நினைவேந்தல்களின் உணர்வுபூர்வ எழுச்சியும் உணர்வைக் கடந்து அரசியல்மயமாக்கப்பட வேண்டிய தேவைப்பாடும்! -ஐ.வி.மகாசேனன்-

2025ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள், 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 16 ஆண்டுகளின் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக வழமைக்கு மாறாக வடக்கு-கிழக்கில் தமிழர்கள் வாழும் நிலங்களில் உள்ளூராட்சி சபைகளின் முன்னெடுப்பில் மாவீரர் தின நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இப்பின்னணியில் தெருக்களில் சிவப்பு-மஞ்சள் வர்ண கொடிகள் அலங்கரிக்கப்பட்டதுடன், தமிழ்த் தேசியப் பாடல்களும் ஒலிவாங்கியில் தெருக்களெல்லாம் பாடப்பட்டது. இடையிடையே சில இடங்களில் இலங்கை காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு துறையினர் தலையிட்டு எச்சரிக்கைகளை வழங்கியுள்ளமையும் செய்திகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மாவீரர் தின நாட்களை அண்மிக்கையில், தமிழ் இனத்தின் அவலமான ஒற்றுமையின்மையால் கட்சிசார் போட்டிகளால் சிறு சஞ்சலங்கள் வெளிப்பட்ட போதிலும், நிகழ்வுகளில் கட்சி முரண்பாடுகள் வெளிப்படாத வகையில் பொதுமக்கள் முகஞ்சுழிக்காத வகையிலும் பெருந்திரட்சியுடன் மாவீரர் நினைவேந்தல் நிறைவேறியுள்ளது. இக்கட்டுரை 2025ஆம் ஆண்டு மாவீரர் தின பரிணாமத்தை கொண்டு செல்ல வேண்டிய நகர்வினை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் ஈழத்தமிழர்களின் நினைவேந்தல்களை கடந்து செல்லும் மென்போக்கு அரசாங்கங்கள், மாவீரர்கள் நினைவேந்தலை வெறுமனவே குடும்ப உறவுகளின் இழப்பு சார்ந்த பரிதவிப்பாகவே பொருள்கோடல் வழங்குகின்றார்கள். மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்  சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, 'உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாகவும், எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அல்ல' என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவொரு வகையில் மாவீரர்களின் அரசியல் இலட்சியங்களை நீக்கி அல்லது அவர்களின் தியாகங்களுக்கான காரணங்களை களைந்து நினைவு கூருவதையே வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேவேளை கடந்த நவம்பர்-13இல் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் பங்குபற்றலுடன் ஜே.வி.பியினரின் 36வது கார்த்திகை வீரர்கள் தினம் நினைவுகூறப்பட்டது. அதில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் இலங்கை ஜனாதிபதி, ஜே.வி.பி தோழர்களின் அரசியல் இலக்குகளையும் தியாகங்களையும் பெருமிதமாக நினைவு மீட்டார். உரையின் ஆரம்பத்தில், 'முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நமது கட்சியைக் கட்டியெழுப்பி, உயிர்ப்பித்து, ஆன்மீக ரீதியாக வடிவமைத்த தோழர் ரோஹண விஜேவீர உட்பட, பல்லாயிரக்கணக்கான நமது தோழர்களை நினைவுகூர இன்று நாம் இங்கு கூடியுள்ளோம். அவர்கள் குறிப்பிடத்தக்க தியாகங்களைச் செய்து, இன்னும் நம்மை ஊக்குவிக்கும் மற்றும் ஆழமான படிப்பினைகளை வழங்கும் நீடித்த உதாரணங்களை நிறுவினர். 1989 முதல் முப்பத்தாறு ஆண்டுகளாக, நாங்கள் அவர்களைப் பற்றிப் பேசி வருகிறோம். நாங்கள் அவர்களை நினைவுகூர்ந்து வருகிறோம். இருப்பினும், இந்த சந்தர்ப்பம் முந்தைய எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டது. அப்போது, அவர்களைப் பற்றிப் பேசும்போது, நமது இயக்கத்திற்குள் நாம் கொண்டிருக்க வேண்டிய குணங்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, அது அதிகாரத்தைப் பெற பாடுபடும் ஒரு கட்சியாக இருந்தது. தற்போது, அவர்களை வெற்றிகரமாக அதிகாரத்தைப் பெற்ற ஒரு அரசியல் கட்சி என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். அப்போது அவர்கள் கற்பித்த பாடங்கள் அந்த வெற்றியை அடைய எங்களுக்கு உதவியது. அதேபோல், அந்தப் பாடங்களும் அனுபவங்களும் இந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதிலும், நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தொடர்ந்து நம்மை வழிநடத்தும்' என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க குறிப்பிட்டிருந்தார். ஜே.வி.பியினரும் கடந்த காலங்களில் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய குழுவாக தடை செய்யப்பட்டிருந்த அமைப்பு ஆகும். ஜே.வி.யின் தலைவர் ரோகண விஜேவீர உட்பட பல்லாயிரக்கணக்கணக்கான உறுப்பினர்கள் இலங்கை அரச இயந்திரத்தால் தண்டிக்கப்பட்டு கொடூரமாக மரணிக்கப்பட்டவர்கள். அத்தகைய அமைப்பின் உறுப்பினர்களின் இலட்சியங்களும் அனுபவங்களும் தம்மை வழிநடத்துவதாக இலங்கை ஜனாதிபதி சுட்டிக்காட்டும் சமகாலப்பகுதியிலேயே, இலங்கையின் அமைச்சர் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்தவர்களின் அரசியல் இலக்குகளை மற்றும் தியாகங்களை களைய நிர்ப்பந்திக்கின்றார்.

