ஈழத்தமிழரசியலை பலவீனப்படுத்தும் அரசியல் கட்சிகள்; இறந்த என்புகளும் நினைவுகளுமே போராடுகின்றது! -ஐ.வி.மகாசேனன்-
சமகாலத்தில் ஈழத்தமிழர் தியாக தீபம் திலீபனின் 38து ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டித்து வருகின்றனர். ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் தேசிய இனமாக ஈழத்தமிழர் அரசியலில் நினைவேந்தல்கள் கனதியான நிலையைப் பெறுகின்றது. அடுத்த அடுத்த தலைமுறைகளிடம் வரலாற்றை கடத்தி செல்வதிலும், இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு கடந்து வந்த வரலாற்றுப் பாதையினை மீள் நினைவுபடுத்துவதற்கும் நினைவேந்தல்கள் அவசியமாகின்றது. எனினும் ஈழத்தமிழர்களிடம் நினைவேந்தல்கள் சரியாக வினைத்திறனாக கையாளப்பட்டு வருகின்றதா என்பது தொடர்பில் முரணான வாதங்களே காணப்படுகின்றது. குறிப்பாக அரசியல் கட்சிகள் நினைவேந்தலின் வரலாற்றை கடத்தும் பணிக்கு அளிக்கும் முக்கியத்துவத்திலும் பார்க்க தத்தமது அரசியல் கட்சி நலன்களை முன்னிறுத்துவதையே பிரதான இலக்காக கொண்டுள்ளார்கள் என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகின்றது. இவ்அவலம் தியாக தீபத்தின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலிலும் தொடர்வதனை செய்திகளில் அறியக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரை நினைவேந்தல் அரசியலை ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டத்தை பலப்படுத்துவதில் பயன்படுத்தக்கூடிய முறையை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை முன்னிறுத்தி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் என அறியப்படும் பார்த்தீபன் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணித்திருந்தார். பொதுவில் பிரபலமான பார்வையின்படி, கடந்த காலம் இங்கேயும் இப்போதும் நிகழ்காலமாக இருக்கிறது. இது சகிப்புத்தன்மையுடன் இணைந்த நிகழ்காலவாதம் ஆகும். கடந்த காலம் தொடர்ந்து காலம் முழுவதும் நிகழ்காலம் வரை நீடிக்கிறது என்பதாகும். 38 வருடங்களுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு திலீபன் உண்ணாவிரதம் இருக்கையில் தமிழர்களின் நாளாந்த பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்ட விடயங்கள், 2025ஆம் ஆண்டிலும் நிலையான பிரச்சினையாக உள்ளது என்பதே எதார்த்தமானதாகும். திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகளாவன் ஒன்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறிலங்காவின் சிறைகளில் அல்லது தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். இரண்டு, புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மூன்று, இடைக்கால அரசு அமைக்கப்படும் வரை புனர்வாழ்வு எனும் பெயரில் நடத்தப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும். நான்கு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படல் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். ஐந்து, இந்திய அமைதிப்படைகளின் மேற்பார்வையின் கீழ் ஊர்காவல் படைகளின் ஆயுதங்கள் மீளப்பெறப்படல் வேண்டும். பாடசாலை கட்டிடங்களில் உள்ள இராணுவம் வாபஸ் பெறப்படவேண்டும்.
இன்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டங்களில் முதன்மைப்படுத்தப்படும் நாளாந்த பிரச்சினைகளில் அரசியல் கைதிகளின் விடுதலை, சிங்கள ஆக்கிரமிப்பு பிரச்சினை, இராணுவ வெளியேற்றம் என்பன தொடர்ச்சியான கோரிக்கைகளாகவே அமைகின்றது. இது ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கை கடந்த 38 ஆண்டுகளில், ஒரு அஹிம்சைப் போராட்டத்தின் உயர்வாய் உயிர்த் தியாகம் செய்தும் தீர்க்கப்பட முடியாத அவலத்தையே குறிக்கின்றது. இப்பின்னணியிலேயே 'பார்த்தீபன் பசித்திரக்கிறான்' என்பது திலீபனின் நினைவு நாட்களின் பிரதான சொல்லாடலாகவும் அமைகின்றது. எனினும் பார்த்தீபனின் பசி, வினைத்திறனாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதிலேயே முரணான வாதங்கள் காணப்படுகின்றது.
