தொல்லியல் ஆலோசனைக்குழு நியமனமும் மாற்றமில்லாத இனப்பாகுபாடும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் தொல்லியல் துறை ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாவம்ச மனோநிலையில் கட்டமைக்கப்பட்டுள்ள பேரினவாத கருத்தியல்கள் வரலாறுதோறும் தொல்லியல் துறையினூடாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் தொல்லியல் மதக்கூறுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே தொல்லியல் திணைக்களமும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சின் கீழேயே செயற்படுகின்றது. அதுமட்டுமன்றி பல்லின கட்டமைப்பையும் வரலாற்றையும் கொண்ட இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் சின்னத்தில் பௌத்த தர்ம சக்கரமும், பௌத்த விகாரையுமே இணைக்கப்பட்டுள்ளது. இந்தப்பின்னணியிலேயே ஈழத்தமிழர்களின் வாழ்விடங்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பிக்களும் தொல்லியல் என்ற பெயர்ப்பலகையுடன் அரச இயந்திரத்தின் பாதுகாப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. ஆட்சி மாற்றங்களும் ஆட்சியாளர் மாற்றங்களும் அரச திணைக்களங்கள் குறிப்பாக தொல்லியல் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்புக்களை சீர்செய்ய முடியாத நிலைமைகளையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்நிலையிலேயே அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தனிச்சிங்கள தொல்லியல் ஆலோசனைக்குழு தமிழ் மக்களிடையே விசனத்தை உருவாக்கியுள்ளது. இக்கட்டுரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இனப்பாகுபாட்டு நிலைமைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
பௌத்த சாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர் கலாநிதி கிந்தும சுனில் செனவியால் அக்டோபர்-24அன்று திகதியிடப்பட்டு நவம்பர்-01அன்று வர்த்தமானி அறிவிப்பாக, 10.03.2025 தொடக்கம் 09.03.2027 வரையான காலப்பகுதிக்கான தொல்லியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொலநறுவை சோலோஸ்மஸ்தான ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் வெண்டருவே தர்மகீர்த்தி ஸ்ரீ இரத்தினபால உபாலி நாயக்க தேரர், ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் மல்வத்து மகா விகாரை பிரிவின் பிரதம பதிவாளர் கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் மற்றும் கலாநிதி கல்வௌ விமலகாந்த தேரர் ஆகிய மூன்று பௌத்த மத குருமார்கள் உள்ளடங்கலாக 19 தனிச்சிங்கள உறுப்பினர்களைக் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் திணைக்களம் வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களின் தனியார் நிலங்களையும் வழிபாட்டு தலங்களையும் ஆக்கிரமிப்பு செய்வதுடன், பௌத்த விகாரைகளை சட்டத்திற்கு புறம்பாக நிறுவப்படுவது தொடர்பில் தமிழ் மக்களிடம் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் கோயிலில் பௌத்த விகாரை நிறுவியதுடன் நீதிமன்ற தடையுத்தரவை நிராகரித்து விகாராதிபதியாக இருந்து மரணித்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது. வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை ஆக்கிரமித்து பௌத்த சின்னங்கள் தொல்லியல் திணைக்களத்தால் நிறுவப்படுகின்றது. கிழக்கில் பொத்துவில் பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட தாண்டியடி சங்கமன்கண்டி மலை அடிவாரத்தில் இரவோடு இரவாக புத்தர் சிலை வைக்கப்பட்டது. திருகோணமலையில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள மக்களின் விவசாய நிலங்கள் பௌத்த மத குரு ஒருவரால் அடாத்தாக தொல்பொருள் நிலம் என மக்களுக்கு பாரிய இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றார். தையிட்டியில் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரை நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு-கிழக்கு முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின் பெயர்ப்பலகையில் தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பு தொடர்கதையாகவே நீள்கின்றது. ஆட்சி அல்லது ஆட்சியாளர் மாற்றங்களும் கடந்த கால தொல்லியல் ஆக்கிரமிப்புக்களுக்கு எவ்வித ஆக்கபூர்வ முடிவுகளையும் வழங்க தயாரில்லை. குறிப்பாக தையிட்டியில் நிறுவப்பட்டுள்ள சட்டத்திற்கு புறம்பான விகாரை விடயத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தனியார் காணிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள குற்றவாளியான விகாராதிபதியிடமே காணியை இழந்த மக்களை நீதி கோருமாறு வலியுறுத்துகின்றது.
