சுயாதீனமற்ற ஐ.நா சபையும் மனித உரிமைக்கு தடையான நில ஆளுகை அரசுகளும்! -ஐ.வி.மகாசேனன்-
காசாவிலும் உக்ரைனிலும் இனப்படுகொலை மற்றும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இயலாமை பற்றிய விவாதங்களின் மத்தியிலேயே, கடந்த பதின்மூன்று வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையிடலில் ஈழத் தமிழர்கள் நீதிக்காக காத்துக் கொண்டுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் கடந்த 80 ஆண்டுகளில் உலகில் மலிந்த போர்களை தடுக்க திராணியற்ற நிறுவனம் என்பதைக் கடந்து, பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட சமுகத்திற்கு துணையாக அல்லது அரணாக கூட செயற்பட தவறியுள்ளது என்ற விமர்சனம் காணப்படுகிறது. வலிமையான நாடுகளின் நலன்களுக்கு பின்னால் ஐ.நா ஒழிந்து இருந்துள்ளது. ஐ.நா-வின் பலவீனமான தன்மையை அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது 'ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்' (A Promised Land) புத்தகத்திலும் பதிவு செய்திருந்தார். இது தமிழில் காணப்படும் 'சாத்தான் வேதம் ஓதுது' என்ற முதுமொழியை பிரதிபலிப்பினும், சாத்தானின் வேதம் சில நிஜயங்களை உறுதி செய்துள்ளது என்பதே எதார்த்தமாகும். இக்கட்டுரை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் நிறுவனங்கள் மீதான நில ஆளுகை உள்ள நாடுகளின் தலையீடுகள் ஏற்படுத்ததும் நெருக்கீடுகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தன்னுடைய ஜனாதிபதிக் கால அனுபவப் பகிர்வு அடங்கிய 'ஒரு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்' எனும் புத்தகத்தில் ஐ.நா பற்றிய குறிப்பு ஒன்றில், 'சோமாலியா போன்ற தோல்வியுற்ற நாடுகளை மீண்டும் கட்டியெழுப்பவோ அல்லது இலங்கை போன்ற இடங்களில் இன சம்காரத்தை தடுக்கவோ ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு வழிவகைகளோ அல்லது கூட்டு விருப்பமோ இல்லை' எனக்குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இறுதிப்போர் கால கட்டத்தில் பராக் ஒபாமா ஐ.நாவின் வலிமையான உறுப்பு நாடான அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவொரு வகையில் ஐ.நாவின் தோல்விக்கு பின்னால் உள்ள வலிமையான நாடுகளின் ஆதிக்கத்தின் சாட்சியமாகவும் அமைகின்றது எனலாம். இது தொடர்ச்சியானதாகும். வலிமையான நாடுகள் வீட்டோ அதிகாரத்தினூடாகவோ அல்லது ஐ.நா நிறுவனங்கள் மீதான நில ஆளுகை அதிகாரத்தினூடாகவோ ஐ.நா மீது தொடர்ச்சியான ஒரு தலைபட்ச தலையீட்டை முன்னெடுத்து வருகின்றனர். இது ஐ.நா அமைதியை உருவாக்க தவறுகின்றது என்பதனையும் கடந்து, பாதிக்கப்பட்ட சமுகத்துக்கு ஆறுதலளிப்பதையும் தடுப்பபதாக அமைகின்றது.
அண்மையில் பாலஸ்தீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுப்பதனூடாக ஐ.நா பொதுச்சபையில் பாலஸ்தீனியர்களின் குரலை முடக்க முயலுகின்றது. நில ஆளுகையற்ற ஐ.நா அமெரிக்காவின் இழுவைக்குள் பாலஸ்தீனியர்களுக்கு செயலற்ற நிறுவனமாக அமைகின்றது. இத்தகைய பகிரங்கப்படுத்தப்பட்ட சர்வதேச அனுபவத்தினை முன்னுதாரணமாக கொண்டு ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தோடு முரண்படும் நில ஆளுகை நாட்டு விவகாரத்தை அணுகுவது பொருத்தமான விளக்கத்தை கொடுக்கக்கூடியதாக அமையும்.
