ஜே.வி.பி அரசாங்கமும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியும், அரகலய சமுக இயக்கத்தின் தாக்கமும் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை அலையை தென்னிலங்கையில் உருவாக்கியது. அதன் அறுவடையை 2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளிலும் அடையாளம் காணக்கூடியதாக அமைந்தது. எனினும், தேசிய மக்கள் சக்தியின் மூலமான ஜே.வி.பி சார்ந்த கடந்த கால அனுபவங்கள், ஈழத்தமிழர்கள் மீது தேசிய மக்கள் சார்ந்த விம்பத்தை உருவாக்கியிருக்க முடியவில்லை. தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க என்ற மாயை வடக்கு-கிழக்கிலும் இளையோர்களிடையே துளிர்வாடுகின்றதா? மாற்றம் எனும் மாயமான் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதா? எனும் சந்தேகங்கள் தமிழ்த்தேசிய ஆர்வலர்களிட ஏற்பட்டடுள்ளது. எனினும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பட்டியலில் இணைந்து கொள்வதை பலரும் நிராகரித்தமை, தேசிய மக்கள் சார்ந்த மாயை வடக்கு-கிழக்கில் இன்னும் போதிய தாக்கத்தை செலுத்த முடியவில்லை என்பது பகுதியளவில் உறுதியாகிறது. இந்நிலையிலேயே, ஈழத் தமிழர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பொய்யான வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் தேசிய மக்கள் சக்தி வழங்கி வருவதனை அண்மைய செய்திகளில் அவதானிக்கலாம். இக்கட்டுரை தேசிய மக்கள் சக்தியின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான உள்ளார்ந்த வடிவத்தினை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலில் 2009ஆம் ஆண்டு இனவழிப்பு போருக்கு பின்னர், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பிரதான அரசியல் பொறியாக உரையாடப்பட்டு வருகின்றது. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தீர்வு நோக்கி நகர்த்துவதற்கு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் அவசியமானதாக முதன்மைப்படுத்தப்படுகின்றது. இச்சொல்லாடல்களை இலங்கை அரசாங்கங்களும் ஏற்றுக்கொண்டுள்ளது. மகிந்த ராஜபக்சா அரசாங்கம் முதல் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம், கோத்தபாய அரசாங்கம், ரணில்-பெரமுன அரசாங்கம் தொட்டு இன்றைய அநுரகுமார திசநாயக்க அரசாங்கம் வரை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்ற சொல்லாடல்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். எனினும் தேசிய இனப்பிரச்சினையின் ஒருதரப்பாகிய ஈழத்தமிழர்களின் எண்ணங்களை கடந்தகால இலங்கை அரசாங்கங்கள் உள்வாங்கியிருக்கவில்லை. ஆதலாலேயே கடந்த 15 ஆண்டுகளில் வினைத்திறனான வகையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முதற்படியைக்கூட தொட முடியாதுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுப்பொதியாக பரிந்துரைக்கப்படும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பொருள்கோடலை, கடந்தகாலங்களில் தென்னிலங்கை சிவில் சமுகங்கள் திசைதிருப்பியிருந்தது. குறிப்பாக ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கான நியாயதிக்கம் மற்றும் அரசியல் பொருளாதார நெருக்கடிக்கான பொறுப்புக்கூறல் என்ற வடிவங்களில் திசைதிருப்பப்ட்டது. ஐ.நா அறிக்கைகளின் உள்ளடக்கங்களிலும், தேசிய இனப்பிரச்சினையோடு ஏனைய உரையாடல்களுக்கும் முதன்மை வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில் அநுரகுமார திசநாயக்கா அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை முழுமையாக ஈஸ்டர் குண்டுதாக்குதல் மற்றும் அரசியல் பொருளாதார நெருக்கடிக்குள் மாத்திரம் சுருக்குவதற்கான முன்னாயர்த்தங்களையே மேற்கொள்ளுகின்றது. தேசிய இனப்பிரச்சினை முழுமையாக தவிர்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை பிரதானமான இரு செய்திகள் அடையாளப்படுத்துகிறது.