இவ்வாறான பின்னணியிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வர்த்தமானி அறிவிப்பினூடாக வெளியிட்டுள்ள தனிச்சிங்கள தொல்லியல் ஆலோசனைக்குழு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இனப்பாகுபாட்டை கேள்விக்குட்படுத்துகின்றது. குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உருவாக்கத்தின் போதும் அமைச்சரவையில் முஸ்லீம் இனப்பிரதிநிதி நிராகரிக்கப்பட்டமை சர்ச்சைகளை உருவாக்கியது. அதேவேளை ஈழத்தமிழ் பிரதிநிதித்துவத்தையும் அமைச்சரவை கொண்டிருக்கவில்லை. மலையகத்தைச் சேர்ந்த இராமலிங்கம் சந்திரசேகரரே ஈழத்தமிழ் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அவரே யாழ்ப்பாணம்-கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடும் பேரினவாதியாக அடையாளப்படுத்தப்படும் ராஜபக்சக்களின் ஆட்சியில் கூட கறிவேப்பிலை போல ஒரு அமைச்சர் ஈழத்தமிழ் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். எனினும் தங்களை இனவாதமற்றவர்களாயும் முற்போக்காளர்களாயும் சித்தரிக்கும் தேசிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக சிறுபான்மை தேசிய இனங்களை ஓரங்கட்டுவது அவர்களின் சொல்லிற்கும் செயலிற்கும் இடையிலான முரண்பாட்டையே அடையாளப்படுத்துகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்காலப்பகுதியில் அன்றைய பௌத்த சாசன, சமய கலாச்சார அமைச்சர் மகிந்த ராஜபக்ச ஜூலை 29 (2020)அன்று நாட்டின் தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கு உதவுவதற்காக 20 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நியமித்திருந்தார். முழுமையாக தனிச்சிங்கள குழு என்பதுடன் 9 பௌத்த மதகுருமார்கள் இணைக்கப்பட்டிருந்தார்கள். அவ்வாறே கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் அக்டோபர் 26 (2021) அன்று அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மூலம் ஒரே நாடு, ஒரே சட்டத்தை கட்டியெழுப்புவதற்கான பணிக்குழுவை நிறுவினார். பொது பல சேனா அமைப்பின் தலைவர் கலபொடஅத்தே ஞானசாரவின் தலைமையிலான குழுவில் தமிழ் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அத்தகையதொரு ஆட்சியின் பிரதிமை தோற்றத்தையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தொல்லியல் ஆலோசணைக்குழு நியமன வர்த்தமானி அறிவிப்புக்களும் ஏற்படுத்துகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தமது நிர்வாகச்செயற்பாடுகள் இனரீதியான இலக்கங்களை கணக்கெடுப்பதில்லை என்ற கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். எனினும் கடந்த கால இனவிரோத செயற்பாடுகளுக்கும் எத்தகைய நீதியையும் வழங்க தயாரில்லை. அதேவேளை அதனை மறுசீரமைக்கவும் தயாரில்லை. கடந்த காலத்துக்கு பொறுப்புக்கூறலை நிராகரிப்பதுடன், கடந்த கால துயரங்களுக்கு தீர்வினை நிராகரித்துக் கொண்டே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த காலத்தை கடந்து எதிர்காலத்தை வடிவமைப்பதாக பிரச்சாரப்படுத்துகின்றார்கள். இது தமிழ் மக்கள் மீதான கடந்த கால ஆக்கிரமிப்புக்களையும் அதன் விளைவுகளையும் பேணுவதாகவே அமைகின்றது. ஏற்கனவே இனரீதியாக பாரபட்சப்படுத்தப்பட்டு இன ஆக்கிரமிப்புக்கு உள்ளான சமுகத்தின் கடந்த காலத்துக்கு எவ்வித பரிகாரமும் வழங்கப்படாத நிலை அவநம்பிக்கையான சூழலை பேணுவதாகவே அமையக்கூடியதாகும்.