இவ்வாறான இரட்டை நிலைப் பின்னணியிலேயே ஜே.வி.பி அரசாங்கத்தின் மென்போக்கை அணுக வேண்டியுள்ளது. மாவீரர் நினைவேந்தல் தொடர்பிலான ஜே.வி.பியின் இரட்டைப் போக்கை புரிந்து கொண்ட சில இலங்கை அரச எந்திரமான காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வு நினைவேந்தல்களில் மக்கள் எழுச்சியை தடுக்கும் வகையிலான சில முனைப்புக்களை கடந்த வாரங்களில் மேற்கொண்டுள்ளார்கள். குறிப்பாக 2025ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் உள்ளூராட்சி சபைகளின் முன்னெடுப்பிலேயே மேற்கொள்ளப்பட்டது. இதுவொரு வகையில் அரசியல் பாதுகாப்பை மற்றும் மக்களின் அச்சத்தை போக்கக்கூடிய முன்முயற்சியாகும். இவ்வாறான சூழலில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் தன்னார்வமாக இணைந்து செயலாற்றும் பொதுமக்களுக்கும் இளையோருக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதனூடாக, நினைவேந்தல்கள் தன்னார்வ எழுச்சி பெறுவதை தடுக்கும் முனைப்புடனேயே ஆங்காங்கு அரச எந்திரம் அச்சமூட்டும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. எனினும் மாவீரர்கள் சார்ந்த மக்களின் உணர்வோட்டமான பிணைப்பு கார்த்திகை-27இனை எந்த நெருக்கடிகளுக்குள்ளும் தொடர்ச்சியாக எழுச்சிகரமான நாளாகவே மாற்றி வருகின்றது. இவ்வாண்டு இயற்கையும் அனர்த்தத்தை உருவாக்கக்கூடிய சூழல்கள் செய்திகள் இருந்த போதிலும், மாவீரர் நினைவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் தாயகத்தில் மக்கள் பெருந்திரளாக திரண்டுள்ளார்கள்.

மக்களின் திரட்சி, மாவீரர்கள் சார்ந்து மக்களிடையே எழும் எழுச்சி என்பது வெறுமனவே குடும்ப உறவுகளின் இழப்பு சார்ந்த பரிதவிப்பாக கடந்து செல்ல முடியாது என்ற செய்தியையே இவ்ஆண்டும் பலமாக வழங்கியுள்ளது. மாவீரர் நினைவேந்தல்களுக்கு தமிழ் அரசியல் பரப்பில் வழங்கப்படும் முக்கியத்துவமும், அவர்களது அரசியல் இலக்குகளுக்கான தியாகத்தை முதன்மைப்படுத்துவதாகவே அமைகின்றது. நினைவேந்தல் கூட்டு நினைவாக கருதப்படுகின்றது. இவ்நினைவேந்தல் என்பது வீடுகளில் நடத்தப்படும் நினைவஞ்சலி என்பதிலிருந்து வேறுபட்டது. அதே போன்று நினைவேந்தல்கள் நீத்தார் நினைவு மட்டுமன்றி அவை நடந்தேறிய நிகழ்வுகளின் வரலாற்றுச் சாட்சிகளாக இருக்கின்றன. குறிப்பாக இந்த கூட்டு நினைவுகள் சமூகமொன்றின் மனங்களில் நிலைத்து நிற்க வேண்டிய இயங்கியல் தொடர்பானதாக இருக்கின்றது. இவ்வாறான நினைவேந்தலின் அரசியல் முக்கியத்துவத்தை களையும் நோக்குடனேயே மென்போக்காக காட்டிக் கொள்ளும் அரசாங்கங்களும், இறந்தவர்களுக்காக குறிப்பாக குடும்ப உறவுகளின் இழப்பாக மடைமாற்றும் பொருள்கோடலை வழங்குகின்றார்கள். எனினும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் மக்களின் திரட்சி மக்களிடம் ஆழமாக பொதிந்துள்ள தமிழ்த்தேசிய வேட்கைகளையே உறுதி செய்கின்றது.

