அநுரகுமார திசநாயக்க ஒருவருடத்தில் தூசு தட்டியுள்ள நிர்வாக மாற்றங்களும் ஆழப்புதைத்துள்ள பேரினவாத அரசியல் கலாசாரமும்! -ஐ.வி.மகாசேனன்-
செப்டெம்பர்-21, 2024அன்று அநுரகுமார திசநாயக்க இலங்கையின் 9வது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டார். அவ்அலையின் தொடர்ச்சியாகவே நவம்பர்-2024இல் நடைபெற்ற 16வது பாராளுமன்றத்துக்கான தேர்தலிலும் அநுரகுமார திசநாயக்க தலைமையிலான ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டது. செயல்களை கடந்து ஜனாதிபதி தேர்லுக்கு முன்பாகவும் தேர்தல் வெற்றிகளுக்கு பின்னராகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தம்மை இலங்கை அரசியல் கலாசார மாற்றத்தின் அடையாளமாகவே தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஒரு சில தளங்களில் குறிப்பாக நிர்வாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கடந்த கால நிர்வாக சலுகைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், போதைப் பொருட்களுக்கு எதிரான நடடிவடிக்கைகள் என சில மாறுதல்களை பொதுமக்களாலும் இனங்காணக்கூடியதாகவே உள்ளது. எனினும் அரசியல் கலாசார மாற்றத்திற்குரிய இயல்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த ஓராண்டுகளில் கொண்டுள்ளதா என்பதில் அரசியல் ஆய்வுத்துறை மத்தியில் பலமான கேள்விகளே காணப்படுகின்றது. இக்கட்டுரை அநுரகுமார திசநாயக்கவின் கடந்த ஓராண்டு கால ஆட்சி இயல்பை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
2021/2022களில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையும் அதனைத் தொடர்ந்து உருவாகிய இளைஞர்களின் அரகலய கிளர்ச்சியையும் தந்திரோபாயமாக கையாண்டிருந்த அரசியல் ஆளுமையாக அநுரகுமார திசநாயக்க காணப்படுகின்றார். கடந்த காலங்களிலும் தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் மற்றும் தொழிற்சங்கங்களில் தேசிய மக்கள் சக்தியின் ஆரம்ப வடிவமான ஜே.வி.பி-யின் ஆதிக்கமே காணப்படுவதுண்டு. எனினும் அவ்ஆதிக்கத்தை ஆள்வதற்கான வாக்குகளாக மாற்றுவது பெரும் இடராக நீடித்து வந்திருந்தது. எனினும் அரகலய உருவாக்கிய அலையில் அநுரகுமார திசநாயக்க வெகுஜன அரசியல் நாயகனாய் பொதுமக்கள் பார்வைக்கு முன்வந்தார். அத்துடன் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் பலவீனங்களும் ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசநாயக்கவின் வெற்றியை உறுதி செய்தது. குறிப்பாக பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி பொருளாதார நெருக்கடி மற்றும் அரகலயவின் விரோதங்களை உள்வாங்கிக்கொண்டது. அவ்வாறே ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனரஞ்சக தன்மையற்றவராக காணப்படுகின்றார். இந்நிலையிலேயே இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முதல் முறையாக இரண்டாம் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் சூழலுக்கு நகர்த்தப்பட்டதுடன், அநுரகுமார திசநாயக்கவின் வெற்றியும் அறுதிப் பெரும்பான்மையை இழந்து சாதாரண பெரும்பான்மையுடனேயே (42.31%) வெற்றி கொள்ள முடிந்தது.