தொல்லியல் ஆலோசனைக்குழு தனிச்சிங்களக்குழுவாக காணப்படுகின்றமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் வடக்கு பிரமுகர், 'கிட்டத்தட்ட ஒரு மாதமாக இந்தக் குழுவில் இடம் பெற பல தமிழ் கல்வியாளர்கள் மற்றும் பிற பிரமுகர்களை நாங்கள் அணுகியுள்ளோம். ஆனால் எந்த ஒரு தனி நபரும் சேர சம்மதம் தெரிவிக்கவில்லை' எனக்குறிப்பிட்டுள்ளார். இதில் எவ்விதத்தில் உண்மை என்பது உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் தனிச்சிங்கள தொல்லியல் ஆலோசனைக்குழு வர்த்தமானி வெளியாகி சர்ச்சையாகிய பின்னர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தேசிய மக்கள் சக்தி ஆதரவு விரிவுரையாளர் ஒருவர் கலைப்பீட விரிவுரையாளர் ஒரு சிலரிடம் தொல்லியல் ஆலோசனைக்குழுவில் இணைவதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், கலைப்பீட விரிவுரையாளர்கள் அவ்அழைப்பை நிராகரித்துள்ளமையும் அறியக்கூடியதாக உள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வடக்கு பிரமுகர் குறிப்பிடுவது போன்று ஒரு மாத காலமாக தமிழர் தரப்பில் துறைசார் நிபுணர்களை அணுகியிருப்பினும் அல்லது வர்த்தமானி சர்ச்சைக்கு பின்னராவது அணுகியமையும் வரவேற்கத்தக்கத்தக்கதாகும். எனினும் கல்வியாளர்கள் மற்றும் பிரமுகர்களின் நிராகரிப்புக்கான காரணங்களை அறிவதும் களைவதுமே தேசிய மக்கள் சக்தியின் தூய்மையான அரசியலை வெளிப்படுத்தக்கூடியதாகும். மாறாக நாம் கூப்பிட்டோம் அவர்கள் வரவில்லை எனத் தட்டிக்கழிப்பது தமிழ் மக்களோடு தேசிய மக்கள் சக்தி இதயபூர்வமாக இணைய தயாரில்லாத நிலைமைகளையே அடையாளப்படுத்தக்கூடியதாகும்.
கல்வியாளர்களும் பிற பிரமுகர்களும் கடந்த கால துயரங்களின் தொடர்ச்சிக்குள்ளாலும் கடந்த ஓராண்டுகளில் அதனை சீர்செய்யக்கூடிய எந்தவொரு ஆரோக்கியமான நடடிவடிக்கைகளையும் மேற்கொள்ளாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கையினூடாவே தொல்பொருள் ஆலோசனைக்குழு அழைப்பை நிராகரித்துள்ளார்கள். தொல்பொருள் திணைக்களம் கடந்த காலங்களில் தமிழ் மக்களிற்கெதிரான பேரினவாத தரப்பின் ஒடுக்குமுறை கருவியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரச வர்த்தமானிகள் இன்னும் நிலுவையிலேயே காணப்படுகின்றது. இலங்கையில் 823ஃ73ஆம் இலக்க தொல்லியல் கட்டளைச்சட்டம் (188ஆம் அத்தியாயம்) 16ஆம் பிரிவின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கும் பல சைவ சமய ஆலயங்களில் பௌத்த மதம் சார்ந்த அடையாளங்கள் இருப்பதாக கடந்த ஆட்சிக்காலப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களம் சிறப்பு வர்த்தமானிகள் மூலம் அடையப்படுத்தியுள்ளது. அவற்றில் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம், மாந்தைகிழக்கு பூவரங்குளம் பத்திரகாளி அம்மன் கோவில், குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில், குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில், பாண்டியன்குளம் சிவன் கோவில், வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில், குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவில், மன்னார் திருக்கேதீஸ்வரக் கோவில், மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவில், ஒதியமலையில் வைரவர் கோவில், முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில், திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை, செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம், புல்மோட்டை அரிசி ஆலை மலை கோவில், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம், சூடைக்குடா மத்தள மலைப்பகுதி முருகன் ஆலயம், திருகோணலை கோணேஸ்வரர் ஆலயம், மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன், சிவபுரம் சிவாலயம், மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில், குஞ்சுமப்ப பெரியசாமி கோவில், ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில், கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோவில், மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம், மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமிமலை எனப்பட்டியல் நீள்கின்றது. இத்தகையதொரு ஆக்கிரமிப்புக்கான முன்னாயர்த்த வர்த்தமானி ஏற்பாடுகள் நிலையானதாக காணப்படுகையில் எவ்தமிழ் புலமையாளர்கள் நம்பிக்கையுடனும் துணிவுடனும் தொல்லியல் துறையுடன் இணைந்து பயணிக்க முடியும். குறைந்தபட்சம் கடந்த கால ஆக்கிரமிப்பு வர்த்தமானிகளையாவது செயலிழக்கச்செய்வதனூடாகவே தமிழ்க்கல்வியாளர்கள் மற்றும் தமிழ் சமுகத்திடம் தொல்லியல் துறை சார் நம்பிக்கையை உருவாக்க முடியும். உப்புச்சப்பாக கறிவேப்பிலை போல இருந்து தமது பிரபல்யத்தையும் பெயரையும் கெடுக்க விரும்பாத கல்வியாளர்களும் பிரமுகர்களுமே தேசிய மக்கள் சக்தியின் அழைப்பை நிராகரித்துள்ளார்கள். இதனை தேசிய மக்கள் சக்தி புரிந்து கொள்வதும் திருத்தி கொள்வதும் அவசியமாகும்.