ஒன்று, உள்நாட்டு பொறிமுறையில் பொறுப்புக்கூறலுக்கு தீர்வினைக் காண மூன்று குழுக்களை அநுரகுமார திசநாயக்க அரசாங்கம் அமைக்க உள்ளதாக செய்திக்குறிப்பு ஒன்று வெளிவந்திருந்தது. இதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் நிதிக்குற்றங்கள் ஆராய்வதையே முதன்மைப்படுத்துகின்றது. குறிப்பாக ஒழுக்காற்று அடிப்படையிலான ஆட்சி, ஊழல், வீண்விரயம் போன்றவற்றுக்கு தீர்வுகாணல் போன்ற ஜனாதிபதியின் தேர்தல் கால வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் குழுமங்களை அரசாங்கம் அமைக்க உள்ளது. மேலும், இந்த உயர்மட்ட குழுக்கள் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கம் அமைக்க உள்ளதாக செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச தலையீட்டுடன் பிரேரிக்கப்படும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் அடிப்படையான தேசிய இனப்பிரச்சினை முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளது. அல்லது போதிய வலுவை பெற்றிருக்கவில்லை.
இரண்டு, ஜே.வி.பி ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையாக அமையும் அதிகாரப்பகிர்வை முற்றாக நிராகரிக்கும் தொனியில் அதன் பொதுச்செயலாளர் கருத்துரைத்துள்ளார். ஜே.வி.பி-யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், 'அரசமைப்பின் 13வது திருத்தச் சட்டமும், அதிகார பகிர்வும் வடக்கு மக்களுக்கு அவசியமானவை அல்ல. அவர்களுக்கு அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தைத் தக்கவைத்து கொள்ள இந்த விடயங்களை பயன்படுத்தி வருகின்றனர்' என்றவாறு தெரிவித்துள்ளார். இது தமிழ் அரசியல் தரப்பில் கொதிநிலையான விவாதங்களை உருவாக்கி இருந்தது. தமிழ் அரசியல் தரப்பினரும் ரில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்திருந்தார்கள். இந்நிலையில் ஜே.வி.பி-யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, ரில்வான் சில்வாவின் கருத்தை மறுவிளக்கம் செய்திருந்தார். தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களுக்ளுக்கிடையிலான கலந்துரையாடலின் முடிவில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு தேவையில்லை என்று ரில்வின் சில்வா தெரிவித்தமை தொடர்பாக நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. அவ்வாறானதொரு கருத்தை ரில்வின் சில்வா சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை. இலங்கையில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்' எனக் குறிப்பிட்டிருந்தார். இங்கு பிமல் ரத்நாயக்க, ரில்வின் சில்வா கருத்தை மறுத்திருக்கவில்லை. குறைந்தபட்சம் ஜே.வி.பி, ஈழத்தமிழர்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்கையை பரிசீலிக்கும் என்றவாறு கூட கருத்துரைக்கவில்லை. இது ஜே.வி.பி அதிகாரப்பகிர்வில் உடன்பாடின்மையையே மீள மீள உறுதி செய்கின்றது.
ஜே.வி.பி நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அதுசார்ந்த தீர்வு முயற்சிகளை முழுமையாக நிராகரித்துள்ளார்கள் என்பதனையே இரு செய்திகளின் தார்ப்பரியமும் வெளிப்படுத்துகிறது. மாறாக ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளி, இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்குள் ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கையை கரைக்கும் செயற்பாட்டையே அரச இயந்திரத்தினூடாக ஜே.வி.பி முதன்மைப்படுத்துகின்றது. இவ்அரசியல் நகர்வை நுணுக்கமாக அறிதல் அவசியமாகின்றது.
முதலாவது, பொருளாதார பிரச்சினை இலங்கைக்கு பொதுவானதாகும். இலங்கை என்ற ஒரே நாட்டுக்குள்ளேயே சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம் மற்றும் மலையக தமிழர்கள் வாழ்கின்றார்கள். பொருளாதார நெருக்கடி தென்னிலங்கையை மாத்திரமன்றி முழு இலங்கைத் தீவிற்கும் பொதுவானதாகும். தென்னிலங்கையின் பொருளாதார பிரச்சினை ஈழத்தமிழர்களிடமும் தாக்கத்தை செலுத்தக்கூடியதாகும். தென்னிலங்கையினை விட ஈழத்தமிழர்களின் தாக்கம் உயர்வாகவும் காணப்படும். கடந்த முப்பதாண்டு போரிலிருந்து, முழுமையாக மீளாத நிலையில் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடி ஈழத்தமிழர்கள் மீது செலுத்தும் தாக்கம் உயர்வானதாகவே காணப்படும். இவ்அடிப்படையிலேயே, ஈழத்தமிழர்களின் பொருளாதார பிரச்சினை மீது ஜே.வி.பி கரிசணை செலுத்துவது ஆரோக்கியமானதாகும். இவ்வாறான சிந்தனைக்குள் பயணிப்பார்களாயின் கடந்த முப்பதாண்டு போருக்கான காரணங்களையும், போருக்கு பின்னரான கடந்த 15ஆண்டுகளில் வடக்கு-கிழக்கு மறுசீரமைக்கப்படாமைக்கான காரணத்தையும் அறிந்து கொள்வார்கள். இலங்கை அரச கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ள சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடிப்படையிலேயே தமிழ் மக்களின் பொருளதார அபிவிருத்தி தடுக்கப்பட்டுள்ளது. இதனை சீர்செய்வது அரசியல் தீர்வின் அடிப்படையிலானதாகும். ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினை அதுசார்ந்த தீர்வை மறுத்துக்கொண்டு, ஜே.வி.பி பொருளாதாரத்தை உரையாடுவது முழுமையான ஏமாற்று வித்தையாகவே காணப்படுகின்றது. இடதுசாரி கருத்தியலை வரித்துக்கொண்டதாக விம்பப்படுத்தும் ஜே.வி.பி, ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமையினை புரிந்து கொள்ள மறுக்கிறது. இனப்படுகொலையை எதிர்கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையைப் புறந்தள்ளி, நாட்டைக் கட்டியெழுப்ப பொருளாதார உரையாடல்களை முன்னெடுப்பது மாயமான் உரையாடலாகவே முடியக்கூடியதாகும்.