இவ்வெற்றி அநுரகுமார திசநாயக்க தொடர்பான விம்பத்தை பெரிதாக்க உதவியது. இலங்கையின் அரசியல் கலாசாரம் நீண்டகாலமாக தனிமனித வழிபாட்டை முன்னிறுத்தியதாகவே அமைந்துள்ளது. குறிப்பாக 1994-2005களில் இலங்கை சுதந்திர கட்சியின் வெற்றியில் சந்திரிக்க பண்டாரநாயக்காவின் முக்கியத்துவமும், 2018களின் பின்னர் பொதுஜன பெரமுன எனும் புதிய கட்சியின் இமாலய வெற்றிகளில் மகிந்த ராஜபக்சவின் முக்கியத்துவமும் இதற்கான எடுத்துக்காட்டுகளாகும். இவ்வரிசையிலேயே 2024-2025ஆம் ஆண்டுகளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி அநுரகுமார திசநாயக்க எனும் தனிமனித விம்பம் உருவாக்கியதாகவே அமைகின்றது. அதுமட்டுமன்றி ஜே.வி.பி நீண்டகாலமாக இலங்கையின் பேரினவாத அரசியலின் பாதுகாவலான செயற்பட்டுள்ளது. கடந்த வார இப்பத்தி கட்டுரையிலும் ஜே.வி.பியின் இனவாத பாதுகாவலன் அரசியலுக்கான சான்று விளக்கப்பட்டிருந்தது. இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் பேரினவாதமும் அடிப்படையானதாகும். தேசிய மக்கள் சக்தி தேர்தல் பிரச்சாரங்களில் பேரினவாத கருத்தியல்களை முன்னிறுத்தாத போதும், ஜே.வி.பியின் கடந்த கால பேரினவாத அரசியலுக்கு பொறுப்புக்கூறி அதனை மறுக்கவும் தயாரில்லை. இது ஆழமாக விதைக்கப்பட்ட பேரினவாத ஆதரவை பாதுகாத்துக் கொள்வதற்கான உத்தியாகவே அமைந்திருந்தது குறிப்பிடத்தது. ஏனெனில், பேரினவாதத்தை மறுக்கும் மனமாற்றம் அநுரகுமார திசநாயக்கவிற்கும் ஜே.வி.பியினருக்கும் ஏற்பட்டிருப்பின், துணிந்து கடந்த கால இனவாத செயற்பாடுகளுக்கு பொறுப்புக்கூறியிருக்க வேண்டும். எனினும் மௌனம் ஒருவகையில், அநுரகுமார திசநாயக்கவின் வெற்றியில் பேரினவாத அரசியல் கலாசாரத்தின் தாக்கத்தை உள்வாங்கியுள்ள உத்தி என்பது மறுக்கமுடியாததாகும். தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திய குறிப்பிடத்தக்க அரசியல் கலாசார மாற்றம் என்பது, சுதந்திர இலங்கையில் ஏழு தசாப்தங்களாக நீடித்திருந்த ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை சுதந்திர கட்சி மற்றும் அவற்றின் விழுதுகளின் அரசியலை தோற்கடித்து, புதியதொரு அரசியல் இயக்கத்திற்கு அதிகாரத்தை பாரப்படுத்தியுள்ளது. எனினும் தேர்தல் முடிவு கொள்கை மாற்றம் அல்லது தேசிய மக்கள் சக்தி பிரச்சாரப்படுத்தும் அரசியல் கலாசார மாற்றத்தை உருவாக்கியுள்ளதா என்பது நுணுக்கமாக அவதானிக்க வேண்டி உள்ளது.
