இலங்கைத் தேசிய அரசும் கறுப்பு அரசும்; இராணுவத்தின் இரட்டை தோற்றம்! -ஐ.வி.மகாசேனன்-
போதைப் பொருள் சார்ந்த அபாயம் இலங்கையில் ஆழமான உரையாடலை அண்மையில் அதிகரித்து வருகின்றது. கடந்த காலங்களில் வடக்கு-கிழக்கு இளையோரிடம் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடம் வழமைக்கு மாறாக போதைப்பொருள் பாவனை அதிகரிப்பது தொடர்பில் ஆதங்கங்கள் அதிகரித்திருந்தது. ஒரு சில சிவில் அமைப்புக்கள் அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் அரசாங்கங்கள் போதைக்கு எதிரான நடவடிக்கைகளில் உயர் கவனம் செலுத்தியிருக்கவில்லை. மாறாக இலங்கை அரச இயந்திரமே வடக்கு-கிழக்கு போதைப்பொருள் விநியோகத்தின் பிரதான தரப்பாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இன்று முழு இலங்கையும் போதை மாபியாவிற்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ள அபாயத்தை இலங்கை அரசாங்க நடவடிக்கைககள் உறுதி செய்துள்ளது. அதுமாத்திரமன்றி போதைப் பொருள் மாபியா மற்றும் அதுசார் பாதாள உலக குழுக்களின் செயற்பாட்டில் இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையின் ஈடுபாட்டையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதுவொரு வகையில் கடந்த கால போர் வெற்றியாளர்களின் விம்பத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் அமைகிறது. இக்கட்டுரை இலங்கை அரசாங்கத்தின் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை மையப்படுத்திய அரசியல் பார்வையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக, ‘முழு நாடுமே ஒன்றாக’ (A Nation United) என்ற தேசிய செயற்றிட்டத்தை, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க ஒக்டோபர்-30அன்று ஆரம்பித்து வைத்தார். இவ்செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை நிகழ்வாக சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் வெகுதிரளுடன் ஒழுங்கமைக்கப்பட்டது. செயற்றிட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கையின் சினிமா மற்றும் விளையாட்டு பிரபல்யங்களும் கலந்து கொண்டிருந்தனர். நாட்டில் சமூக ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய போதைப்பொருள் அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. குறிப்பாக போதைப்பொருள் நெருக்கடியின் மிகப்பெரிய பலியாக இளைய தலைமுறையினர் மாறிவிட்டதை ஜனாதிபதி தனது உரையிலும் சுட்டிக்காட்டியிருந்தார். இது இலங்கையின் எதிர்காலத்தை அபாயத்திற்குள் தள்ளக்கூடியதாகும். ஏற்கனவே சனத்தொகை தரவுகளில், இலங்கையில் முதியோர்களின் வீதம் அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள்தொகையைக் கொண்ட ஆசிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் முதியோர் குடிமக்களின் விகிதம் 2012 இல் 12% இலிருந்து 2024 இல் 18% ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளதாக ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் நிஷானி உபேசேகர தெரிவித்தார். மேலும், 2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் சுமார் 25% பேர், அதாவது நான்கில் ஒருவர், முதியவர்களாக இருப்பார்கள் என்ற எதிர்பார்க்கையையும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆக தங்கி வாழும் ஒரு பருவத்தினர் அதிகரிக்கையில், உழைக்கும் பருவத்தினர் போதை நெருக்கடியில் அழிவது இலங்கையின் அரசியல் பொருளாதார சமுக ஸ்திரத்தன்மையை சவாலுக்குட்படுத்துவதாக அமைகின்றது.
