ஜனாதிபதியின் கச்சதீவு விஜயமும் விளைவற்ற ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்பும்! -ஐ.வி.மகாசேனன்-

செப்டெம்பர் முதல் வாரம் வடபுலத்திற்கான ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் விஜயம், உள்ளூர் அரசியலை மாத்திரமின்றி பிராந்திய அரசியலையும் நொதிப்படைய செய்துள்ளது. பிராந்திய நாடாகிய இந்திய செய்திகளிலும் அநுரகுமார திசநாயக்கவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் தலைப்புச் செய்தியாக மாறியிருந்தது. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க பதவியேற்று ஓராண்டு பூர்த்தியடைவதை மையப்படுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக செப்டெம்பர்-01அன்று யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த அநுரகுமார திசநாயக்க, அதனோர் பகுதியாக இந்தியாவோடு கடல் எல்லையை பகிரும் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியான கச்சதீவுக்கும் திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அண்மைக்காலமாகவே தமிழக அரசியலில் கச்சதீவு மீட்பு மைய விவாதமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியின் கச்சதீவுக்கான திடீர் விஜயமும் கச்சதீவை மையப்படுத்திய அரசியல் உரையாடலும் இந்திய அரசியல் தரப்புக்கான எதிர்வினையாகவே அவதானிக்கப்படுகின்றது. இக்கட்டுரை கச்சதீவுக்கான இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தை மையப்படுத்திய அரசியலை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு இந்தியாவின் தென்பகுதியில் தமிழ்நாட்டையும் வடக்கு இலங்கையையும் பிரிக்கும் பாக்கு நீரிணையில் சுமார் 285 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மக்கள் வசிக்காத தீவாகும். இன்னும் துல்லியமாகச் சொன்னால், இலங்கையின் நெடுந்தீவுக்கு தீவுக்கு தெற்கே 14.5கி.மீ தொலைவிலும், இராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே சுமார் 16கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. புனித அந்தோணியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கத்தோலிக்க அமைப்பைத் தவிர, இது தரிசு நிலமாகவே உள்ளது. குடிநீர் அல்லது உள்கட்டமைப்பு எதுவும் இல்லை. எனினும் இந்திய மற்றும் இலங்கையின் கடல் எல்லையை நிர்ணயம் செய்யும் எல்லையாக அமைந்துள்ளமையே தரிசு நிலத்தை மையப்படுத்திய அரசியல் முனைப்பை அதிகரித்துள்ளது. 

அண்மையில் தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரும் அரசியலுக்கு புதிய வருகையை உறுதிப்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மதுரையில் இடம்பெற்ற கட்சி மாநாட்டில் கச்சதீவு மீட்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்தினை முன்வைத்திருந்தார். 'எங்கள் தமிழக மீனவர்கள் 800 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அதைக் கண்டிக்க நீங்கள் பெரிதாக எதையும் செய்ய விரும்பவில்லை. ஒரு சிறிய காரியத்தைச் செய்தால் போதும். இந்த மக்கள் வசிக்காத தீவை (கச்சத்தீவு) இலங்கையிடமிருந்து மீட்டால் போதும். அப்போதுதான் நமது மீனவர்கள் இனிமேல் பாதுகாப்பாக இருக்க முடியும்' எனக் குறிப்பிட்டிருந்தார். விஜயின் மாநாட்டு கருத்துக்கு பதிலளித்த இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், 'கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. அது இலங்கைக்குச் சொந்தமான ஒரு தீவு. எனவே, அது ஒருபோதும் மாறாது. தென்னிந்தியாவில் தேர்தல்கள் நடைபெற உள்ளன, வேட்பாளர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் கட்டத்தில் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுவார்கள். இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் கூட, தேர்தல் மேடையில் இதுபோன்ற பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அந்தத் தேர்தல் மேடைகளில் கூறப்படும் அறிக்கைகள் எதையும் மாற்றாது. விஜய் ஒரு தேர்தல் பேரணியில் இந்த அறிக்கையை வெளியிட்டதை நான் பார்த்தேன். அதில் அதிக கவனம் செலுத்த வேண்டாம்' என்று கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் கருத்துக்கான பதிலில், 'இது வெறுமனவே தேர்தல் பிரச்சார அறிக்கை. இதில் கவனம் செலுத்த தேவையில்லை' என சாரப்பட ஊடகங்களிடம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஒரு வார காலப்பகுதிக்குள்ளேயே இலங்கையின் ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கான தனது விஜயத்தில், திட்டமிடலுக்குள் உள்வாங்கப்படாது கச்சதீவுக்கு திடீரென விஜயம் மேற்கொண்டுள்ளார். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரின் ஊடக செய்தியை கடந்து, இந்திய தமிழக அரசியலில் சர்ச்சைக்குரிய வாதமாக காணப்படும் கச்சதீவு விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உயர் கரிசணையையே உறுதி செய்கின்றது. இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் கச்சதீவு விவகாரம் முதன்மையான பேசுபொருளாகியது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச்-31(2024)அன்று தனது எக்ஸ் (ஓ) சமூக ஊடக பக்கத்தில், 'கச்சத்தீவை இலங்கைக்கு இழிவாக வழங்கியதற்காக காங்கிரஸைக் குற்றம் சாட்டி' பதிவிட்டார். இது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஒரு ஊடக சந்திப்பையும் நடத்தியிருந்தார். அதில், 'ஒரு தீர்வு கோரி, 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் முறையே மத்தியிலும் தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் கச்சத்தீவு குறித்து அலட்சியத்தைக் காட்டின. மேலும் இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்களின் உரிமைகளை சமரசம் செய்தன' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான முன்அனுபவங்களில் கச்சதீவை மையப்படுத்திய அரசியல் விவகாரம் இந்தியாவின் தமிழக அரசியலில் நிலையான அரசியல் சச்சரவாகவே அமைகின்றது. இதனை மையப்படுத்தியே நடிகர் விஜயின் உரையாடலின் தொடர்ச்சியாக கச்சதீவு தொடர்பான இலங்கை ஜனாதிபதியின் உரையும் செயலும் அமைந்துள்ள போதிலும், இது இந்திய அரசியல் தரப்புக்கு இலங்கை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கச்சதீவு சார்ந்த நிலைப்பாட்டை உறுதி செய்யும் செய்தியாகவே அமைகின்றது. தென்னிலங்கையின் அரசியல் கலாசார மரபான இந்திய எதிர்ப்புவாதத்தின் மையமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படையான ஜே.வி.பி கடந்த காலங்களில் செயற்பட்டிருந்தது. எனினும் தேர்தல் வெற்றிக்கு பின்னரான இலங்கை அரசாங்கமாக இந்தியாவுடன் அதிகம் சமரசத்தையே வெளிப்படுத்தியிருந்தார்கள். இது கடந்த கால ஜே.வி.பி தோழர்களிடம் நெருடலான அனுபவங்களை உருவாக்கியது. இந்த பின்னணியில் ஜே.வி.பியினருக்கு மீள தமது இலங்கை தேசியவாதத்தை உறுதிப்படுத்திக் கொள்ள இந்திய எதிர்ப்புவாத அரசியல் அவசியமாகின்றது. அதனையே கச்சதீவு விவகாரத்தில் இலங்கை ஜனாதிபதி பயன்படுத்தி கொண்டுள்ளாரா என்ற சந்தேகங்கள் பொதுவெளியில் காணப்படுகின்றது. இப்பின்னணியிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க யாழ்ப்பாண வளர்ச்சி திட்ட ஆரம்ப நிகழ்வொன்றில், 'நாடு முழுவதும் உள்ள கடல்கள் மற்றும் தீவுகளை பாதுகாப்பதாகவும், எந்தவொரு வெளிப்புற அழுத்தத்தையும் எதிர்ப்பதாகவும்' சபதம் செய்த பின்னர், கச்சத்தீவுக்கு ஒரு விரைவான, அறிவிக்கப்படாத விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கச்சதீவு விவகாரத்தில் இந்திய-இலங்கை உறவு கடந்த ஐந்து தசாப்தத்தில் எதிரான மாற்றத்தை பெற்றுள்ளது. 