செப்டம்பர் இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு முன்னதாக, பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) மற்றும் பாலஸ்தீன ஆணையம் (PA) உறுப்பினர்களின் விசாக்களை அமெரிக்கா மறுக்கவும் இரத்து செய்யவும் தொடங்கியுள்ளது என்று வெளியுறவுத்துறை ஆகஸ்ட்-29(2025) அன்று தெரிவித்திருந்தது. குறித்த செய்தியில், 'அக்டோபர்-7, 2023 தாக்குதல்கள் உட்பட பயங்கரவாதத்தை பாலஸ்தீன அதிகாரம் நிராகரிக்கத் தவறிவிட்டது' என அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும் இவ்அதிகாரப்பூர்வ காரணத்தை அற்பமானதாக பாலஸ்தீனம் மறுத்துள்ளது. மஹ்மூத் அப்பாஸின் கீழ், பாலஸ்தீனத் தலைமை தாக்குதல்கள் உட்பட பயங்கரவாதத்தை தொடர்ந்து கண்டித்து வருகிறது. மேலும் ஹமாஸின் ஆயுதக் குறைப்புக்கு அழைப்பு விடுத்த பிரெஞ்சு-சவுதி அறிக்கையை ஆதரித்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் அமெரிக்காவின் விசா மறுப்புக்குள் சேர்க்கப்பட்டார். ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவதற்காக அப்பாஸ் நியூயார்க்கிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அமெரிக்காவின் விசா மறுப்பு முடிவு ஐ.நா.வின் தலைமையக ஒப்பந்தத்தை மீறுவதாக பாலஸ்தீனம் குறிப்பிட்டுள்ளது.
1947ஆம் ஆண்டு முதல், சில கட்டுப்பாடுகள் மறுப்புகள் இருந்தாலும் கூட அமெரிக்கா பெரும்பாலும் ஐ.நா.வுடனான அதன் தலைமையக ஒப்பந்தத்தை மதித்து, ஐ.நா. கூட்டங்களில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள அதிகாரிகளுக்கு விசாக்களை வழங்குகிறது. இருப்பினும், அமெரிக்கா தனது ஐ.நா. பொதுச் சபை நில ஆளுகை நாடு என்பதை பயன்படுத்தி ரஷ்யா, ஈரான், வெனிசுலா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு தூதர்களுக்கு விசாக்களை மறுத்த சந்தர்ப்பங்கள் உள்ளன. பாலஸ்தீன தலைவர்களது விசாக்களும் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டில், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவரான யாசர் அராபத், ஐ.நா பொதுச்சபையில் பங்கேற்க ஐ.நா.விற்கு வர அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை. அமெரிக்க அரசாங்கம் அதன் முடிவை பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்று நியாயப்படுத்தியது. சமகாலத்திலும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் இதேபோன்ற நியாயத்தை பாலஸ்தீன அதிகாரிகள் ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விசா மறுப்புக்கு தெரிவித்து வருகிறது. மறுதளத்தில் பாலஸ்தீனத்திற்கு எதிரான போட்டியாளர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவில் இருகரம் நீட்டி வரவேற்கப்படுகிறார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த போதிலும், ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து வெள்ளை மாளிகைக்கு அடிக்கடி வரும் விருந்தினராக நெதன்யாகு இருந்து வருகிறார்;. அவர் ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்வார். அதேவேளை 2013ஆம் ஆண்டில், சூடான் ஜனாதிபதி ஒமர் அல்-பஷிரின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது உத்தரவை மேற்கோள் காட்டி அமெரிக்க அரசாங்கம் அவருக்கு விசா மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இம்முரணான நடத்தைகள், அமெரிக்க தனது நலனுக்குள் அல்லது ஆர்வத்துக்குள் ஐ.நா பொதுச்சபையில் பங்கேற்கும் தலைவர்களை தேர்வு செய்கின்றது என்பதே உறுதியாகின்றது.