முதலாவது, இலங்கையில் அரசியல் மாற்றம் பற்றிய தேவைப்பாடு 2015இலிருந்து உணரப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின உருவாக்கம், 2019ஆம் ஆண்டு பொதுஜன பெரமுனவில் அரசியல் புதுமுகமான கோத்தபாய ராஜபக்சவை தெரிவு செய்து கொண்டமை அதனையே குறிக்கின்றது. 2010-2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது நிர்வாக காலப்பகுதியிலிருந்து, தென்னிலங்கை நாட்டின் அரசியல் ஸ்தாபனத்தின் மீது பெருகிய முறையில் அதிருப்தி அடைந்தனர். ஒருவகையில் அரசியலமைப்பு ரீதியாக ஜனநாயகம் சவாலுக்குட்படுவதையும், ஊழலால் நிர்வாகம் பலவீனப்படுவதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறான பின்னணியில் பழமையை சீர்செய்ய முன்வந்தனர். 2019ஆம் ஆண்டு கோத்தபாய ராஜபக்சவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள், பழைய அரசியல் காவலர்களிடமிருந்து பிரிந்து செல்லும் விருப்பத்தின் அடையாளமாகும். 2022ஆம் ஆண்டில் கோத்தபாயவின் ஆட்சி பேரழிவில் முடிவடைந்த போதிலும், சராசரி இலங்கையர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசாவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பழைய காவலர்களைப் போலவே வழக்கமான அரசியலுக்குத் திரும்பத் தயாராக இல்லை. மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியதால் வாக்காளர்கள் அநுரகுமார திசாநாயக்கவைத் தேர்ந்தெடுத்தனர். அநுரகுமார திசநாயக்கவின் மாற்றம் என்பது அரசை சுத்தம் செய்தல், ஊகங்களை விட உற்பத்திக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பொதுப் பதவி என்பது ஒரு பொது நம்பிக்கை என்ற உணர்வை மீட்டெடுப்பது போன்ற நிர்வாக சீர்திருத்தங்களையே முதன்மைப்படுத்தியது. ஐ.நாவின் 80வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அநுரகுமார திசநாயக்க, 'எங்கள் மக்கள் இருளை விட ஒளியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரு செழிப்பான தேசம், ஒரு அழகான வாழ்க்கை என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையை நிறைவேற்ற, ஊழலற்ற நிர்வாகம், வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை நிறுவுவதில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். மேலும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிலும் நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளோம். இந்த இலக்குகளை நோக்கி படிப்படியாக நகர்ந்து வருகிறோம்' எனக்குறிப்பிட்டிருந்தார். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் மாற்றம் அல்லது அரசியல் கலாசார மாற்றம் என்பது வெறுமனவே நிர்வாக மாற்றத்தையே குறிக்கின்றது. தென்னிலங்கை மக்களும் இத்தகைய வாக்குறுதிகளாலேயே ஈர்க்கப்பட்டனர்.
இரண்டாவது, பிரதான நீரோட்டக் கட்சிகள் மீதான விரக்தி அலையில் சவாரி செய்து, புதிய அரசியல் கலாச்சாரத்தை உறுதியளித்த அநுரகுமார திசாநாயக்க, பல வருட பொருளாதார நெருக்கடி மற்றும் உயரடுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளித்த பிறகு, பொறுப்புக்கூறல், ஊழல் எதிர்ப்பு மற்றும் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தின் முகமாக தன்னைக் காட்டிக் கொண்டார். எனினும் இவற்றின் செயற்பாட்டிலும் தெளிவான செயற்பாட்டு வரைபை கடந்த ஒரு வருடத்தில் வெளிப்படுத்த தவறியுள்ளார் என்ற விமர்சனம் பொதுக்கணிப்பில் காணப்படுகின்றது. எனினும் இதுவொரு வகையில் நிதானமாக நகர்த்தப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியல் மூலதனம் விரைவான நடவடிக்கையை அனுமதிக்கும் என்றாலும், அவர்கள் மெதுவாக நகர்வதைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட 63 பேர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுவொரு வகையில் உயரடுக்கினரின் ஊழலுக்கான ஆதாரங்களை திரட்டும் உத்தியாகவே அமைகின்றது. கடந்த காலங்களில் குறிப்பாக ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தில் இழைக்கப்பட்ட தவறான அணுகுமுறையை சீர்செய்வதாகவே அமைகின்றது. எனினும் அரசாங்கம் தேர்தல் பிரச்சாரங்களில் ஆதாரங்கள் காணப்படுவதாக தேர்தல் பிரச்சார மேடைகளில் முன்வைத்த கோவைகள் தொடர்பில் மக்களிடம் விசனங்களை உருவாக்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகள் கடந்த கால அரசாங்கங்கள் குறிப்பாக இன்றைய எதிர்க்கட்சியினரின் பொறுப்புக்கூறலை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றதேயன்றி, இன்றைய ஆளுந்தரப்பின் சமகால மற்றும் கடந்த காலத்திற்கு எவ்வகைய பொறுப்புக்கூறலோ விசாரணைகளோ அமைவதில்லை. முன்னாள் சபாநாயகரின் கல்வித் தகைமைசார் முரண்பாடு தேசிய மக்கள் சக்தியின் சமகால பொறுப்புக்கூறலற்ற தன்மைக்கான முதல் நிகழ்வாகும். இவ்அணுகுமுறை, சில வாக்காளர்களை விரக்தியடையச் செய்ததாகத் தெரிகிறது.