முதலாவது, நினைவு கூருதல் மற்றும் நினைவேந்தல் என்பது கனதியான அரசியல் பொறிமுறையாகும். நினைவேந்தல்களிலிருந்து அரசியலை நீக்க வேண்டுமெனும் சிலரின் வாதங்கள் அறமற்றதாகும். மேலும் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் கூற்றாகும். நினைவுகூருதல் கடந்த காலத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளைக் குறிக்கிறது. எனவே, இது தேசிய அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு வாகனமாக வரலாற்றுப் பதிவைப் பயன்படுத்துவதை விளக்கும் ஒரு ஆராய்ச்சி தளமாகும். வரலாற்று சொற்பொழிவில் ஒரு முக்கிய சொல்லாக நினைவாற்றலின் பெருக்கம், வரலாறு மற்றும் நினைவாற்றல் இடையேயான பின்னிப் பிணைப்பின் வளர்ந்து வரும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது. நினைவு ஆய்வுகள், கடந்த காலத்தைப் பற்றிய பகுதியளவு மற்றும் சார்புடைய புரிதலை வளர்ப்பதற்கு மக்களை வழிநடத்தும் காரணங்களையும் அடிப்படை பகுத்தறிவையும் விளக்கும் விசாரணைத் துறையாக வெளிப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராடும் தேசிய இனமாக, ஒடுக்குமுறை வரலாற்றை நினைவகங்களாக பாதுகாப்பதன் மூலமே நிலையான சுதந்திரத்தை எதிர்கால தலைமுறையினருக்கு உருவாக்க முடியும். இஸ்ரேலிய அரசாக யூதர்களின் சமகால நடடிவடிக்கைகளில் பலதரப்பட்ட விமர்சனங்கள் காணப்படினும், இனப்படுகொலையிலிருந்து மீண்டு பலமான தேசக் கட்டுமானத்தில் யூதர்களின் நினைவுகளை பாதுகாத்தலும் கடத்தலும் பிரதான அரசியல் ஆயுதமாக அமைந்திருந்தது. யூத வரலாற்றாசிரியரான சைமன் டப்னோவ் ஜெர்மானியர்களால் கைப்பற்றப்பட்டபோது, 'சகோதரர்களே, நீங்கள் பார்க்கும் மற்றும் கேட்கும் அனைத்தையும் எழுதுங்கள். அதையெல்லாம் பதிவு செய்யுங்கள்' என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. வரலாற்றை எழுதுவது ஒரு நினைவுச் செயலாக மாறி, சமீபத்திய கடந்த காலத்தின் கொந்தளிப்பு அல்லது துன்பம் அல்லது சாதனைகளை எல்லா காலத்திற்கும் விவரிப்பதில் வைக்கிறது. கடந்த காலத்தைப் பதிவுசெய்து நினைவுகூர வேண்டும் என்ற உந்துதல் யூத வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க கட்டாயமாகும்.
இரண்டாவது, நினைவுகளை கடத்தல் என்பது தனியன்களாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ அமைந்து நீர்த்து விடுவதால் ஒட்டு மொத்த சமூக விடுதலைக்கான பயனாக அமையப் போவதில்லை. தேசம் அல்லது தேசியம் என்பது கூட்டான திரட்சியை குறிப்பதாகும். இப்பின்னணியில் தேசக்கட்டுமானத்தில் நினைவுகளை கடத்துவது என்பது கூட்டு நினைவகமாக கொண்டு செல்லலே பயனுடையதாகும். கூட்டு அல்லது சமூக நினைவாற்றல் என்பது சமகாலத்தவர்களின் ஒருவருக்கொருவர் கருத்துக்களை வடிவமைக்கும் ஒரு காரணியாகவும், சமகாலத்தவர்கள் தங்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்வதை வாதிடக்கூடிய ஒரு காரணியாகவும் அமைகின்றது. டர்கெய்ம் எனும் சமுகவியல் அறிஞர் கூட்டு நினைவாற்றல் பற்றிய குறிப்பில், 'கூட்டு நினைவாற்றல் துறையானது, சமூக, கலாச்சார அல்லது அரசியல் போட்டி மற்றும் சர்ச்சையின் துறைகளாக அல்லாமல், ஒற்றுமையின் அடையாளங்களாக சடங்குகள் மற்றும் நினைவுகூருதலைத் தூண்டுவதை' வலியுறுத்துகின்றார். எனினும் 2009களுக்கு பின்னரான குறிப்பாக 2015களுக்கு பின்னர் நினைவேந்தல்களை அனுஷ;டிப்பதற்கு கிடைக்கப்பெற்ற சிறு இடைவெளி சுதந்திரத்தில், நினைவேந்தலை சிறு குழுக்களாக உரிமை கோரும் அவலமே ஈழத்தமிழ் அரசியல் தளத்தில் காணப்படுகின்றது. தியாக தீபம் திலீபனுடைய 38வது நினைவேந்தலிலும் அத்தகைய அவல நிலையை செய்திகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதில் குறித்த சிறு குழுவில் இருக்கும் கோபங்கள் நினைவேந்தலுக்கு எதிரானதாகவும், நினைவேந்தலின் புனிதத்தை களங்கப்படுத்துவதாகவும் அமைந்து விடுகின்றது. ஈழத்தமிழரசியல் நினைவேந்தல்கள் அரசியல் கட்சிகளின் நலன்சார் மோதுகைக்குள் சுழல்பவையாகவே அமைந்து விடுகின்றது.
