முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கமும் ஜே.வி.பியின் கடந்த கால ஆதரவும்! -ஐ.வி.மகாசேனன்-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமை நீக்கப்பட்டுள்ள விவகாரமே கடந்த ஓரிரு வாரங்களாக இலங்கை செய்திகளில் பிரதான பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக யுத்த வெற்றியூடாக தென்னிலங்கையில் நட்சத்திர நாயகனான, மகாவம்ச மனநிலையின் தொடர்ச்சியாக துட்டகைமுனுவின் பிரதிமையாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச விஜேயராமவிலிருந்து தங்கலக்கு இடம்பெயர்ந்தமை முதன்மையான செய்தியாகவும் அரசியல் விவாதமாகவும் மாறியிருந்தது. இதுவொரு வகையில் பேரினவாத தரப்புக்களை மீள மகிந்த ராஜபக்ச தலைமையில் ஒன்றுதிரட்டக்கூடிய வாய்ப்ப்புக்களை பொதுஜன பெரமுன தேட வழிவகுத்துள்ளது. மறுமுனைமுனையில் தேசிய மக்கள் சக்தி தமது இயல்பான வினைத்திறனான விளைவற்ற விளம்பர அரசியல் யுக்தியை தொடருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான ஜனத விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) உட்பட இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறலுக்குரிய பல விடயங்கள் இலங்கை அரசியலில் நிரவி காணப்படுகின்றது. எனினும் கடந்;த ஓராண்டுகளில் அதற்குரிய வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்காது வெறுமனவே ஜனரஞ்சக ரீதியாக ஈர்க்கக்கூடிய விடயங்கை முன்னிறுத்தியதாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சி காணப்படுகின்றது. இக்கட்டுரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கம் தொடர்பான அரசியல் பார்வையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் விதவைகள் அனுபவித்த பல சலுகைகளை ஒழிக்க முயன்ற முன்னாள் ஜனாதிபதி உரிமைகள் ரத்துசெய்தல் மசோதா, செப்டெம்பர்-10அன்று 150 வாக்குகள் பெரும்பான்மையால் சபையால் நிறைவேற்றப்பட்டது. புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மட்டுமே இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்த ஒரே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அரசாங்கத்துடன் இணைந்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார். ஏனைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நேரத்தில் சபையில் இல்லை. முன்னாள் ஜனாதிபதி அல்லது முன்னாள் ஜனாதிபதியின் விதவைக்கு வழங்கப்படும் எந்தவொரு குடியிருப்பு அல்லது மாதாந்திர கொடுப்பனவு, மாதாந்திர செயலக கொடுப்பனவு, உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் பிற வசதிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் விதவைக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை இந்தச் சட்டம் இரத்து செய்கிறது. எனினும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் கிடைக்கும். அரசியலமைப்பின் பிரிவு 36, 'அத்தகைய ஓய்வூதியம், முந்தைய சேவையின் மூலம் அத்தகைய நபர் பெறும் வேறு எந்த ஓய்வூதியத்திற்கும் கூடுதலாக வழங்கப்படும்' என்று கூறுகிறது.
இலங்கை போன்ற சிறிய தீவு நாட்டின் ஆட்சியாளர்கள் மன்னர்களாக வாழ்வது, பொருத்தமற்றதாகவே காணப்படுகின்றது. இது தொடர்பில் மக்களிடம் கடுமையான விசனங்கள் காணப்படுகின்றது. குறிப்பாக 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலயவிலும் ஆட்சியாளர்களின் மன்னர் வாழ்க்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சமகாலத்தில் தென்னாசிய நாடுகளில் அதிகரித்துவரும் Gen-Z கலகங்கள் ஆட்சியாளர்களின் எதேச்சதிகாரம் என்ற போர்வையிலான மன்னர் வாழ்வை நிராகரிப்பதாகவும் சாமனிய வாழ்க்கைக்கான அழைப்பாகவே அமைகின்றது. இலங்கையில் அரகலயவில் துரத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தென்கிழக்காசியாவிற்கு விஜயம் செய்து. அரச நிதியில் உல்லாசமாக இருந்துவிட்டு பாதுகாப்பாக நாடு திரும்பிருயிருந்தமையும் இலங்கையின் அரசியலமைப்பு ரீதியான அளிக்கப்பட்ட மன்னர் வாழ்வுசார் பாதுகாப்பு அடிப்படையானதாகவே அமைகின்றது. இவ்வாறான பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் சிறப்புரிமையை சட்டரீதியாக நீக்கியுள்ளமை பாராட்டத்தக்கதும் வரபேற்புக்குரிய விடயமுமாகும்.
ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவித்த சிறப்பு சலுகைகளை ஒழிப்பதாக கட்சியின் தேர்தல் அறிக்கையில் 'ஒரு செழிப்பான தேசம், ஒரு அழகான வாழ்க்கை' என்ற அறிக்கையில் உறுதியளித்திருந்தது. எனவே, மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதன் மூலம், அரசாங்கம் பிரச்சாரப் பாதையில் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை மட்டுமே நிறைவேற்றுகிறது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினர். அரசாங்கத்திற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, 'எங்கள் அரசாங்கம் நாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு' என்று கூறினார்.