1976ஆம் ஆண்டு இலங்கை-இந்திய அரசுகளுக்கிடையில் கச்சதீவு நிலப்பகுதியின் ஆளுகை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வைப் பெறும் வகையில் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அதன் விளைவாக இந்திய அரசாங்கம் கச்சதீவு நிலப்பரப்பை இலங்கைக்கு சொந்தமானதாக உறுதி செய்து கொண்டது. இதன் பின்னாலான இந்திய வெளியுறவில் சீனா சார்ந்த இலங்கையின் நெருக்கம் கவனத்திற்குரியதாகும். இலங்கை-சீன உறவுக்கான அடித்தளம் 1960-1980களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலப்பகுதியை மையப்படுத்தியதாகவே அமைகின்றது. குறிப்பாக சீனாவுடனான 1961ஆம் ஆண்டு அரிசி-இறப்பர் ஒப்பந்தம் மற்றும் 1961, 1972களில் ஸ்ரீமாவோவின் சீன விஜயமும் வரவேற்பும் அன்றைய காலப்பகுதியில் இலங்கையின் பிராந்திய அரசியலில் அதிக கவனக்குவிப்பை பெற்றிருந்தது. 1962ஆம் ஆண்டு இந்திய-சீன எல்லைப் போருக்கு பின்னர் இந்திய-சீன உறவு முழுமையாக சீர்குலைந்திருந்தது. இத்தகைய காலப்பகுதியின் ஆரம்ப தசாப்தங்களில் இந்தியாவின் கோடிப்புற தீவு நாடான இலங்கை சீனாவுடன் அதிக நட்பு பாராட்டுவது இந்தியாவுக்கு சவாலாக அமையும் என்ற கருத்துக்கள் இந்திய வெளியுறவுக்கொள்கைக்குள் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்தப்பின்னணியிலேயே இந்திய வரலாற்றின் மகத்தான அரசியல் இராஜதந்திரி சாணக்கியர் வலியுறுத்தும் இராஜதந்திரத்தின் ஒரு பகுதியான 'தானத்தை' கருத்திற்கொண்டு, கச்சதீவை இலங்கைக்கு சொந்தமானதாக ஏற்றுக்கொள்வதனூடாக இலங்கையை குறிப்பாக ஸ்ரீமாவோ அரசாங்கத்தை தம் பக்கம் அரவணைத்துக்கொள்ளும் வெளியுறவுக்கொள்கை நோக்கத்துடனேயே கச்சதீவு ஒப்பந்தமும் 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1970களில் சீனாவுடனான இலங்கையின் நெருக்கத்தை மடைமாற்றுவதற்காக வழங்கப்பட்ட கச்சதீவு தரிசு நிலப்பகுதிக்குள் 2020களில் சீன முதலீட்டுக்கான முனைப்புக்களை மேற்கொள்கின்றது. கச்சதீவு இந்தியாவிற்கு அரசியல் நெருக்கீட்டு பிராந்தியமாக மாறியுள்ளது. இந்தப் பின்னணியில் இரு நாட்டு அரசியல் தரப்பும் கச்சதீவு விவகாரத்தை ஒற்றை தளத்தில் அரசியல் இலக்குடனேயே அணுகுகின்றார்கள். இரு நாட்டு அரசியல் தலைவர்களதும் உரையாடல் அதனையே உறுதி செய்கின்றது.

கச்சதீவு அரசியல் விவகாரத்தின் மையத்தில் ஒரு மொழி பேசும் இரு சகோதர சமுக குழுக்களின் உறவின் நெருக்கடியே காணப்படுகின்றது. இதனை அரசியலுக்காக பயன்படுத்தி இரு தரப்பு அரசியல்வாதிகளின் செயற்றிறனற்ற வீர வசனங்களினூடாக அச்சமுக குழுக்களிடையேயான பிணக்கையே அதிகரித்து வருகின்றார்கள். கச்சதீவு இந்திய-இலங்கையின் கடல் எல்லையை தீர்மானிப்பதாக அமைகின்றது. இங்கு கச்சதீவை மையப்படுத்தி எழுந்துள்ள பிணக்கு, எல்லை தாண்டி வரும் இந்திய தமிழக மீனவர்களை இலங்கை இராணுவப்படை கைது செய்வதும் சுட்டுக்கொலை செய்வதும் இந்திய மீனவ சமுகத்தின் குற்றச்சாட்டாக அமைகின்றது. மறுதளத்தில் ஈழத்தமிழ் மீனவர்கள் இந்திய முதலாளிகளின் பெரும் இழுவிசைப் படகுகள் எல்லை தாண்டி வந்து வளங்களை சுரண்டுவதனால் கடல் வளங்கள் அழிக்கப்படுவதனை குற்றச்சாட்டாக முன்வைக்கின்றார்கள். இப்பிரச்சினையை இறையாண்மை பிரச்சினையை கடந்து, இரு சமுகங்களின் பிரச்சினையாக அணுகுவதனூடாகவே சுமுகமான தீர்வினை நோக்கி நகர முடியும். கடந்த காலங்களில் 1980-2009ஆம் ஆண்டுகளில் இரு தரப்பு மீனவ சமுகங்களிடையே முரண்பாட்டை இனங்காண முடியவில்லை. பாரியளவில் இணக்கமான செயற்பாடுகளையே அவதானிக்க முடிந்தது. இதன் பின்னணியில் இறையாண்மை கடந்து இரு சமுகங்களின் பிரச்சினையான அணுகப்பட்டதன் விளைவு முன்னுதாரணமாக அமைகின்றது. எனினும்  சமகாலத்தில் இலங்கை-இந்திய அரசியல் தலைவர்களின் இறையாண்மை உரையாடல்கள் அன்றாடம் துன்பப்படும் மக்களின் அடிப்படை குறைகளை நிவர்த்தி செய்யும் நேரான இலக்குகளை கொண்டதாக காணப்படுவதில்லை.