மூன்றாவது, ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் நினைவேந்தல்களை அரசியல் கட்சிகள் பாரப்படுத்தி, தமது நலன்களுக்குள் பயன்படுத்தி, தேசிய திரட்சியை சிதைக்கும் சூழலை உருவாக்கியுள்ளார்கள். கடந்த காலங்களில் தமிழ்த்தேசிய மூலாம் பூசப்பட்ட கட்சிகளால் நினைவேந்தல்கள் தமது கட்சி நலன்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் தென்னிலங்கையின் ஆளுந் தரப்பாக தேசிய மக்கள் சக்தியும் பயன்படுத்த முனைந்துள்ளது. கடந்த காலங்களில் நினைவேந்தல்களை சொந்தம் கொண்டாடி ஒரு நாள் அல்லது குறித்த நினைவேந்தல் காலப்பகுதியில் விளக்கு ஏற்றுவதும், பூக்களால் அர்ச்சிப்பதுமே நினைவேந்தலின் உயர்வான கடமையாக தேசிய முலாம் பூசப்பட்ட கட்சியினர் மேற்கொண்டு வந்துள்ளனர். தொடர்ச்சியாக நினைவேந்தல்களின் மையமான அரசியல் கோரிக்கைகளை அரசியல் திரட்சியூடாக உறுதிப்படுத்தும் செயற்றிட்டங்களை பின்பற்ற தவறியிருந்தனர். இந்நிலையிலேயே 2025ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமது விளம்பர யுக்தியில் நினைவேந்தலினையும் பயன்படுத்திக் கொள்ளவே அமைச்சர் சந்திரசேகரர் திலீபனின் நினைவு தூபிக்கு விஜயம் செய்து அரசியல் சச்சரவை உருவாக்கி இருந்தார். இதுவொரு வகையில் தேசிய முலாம் பூசப்பட்ட தமிழ் கட்சிகளின் கடந்த கால இயல்பின் தொடர்ச்சியாகவே அமைகின்றது. நினைவேந்தல்களை வெறுமனவே உரிமை கொண்டாடும் களமாக அன்றி, தூய்மையாக நினைவேந்தலின் பிரதான அரசியல் கோரிக்கைகளின் களமாக பயன்படுத்தியிருப்பின் தென்னிலங்கை ஆளுந்தரப்பு அங்கே வருவது தொடர்பில் சிந்தித்திருக்கும். அல்லது ஆளுந்தரப்பின் வருகையை தடுக்கும் நினைவேந்தல் குழு அரசியல் கோரிக்கையை முன்னிறுத்தி வினைத்திறனாக சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்கும்.
