சே குவேரா புரட்சியின் குறியீடு! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி எழுச்சியை தொடர்ந்து மாற்றம், இளைஞர்களின் அரசியல் எழுச்சி, மாக்சிசம் என்பன புதிய உரையாடலை பெற்று வருகின்றது. எனினும் அதன் உள்ளடக்கம் சந்தேகத்திற்குரியதாகவே அரசியல் ஆய்வு புலத்தில் காணப்படுகின்றது. குறிப்பாக மாற்றம் என்பது அதிகம் தேர்தல் பிரச்சாரத்திற்கான ஒரு ஜனரஞ்சக சொல்லடலாகவே பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் இளைஞர்களின் அரசியல் எழுச்சி என்பதும் புதிராகவே அமைகின்றது. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கதின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காபந்து அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் முறையே 55, 54 மற்றும் 56 வயது உடையவர்களாகவே காணப்படுகின்றார்கள். அத்துடன் ஜே.வி.பியின் வெற்றி மாக்சிச கட்சி பாரம்பரியத்தின் வெற்றியாக ஊடக செய்தியிடல்கள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மறுதளத்தில் இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் மகா சங்கங்களின் ஆசிர்வாதத்துக்காக வளைகின்றார்கள். இப்பிரம்மைகள் முதன்மை பெறுவதற்கு, மக்களிடம் மாக்சிசம் மற்றும் இளைஞர் எழுச்சி தொடர்பான மெய்மைகள் பற்றியான சரியான பார்வையின்மையே காரணமாகும். இக்கட்டுரை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த மாக்சிச புரட்சியாளன் சேகுவேரா, இளைஞர்களின் எழுச்சியில் வகிக்கும் தாக்கத்தை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர்-09, 2024 அன்று புரட்சியாளன் சே குவேராவின் 57வது ஆண்டு நினைவு தினமாகும். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இடதுசாரி வட்டாரங்களில், சே குவேரா ஒரு தியாகியாகவும், புரட்சியின் அடையாளமாகவும் ஆனார். இலத்தீன் அமெரிக்காவில் வறுமை மற்றும் அநீதி பற்றிய அவரது சொந்த அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட அவரது எழுத்துக்கள், வர்க்கப் போராட்டத்தின் கவிதை அழைப்புகளை உருவாக்கியது. மேற்கில் 1960-70களின் எதிர்கலாச்சார இயக்கத்தின் மத்தியில், பலர் பிரதான அரசியலில் ஏமாற்றத்தை உணர்ந்தபோது, சே குவேரா தற்போதைய நிலைக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் யோசனையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராக ஆனார். மார்ச்-05, 1960அன்று கியூபாவின் ஹவானாவில், லா கூப்ரே வெடிப்பில் பலியானவர்களுக்கான நினைவுச் சேவையில் 'ஆல்பர்டோ கோர்டா' எனும் புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்ட சே குவேராவின் புகைப்படமே பின்னாளில் எதிர் கிளர்ச்சியாளர்களின் அடையாளமாகியது. இப்புகைப்படம் 'கொரில்லா போராளி வீரன்' என அர்த்தப்படும் வகையில் 'Guerrillero Heroico' என பெயரிடப்பட்டது. கெரில்லிரோ ஹீரோயிகோவில் ஒற்றை நட்சத்திரமிடப்பட்ட பெரட், தாடி மற்றும் தீவிர பார்வை ஆகியவை எண்ணற்ற கலை, இசை மற்றும் இலக்கியப் படைப்புகளில் அழியாதவை. அத்துடன் உலகெங்கிலும் உள்ள ஸ்தாபன எதிர்ப்பு அரசியல் இயக்கங்களால் பயன்படுத்தப்பட்டன.

