பங்களாதேஷில் ஸ்திரப்படும் சீனாவும் விலகும் நெருக்கடியில் இந்தியாவும்! -சேனன்-

இந்திய தனது அண்டை நாடுகளின் முதல் கொள்கையை மறுசீரமைக்க வேண்டிய தேவைப்பாடுகளையே சமகால தென்னாசிய அரசியல் நடாத்தைகள் வெளிப்படுத்துகின்றது. இந்திய வரலாற்றின் அரசியல் பிதாமகராக கருதப்படும் சாணக்கியர், ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கையை நிர்ணயிப்பது தொடர்பில் நிலையான கோட்பாட்டை அடையாளப்படுத்தி உள்ளார். அதில் அயல் நாடுகளை இயற்கையான எதிரியாகவே அடையாளப்படுத்தி உள்ளார். 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசாங்கம் இயற்கையான எதிரிகளுக்கு முதன்மை அளிப்பதனூடாக கூட்டாண்மையை உருவாக்கலாம் என்ற முனைப்பிலேயே அண்டை நாடுகளின் முதல் கொள்கையை (Neighborhood First Policy) அறிமுகப்படுத்தி இருந்தது. இந்திய அண்டை நாடுகளுக்கு முதன்மை அளிக்கின்ற போதிலும், கடந்த காலத்தில் இந்தியாவின் பெரிய அண்ணா (Big Brother) நடத்தையின் தாக்கம், அண்டை நாடுகளிடையே இந்தியாவால் நம்பிக்கையான நண்பர்களை உருவாக்க முடியவில்லை. இந்தியாவின் எதிர் அரசியல் சக்தியே, இந்திய பிராந்திய அரசுகளினை நண்பர்களாக்கி உள்ளது. இக்கட்டுரை மாணவர் புரட்சிக்கு பின்னரான பங்களாதேஷ் அரசியலில் இந்திய மற்றும் சீன நிலைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் நடுப்பகுதியில் பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தை தொடர்ந்து, ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியது. நோபல் பரிசுபெற்ற முஹம்மது யூனுஸ் பங்களாதேஷின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சீனாவிற்கு சமாந்தரமாக இந்தியாவுடனும் நிலையான உறவினை பேணி வந்தார். இந்நிலையிலேயே பங்காதேஷ் விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம் ஷேக் ஹசீனா மீது கொலைக்குற்றம் சாட்டி உள்ளது. அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்தியா மீது அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தது. எனினும் இந்தியா பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை அளிக்கவில்லை. இந்திய அரசாங்கம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது காட்டும் அக்கறை, பங்களாதேஷ் அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பை பெறும் நிலையை உருவாக்கியுள்ளது. ஹசீனாவுடனான அதன் தொடர்பின் விளைவாக, பங்களாதேஷில் இந்தியா பூட்டப்பட்டு செல்வாக்கை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. மேலும், புதிய இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் இந்து எதிர்ப்பு கொள்கையும், அதனை சுட்டிக்காட்டி இந்தி-பங்களாதேஷ் எல்லையில் பல பங்களாதேஷ் இந்துக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு இடம்பெயரும் நிலை அதிகரித்துள்ளது. இவை இந்திய-பங்களாதேஷ் உறவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தென்னாசியாவில் நட்புறவு கொண்ட அண்டை நாடுகளின் தலைவர்கள் எப்போதும் புதுடில்லியை தங்கள் முதல் விஜயமாகக் கொண்டாலும், பங்களாதேஷின் இடைக்கால அரச தலைவர் முஹம்மது யூனுஸால் பாரம்பரியம் முறியடிக்கப்பட்டது.  