இலங்கை அரசாங்கங்களுக்கு ஒப்பான அரசியலையே தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகளிடம் மறைமுகமாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கை அரசாங்கங்கள் மக்களிடம் தமிழ்த்தேசிய அரசியலை களைய முற்படுகின்றது. மாறாக தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் தமிழ் மக்களிடம் ஆழமாக பொருந்தியுள்ள தேசிய உணர்வுகளூடாக தமது அரசியல் இருப்பை பாதுகாக்க முற்படுகின்றார்கள். அரசியல்வாதிகளின் கடைசி புகலிடமாக மாவீரர் தியாகங்கள் அமைந்து விடுகின்றதோ என்ற அச்சத்தையும் சமீபத்திய நிகழ்வுகள் பொதுவெளியில் உருவாக்கியுள்ளது. தோற்றுப்போனவர்களும், தோல்விகளின் விளிம்பிலும் மாவீரர்களை முன்னிறுத்திய அரசியலை பலரும் இவ்ஆண்டு மேற்கொள்வதினை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இப்போக்கை முழுமையாக நிராகரிக்க முடியாது. குறிப்பாக தமிழ் மக்கள் மாவீரர் நினைவேந்தல்களை தன்னார்வமாக மேற்கொள்வதற்கான நம்பிக்கையை உருவாக்குவதற்கான அல்லது அச்சத்தை போக்குவதற்காக முதற்படியில் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் அவசியமாகின்றது. ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தியின் தென்னிலங்கை உறுப்பினர்கள் விடுதலைப்போராட்டம் தொடர்பில் முரணான கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற போதிலும், வடக்கு-கிழக்கு உறுப்பினர்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஒத்திசைவான கருத்துக்களையே பிரச்சாரம் செய்கின்றார்கள். இக்காலம் தமிழ் மக்களிடையே விடுதலைப் போராட்டத்தின் உயிர்ப்பை வெளிப்படையாக பேணுவதற்கு உகந்த காலமாகும். இதனை தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பின், அதன் இரட்டை நிலை தமிழ்ப்பரப்பில் உடைக்கப்படும். இல்லையேல் தமிழ் மக்களிடையே தன்னார்வமாக தேசியம் வலுவாக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும். அதற்கானதொரு பரிட்சிப்பாகவே இவ்ஆண்டு மாவீரர் நினைவேந்தல்கள் உள்ளூராட்சி சபைகளின் முன்னெடுப்பில் வெகுவிமர்சையாக முன்னெடுக்கப்பட்டமையை கருத்தியலாளர்கள் நோக்குகின்றார்கள். இதில் குறிப்பிடத்தக்க சாதக நிலைமைகள் தமிழ்த்தரப்புக்கு ஏற்பட்டுள்ளதாகவே அவதானங்கள் காணப்படுகின்றது. தமிழ் மக்களிடையே குறிப்பாக யுத்தத்துக்கு பிற்பட பிறந்து வளர்ந்து இன்று இளையோராகியுள்ள புநn-ண பருவத்தினரிடையேயும் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றை கடந்த கால இழப்புக்களை பகிரங்கப்படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளது. இது எதிர்காலத்தில் மக்களிடையே தன்னார்வ எழுச்சியை உருவாக்கக்கூடியதாகவும் அமையும்.