சே குவேராவின் உருவம் ஒரு கலாச்சார நிகழ்வாக மாறியதால், அது பரவலான வணிகமயமாக்கலையும் கண்டது. இன்று, ஆடைகள் முதல் ஐபோன்கள் வரை நுகர்வோர் பொருட்கள் முழுவதும் பதிக்கப்படுவதைக் காணலாம். தனிமனிதவாதத்தில் செழித்து வளரும் ஒரு நுகர்வோர் கலாச்சாரத்தில், சே குவேராவின் புரட்சிகரக் குறியீடு தனிமனிதக் கிளர்ச்சியின் வடிவமாக மாறியுள்ளது. சே குவேராவின் புகைப்படம் பொருத்திய ஆடையை அணிவது என்பது, கிளர்ச்சியின் கவர்ச்சிகர யோசனையால் தூண்டப்பட்ட தற்போதைய நிலைக்கு ஒருவரின் எதிர்ப்பின் குளிர்ச்சியான வெளிப்பாடாகும். சே குவேராவை அழிக்கனும் என்பதில் துடிப்பாக இருந்த அமெரிக்க மண்ணிலும் நாயகனாக இன்றும் வலம் வருவதே அவரது வாழ்வின் வெற்றியாகும். சே குவேராவின் மார்க்சிய அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அது ஒரு பொருட்டல்ல. காலப்போக்கில், படத்தின் புரட்சிகர குறியீடு அதன் அர்த்தத்தை இழந்துவிட்டது, கடுமையான முதலாளித்துவ எதிர்ப்பு சே குவேரா ஒரு 'வணிக குறியீடாக' மாறியுள்ளார் என்ற விமர்சனங்கள் காணப்படுகின்றது. எனினும் சே குவேரா புரட்சியின் நாயகன் என்பது மறைய போகும் சிந்தனை இல்லை. தயாரிப்புகளை விற்க சே குவேரா பயன்படுத்தப்படுவது, அவர் சார்ந்து உருவாகியுள்ள நாயக விம்பமே காரணமாகும். கியூபா எழுத்தாளர் எட்மண்டோ டெஸ்னோஸ், 'சே குவேராவின் உருவம் ஒதுக்கி வைக்கப்படலாம், வாங்கப்படலாம் மற்றும் விற்கப்படலாம். ஆனால் அது புரட்சிகரப் போராட்டத்தின் உலகளாவிய அமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் அதன் அசல் அர்த்தத்தை எந்த நேரத்திலும் மீட்டெடுக்க முடியும்' எனத் தெரிவித்துள்ளார். சே குவேராவின் எழுச்சியும் புரட்சியும் வரலாற்றுடன் பிணைந்ததாகவே அமைகின்றது.

சே குவேராவின் உருவப்படம் குறித்த சுற்றுலா கண்காட்சியின் கண்காணிப்பாளரான த்ரிஷா ஜிப், 'அது போல் வேறு எந்த உருவமும் இல்லை. வேறு எந்த உருவம் இப்படி நிலைத்திருக்கிறது? சே குவேரா ஒரு பிராண்டாக மாறியுள்ளார். மேலும் பிராண்டின் லோகோ என்பது மாற்றத்தை பிரதிபலிக்கும் உருவம். அது போருக்கு எதிரானதாக இருந்தாலும், பசுமைக்கு ஆதரவாக இருந்தாலும் அல்லது உலகமயமாக்கலுக்கு எதிரானதாக இருந்தாலும் சரி, வெளிப்புற சிந்தனையாளரின் அடையாளமாக மாறியுள்ளது' எனத் தெரிவிக்கின்றார். 

எர்னஸ்டோ சே குவேரா ஜூன்-14, 1928இல் அர்ஜென்டினாவில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். மோட்டார் வாகன சுற்றுலாவில் அதிக ஈடுபாடு கொண்ட இளம் வைத்தியனை, தென்அமெரிக்க பயணம் மார்க்சிஸ்ட் புரட்சியாளனாக மாற்றியது. ஒரு அர்ஜென்டினா மார்க்சிஸ்ட் புரட்சியாளர் சே குவேரா, கியூபா புரட்சியில் ஒரு முக்கிய நபராக இருந்தார். 1959இல் அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவை பதவி நீக்கம் செய்த கெரில்லா பிரச்சாரத்திற்கு பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து தலைமை தாங்கினார். கியூபா புரட்சியின் வெற்றியை தொடர்ந்து, சுதந்திர சோசலிச கியூபா அரசில் அமைச்சராகவும் இருந்தார். புரட்சியாளனுக்கு அதிகார இருப்புகள் தீணி போடுவதில்லை என்பதற்கு சே குவேராவின் வரலாறே சாட்சியமாகின்றது. கியூபாவின் அமைச்சுப் பதவியை துறந்து அர்ஜென்டினா மார்க்ஸிஸ்ட் புரட்சியாளன், பொலிவியாவில் நிலவிய சர்வதிகாரத்திற்கு எதிரான புரட்சிக்கு தலைமை தாங்க 1965ஆம் ஆண்டு புறப்பட்டார். 1967இல் அமெரிக்க உளவுத்துறை உதவி பொலிவியப் படைகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவர் இறந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் ஒரு வழிபாட்டு நபராக, உலகம் முழுவதும் புரட்சிகர போராட்டங்களின் சின்னமாக இருக்கிறார். இது அவரது தியாகம் சார்ந்து கட்டமைக்கப்பட்டதாகும். அர்ஜென்டினாவில் பிறந்து, கியூபா புரட்சியில் தலைமையேற்று, வெற்றியின் பின்னர் பெற்ற அமைச்சு பதவியை துறந்து, பொலிவியாவின் புரட்சியில் இணைந்தார். இறுதியில் அர்ஜென்டினா மார்க்ஸிஸ்ட் புரட்சியாளன், கியூபா புரட்சியின் வெற்றி வீரன், பொலிவியா போராட்டத்தில் மரணத்தை பெற்றுக் கொண்டார்.