நான்காவது, அமைச்சர் சந்திரசேகரர் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபிக்கு வருகை தந்த போது தடுக்கப்பட்டமை சரி அல்லது பிழை என்ற ஒரு சொல் வாதங்களுக்கு புறத்தே தமிழ் மக்களின் அரசியல் நலனுக்கு அமைச்சர் சந்திரசேகரரின் வருகையை எவ்வாறு பயன்படுத்தியிருக்க வேண்டும் என விவாதிப்பதே தமிழ்த்தேசிய அரசிலுக்கு அவசியமானதாகும். எனினும் கட்சி நலன்சார் போட்டிக்குள் தமிழ்க்கட்சிகளின் முரண்பாடே சரி அல்லது பிழை என்ற ஒற்றை வார்த்தைக்குள் நகர்கின்றது. யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபிக்கு இலங்கை ஆளுந்தரப்பின் அமைச்சரின் வருகை தந்திரமாக பயன்படுத்தியிருக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இத்தகைய சந்தர்ப்பங்கள் ஈழத்தமிழ் அரசியலில் கிடைக்கப்பெற்று, ஒரு சில உணர்ச்சியாளர்களின் செய்கைகளால் தவறவிடப்பட்டிருந்தது. குறிப்பாக செம்மணி மனிதப்புதைகுழிக்கான நீதிப்போராட்டத்தில் அமைச்சரின் வருகை எதிர்ப்பும் இத்தகையதாகவ அமைகின்றது. குறித்த காலப்பகுதியில் இப்பத்தி எழுத்தில் எதிர்ப்புக்கு மாறாக தந்திரமாக பயன்படுத்த வேண்டிய தேவையும் முறையும் விபரிக்கப்பட்டிருந்தது. மீளவும் அத்தகையதொரு சந்தரப்பத்தை நழுவ விடுவது என்பது அரசியல் செயற்பாட்டளார்கள் என்ற பெயரில் இயங்குபவர்களின் நோக்கம் தொடர்பில் சந்தேகிக்க வேண்டிய தேவைகளே காணப்படுகின்றது. தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் என்பது அவரது அரசியல் கோரிக்கைளை வென்றெடுப்பதாகவே அமைய வேண்டும். அதுவே நினைவேந்தலின வினைத்திறனான கையாள்கையாகும். அமைச்சர் சந்திரசேகரரின் வருகையின் போது ஆளுந்தரப்பிடம் திலீபனின் கோரிக்கையை முன்வைத்து அதற்கான காலங்குறித்த வாக்குறுதியை கோரியிருக்க வேண்டும். இதில் கிடைக்கப்பெறும் முடிவுகள் எதுவாயினும் அது தமிழ் தேசியத்திற்கானதாகவே அமையும். காலங்குறித்த வாக்குறுதி தீர்வுக்கான முன்னேற்பாடாக அமையும். மறுதலையாக வாக்குறுதி தர மறுப்பின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நாடகம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கும். எனினும் தடுத்து நிறுத்தியமை வெளியேற்றியமை என்பது தமிழ்த்தேசிய உள்ளக முரண்பாடு தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கப்ட்ட விளம்பரத்தை பலப்படுத்தியுள்ளது. இதுவொரு வகையில் தமிழ்க்கட்சிகளின் உள்ளக முரண்பாட்டால் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துவதாகவே அமைகின்றது.
எனவே, நினைவுகூரல் என்பது ஒரு அரசியல் செயலாகும். டோடோரோவ் (2001) வாதிடுவது போல, 'அரசியல் சட்டப்பூர்வத்தன்மையைப் பெறுவதற்காக தங்கள் சொந்த உத்திகளை ஊக்குவிக்க கூட்டு நினைவகத்தைப் பயன்படுத்த இது மூலோபாய ரீதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.' பொதுவில் சர்வதேச அரசியல் பரப்பில் நினைவு கூறல்கள் தேசக்கட்டுமானத்தை பலப்படுத்துகையில், ஈழத்தமிழ் அரசியலில் கட்சி நலன்களுக்குள் தேசக்கட்டுமானத்தை சிதைக்கும் காரணியாக மாற்றியுள்ளனர் என்பதே எதார்த்தமானதாகும். ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் ஆகுதியானவர்களே தொடர்ந்தும் என்புகளாகவும் நினைவுகளாகவும் போராடிக்கொண்டுள்ளார்கள். எனினும் அவ்என்புகளையும் நினைவுகளையும் வினைத்திறனாகவும் வாய்ப்புக்களை தந்திரமாகவும் பயன்படுத்தி நீதிக்கான போராட்டத்தை பலமாக முன்னகர்த்தும் நிலையில் தமிழ் அரசியல் இல்லை என்பதையே சமகால நிகழ்வுகள் தொடர்ச்சியாக உறுதி செய்கின்றது. தேசத்திற்கான அடிப்படையான திரட்சியற்றவர்களாய் தமிழ் மக்கள் தனிநபர்களாயும் சிறு சிறு குழுக்களாயும் வேறுபட்டிருக்கையில், தேசக்கட்டுமானம் வெறும் கனவாக சிதைந்து செல்லக்கூடிய அபாயங்களே காணப்படுகின்றது.
Comments
Post a Comment