இத்தகைய நடத்தையை ஐ.நா நிறுவனங்கள் மீது நில ஆதிக்கத்தை கொண்டுள்ள நாடுகளில் அவதானிக்கக்கூடியதாகவே உள்ளது. குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை சுவிஸர்லாந்தின் ஜெனிவாவில் இயங்குகின்றது. கடந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தை அண்மைக்காலங்களில் அவதானிக்க முடிவதில்லை. கால நீட்ச்சி ஒரு வகையில் ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களிடையே ஒரு வகையான சோர்வை உருவாக்கியுள்ள போதிலும், தாயகத்திலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு செல்வதற்கான நடைமுறை இறுக்கங்களும் ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களின் பங்குபற்றலை குறைத்துள்ளது என்பதும் நிதர்சனமாகும்.
ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்கு ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட பொறிமுறை காணப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள அரசு சார நிறுவனங்களினூடாகவே ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு அழைக்கப்படுகின்றார்கள். குறித்த அழைப்புக்கான முன்னாயர்த்தங்கள் கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு மாத கால இடைவெளியிலேயே நடைபெறுகின்றது. குறிப்பாக செப்டெம்பர்-08அன்று ஆரம்பித்து தற்போது நடைபெறும் 60வது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்கான பதிவுகள் ஆகஸ்ட்-04ஆம் திகதியே திறக்கப்பட்டது. எனினும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்கள் ஐரோப்பாவில் விடுமுறை காலம் ஆகையால் ஆகஸ்ட் இறுதியிலேயே பதிவுகள் சரிபார்க்கப்பட்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகர்களால் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட கடிதங்கள் வழங்க ஆரம்பிக்கப்பட்டன. இது கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் கூட பலருக்கு உறுதிப்படுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தது. இது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நடைமுறையாக காணப்படுகின்றது.
மறுதளத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு சுவிற்சர்லாந்து நாட்டு விசா அனுமதியை பெற வேண்டும். சாதாரண பயணிகளுக்கு உரிய நடைமுறையையே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்கு கடிதம் வழங்கப்படுபவர்களுக்கும் சுவிற்சர்லாந்து தூதரகம் பின்பற்றுகின்றது. சுவிற்சர்லாந்து சாதாரண விசா நடைமுறைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத கால இடைவெளியை பேணுகின்றது. விசாக்கான விண்ணப்ப படிவங்கள் சமர்ப்பிக்கும் ஏகுளு அலுவலக அனுமதியை பெற குறைந்தது ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரையில் தேவைப்படுகின்றது. பின்னர் விசாக்கான பதிவுகளை மேற்கொண்ட பின்னர் தூதரக செயற்பாடுகளுக்கு 15 வேலை நாட்கள் கோரப்படுகின்றது. இப்பின்னணியில் குறைந்தது ஒரு மாதம் தேவைப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பங்குபற்றுவதற்கான உறுதிப்படுத்தல் கடிதம், குறைவான கால அளவு சார் நடைமுறை பிரச்சினைகளை தூதரக மட்டத்தில் அறிவித்து விரைவான செயற்பாடுகளுக்கு கோரிக்கை விடுக்கப்படுகின்ற போதிலும், எவ்வித கரிசணையுமின்றி சாதாரண விசா நடைமுறைகளை பின்பற்றவே வலியுறுத்தப்படுகின்றது. சுவிற்ஸர்லாந்து தூதரக அதிகாரி ஒருவருடனான உரையாடலில், கால அளவு பிரச்சினையை சுட்டிக்காட்டி ஆகஸ்ட் இறுதி வாரங்களில் 5-6 வரையான விசா விண்ணப்பத்தை ஒரு அதிகாரி நிராகரித்திருந்தமையை குறிப்பிட்டிருந்தார்.