மாறாக சீன நபர்கள் மற்றும் உள்ளக அரசியல் முரண்பாடுகளை கடந்து, மாறிவரும் அரசியல் சூழலுக்குள் தன்னை தகவமைத்து கொள்வதால், பங்களாதேஷின் புதிய இடைக்கால அரசாங்கத்துடனும் முன்னோக்கி செல்லும் சூழலை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சீன புதிய இடைக்கால அரசாங்கத்துடனும், அதனுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதற்கான சமிக்ஞைகளை விரைவாக அனுப்பியுள்ளது. செப்டம்பர் தொடக்கத்தில், பங்களாதேஷிற்கான சீனத் தூதர் யாவ் வென்,  பங்களாதேஷ் அரசியல் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாம் கட்சியின் தலைவரான ஷபிகுர் ரஹ்மானை டாக்காவில் உள்ள கட்சியின் மைய அலுவலகத்தில் சந்தித்தார். சந்திப்பிற்கு பின்னரான செய்திக்குறிப்பில் யாவ், 'ஜமாத்-இ-இஸ்லாம் கட்சியை நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஒழுக்கமுள்ள கட்சி' எனக்குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலப்குதியில் ஜமாத்-இ-இஸ்லாம் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. புதிய இடைக்கால அரசாங்கமே தடையை நீக்கி அரசாங்கத்தின் பங்களாராக இணைத்துக்கொண்டிருந்தது. 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு வெளிநாட்டு இராஜதந்திரி ஜமாத்-இ-இஸ்லாம் கட்சி அலுவலகத்திற்கு வருவது, சீனத் தூதுவரின் வருகையே முதன்முறையாக இருந்ததால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.  இவ்விஜயம், பங்காளதேஷில் வேகமாக வளர்ந்து வரும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க பெய்ஜிங் விரும்புகிறது என்பதற்கான அறிகுறியாக இந்த சந்திப்பு அமைந்தது. இந்த அணுகுமுறை சீனாவை தேவைப்படும் போது விரைவாக முன்னோக்கி செலுத்த அனுமதிக்கும், வரவிருக்கும் மாதங்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதாக அமைகின்றது.

சீனா, தனது வெளியுறவுக்கொள்கையில் தனிநபர்கள் கடந்து, பொருளாதார பங்காளர்கள் என்ற உறவில் தெளிவாக பயணித்து வருவதனையே அதன் கடந்தகால வெளியுறவுக்கொள்கை சார்ந்த செயற்பாடுகளிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கையில் 2010-2015 வரையில் மகிந்த ராஜபக்ச அரசாங்க காலப்பகுதியில், பட்டி மற்றும் சாலை முன்முயற்சியினூடாக அதிக முதலீடுகளை மேற்கொண்டிருந்தது. 2015ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், சீன முதலீடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகையில், கடன் பொறியினூடாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரில் தமது ஆதிக்கத்தை வலுப்படுத்தி கொண்டது. அவ்வாறே 2022இல் இலங்கை எதிர்கொண்டிருந்த வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை மறுசீரமைப்பு செய்வதிலும் சீன போதிய அக்கறையை செலுத்தியிருக்கவில்லை. சீன தனது பொருளாதார முதலீடுகளிலேயே அதிக அக்கறையை செலுத்தி வந்துள்ளது. 