இரண்டு, ஜே.பி.பி அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி சார்ந்த உரையாடல்கள் ஒருவகையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரச இயந்திரத்தால் நிகழ்த்தப்படும் கட்டமைக்கப்படும் இனவழிப்பின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. இவ்இன அழிப்பை ஈழத்தமிழர்களின் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளர் மு.திருநாவுக்கரவு அவர்கள் 'கட்டமைக்கப்பட்ட பொருளாதார இனப்படுகொலை' என அடையாளப்படுத்துகின்றார். அதாவது, 'இலங்கையில் ஒற்றையாட்சி முறை என்பது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைவாதமாகும். அநுரகுமார கூறும் அவரது அமைப்பு மாற்றம் (System Change) கொள்கையில் ஒற்றையாட்சியை மாற்றுவது என்பது கிடையாது. ஒற்றையாட்சியை பொருளாதார மத்தியத்துவத்தின் கீழ் மேலும் பலப்படுத்துவதே அவரது அரசியல் பொருளாதாரம் கொள்கை. அவர் கூறும் பொருளாதார வளர்ச்சிக் கோட்பாடு என்பது கட்டமைக்கப்பட்ட பொருளாதார இனப்படுகொலையே தவிர வேறில்லை' என விபரிக்கின்றார். இவ்கட்டமைக்கப்பட்ட பொருளாதார இனப்படுகொலை, ஈழத்தமிழர்களின் தனித்துவமான பொருளாதார பண்பாட்டை சிதைத்து, தென்னிலங்கையின் பௌத்த சிங்கள பண்பாட்டுடன் கரைப்பதாகவே அமையக்கூடியதாகும். ஈழத்தமிழர்களின் பொருளாதார அபிவிருத்தியை சிந்திக்கும் தரப்பினர், வடக்கு-கிழக்கினை பொருளாதார வலயமாக இணைத்து சிந்திப்பதே ஆரோக்கியமானதாகும். எனினும், ஜே.வி.பி அரசாங்கத்தின் கட்டமைக்கப்பட்ட பொருளாதார இனப்படுகொலை, வடக்கு, கிழக்கு பிரதேசங்களை தனித்தனியாக தென்னிலங்கையுடன் இணைக்கும் வகையிலான போக்குவரத்துக்களாலும், பொருளாதார ஆதிக்கத்தாலும் ஈழத்தமிழர்களின் நிலங்களில் சிங்கள பௌத்த பண்பாட்டை பொருளாதாரரீதியாக படரவிடுவதாகவே அமைகின்றது. மாறாக வடக்கையும் கிழக்கையும் பொருளாதாரரீதியாக இணைக்கும் வகையிலான முனைப்புக்கள் காணப்படவில்லை. இது திட்டமிட்ட வகையில் பொருளாதார அபிவிருத்தி விம்பத்தில் வடக்கு-கிழக்கில் தென்னிலங்கையின் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உறுதிசெய்யக்கூடியதாக அமையுமென்பதே கடந்த கால அனுபவங்களின் தொடர்ச்சியாகும்.