மூன்றாவது, பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பிலான தேர்தல் பிரச்சாரங்களும் நடைமுறைகளும் அநுரகுமார திசநாயக்க அரசாங்கத்தின் மீதான முதன்மையான எதிர் விமர்சனமாக அமைகின்றது. 2022ஆம் ஆண்டு நெருக்கடியிலிருந்து இன்னும் தத்தளிக்கும் பொருளாதாரத்தின் கடுமையான யதார்த்தங்களுடன் அதிக எதிர்பார்ப்புகள் மோதுகின்றன. இந்த பதற்றத்தை அனுரா மீட்டர் என்ற புதிய ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பு தெளிவாகப் படம்பிடித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் பொருளாதார சீர்திருத்தம் உட்பட 22 முக்கிய கூற்றுக்களில் ஒன்று மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த பின்னணியில், 'இந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அதே பாதையில் செல்கிறது' என்ற குற்றச்சாட்டை எதிர்க்காட்சிகள் சான்றுடன் முன்வைக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்கவின் சந்தை சார்பு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சமூக, பொருளாதார சீர்திருத்த தளத்திற்கு இடையிலான வரலாற்றுப் போட்டியைக் கருத்தில் கொண்டு, இக்குற்றச்சாட்டு வலுவடைகின்றது. கோத்தபாய ராஜபக்சவால் தொடங்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்கவால் தொடரப்பட்ட அதே ஐ.எம்.எப் ஆதரவுடன் கூடிய பொருளாதார மீட்புத் திட்டத்தைத் தொடர்வதற்காக, அநுரகுமார திசாநாயக்கவையே பெரும்பாலான விமர்சனங்கள் தனிப்பட்ட முறையில் குறிவைக்கின்றன. ஏனெனில் தேர்தல் பிரச்சாரங்களில், 'உலகில் எந்த நாடும் ஐ.எம்.எப்-க்குச் செல்வதன் மூலம் காப்பாற்றப்படவில்லை' எனத் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டியிருந்தார். எனினும் ஆட்சியதிகாரத்தில் ஐ.எம்.எப்-ஐ கடுமையாக புகழ்வதும் முரணாக அமைகின்றது.
நான்காவது, அநுரகுமார திசநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் சொல் மற்றும் செயல் முரண்பாட்டை அநுரா மீட்டர் (https://manthri.lk/en/anura-meter) எனும் இணைய ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது. Manthri.lk மற்றும் Verité Research ஆகியவற்றின் பொது முயற்சியான அனுரா மீட்டர், அனுரகுமார திசநாயக்கவின் 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையின் மிக முக்கியமான 22 விடயங்களை கண்காணிக்கின்றது. சமுக பாதுகாப்பு (07), பொருளாதாரம்(03), ஆட்சியியல் (07), ஊழல் எதிர்ப்பு (02), சட்டம் மற்றும் ஒழுங்கு (03) எனும் தலைப்புக்களில் தேர்தல் அறிக்கையின் முக்கிய விடயங்கள் 22இனை கண்காணித்துள்ளது. இக்கண்காணிப்பு முடிவில், PAYE வரி முறைமையில் ஏற்படுத்தப்பட்ட திருத்தம் ஒன்றே முழுமையாக செயற்படுத்தப்பட்டதாகும். 35சதவீனமானவை பகுதியளவில் செயற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 14சதவீதம் ஆரம்ப புள்ளி இடப்பட்டுள்ளது. அதேவேயை அரைவாசிக்கும் அண்மையாக 45சதவீதமானவை எவ்வித சமீபத்திய பொதுப் புதுப்பிப்புக்கள் இல்லை என்பதை அநுரா மீட்டர் உறுதி செய்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்தல், முழுமையான பொதுக் கடன் தணிக்கை நடத்துதல் மற்றும் ஐ.எம்.எப் கட்டமைப்பிற்கு மாற்றாக ஒன்றை வழங்குதல் போன்ற மிக முக்கியமான கட்டமைப்பு உறுதிமொழிகள் இன்னும் முடங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை இரத்து செய்வதற்கான வரைபு செப்டெம்பர் முதல் வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு செல்ல முன்னர் தெரிவித்தார். எனினும் செப்டெம்பர் முடிந்து ஒக்டோபர் ஆரம்பிக்க போகின்றது எனினும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித முன்னேற்றங்களும் காணப்படவில்லை.