பங்களாதேஷிலும் அவ்வாறானதொரு பிரதிமைகளையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பங்களாதேஷ்-சீனா உறவுகள் முதன்மையாக பொருளாதார ஒத்துழைப்பால் இயக்கப்படுகின்றன. சீனா தொடர்ந்து 13 ஆண்டுகளாக பங்களாதேஷின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. 2023ஆம் ஆண்டில், பங்களாதேஷில் சீன முதலீடுகள் 3.2 பில்லியன் டாலர்களை எட்டியது. இது நாட்டின் இரண்டாவது பெரிய வெளிநாட்டு முதலீட்டு ஆதாரமாக மாறியது. உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சீனாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பங்களாதேஷ் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கையில், இருதரப்பு உறவின் பரிணாமம் மிகவும் சிக்கலான படத்தை பரிந்துரைத்திருந்தது. நன்கு சமநிலையான வெளியுறவுக் கொள்கையின் கருத்தை சவால் செய்தது. பங்களாதேஷ் 2024இன் ஆரம்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய, அந்நிய செலவாணி இருப்பை உறுதிப்படுத்த சீனாவிடமிருந்து பட்ஜெட் ஆதரவாக $5 பில்லியன் கடனைப் பெறவிரும்பியது. ஜூலை 8-10ஆம் திகதிகளில் பிரதமர் ஷேக் ஹசீனா சீனாவிற்கான விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார். சீனா 1 பில்லியன் யுவான் நிதி உதவியை அறிவித்தது. அது வெறும் 137 மில்லியன் டாலர்கள் ஆகும். சீன தரப்பிலிருந்து வரவு செலவுத் திட்ட ஆதரவின் வியத்தகு அறிவிப்பு அரசாங்கத்தின் பல அதிகாரிகளால் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பங்களாதேஷ் பிரதமர் பண ஆதாயத்தின் அடிப்படையில் சீனாவிலிருந்து கிட்டத்தட்ட வெறுங்கையுடன் திரும்பினார். பங்களாதேஷின் பொருளாதாரம் கடினமான காலகட்டத்திற்கு உள்ளாகி வருவதால், உடனடியாக மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், பங்களாதேஷின் பொருளாதாரம் குறித்து சீனா சற்றே சந்தேகம் கொண்டுள்ளதாகவும், இதனால் கடன் வசதியை நீட்டிக்க தயங்குவதாகவும் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், பங்களாதேஷிற்கு சீனா புதிய கடன் எதுவும் வழங்கவில்லை. பங்களாதேஷின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஹ்சன் எச். மன்சூர், 'ஒரு நாடு ஏழையாக மாறும்போது, நண்பர்கள் அவளுடன் இருக்க மாட்டார்கள். சீனா மற்றும் இந்தியாவிலிருந்து நாங்கள் அதிகம் பெறவில்லை' என்று உள்ளூர் செய்தித்தாளிடம் தெரிவித்தார். ஷேக் ஹசீனாவிற்கு எதிரான மாணவர் போராட்டமும், பங்களாதேஷின் ஸ்திரமற்ற பொருளாதார நிலைமைகளில் ஏற்றபட்டதொன்றாகவே அமைகின்றது. சீன கடந்த ஒரு தசாப்தத்துக்கு அதிகமாக சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியில் பங்காளரான ஷேக் ஹசீனாவை பாதுகாத்துக்கொள்ள விரும்பவில்லை. மாறாக பங்களாதேஷில் தனது பொருளாதாரத்தை பாதுகாப்பத்திலேயே உறுதியாக செயற்பட்டிருந்தது.

சீனா தனிநபர் அல்லது தனிக்கட்சி ஈடுபாடு என்பவற்றை கடந்து ஒரு நாட்டின் அனைத்து கட்சிகளுடனும் உறவுகளை கட்டமைக்கும் யுக்தியையே கொண்டுள்ளார்கள். தனித்தனியாக, பங்களாதேஷ் கருத்தியல் அரசியல் சக்திகள் சகலவற்றுடனும் உள்ள அரசியல் வீரர்களுடன் ஈடுபடுவதன் மூலம் சீனா தனது செல்வாக்கை பன்முகப்படுத்தியது. 2016இல், டாக்காவிற்கு விஜயம் செய்தபோது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பங்களததேஷ் தேசியவாத கட்சியின் தலைவரான கலிதா ஜியாவைச் சந்தித்தார். அந்த சந்திப்பின் செய்திக்குறிப்பில், 'பங்களாதேஷ் தேசியவாத கட்சி சீனாவுடன் நட்புக் கொள்கையை பல ஆண்டுகளாக உறுதியாகப் பராமரித்து வருகிறது' என்பதை ஷி ஒப்புக்கொண்டார். அதேவேளை பங்களாதேஷில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுடன் உட்கட்சி தொடர்புகள் மற்றும் பரிமாற்றங்களை வலுப்படுத்த சீனாவின் விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார். இந்த பின்னணியிலேயே ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, யூனுஸ் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துடன் சீனா விரைவாக இணைந்து கொண்டது. சீனா ஹசீனாவுடன் நெருக்கமான கூட்டுறவை உருவாக்கி இருந்தது. ஆனால் அவர் வெளியேறியதை அடுத்து, அதுவும் விரைவாக மாறிவிட்டது. ஹசீனா அரசாங்கம் வீழ்ந்த சிறிது நேரத்திலேயே, பெய்ஜிங்   இடைக்கால அரசாங்கம் அமைப்பதை  வரவேற்றது மற்றும்  யூனுஸின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அதன் தூதர்களை அனுப்பியது. 