சே குவேராவின் இறந்த உடலின் எச்சங்களும் ஏகாதிபத்தியத்திற்கு அச்சத்தை கொடுப்பதாகவே அமைந்துள்ளது. சே குவேரா கொல்லப்பட்டு 30 ஆண்டுகளுக்கு பிறகு 1997-அக்டோபரிலேயே, சே குவேராவின் எச்சங்கள் இறுதியாக கியூபாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டன. கியூபாவின் சே குவேராவிற்கு நினைவாக கட்டப்பட்ட ஒரு பெரிய கல்லறையில் உரையாற்றிய பிடல் காஸ்ட்ரோ, 'அவரைக் கொல்வதன் முலம், அவர் ஒரு போராளியாக இருப்பதை நிறுத்தி விடலாம் என ஏன் நினைத்தார்கள்? இன்று அவர் எல்லா இடங்களிலும், எங்கு நியாயமான காரணங்களுக்காக போராடுகிறார்களோ, அங்கே அவர் இருக்கிறார். அவரது அழிக்க முடியாத அடையாளம் இப்போது வரலாற்றில் உள்ளது. மற்றும் ஒரு தீர்க்கதரிசியின் ஒளிரும் பார்வை, இவ்உலகின் அனைத்து ஏழைகளுக்கும் அடையாளமாக மாறும்' என விழித்திருந்தார். நிகழ்காலம் அதன் சாட்சியமாகவே அமைகின்றது. சே குவேராவின் இருப்பு, பாலஸ்தீனிய பிரதேசங்களில் உள்ள சுவர்கள் முதல் பாரிசியன் பொட்டிக்குகள் வரை எல்லா இடங்களிலும் கட்டுப்பாடு இல்லாத ஒரு படத்தை உருவாக்கியுள்ளது.

சே குவேராவின் உருவத்தை மாணவர்கள் பயன்படுத்துவது 1968இல் உலகம் முழுவதும் பரவிய தீவிர இயக்கங்களுடன் தொடங்கியது. அங்கு குவேரா ஒரு குறியீட்டுத் தலைவராக ஆனார். ஆஸ்திரேலியாவில் 1968இல் சிட்னி பல்கலைக்கழகத்தில் தீவிர செயற்பாட்டு மாணவர்கள், சே  குவேராவை தங்கள் நாயகனாக அறிவித்தனர். அமெரிக்காவில் மாணவர்கள் வியட்நாம் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சே குவேராவின் முகத்தை பலகைகளில் வைத்தார்கள். ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் குற்றவாளியான அந்தோனி மெக்கின்டைர், சிறையில் இருந்த சுவரொட்டிகளைப் பார்த்து சே குவேராவின் படத்தைப் பற்றி எழுதினார். 2004 டிசம்பரில், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் தெருக்களில் இடம்பெற்ற போராட்டக்காரர்களிடையே சே குவேராவின் படம் பல பதாகைகளில் இருந்தது. மார்ச்-31, 2016அன்று ஏதென்ஸில், புதிய பிணை எடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கிரேக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே, சே குவேராவின் உருவம் கொண்ட கொடியை எதிர்ப்பாளர்கள் பிடித்துள்ளார்கள். மக்கள் சே குவேராவின் பதாகைகளை உயர்த்தியபோது, அந்தப் போராட்டங்களுக்கும் உலகளவில் மற்றவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை நினைவூட்டுவதாகத் தோன்றியது. இவ்வாறு, சே குவேராவின் முகம் இஸ்தான்புல்லில் நேட்டோ, பேர்லினில் புஷ், கொலம்பியாவில் கல்வி தனியார்மயமாக்கல், மெக்சிகோவில் நில உரிமை, சாவேஸ் மற்றும் வெனிசுலாவில் மதுரோ ஆகியோருக்கு எதிராக அணிவகுத்தது. இது பிடல் காஸ்ட்ரோ குறிப்பிடுவது போல் சே குவேராவை கொல்வதனூடாக, அவர் போராளியாக இருப்பதை நிறுத்தி விடலாம் எனும் ஏகாதிபத்தியத்தின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதையே நிகழ்வுகள் உறுதி செய்கின்றது.