ஐந்தாவது, இலங்கையின் அரசியல் கலாசார மாற்றத்தின் உறுதிப்பாடு நீடித்த அமைதியில் தங்கியுள்ளது. நீடித்த அமைதி இலங்கையின் தேசிய கேள்வியாக உள்ள தேசிய இனப்பிரச்சினை தீர்விலேயே தங்கியுள்ளது. அதற்கு கடந்த கால அவநம்பிக்கைகளை களைந்து இணைந்து வாழ்வதற்கு அரசாங்கம் அதிகார பகிர்வினூடாக நம்பிக்கை அளிப்பதே உசிதமானதாகும். இதுவே தமிழ் மக்களின் அபிலாசையாகவும் அமைகின்றது. எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் எச்சந்தர்ப்பத்திலும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி ஆரோக்கியமான உரையாடலை முன்னகர்த்தவில்லை. அதிக சந்தர்ப்பங்களில் இலங்கையில் இனப்பிரச்சினையை நிராகரித்தே உரையாடியுள்ளார்கள். அநுரகுமார திசநாயக்க 80வது ஐ.நா கூட்டத்தொடரில், 'மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் இனவெறி மற்றும் மத தீவிரவாதத்தை எதிர்க்க நம் மனசாட்சியை எழுப்ப வேண்டும் என்று நான் நம்புகிறேன். அமைதிக்காகப் பேசுவதற்கு நாம் துணிச்சலாக இருக்க வேண்டும்' எனக்குறிப்பிட்டிருந்தார். இது நிதர்சனமான எதார்த்தமாகும். அமைதிக்காக பேசுவதற்கு துணிச்சலாக இருக்க வேண்டும். எனினும் அநுரகுமார திசநாயக்க கடந்த கால இனவாதத்துக்கு எதிராக முன்னரும் பின்னரும் துணிச்சலாக பேச மறுப்பது சொல்லுக்கு முரணான செயலாகவே அமைகின்றது. அல்லது இலங்கையின் நீடித்த அமைதிக்கு அநுரகுமார திசநாயக்க அரசாங்கமும் உறுதியான விருப்பங்கள் இல்லை என்பதையே புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
எனவே, அநுரகுமார திசநாயக்கவின் ஒரு வருட ஆட்சி தென்னிலங்கை மக்களின் எதிர்பார்க்கை மாற்றமான நிர்வாக மாற்றத்துக்கான முதல் படியை எடுத்து வைத்துள்ளது. மாறாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரச்சாரப்படுத்தும் அரசியல் கலாசார மாற்றத்தை உருவாக்கும் எத்தகைய ஈடுபாட்டையும் அநுரகுமார திசநாயக்கவின் ஒரு வருட ஆட்சிக் காலப்பகுதி கொண்டிருக்கவில்லை. அநுரகுமார திசநாயக்கவின் ஜனாதிபதி தேர்தல் வெற்றி ஒரு வகையில் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள பேரினவாத அரசியலால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவ்அடிப்படையிலேயே தேர்தல் வெற்றி, உறுதியான அரசியல் முடிவுகளுக்கு வாய்ப்புக்களை வழங்கியுள்ள போதிலும், பேரினவாதத்தை எதிர்க்கும் உறுதியான அரசியல் செயற்பாட்டை அநுரகுமார திசநாயக்க செய்ய மறுத்து வருகின்றார். அதன் வெளிப்பாடே தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரை விவகாரத்தில், ஆக்கிரமிப்பு மேற்கொண்டுள்ள பௌத்த பிக்குவிடம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நீதி கேட்குமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கூறி வருகின்றது. இது பேரினவாத அரசியல் கலாசாரத்தை தொடர்ச்சியாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஆழமாக பேணுவதையே உறுதி செய்கின்றது.
Comments
Post a Comment