மறுபுறம், பங்காளதேஷில் நடந்த போராட்டங்களில் இருந்து தப்பி ஓடிய ஹசீனாவுக்கு புதுடில்லி தஞ்சம் அளித்ததால், இந்தியா இதுவரை இடைக்கால அரசாங்கத்திடமிருந்து அதிக எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. சமீபத்திய நேர்காணல்களிலும்  யூனுஸ் இந்தியாவில் ஹசீனா இருப்பதைப் பற்றி கவலையை எழுப்பினார். புதுடில்லியின் நிலைமை, சீனாவுடன் செல்வாக்குப் பெறுவதற்குப் போட்டியிடும் பங்காளதேஷத்தின் புதிய தலைவர்களுடனான நம்பிக்கைப் பற்றாக்குறையில் ஒன்றாகும். சீனாவின் செல்வாக்கிற்கு முற்றிலும் மாறாக, பங்களாதேஷின் அவாமி லீக் தவிர்ந்த ஏனைய அரசியல் சக்தியுடன் அதிக செல்வாக்கு அல்லது ஈடுபாடு இல்லாததால் புதுடில்லி பாதிக்கப்பட்டுள்ளது. 2024-ஜனவரியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரங்களில், பங்களாதேஷ்தேசியவாத கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் 'India Out' பிரச்சாரத்தை ஏற்பாடு செய்திருந்தன. இது மற்றவற்றுடன்,  நாட்டில் இந்தியப் பொருட்களின் தேவை குறைவதற்கு வழிவகுத்தது. மேலும், ஜமாத்-இ-இஸ்லாம் கட்சி அடிக்கடி இந்தியாவுக்கு எதிராக தனது சொந்த பிரச்சாரங்களை நடத்தி வருவதாகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கடுமையான சொல்லாட்சிகளை பிரச்சாரம் செய்வதாகவும் இந்திய கொள்கை வகுப்பாளர்களினால் நம்பப்படுகின்றது. 

எனவே, சீனாவின் நெகிழும் வெளியுறவுக்கொள்கையால் பங்களாதேஷின் மாறிவரும் இயல்பை சாதகமாக்கி கொள்ளும் நிலையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மாறாக இந்தியா தனி நபர்கள் மீதும், அவர் சார்ந்த இயக்கம் மீதும், அதன் உள்நாட்டு முரண்பாட்டுக்குள்ளும் அதிகம் இணைந்து போகும் வகையில் பிராந்திய வெளியுறவுக்கொள்கையை திட்டமிடுவதனால் பங்களாதேஷிலிருந்து விலகி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவாமி லீக்கிற்கு சமாந்தரமாகவே, பங்களாதேஷ் தேசியவாத கட்சியுடனான சீனாவின் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமான உறவும் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாம் கட்சியுடனான அதன் சமீபத்திய தொடர்பும் இந்தியாவின் நலன்களையும், ஹசீனாவின் கீழ் புதுடில்லி வளர்த்திருந்த வலுவான இருதரப்பு உறவுகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடிய அபாயத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்திய தனது பிராந்திய வெளியுறவுக்கொள்கை வகுப்பை மறுசீரமைக்க வேண்டிய தேவைப்பாட்டையே பங்களாதேஷ் விவகாரமும் உறுதி செய்துள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-