பாரம்பரிய அரசியல் கட்சி மாயை பிரச்சாரம்; தமிழ்த் தேசிய அரசியல் கொள்கையே பாரம்பரியம்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் பொதுத் தேர்தலை மையப்படுத்தி தென் இலங்கைக்கு சமாந்தரமாக ஈழத் தமிழர் அரசியலும் போட்டிக்களமாக மாறி உள்ளது. பிரதான அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக சுயேட்சை குழுக்களும் பிரதான போட்டியாளர்களாக காணப்படுகின்றார்கள். வெறுமனவே 28 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கில் 2000இற்கும் அதிகமானா வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். உயர்ந்த பட்ச ஜனநாயகம் சில சந்தர்ப்பங்களில் மக்களின் நலனை பாதிப்பதாகவே அமைகின்றது. இப்பொதுத் தேர்தலிலும் அதிகபட்ச வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ளாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றது. இதில் தமிழ் தரப்பு தமது அரசியல் பிரதிநிதியை தெரிவு செய்வது என்பது பெரும் குழப்பகரமானதாகவே காணப்படுகிறது. இன்னொரு பக்கம் மாற்றம் பற்றிய விவாதங்கள், கடந்த கால அரசியல் பிரதிநிதிகள் மீதான ஏமாற்றங்கள் மற்றும் பாரம்பரியம் பற்றிய கட்டுக்கதைகள் தமிழ் மக்கள் மத்தியில் பொதுத்தேர்தலில் பங்குபற்றுவது தொடர்பில் விசனத்தையும் உருவாக்கியுள்ளது. இதில் தமிழ் மக்களின் தெரிவில், நிராகரிப்பு பற்றிய தெளிவு பிரதானமாகின்றது இக்கட்டுரை பாரம்பரிய கட்சிகள் மற்றும் பாரம்பரிய சின்னங்கள் தொடர்பிலான மாயை தோற்றத்தை கட்டவிழ்ப்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியல், சிங்கள-பௌத்த தேசியவாதத்தை இலங்கைத் தேசியவாதமாய் பாதுகாப்பதில் முனைப்பாக செயற்பட்டு வருகின்றது. மகாவம்சம் காலம் முதல் அதனையே தனது பாரம்பரிய அரசியல் கொள்கையாக வரித்து கொண்டுள்ளது. மகாவம்சம் சிங்கள-பௌத்த தேசியவாத வரலாற்றையே இலங்கை நாட்டின் வரலாறாய் மடைமாற்றியுள்ளது. இப்பாரம்பரிய அரசியல் கொள்கையை பாதுகாக்கக்கூடிய நிறுவனங்களையே, தென்னிலங்கை காலத்துக்கு காலம் ஆதரித்து வந்துள்ளது. மகா சங்கங்களும் அதுதொடர்பில் தெளிவான வழிகாட்டல்களை வழங்கி வந்துள்ளனர். அரசியல் கட்சிகள் தொடர்பிலும் தெளிவான வரையறைகளுடனேயே பயணிக்கின்றார்கள். இலங்கையின் காலனித்துவ விடுதலையின் ஆணிவேராக செயற்பட்டிருந்த இலங்கை தேசிய இயக்கமே, 1946ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியாக பரிணமித்திருந்தது. காலனித்துவ விடுதலைக்கு பின்னர், 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை சுதந்திர கட்சி, சிங்கள பௌத்த பேரினவாதத்தை பாதுகாப்பதனை முதன்மை கொள்கையாக வரித்துக்கொண்டது. இந்நிலையில் 1956ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், இலங்கையின் காலனித்துவ விடுதலையின் பாரம்பரியமான ஐக்கிய தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டு, இலங்கை சுதந்திர கட்சி பாரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. இலங்கை சுதந்திர கட்சியின் எழுச்சியை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியும் வெளிப்படையாக சிங்கள-பௌத்த பேரினவாதத்தை முதன்மைப்படுத்திய அரசியலை மேற்கொண்டிருந்தது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இலங்கை சுதந்திர இரண்டும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் அரணாகவே செயற்பட்டிருந்தன. இந்த பின்னணியிலேயே 2009ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுபொலை சார்ந்து போர்க்குற்ற நெருக்கடி, சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு ஆபத்தாக வருகையில், 2015ஆம் ஆண்டு இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியை பகிர்ந்து கொண்டது. தொடர்ச்சியாக போர் வெற்றியின் அறுவடையாக 2016ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறுகிய கால இடைவெளியில் 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் என்பவற்றில் பாரிய வெற்றியை உறுதி செய்திருந்தது. இவ்வெற்றிகள் சிங்கள-பௌத்த பேரினவாத மனநிலையுடனேயே முழுமையாக நிறுவப்பட்டிருந்து. கோத்தபாய ராஜபக்சா தனது பதிவியேற்பு நிகழ்வில், 'சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றியாக' முழங்கியமை அதனையே உறுதி செய்திருந்தது. எனினும் 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி, சிங்கள-பௌத்த இருப்பிற்கு ஆபத்தை கொண்டு வருகையில், மாற்றம் என்ற விம்பத்தினூடாக ஜே.வி.பி-யின் பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தியின் பின்னால் தென்னிலங்கை அணி திரண்டுள்ளது. ஜே.வி.பி-யின் ஸ்தபான கொள்கையும், கடந்த கால அரசியல் செயற்பாடுகளும், அவர்களது சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல் கொள்கையை உறுதி செய்கின்றது. இவ்வாறான பின்னணியில் காலனித்துவ விடுதலைக்கு பின்னரான தென்னிலங்கை வரலாற்றில், கட்சிகளும் சின்னங்களும் 'சிங்கள-பௌத்த பேரினவாதம்' எனும் கொள்கையையே பாரம்பரியமாக பேணி வந்துள்ளது. மாறாக தனிக் கட்சிகள் அல்லது சின்னங்களின் பின்னால் தமது கொள்கையை இழந்துவிடவில்லை.