சுவிற்ஸர்லாந்தின் இம்மெத்தன போக்கு தாயக ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டளார்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அரங்கிற்கு செல்வதை நிராகரிக்கும் விருப்பத்iதையே வெளிப்படுத்துகின்றது. பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா வெளிப்படையாக செய்யும் விடயத்தை, ஈழத்தமிழர் விவகாரத்தில் சுவிற்சர்லாந்து மறைமுகமாக செய்து வருகின்றது. அமெரிக்கா பாதுகாப்பு கரிசணைகளை நியாயப்படுத்தி பாலஸ்தீன அதிகாரிகளுக்கு ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்வதற்காக விசாவை மறுக்கின்றது. அவ்வாறே சுவிற்சர்லாந்து விசா நடைமுறை காலத்தை முன்வைத்து தாயக ஈழத்தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான விசா விண்ணப்பத்தை நிராகரிக்கின்றது. இதே சுவிற்சர்லாந்து கடந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்கு காலையில் வழங்கப்படும் விசா விண்ணப்பங்களுக்கு மாலையில் விசா வழங்கிய காலங்களும் வரலாறுகளும் காணப்படுகின்றது. எனினும் சமகாலத்தில் விசா நடைமுறை காலத்தை சுட்டிக்காட்டி, ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடருக்காக விசா விண்ணப்பத்தை நிராகரிப்பது, சுவிற்சர்லாந்து பகிரங்கமாக உரையாடும் ஜனநாயகத்தின் போலியை கேள்விக்குட்படுத்துவதாக அமைகின்றது. சுவிற்சர்லாந்து மேற்கின் நலனுக்கு ஈழத்தமிழர்களின் கொந்தளிப்பு தேவைப்பாடுடைய காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்கு துரித கதியில் விசாக்களை வழங்கி வந்துள்ளது. எனினும் சமகாலத்தில் ஈழத்தமிழர்களின் கொந்தளிப்பு தேவையற்ற நிலையில், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் களத்தில் தாயக அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்தை மட்டுப்படுத்தும் செயற்பாட்டை சுவிற்சர்லாந்து மறைகரமாக மேற்கொண்டு வருகின்றது.
எனவே, ஐக்கிய நாடுகள் சபையில் கருத்து சுதந்திரமும் நில ஆளுகை நாடுகளால் பறிக்கப்படுவதனையே அமெரிக்காவின் பாலஸ்தீன விவகாரத்திலும், சுவிற்சர்லாந்தின் ஈழத்தமிழர் விவகாரத்திலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உலக அமைதிக்கான உலக அரசாங்கமாக ஐ.நா செயற்படும் அல்லது செயற்படுகின்றது என்பது எண்பதாண்டு காலமாக விவாதிக்கப்படும் போலி விவாதமகாவே அமைகின்றது. ஆதிக்க சக்திகளின் விருப்புக்கானதும் நலனுக்கானதுமான ஒரு உலகை வெளிப்படுத்தும் நிறுவனமாகவே ஐ.நாவின் செயற்பாடு நில ஆதிக்க நாடுகளால் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. அதுவே தொடர்கின்றது. இத்தாலிய கம்யூனிஸ்ட் அன்டோனியோ கிராம்சி தனது சிறைச்சாலை கடிதங்களில் மாயை மற்றும் எதார்த்தம் பற்றிய குறிப்பு நடைமுறையின் சரியான விளக்கத்தை வழங்குகின்றார். 'நவீனத்தின் சவால் மாயைகள் இல்லாமல், ஏமாற்றமடையாமல் வாழ்வதுதான். நான் புத்திசாலித்தனத்தின் காரணமாக ஒரு அவநம்பிக்கையாளர். ஆனால் விருப்பத்தின் காரணமாக ஒரு நம்பிக்கையாளர்.' எனக்குறிப்பிடுகின்றார். ஈழத்தமிழர்களும் ஐ.நா சார்ந்து கடந்த கால அனுபவங்களின் தொடர்ச்சியில் அதன் மீது அவநம்பிக்கை கொண்டுள்ள போதிலும், குறைந்தபட்ச ஆறுதலுக்கான விருப்பத்தில் ஐ.நா மீது நம்பிக்கையை வைத்து பயணிக்கின்றனர். எனினும் அந்நம்பிக்கையையும் சுவிற்சர்லாந்து போன்ற நாடுகள் தமது நில ஆளுகை அதிகாரத்தால் மலினப்படுத்துகையில் ஐ.நா மௌனித்து இருப்பது ஈழத்தமிழர்களை தூரமாக நகர்துவதாகவே அமைகின்றது.
Comments
Post a Comment