சே குவேரா வரலாற்றில் நிலைப்பது, அவரது வாழ்வு புரட்சியாளனாகவே முழுமைப்பட்டதாகும். குடும்ப வாழ்க்கை, காதல் மற்றும் பிள்ளைகளில் அன்பு பாராட்டிய போதும், அநீதிகளை கண்டு பொங்குகையில் தனது தனிப்பட்ட வாழ்வை கடந்து சிந்தித்தார். அவர் தன் பிள்ளைகளுக்கு எழுதிய கடிதம் உறுதி அதனை செய்கின்றது. 'அன்புள்ள இல்டிடா , அலைடிடா, கமிலோ மற்றும் எர்னெஸ்டோ. ஒரு நாள் இந்த கடிதத்தை நீங்கள் படிப்பீர்கள். உங்கள் அப்பா அன்று உயிரோடு இருக்கமாட்டேன். நீங்கள் இந்த அப்பாவை மறந்திருக்கலாம். குழந்தை எர்னெஸ்டோ என்னை முற்றிலும் மறந்திருக்கலாம். உங்கள் அப்பா மனசாட்சிக்கு நேர்மையாகவும், கொள்கையில் உறுதியாக இருந்தேன். ஒரு புரட்சியாளனின் பிள்ளைகள் நீங்கள். அதை மட்டும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் புரட்சிக்காரர்களாக வளர வேண்டும். கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும். தொழில்நுட்ப ஞானம் பெறவேண்டும். இந்த அறிவுதான் இயற்கையை நமது கட்டுக்குக் கொண்டு வர நமக்கு உதவும். நாமெல்லாம் தனிப்பட்ட முறையில் முக்கியமற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உலகில் எங்கு அநீதி நிலவினாலும் அதைக் கண்டு ஆழமாக வெறுப்புணர்வு கொள்ள வேண்டும். அதுதான் புரட்சிக்காரனின் முக்கியமான குணம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

50 ஆண்டுகள் கடந்தும், இன்றும் சே குவேரா குறியீடாக நிலைப்பது, அவரின் எண்ணங்களாலும் செயலாலுமே ஆகும். சே குவேரா ஆசைப்பட்டது மனித சமுகத்தின் சமத்துவம், அதன் விடுதலை ஆகும். அதில் நாடுகள் என்கிற வரையறையை அவர் கொண்டிருக்கவில்லை. அவர் இறந்த பொழுது, அவருக்கு வயது வெறும் 39 தான். இன்று 50களைக் கடந்து இளைஞர்களாக உலாகின்றகவர்களுக்குள் சே குவேரா வேறுபட்டவர் தான். சாகிற பொழுதும் கண்கள் திறந்திருந்தது. ஏனென்றால் என்றைக்கும் கண்ணை மூடிக்கொண்டு கனவு கண்ட போலி புரட்சிகாரனாக வாழ்க்கையை இழுத்து செல்லவில்லை. நிஜ உலகில் முட்டி மோதி ஜெயித்த தனித்துவமாக புரட்சியாளாக காணப்படுகின்றார். தேசங்களை கடந்து சமத்துவத்தை நேசித்தார். அடக்குமுறைக்கு எதிராக சினந்தெழுந்தார். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் இடதுசாரி மரபின் வரலாற்றையும் குறித்து கொள்வது அவசியமாகின்றது. சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைக்குள் நின்று, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில், ஒரே மண்ணில் வாழும் ஈழத்தமிழர்கள் மற்றும் மலையக மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தீவிரமாக செயற்பட்ட வரலாற்றையே இலங்கையின் மாக்சிச மரபு கொண்டுள்ளது. உச்சபட்சமாக 2001ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளுக்கு எதிராக போராட்டத்தை எடுத்த மரபினை கொண்டுள்ளார்கள். வரலாற்றின் சே குவேரா போன்ற உன்னத மாக்சிசவாதிகளின் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும், போலி மாக்சிச பேரினவாதிகள் மலினப்படுத்துகின்றார்கள்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-