ஈழத்தமிழர்களிலும் தூய்மையான தேசியவாத அரசியல் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழரசுக்கட்சி 'பாரம்பரியம் எனும் மாயைஜால' பிரச்சாரங்களூடாக, தமிழ் மக்களின் தேசிய அரசியலை 'ஒரு கட்சிக்குள் புதைக்கும்' ஆபத்தான அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள். இதற்கு தவறான வரலாற்று திரிபுகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். பொய்மைக்குள் கட்டப்படும் தமிழ்த்தேசியம் நிலைத்திருக்க போவதில்லை. உறுதியான அத்திவாரங்களே கட்டிடத்தின் நிலைத்திருப்புக்கு அவசியமானதாகும். எனவே தமிழ்த்தேசியத்தின் மீது கட்டப்படும் பொய்மைகளை கடந்து, தமிழ்த்தேசிய அரசியலின் பாரம்பரியத்தை நுணுக்கமாக விளங்கி கொள்ளுதல் அவசியமாகும்.

தமிழ் மக்களின் உரிமை சார்ந்த அரசியல் ஒரே அரசியல் கட்சிக்குள் பயணித்திருக்கவில்லை. ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சி வரலாறு 1944ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உதயத்தோடு ஆரம்பமாகியது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில், 50:50 என்ற அரசியல் கோரிக்கையை சோல்பரி அரசியல் யாப்பு உருவாக்க காலத்தில் முதன்மைப்படுத்தியிருந்தது. அதற்கான வாதப் பிரதிவாதங்களையும் சோல்பரி அரசியலமைப்பு உருவாக்க குழுவிடம் முன்வைத்திருந்தனர். எனினும் அது சாத்தியப்பட்டிருக்கவில்லை. குறைந்தபட்சம் சிறுபான்மையோர் காப்பீடே வழங்கப்பட்டிருந்தது. எனினும் சோல்பரி யாப்பின் கீழான 1949 மற்றும் 1951ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தை அகில இலங்கை தமிழ் காங்கிரஸினரே பெற்றிருந்தனர். எனினும் 1950களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் இலங்கை அரசாங்கத்துடன் இணக்க அரசியலுக்குள் பயணித்தமை தமிழ் மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. இந்நிலையில் 1956ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் முதலாவது அரசியல் கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தனது ஏகபிரதிநித்துவத்தை இழந்தது. தமிழ் மக்கள் தமது அரசியல் கோரிக்கையை தமிழரசுக்கட்சியினூடாக முன்னகர்த்தியிருந்தனர்.

