக்கத்தின் அரசியலே அவசியமானதாகும். அதற்கான அடிப்படையையே 'சங்கும் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பும்' வழங்கியுள்ளது. இவ்அடிப்படையில் எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பு இயங்குவது, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் அரசியல் நாகரீகத்திலேயே தங்கியுள்ளது.
Comments
Post a Comment