எனினும் ஜே.வி.பி பரிணாமமாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிதாய் சாதித்ததாகவும், தாம் அப்ழுக்கற்றவர்களாகவும் சித்தரிக்க அல்லது விளம்பரப்படுத்துவது கடந்த காலத்தின் தமது ஒரு பக்கத்தை ஜே.வி.பியினர் மூடி மறைக்கும் செயலாகவே காணப்படுகின்றது. இன்று மன்னர்களாக, பேரினவாதிகளாக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள குழுக்களின் பாதுகாவலராக தலைமையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காட்ட முயலும் ராஜபக்சாக்களின் பாசறையில் பிரதான சக்தியாக ஜே.வி.பி கடந்த காலங்களில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஜே.வி.பி நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச 2005இல் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், 'பிரதமர் (மகிந்த ராஜபக்ச) மட்டுமே எங்கள் பரிசீலனைக்கு தகுதியான வேட்பாளர் என்று நாங்கள் பாதுகாப்பாகச் சொல்ல முடியும்' என்று கூறினார். 2010களுக்கு பின்னரான பாராளுமன்ற உரையொன்றிலும் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, '2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தாங்களே (ஜே.வி.பி) வெற்றி பெறச்செய்ததாக' தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் மன்னர்களை உருவாக்குவதில் ஜே.வி.பி பிரதான சக்தியாக இருந்துள்ளது.
மேலும், இலங்கையின் கடந்த கால இனவாத செயற்பாடுகளுக்கும் ஜே.வி.பிக்கு பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. சமகாலங்களில் தேசிய மக்கள் சக்தியுடன் நெருங்கி பழகும் முன்னாள் ஜே.வி.பி தோழரும் எழுத்தாளருமாகிய என்.சரவணன் YouTube Channel ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், 'தான் ஜே.வி.பி விட்டு வெளியேறியமைக்கு அதன் கடந்த கால இனவாத செயற்பாடுகளையே காரணமாக' குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக யுத்தத்திற்கும் இனவாதத்திற்கு ஜே.வி.பி தலைமை கொடுக்கும் அமைப்பாக செயற்பட்டதாக என்.சரவணன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இன்றும் மகிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதிக்கான சலுகை வீட்டிலிருந்து வெளியேறுகையில், போர் வெற்றியாளன் அவமானப்படுத்தப்படுகின்றார் என்பதாகவே ராஜபக்ச ஆதரவாளர்களின் கருத்தாக அமைகின்றது. பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், மஹிந்த ராஜபக்சவை '1988-1989 அமைதியின்மையின் போது இளைஞர்களை வழிநடத்திய, 30 ஆண்டுகால இனப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த, இல்லையெனில் போருக்குச் செலவிடப்பட்டிருக்கக்கூடிய கிட்டத்தட்ட 2,000 பில்லியன் ரூபாயைச் சேமித்த ஒரு தலைவர்' என்று வர்ணித்தார்.
ஜே.வி.பியின் முன்னாள் தோழர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் இந்நாள் நெருங்கிய தோழர் என்.சரவணன் குறிப்பிடுவது போல் ஜே.வி.பி போருக்கு தலைமை கொடுத்தது எனில், மகிந்த ராஜபக்சவிற்கான நிலையான மன்னர் வாழ்வை அளித்தது ஜே.வி.பியினராகவே காணப்படுகின்றார்கள். ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கிய மன்னர் வாழ்வையே செப்டெம்பர்-10 இயற்றப்பட்ட சட்ட மசோதா மூலமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீக்கியுள்ளது. எனினும் போர் வெற்றியினூடாக மகிந்த ராஜபக்சாவிற்கு ஜே.வி.பி வழங்கியுள்ள மன்னர் வாழ்வு நிரந்தரமானதாகும். மகிந்த ராஜபக்ச கொழும்பு விஜேயராம இல்லத்திருந்து வெளியேறிய போது சீனத் தூதர் குய் ஜென்ஹாங் உட்பட பிரபலங்களின் வருகை மற்றும் ஆதரவாளர்களின் திரளும் அதேபோன்று ஹம்பந்தோட்டையில் தங்கலக்கு சென்ற பின்னர் அங்கு திரண்ட ஆதரவாளர் கூட்டமும் மகிந்த ராஜபக்சவின் நிலையான போர் வெற்றி நாயகன் சார்ந்த துட்டகைமுனு விம்ப நிலைபேணுகையையே உறுதி செய்கின்றது.
எனவே, ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கம் வெறுமனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெகுஜன விளம்பர அரசியலின் தொடர்ச்சியானதாகவே அமைகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கம் அவசியமானதாயினும், அதனை தேசிய மக்கள் சக்தி தம்மை தூயவர்களாக பிரச்சாரம் செய்யப் பயன்படுத்தக்கூடியதாக அமையவில்லை. தேசிய மக்கள் சக்தி தம்மை தூய்மையாளராக அடையாளப்படுத்த குறைந்தபட்சம் தமது கடந்த காலத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய தேவை காணப்படுகின்றது. கடந்த கால ஆட்சியாளர்களின் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் ஜே.வி.பிக்கும் பங்கு உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு பொறுப்புக்கூறுவதே முதன்மையானதாகும். மாறாக பெயரை மாற்றியதனூடாக மாத்திரம் கடந்த காலத்தின் தவறுகளை மறைத்துவிட முடியாது. எதிர்க்கட்சியில் உள்ள விமர்சகர்கள் குறிப்பிடுவது போன்றே பொது மக்கள் பார்வையிலும் அரசாங்கத்தின் நோக்கங்கள் கேள்விக்குள்ளாகுபவையாகவே அமைகின்றது. அரசாங்க நடவடிக்கைகள் பொது நிதியைச் சேமிக்கும் விருப்பத்தால் என்பதைக்கடந்து மாறாக போட்டி கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதிகள் மீது அரசியல் பழிவாங்குவதற்காகவே உந்துதல் பெற்றதாகவே பொதுவிமர்சனம் காணப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவின் கைதின் தொடர்ச்சியாக மகிந்த ராஜபக்சவை குறிவைத்தே பிரதானமாக முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை நீக்கம் உரையாடப்படுகின்றது.
Comments
Post a Comment