1949ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக்கட்சி சமஷ;டி கொள்கையை முன்னிறுத்தி ஸ்தாபிக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் அரசியலை கொழும்பிலிருந்து, வடக்கு-கிழக்கு தாயகத்தினை நோக்கி நகர்த்தியதிலும், தமிழர் தாயகத்தை அடையாளப்படுத்தி தேசிய அரசியலை வடிவமைத்தமையிலும, செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக்கட்சிக்கு முதன்மையான வகிபாகம் காணப்படுகின்றது. இந்நிலையில் 1956, 1960-மார்ச், 1960-ஜூலை, 1965, 1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தமிழரசுக்கட்சிக்கு பின்னால் தமிழ் மக்கள் அணிதிரண்டிருந்தார்கள். எனினும் செயற்பாட்டு அரசியலில் தமிழரசுக்கட்சி, பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் பிராந்திய சபைகளுக்கும்; டட்லி-செல்வா ஒப்பந்தத்தில் மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கும் இணங்கியது. மேலும் 1965ஆம் ஆண்டு டட்லி அரசாங்கத்துடன் இணக்க அரசியலில், தமிழரசுக்கட்சி அமைச்சு பதவியினையும் பெற்றுக்கொண்டது. இது தமிழர்கள் இடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழ் மக்களிடையே தமிழரசுக்கட்சியின் மீது நம்பிக்கையீனம் உருவாகியது. 1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் அமிர்தலிங்கம் தோற்கடிக்கப்பட்டார். தனித்தமிமீழ பிரகடன எழுச்சி இளையோர்களிடையே அதிகரிக்கப்பட்டது. அத்துடன் 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முதன்மை அளிக்கப்பட்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சூழலில் தமிழரசுக்கட்சியின் சமஷ;டி கொள்கை தோல்வியடைகின்றது. தமிழரசுக்கட்சியின் அஸ்தமனத்தை முன்னுனர்ந்த செல்வநாயகம், தமிழரசுக்கட்சியை உறங்கு நிலைக்கு தள்ளி, தமிழ்த்தேசியத்தின் உயர்ந்தபட்ட தனித்தமிழீழ கொள்கையை முன்னிறுத்தி, புதியதொரு அரசியல் இயக்கத்தை தமிழ் காங்கிரஸிடன் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணியாய் உருவாக்குகின்றார். 

1972ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டது. பின்னாளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறியிருந்தது. தமிழர் விடுதலைக்கூட்டணி 1976ஆம் ஆண்டு தனித் தமிழீழத்தை உள்ளடக்கிய வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. இந்நிலையில் 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 18ஆசனங்களையும் பெற்றுக்கொண்டது. 1972களுக்கு பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணியே தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கும் அரசியல் கட்சியாக காணப்பட்டது. எனினும் 1980களில் தமிழர் விடுதலைக்கூட்டணி மாவட்ட சபையை ஏற்றுக்கொண்டு பயணிக்கையில், ஈழத்தமிழர்களின் அரசியல் முழுமையாக ஆயுதப்போராட்டத்திற்கு நகர்ந்திருந்தது. 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சுயேட்சையான வெளிச்ச வீடு சின்னத்தில் களமிறங்கிய ஈரோஸ் அணியினர் 13 ஆசனங்களை பெற்றிருந்தனர். தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அமிர்தலிங்கம் பொதுத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருந்தார். ஈழத்தமிழர் அரசியலில் 1990-200களுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்சி அரசியல் சூனியக் காலப்பகுதியாகவே காணப்பட்டது. இக்காலப்பகுதியில் ஆயுதப்போராட்ட அரசியலுக்கான தமிழ் மக்களின் தார்மீக ஒத்துழைப்பானது தமிழ்த்தேசிய கொள்கை வழியிலானதாகலே அமைகின்றது.

2000களில் மீள ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டக்குழுவான விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் அரசியல் கட்சிகள் மீள தூசுதட்டப்பட்டிருந்தது. 2001ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் தமிழீழ விடுதலை அமைப்பு (ரெலோ) ஆகிய கட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல் பிரதிநிதித்துவத்தின் வீழ்ச்சியை தொடர்ந்தே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் சிந்திக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு வெறுமனவே ஐந்து ஆசனங்களை பெற்றிருந்த உதயசூரியன், 2001ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக 15 ஆசனங்களை பெற்றிருந்தது. 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருந்தது. 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்தைக் கொண்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி எவ்வித ஆசனங்களையும் பெற்றிருக்கவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணியே ஈழத்தமிழர்களின் அதிஉச்ச வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அத்துடன் அதற்கான அங்கீகாரமாக 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெரும் வெற்றியையும் பதிவு செய்திருந்தது. எனினும் 2004ஆம் ஆண்டு அதன் பொதுச்செயலாளர் ஆனந்த சங்கரியின் எதேச்சதிகாரம் மேலெழுகையில், அது தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கு விரோதமாகையில், தமிழ் மக்களால் முழுமையாக அகற்றப்பட்டிருந்தது. 