மேலும், தமிழ் சமுகத்திலும் துறைசார் புலமைத்துவ பற்றாக்குறை பெரும் இடைவெளி அதிகரித்து வருகின்றது. கடந்த முப்பதாண்டு காலப் போர் தமிழ் சமுகத்தை உலக ஒழுங்கிலிருந்து பெரிய இடைவெளியை உருவாக்கியுள்ளது. அதனை சீர்செய்யக்கூடிய துரித செயற்பாடுகளை போருக்கு பின்னர் 16 ஆண்டுகளிலும் தமிழ்த்தரப்பு செய்யத் தவறியுள்ளது. இப்பத்தியின் மைய உரையாடலான தொல்லியல்துறையை பொருத்தவரையிலும், சமகாலத்தில் வடக்கில் செம்மணியில் அகழப்படும் மனிதப்புதைகுழி செயற்பாட்டுக்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழக தொல்லியல் துறையை அணுகிய போது ஆரம்பத்தில் போதிய புலமையாளர்கள் இன்மையால் அது மறுக்கப்பட்டிருந்தது. பின்னர் மாணவர் ஒன்றிய தலையீட்டிலேயே தொல்லியல் துறை மாணவர்கள் மனிதப் புதைகுழி அகழ்வில் பங்குபற்றுகின்றார்கள். இது தொடர்பில் தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தரப்பும் விழிப்படைய வேண்டும். வெறுமனவே அரசாங்கத்தை மாத்திரம் குற்றம் சொல்வதற்கு அப்பால் இலங்கை அரசாங்கத்துக்கு ஒப்பாக நிழல் அரசாங்கமாக செயற்படக்கூடிய புலமைத்துவத்தையும் ஆற்றலாளர்களையும் ஈழத்தமிழ் தரப்பு கொண்டுள்ளதா என்பதில் சிந்திக்க வேண்டும். அதனை சீர்செய்ய உழைக்க வேண்டும்.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தனிச்சிங்கள தொல்லியல் ஆலோசனைக்குழு வர்த்தமானி, கடந்த கால தொடர்ச்சியின் பிரதிமைகளையே ஏற்படுத்துகின்றது. அரசாங்கம் தமிழர்களை உள்வாங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட அழைப்புக்கள் பாராட்டத்தக்கதாயினும், அவர்களின் குறைகளை சீர்செய்யாது அவநம்பிக்கையான சூழலை பேணுவது தேசிய மக்கள் சக்தி மீது சந்தேகங்களை பேணுவதாகவே அமைகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தென்னிலங்கையில் ஊறிப்போன பேரினவாத கலாசாரத்தின் தொடர்ச்சி என்பது மறுக்க முடியாததாகவே அமைகின்றது. தொல்லியலை தொடர்ச்சியாக பௌத்த பேரினவாதத்தின் கருவியாக பாதுகாக்கும் எண்ணங்கள் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டிலும் புரையோடியுள்ளமையையே தொல்லியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம் உறுதி செய்கின்றது. குறிப்பாக ராஜபக்சாக்கள் 9 மதகுருவை நியமித்த நிலையில், அநுரகுமார திசநயாக்க 3 மதகுருவை நியமித்துள்ளார். ராஜபக்சக்களின் 1/3 பேரினவாத சாயலை அநுரகுமார திசநாயக்கவும் தொடருகின்றார் என்பதே எதார்த்தமாக காணப்படுகின்றது.
Comments
Post a Comment