முன்றாவது, ஜே.வி.பி தேசிய இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பகிர்வை மறுக்கும் அதேவேளை சம உரிமை என்பதனை அடிக்கடி பயன்படுத்துகின்றார்கள். சிங்கள பௌத்த பேரினவாதத்துடன், சிறுபான்மை தேசிய இனமாகிய ஈழத்தமிழர்களுக்கு ஒற்றையாட்சி கட்டமைக்குள் சம உரிமை வலுவானதாக அமையுமா என்பது தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. பிரான்சிய புரட்சியின் தாரக மந்திரமான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்; ஒரே தேசிய இனத்துக்குள் எதேச்சதிகார ஆட்சியாளர்களிடமிருந்து குடிமக்களால் கோரப்பட்டது. குடியரசு உருவாக்கத்தால் சாத்தியப்படலாயிற்று. இலங்கையில் மாறுபட்ட விகிதாசாரங்களை கொண்ட மற்றும் முரண்பட்ட அரசியல் கலாசாரத்தை உடைய தேசிய இனங்களிடையே பகிரப்படும் சமஉரிமை சிறுபான்மை தேசிய இனங்களுக்கு பாதுகாக்கப்படுமா என்பதில் சந்தேகங்களே காணப்படுகின்றது. மீன் தொட்டிக்குள் பெரிய மீன்கள் மற்றும் சிறிய மீன்கள் காணப்படுகின்றது. தெரிவு செய்யப்பட்ட பெரிய மீன் குழுவை சேர்ந்த தலைவன், 'மீன்களை மீன்கள் விழுங்கலாம்' என சம உரிமை அடிப்படையில் பிரகடனம் செய்கின்றார். இது சம உரிமை என்ற சொல்லாடலின் பின்னணியில் சின்ன மீன்களுக்கு மகிழ்வை தரலாம். எனினும் எதார்த்தத்தில் சின்ன மீன்களை பெரிய மீன்கள் விழுங்கும். சமஉரிமை பெரிய மீன்களுக்கு சாதகமான சூழலையே உருவாக்கக்கூடியதாகும். இவ்வாறான எதார்த்தமே இலங்கையிலும் சம உரிமை என்ற சொல்லாடல் பிரதிபலிக்கிறது. சிறுபான்மை தேசிய இனங்கள் மீது பேரினவாதம் ஒடுக்குமுறையை மேற்கொள்வதற்கான அங்கீகாரமாகவே சம உரிமை அமைகின்றது. வடக்கு-கிழக்கில் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கக்கூடிய உத்தியாகவே இது அமைகின்றது. சம சுதந்திரம், சம தன்னாதிக்கம் என்பனவற்றின் அடிப்படையிலான சுயநிர்ணயத்தை தமிழர்களுக்கு வழங்குவதனால் மாத்திரமே, சமஉரிமை என்ற சொல்லாடல் இலங்கையில் அர்த்தப்படக்கூடியதாக அமையும்.
எனவே ஜே.வி.பி அரசாங்கம் ஈழத்தமிழர்களையும், ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கைகiயும் ஏற்றுக்கொள்ள தயாரில்லாத மனநிலையிலேயே பொதுத்தேர்தலை எதிர்கொள்கின்றது. வெறுமனவே, தென்னிலங்கையை திருப்திப்படுத்துவதால் இலங்கை அரச அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற முனைப்புடனேயே செயற்படுகின்றனர். இதனையே ஜே.வி.பி அரசாங்கத்தின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான உள்ளடக்கங்கள் வெளிப்படுத்துகின்றது. இது ராஜபக்சாக்களின் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டில் அநுரகுமார திசநாயக்க, ராஜபக்சா-3 என்ற விம்பத்தையே தெளிவாக வெளிப்படுத்தி வருகின்றார். கடந்த காலங்களில் ராஜபக்சாக்களும் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாகவே உரையாடியிருந்தார்கள். அநுரகுமர திசநாயக்க அமைப்பு மாற்றம் என்ற விம்பத்துக்கு பின்னால் பொருளதார அபிவிருத்தியை கவர்ச்சிகரமாக கையாளுகின்றார். ஈழத்தமிழர்களுக்கு பொருளாதார பிரச்சினை இல்லை என்பதல்ல. மாறாக இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வினை காணாது, நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது என்பதே நிதர்சனமானதாகும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை அரசியல் உரிமை சார்ந்தது மட்டுமல்ல. பொருளாதாரத்தை பங்கிடும் இறைமையுடன் கூடிய உரிமையும் பிரச்சினையாக தான் உள்ளது. தமிழர்களின் இறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படுகையிலேயே இலங்கையின் அரசியலும் பொருளாதாரமும் ஸ்திரத்தை பெறக்கூடியதாக அமையும்.
Comments
Post a Comment