2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணியின் உருவாக்கத்தோடு உறக்கத்திற்கு போன தமிழரசுக்கட்சியும் வீட்டுச்சின்னமும் மீள தூசுதட்டப்பட்டது. 2004ஆம் ஆண்டு முதல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் தேர்தலை எதிர்கொண்டிருந்தது. 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வீட்டு சின்னத்தில் 22 ஆசனங்களை பெற்றிருந்தது. எனினும் 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்ட மௌனிப்புக்கு பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தமிழ்த்தேசிய கொள்கையில் பொதுமக்களிடையே வலுவான சந்தேகங்கள் மேலெழுந்திருந்தது. இதன் வெளிப்படாகவே தொடர்ச்சியாக பிரதிநிதித்துவம் குறைவடைந்து வந்துள்ளது. 2010ஆம் ஆண்டு 14 ஆசனங்கள், 2015ஆம் ஆண்டு 16 ஆசனங்கள் என்ற வரிசையில் 2020ஆம் ஆண்டு வெறுமனவே 10 ஆசனங்களையே பெற்றிருந்தார்கள். 2020ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ஆசனங்களில் மூன்று ஆசனங்கள் தமிழ்த்தேசிய மூலாம் பூசப்பட்ட ஏனைய கட்சிகளான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியிடம் இரண்டு மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியிடம் ஒன்றாகவும் பகிரப்பட்டிருந்தது. தமிழரசுக்கட்சியினதும் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரனின் எதேச்சதிகார செயற்பாடுகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் திரட்சிக்கு சவாலாக அமைந்திருந்தது. 2022ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி உள்ளூராட்சி சபை தேர்தலை தனியாக எதிர்கொள்ள தீர்மானித்த நிலையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முற்றாக சிதைக்கப்பட்டது. கடந்த இரு தசாப்தங்களும் வீட்டுச்சின்னம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எனும் தமிழ்த்தேசிய திரட்சியையே பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. இந்த பின்னணியிலேயே தமிழ் மக்கள் வீட்டு சின்னத்துக்கு வாக்களித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பின்னால் அணி திரண்டிருந்தார்கள்.

எனவே, தமிழ் மக்களின் கடந்த கால அரசியல் நடத்தை தமிழ்த்தேசியத்தின் முகப்பிலேயே அணி திரட்டப்பட்டுள்ளமையையே உறுதிசெய்கின்றது. கடந்த பொதுத்தேர்தல்களில் தமிழ் மக்கள் தெளிவாக தெளிவாக இரு நடத்தையை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஒன்று, தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் நின்றே அரசியல் தெரிவுகளை மேற்கொண்டுள்ளார்கள். எந்தவொரு சின்னங்களுக்கும், கட்சிகளுக்கும் விசுவாகத்தை வெளிப்படுத்தியிருக்கவில்லை. தமிழ்த்தேசியத்திற்கே விசுவாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதன் சமீபத்திய வெளிப்பாடே ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கான ஆதரவு. இரண்டு, தமிழ் மக்கள் தேசிய இனமாக திரட்சியாக செயற்படுவதனையே உற்சாகமாக வரவேற்றுள்ளார்கள். 1976ஆம் ஆண்டு தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியமான தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு உயர்ந்தபட்சமாக 18 ஆசனங்களை வழங்கி இருந்தார்கள். 2004ஆம் ஆண்டு தமிழ் அரசியல் கட்சிகளின் ஐக்கியமான தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு உயர்ந்தபட்சமாக 22 ஆசனங்களை வழங்கி இருந்தார்கள். தமிழ் மக்கள் கொள்கை சார்ந்த அரசியல் பாரம்பரியத்தின் தெளிவாக இருந்துள்ளார்கள். கடந்த காலங்களிலிருந்து நிகழ்கால முடிவுகளையும் தவறாக எடுத்ததில்லை. தமிழ் மக்களின் பாரம்பரியம் தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்ததாகவே அமைகின்றது. நிகழ்காலம் இல்லாதவர்களும், செயற்பாடுகள் அற்றவர்களுமே கடந்தகால வரலாற்றையும் சின்னத்தையும் காவிக்கொண்டு பரப்புரை செய்கின்றார்கள். இதனை தமிழ் மக்கள் சரியாக பகுப்பாய்ந்து தமது அரசியல் பிரதிநிதிகளை செய்வதே தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கக்கூடியதாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தமிழ் அரசியல் இருப்பை பாதுகாக்க தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள் போட்டி தவிர்ப்பை பேணுவார்களா! -ஐ.வி.மகாசேனன்-