இந்தியாவின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் ஈழத்தமிழ் மீனவர்களின் குறைகளை ஏற்றுக்கொள்வதாகவே செய்தியாக்கங்கள் அமையப்பெறுகின்றது. நிருபமா சுப்பிரமணியன் கச்சதீவுக்கான இலங்கை ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான செய்தியிடலில், 'பிரச்சினையின் மையத்தில் நீரின் இருபுறமும் உள்ள தமிழ் மீனவர்களுக்கு இடையே உள்ள பற்றாக்குறை வளங்கள் குறித்த மோதல் உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டு மீனவர்களின் நீடிக்க முடியாத நடைமுறைகளான அடிமட்ட இழுவை மீன்பிடித்தல், பர்ஸ் சீன் மற்றும் இரட்டை வலை மீன்பிடித்தல் ஆகியவை பாக்கு நீரிணையின் இந்தியப் பகுதியில் உள்ள கடல் வளங்களைத் தவிர மற்ற அனைத்தையும் அழித்துவிட்டன. 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக யாழ்ப்பாண மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாததால் அதிக வளங்களைக் கொண்ட இலங்கைப் பக்கம் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது' எனக்குறிப்பிட்டுள்ளார். அவ்வாறே மீரா ஸ்ரீனிவாசன், 'பாக்கு நீரிணையின் இருபுறமும் உள்ள தமிழ் பேசும் ஏழை மீனவர்களைப் பாதிக்கும் இந்த மோதல், தமிழ்நாட்டு படகு உரிமையாளர்கள் அழிவுகரமானதாகக் கருதப்படும் கீழ் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை நிறுத்தத் தயங்குவதால் தொடர்ந்து நீடிக்கிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, பேரழிவு தரும் போரின் தாக்கத்தை சமாளிக்க போராடும் வடக்கு இலங்கை மீனவர்கள், தங்கள் இந்திய சகாக்களை இந்த நடைமுறையைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். இது அவர்களின் மீன்பிடித் தொழிலை வெகுவாகக் குறைத்துள்ளது' எனப்பதிவு செய்துள்ளார். ஊடகர்கள் துல்லியமாக பிரச்சினையை அடையாளப்படுத்தியுள்ளனர். 

எனவே, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் கச்சதீவுக்கான நிகழ்ச்சி நிரலற்ற விஜயம் ஜே.வி.பியின் செயலற்ற இந்திய எதிர்ப்புவாதத்தின் தொடர்ச்சியான ஒழுங்கையே குறிக்கின்றது. இது ஒரு வகையில் ஆழமான விளைவுகற்ற தன் சார்பானவர்களை குளிர்விக்கும் அரசியல் செயற்பாடாகவுமே பார்க்கக்கூடியதாக அமைகின்றது. இது எந்தளவு ஜே.வி.பியின் கடந்தகால இந்திய எதிர்ப்புவாத மனநிலையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்குள் உள்வாங்கும் என்பதெல்லாம் சந்தேகங்களை உருவாக்குவதாகவே அமைகின்றது. இலங்கை அரசாங்கம் இந்திய அரவணைப்புக்குள் பயணிப்பது தவிர்க்க இயலாத புவிசார் அரசியல் விளைவிலானதாகும். தமிழக இலங்கை அரசியல் தரப்பின் வீரவசனங்கள் இரு தரப்பு மீனவ சமுகங்களை தீர்வற்று மேலும் முரண்பாட்டுக்குள் இழுத்தடிக்கும் தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாகவே அமைகின்றது. இரு தரப்பு மீனவ சமுகங்கள் மீதும் அக்கறை கொண்டுள்ளதாக காண்பிக்க முனையும் இரு தரப்பு அரசியல் தரப்புகளும், இரு ஏழை சமுகங்களின் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் தூய எண்ணங்களை கொண்டிருப்பின், இறையாண்மை உரையாடலை தவிர்த்து சமுக பிரச்சினையின் அடிப்படைகளை களைய வினைத்திறனான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். பயனற்ற கச்சதீவு தரிசு நிலம் எந்நாட்டிடம் இருக்க வேண்டும் என்பதில் இரு மீனவ சமுகங்களும் முரண்படுவதில்லை. பற்றாக்குறை வளமும் அதனை அழிக்கும் வகையிலான முதலாளிகளின் செயற்பாடுகளுமே பிணக்குக்கான அடிப்படையாகும். அதனை களைவதே அடிப்படைத் தேவையாகும்.  


Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-