காலம் பிந்தியதாயினும், அரசாங்கத்தின் உயர் கவனிப்புக்குள் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்வாங்கியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். குறிப்பாக இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து சற்றே மீள்வதற்கான முயற்சிகளை அடையாளம் காட்டுகின்ற சமகாலத்தில், இலங்கையை போதைப்பொருள் நெருக்கடிக்குள் மூழ்கியுள்ள நாடாக அரசாங்கம் விம்பப்படுத்துவது பொருளாதார முதலீட்டுக்கு சவாலானதாகும். எனினும் போதைப் பொருள் பயன்பாட்டின் நெருக்கீட்டை முதன்மைப்படுத்தி அரசாங்கம் எடுத்துள்ள துணிவான செயற்பாட்டை பாராட்டுவதும் அவசியமானதாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்ட முன்னெடுப்புகள், கொலம்பியா போன்ற போதைப்பொருள் நெருக்கடிக்கு உள்ளான நாடுகளைப் போலவே இலங்கையும் அதே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது மற்றும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்ற தவறான எண்ணத்தை உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், குற்றம் மற்றும் போதைப்பொருட்களின் பாதாள உலகத்தை செயலிழக்க செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஸ்திரமற்ற சூழலில் மாயைகளுக்கூடாக முதலீட்டை அணைத்து கொள்வதும் நிலைத்திருப்பை உத்தரவாதப்படுத்த போவதில்லை. இப்பின்னணியில் போதைப்பொருள் மாபியாவின் பிடியிலிருந்து நாட்டை வெகுவிரைவாக விடுவிக்கும் இலக்கை அடைய பொதுமக்கள், சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அதேவேளை சட்ட அமுலாக்க அதிகாரிகளும் தூய்மையாக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டிய அவசியத்தையும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க செயற்றிட்ட அங்குரார்ப்பண உரையில் சுட்டிக்காட்டி இருந்தார்.
ஜனாதிபதி தனது உரையில் இலங்கை அரசுக்கு சமாந்தரமாகவே, இலங்கை அரச இயந்திரத்தின் அதாவது சட்ட மற்றும் நிர்வாகத் துறையின் ஆதரவுடன் ‘கறுப்பு அரசு’ இயங்குவதை ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி தனது உரையில், “காவல்துறை மற்றும் இராணுவத்தில் பலரின் அர்ப்பணிப்பு இருந்தபோதிலும், ஒரு சிலரின் செயல்களால் ஊழல் மற்றும் குற்ற வலையமைப்பான கறுப்பு அரசு உருவாகி வருவதாக” கூறினார். "சில குடியேற்ற அதிகாரிகள் பாதாள உலகத் தலைவர்களுக்கு கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளனர். இதுபோன்ற செயல்களால், அரசு சிதைவடையும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அரசைப் போல வலுவாக இல்லாவிட்டாலும், பாதாள உலகம் ஒரு இணையான அதிகார அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த கறுப்பு அமைப்பு அழிக்கப்பட வேண்டும். ஒரு நாட்டில் இரண்டு அரசுகள் இருக்க முடியாது. ஒரு அரசு மட்டுமே இருக்க முடியும். ஒன்று மக்களின் ஜனநாயக விருப்பத்தால் நிறுவப்பட்டது" எனத்தெரிவித்திருந்தார். இவ்அடையாளப்படுத்தல் போதை மாபியா மற்றும் அதுசார் பாதாள குழுக்கள் இலங்கை அரச இயந்திரத்தின் ஆதரவுடனேயே இயக்கப்பட்டுள்ளது என்பதை இலங்கையின் மீயுயர் அதிகார தலைவரான ஜனாதிபதியே உறுதி செய்கின்றார். இலங்கை அரச இயந்திரம் ஒருவகையில் மாபியா குழுக்களின் பினாமிகளாகவே செயற்பட்டுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் போர் வெற்றி விம்பத்தினூடாக இராணுவத்தினர் ‘போர்வெற்றி நாயகர்களாக’ (War Heroes), இராணுவ அதிகாரம் ஒருவகையிலான போனப்பார்ட்டிச (Bonapartism) அரசியல் இயல்புகளுக்குள்ளேயே நகர்த்தப்பட்டிருந்தது. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்காவின் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்ட அங்குரார்ப்பண உரை போர்வெற்றி நாயகர்களின் போதை மாபியா மற்றும் பாதாள குழு சார்ந்த விம்பங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இராணுவம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் எவ்வாறு ஊடுருவியுள்ளன என்பதை ஜனாதிபதி விளக்கினார். “இந்தக் குழுக்கள் பயன்படுத்தும் சில துப்பாக்கிகள் எங்கள் சொந்த அரசு ஆயுதக் கிடங்குகளிலிருந்து வருகின்றன. இராணுவ முகாம்களில் இருந்து எழுபத்தி மூன்று (73) T-56 துப்பாக்கிகள் காணாமல் போனதாக அறிக்கைகள் காட்டுகின்றன. முப்பத்தைந்து (35) மீட்கப்பட்டுள்ளன. ஆனால் முப்பத்தெட்டு (38) இன்னும் குற்றவாளிகளின் கைகளில் உள்ளன. ஒரு மூத்த இராணுவ கர்னல் கூட பணத்திற்கு ஈடாக வெடிமருந்துகளை வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில காவல்துறை அதிகாரிகள் தங்கள் சொந்த ஆயுதங்களை விற்று தப்பி ஓடிவிட்டனர். இவை அரசுக்குச் சொந்தமான துப்பாக்கிகள். கேள்வி என்னவென்றால், அவர்கள் எப்படி ஆயுதமேந்திய கும்பல்களுடன் சேர்ந்தார்கள்? நிதி வலிமையால் அதிகாரம் பெற்ற ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் அரசு இயந்திரத்திற்குள் ஊடுருவ முடிந்தது என்பதை இது காட்டுகிறது. இந்த சூழ்நிலையை இனி நாம் புறக்கணிக்கவோ மறைக்கவோ முடியாது” எனத் தெரிவித்திருந்தார். போர் வெற்றி நாயகர்களை பாதுகாப்பதே தேசிய கௌரவமாக காட்டி வந்த தோற்றம் போதைக்கு எதிரான செயற்றிட்டத்தில் உடைக்கப்பட்டுள்ளது.
இதனை ஈழத்தமிழரசியல் தந்திரமாக கையாள வேண்டிய சூழல் காணப்படுகின்றது. சமீபத்தில் பாராளுமன்ற உரை ஒன்றில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பெரும்பான்மை மாவட்டங்களில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் இராணுவம் முக்கிய பங்கு வகித்தமையையும், தமிழ் இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தை வேண்டுமென்றே வளர்த்ததையும் குற்றம் சாட்டியிருந்தார். “1995இல் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் யாழ்ப்பாணம் வந்த பிறகு போதைப்பொருள் பயன்பாடு வேரூன்றியது, மேலும் உள்நாட்டுப் போர் முடிவடைந்த 2009க்குப் பிறகு மோசமடைந்தது” எனத் தெரிவித்தார். மேலும், "இது நமது சமூகத்தை ஒரு புற்றுநோயைப் போல பாதிக்கிறது" என்றும் குறிப்பிட்டிருந்தார். கடந்த காலங்களில் இவ்ஆபத்துக்கு எதிராக ஒருசில தனியன்களும் சிவில் அமைப்புக்களும் செயற்பட்ட போதிலும், போதைப்பொருள் விற்பனையில் அரச இயந்திரத்தின் சட்ட அமுலாக்கத்துறையின் செல்வாக்கு உயர்வாக காணப்பட்டமையால் கட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக செயற்மாட்டாளர்களுக்கே போதைப்பொருள் விற்பனையாளர்களால் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டம், தென்னிலங்கைக்கு சமாந்தரமாக வடக்கு-கிழக்குக்கு அவசியமாகின்றது. 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட சூழலில் வடக்கு-கிழக்கின் போராட்ட உணர்வை முழுமையாக சிதைக்க இளையோர் இலக்கு வைக்கப்பட்டு இலங்கை அரச இயந்தித்தால் முன்னெடுக்கப்பட்ட தமிழர் பண்பாட்டுக்கு எதிரான போரின் ஒரு பகுதியாகவே போதைப் பயன்பாட்டு ஊக்குவிப்பும் அமைந்திருந்தது. ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டுவது போன்று, போதைப்பொருள் மாபியா சார்ந்த பாதாள குழுக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் காவல்துறை இராணுவ அரச இயந்திரங்களின் துணையுடனையே இயங்குகின்றது. இச்சேர்க்கை கடந்த காலங்களில் வடக்கு-கிழக்கில் போதைப்பொருள் விநியோகத்தையும் ஊக்குவித்து இருந்தது. இதனை ஆயுதப்போரின் போரின் தொடர்ச்சியானதொரு போர் வடிவமாகவே தென்னிலங்கை அரசாங்கங்கள் பயன்படுத்தி கொண்டன. அதேவேளை இலங்கை ஒரு சிறிய தீவு என்பதையும், தீவின் ஒரு பகுதியில் மூட்டப்படு நெருப்பு முழு தீவையும் அழிக்கும் என்பதை தென்னிலங்கை கவனிக்க தவறியுள்ளது. அதன் விளைவாகவே ஏற்கனவே பாதாள குழுக்களின் களமாக உள்ள தென்னிலங்கையில் போதைப்பொருள் விநியோகம் இலகுவான விரைவான பரவுகையுடன் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
முழு இலங்கையில் முன்னெடுக்கப்படும் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டத்தை இலங்கை அரசாங்கம் வினைத்திறனுடனும் இதய சுத்தியுடனும் தொடருமாயின், ஈழத்தமிழர்களும் அதனை தமது நலன் கருதி பயன்படுத்தி கொள்ளல் பொருத்தமானதாகும். போதைப்பொருள் பயன்பாடு ஈழத்தமிழர்கள் கடந்த கால வரலாற்றை தோற்கடிப்பதாகும். அதுமட்டுமன்றி உரிமைக் கோரிக்கையை உயிர்ப்புடன் பாதுகாக்க வேண்டிய இளையோரை அதிலிருந்து நீர்த்து போகச் செய்கின்றது. தமிழ் சமுகத்தை போதையற்ற சமுகமாய் மீள் கட்டமைப்பு செய்வதற்கு, அரசாங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டத்தை பயன்படுத்தி கொள்ளல் பொருத்தமானதாகும். மேலும் உரிமைப்போராட்ட அரசியலைப் பலப்படுத்தவும், அரசாங்கத்தின் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டத்தை பயன்படுத்தக்கூடிய வழிமுறைக்கான முன்னேற்பாடுகளை ஜனாதிபதியின் உரையும் வழங்கியுள்ளது. குறிப்பாக போர் வெற்றி நாயகர்கள், போதைப்பொருள் மாபியாவாக அடையாளப்படுத்துவது எதிர்காலங்களில் ஈழத்தமிழர் முன்வைக்கும் இனப்படுகொலை குற்றங்களை வலுப்படுத்த ஏதுவாக அமையும். மேலும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளதைப் போல, ‘இலங்கை அரசாங்கம் உண்மையிலேயே போதைப்பொருள் பிரச்சினையைத் தீர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க விரும்பினால், அது இலங்கை இராணுவத்தை வடக்கு-கிழக்கிலிருந்து அகற்ற வேண்டும்’ எனும் வலிமையான பிரச்சாரத்தை ஜனாதிபதியின் கூற்றை முன்னிறுத்தியே தமிழர் தரப்பு முதன்மைப்படுத்துவது பொருத்தமாகும். இவ்வாறே இராணுவத்தினரை தேசிய கௌரவமாக காட்சிப்படுத்தும் பேரினவாத அரசியல் பிரச்சாரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் போதைப்பொருளுக்கு எதிரான ‘முழு நாடுமே ஒன்றாக’ செயற்றிட்டத்தின் வெற்றி அவசியமாகின்றது.
எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துள்ள போதைப் பொருளுக்கு எதிரான செயல்திட்டம் என்பது ஒரு வகையில் கடந்த கால தென்னிலங்கை அரசாங்கங்களால் இடப்பட்ட தீயை அணைப்பதற்கான முயற்சியேயாகும். வடக்கு-கிழக்கு தமிழ் இளையோரை இலக்கு வைத்து தென்னிலங்கையின் அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட போதை விநியோகம் மாபியாவாக முழுஇலங்கையையும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. ஒரு முக்கியமான கப்பல் பாதையில் அமைந்துள்ள இலங்கைத்தீவின் அமைவிடமும், சர்வதேச போதைப்பொருள் வர்த்தக வியாபாரிகளின் கரிசணையையும் குவித்துள்ளது. இதனை சீர்செய்து முழு இலங்கையையும் போதைப்பொருள் மாபியா மற்றும் பாதாள உலகக் குழுவிடமிருந்து பாதுகாக்கக்கூடிய பொறிமுறையையும் ஆற்றலையும் ‘முழு நாடுமே ஒன்றாக’ செயற்றிட்டம் கொண்டுள்ளதா என்பது, ‘கறுப்பு அரசுக்கு பலம் சேர்க்கும் இராணுவத்தை கட்டுப்படுத்தும் செயற்றிறனிலேயே தங்கியுள்ளது.’
Comments
Post a Comment