நினைவேந்தல்களை முதன்மைப்படுத்தும் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் தரப்பினர் தமது தோல்வியின் இறுதி புகலிடமாக மாத்திரம் மாவீரர்களின் நினைவேந்தல் பிரச்சாரங்களை முன்னிறுத்துவார்களாயின், எதிர்காலம் நிலையற்றதாகவே அமையக்கூடியதாகும். அரச எந்திரத்தின் அச்சுறுத்தல்களிலிருந்து அச்சம் களையப்படின், மக்கள் தன்னார்வமாக நினைவேந்தல்கள் சார் எழுச்சியை தொடர ஆரம்பித்துவிடுவார்கள். அதன் பின்பு அரசியல்வாதிகளின் பிரச்சாரம் செயலற்று போவதுடன், அவர்களது நிலைத்திருப்பும் கேள்விக்குறியாகும். மாறாக அரசியல்வாதிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள குறைந்தபட்சம் செயற்பாட்டு பலவீனம் காணப்படினும், மாவீரர்கள் உயர்ந்த இலக்குகளுக்கு முரணாகாத வகையில் நடைமுறைக்கு பொருத்தமாக தமது இலக்குகளை அடையாளப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி, மலரஞ்சலி செய்து, புகைப்படங்களுக்கு காட்சிப்படுவதாலோ முழுமைப்படுவதில்லை. செயற்பாட்டில் வருடத்தில் பதினொரு மாதங்களும் ஏக்கிய இராச்சிய-ஒற்றையாட்சி அலகுகளுக்கு பிரச்சாரம் செய்வதும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் துணை போய் கார்த்திகை மாதம் மாத்திரம் மாவீரர்களை பூசிப்பது எவரையும் புனிதப்படுத்தப்போவதில்லை. இச்செயற்பாடுகளை பயன்படுத்தி மக்கள் தன்னார்வ எழுச்சி பெறுவது மாத்திரமே விளைவாக அமையும். 

மக்களிடம் ஏற்படும் தன்னார்வ எழுச்சி என்பது தியாகங்களின் மேன்மையால் கட்டமைக்கப்படும் உணர்வு சார்ந்ததாகும். இவ்உணர்வெழுச்சி என்பது நிகழ்வுகளுடன் மட்டுப்படக்கூடிய அபாயங்களும் காணப்படுகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனிடம், 'தமிழக மக்கள் 2009ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னைய ஆண்டுகளில் ஈழத்தமிழர்களிற்காக கொதிநிலையில் இருந்தார்கள். எனினும் அண்மைக்காலங்களில் ஈழத்தமிழர்களுக்காக கொதிநிலைக்கு செல்லாமை' தொடர்பில் சிவில் சமுக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், 'தமிழக-ஈழத்தமிழர் உறவு மொழியால் உணர்வால் பிணைந்தது. கொத்துயிராய் இறக்கையில் அவ்உணர்வு கொதிநிலையை உருவாக்கியது. அது தற்காலிகமானது. அவ்உணர்வு அரசியல்மயமாக்கப்படவில்லை. ஆதலாலேயே 2009களுக்கு பின்னர் தமிழகம் ஈழத்தமிழர்களுக்காக கொதிநிலைக்கு செல்லவில்லை' எனத்தெரிவித்திருந்தார். அத்தகையதொரு சூழல் பிரதிபலிப்பே மாவீரர்களை மையப்படுத்தி ஈழத்தமிழர்களின் கடந்த கால அரசியல் போராட்டம் தொடர்பில் இன்றைய இளையோரிடம் கட்டமைக்கப்படும் தன்னார்வ உணர்வு எழுச்சியுமாகும். இது அரசியல்மயப்படுத்த தவறுகையில், தற்காலிகமாக வெறுமனவே மாவீரர் நினைவேந்தல்களின் தன்னார்வ எழுச்சியுடன் மட்டுப்படக்கூடிய அபாயங்களும் காணப்படுகின்றது.

'அரசியல்மயமாக்கல்' என்ற கருத்தின் ஒரு பொருள், அரசியலில் இதுவரை இல்லாததை வெளிப்படையாக அரசியலில் திணிக்கும் செயல்பாடுகள் அல்லது நம்பிக்கைகளைக் குறிக்கிறது. இந்த அர்த்தத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒரு மாறுபாட்டில், தற்போது அரசியலில் திணிக்கப்பட்டுள்ள பிரச்சினை இதுவரை ஒரு அரசியல் அல்லது அரசாங்க விடயமாக இருந்ததில்லை என்று வலியுறுத்தப்படுகிறது. மற்றொரு மாறுபாட்டில், அரசாங்கம் முன்னர், தேசம் நிறுவப்பட்ட நேரத்தில் அல்லது அதற்குப் பிறகு, ஆனால் இப்போது தொலைதூரக் காலகட்டத்தில் ஈடுபட்டிருந்தது என்றும் வலியுறுத்தப்படுகிறது. ஒருவகையில் இரண்டாம் நிலைப்பாட்டிலேயே ஈழத்தமிழர்களின் சமகால அரசியல்மயமாக்கலும் அவசியமாகின்றது. அரசியல்மயமாக்கலைப் பொறுத்தவரை, குழு அடையாளம் என்பது பகிரப்பட்ட குறைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உயர் சமூக மட்டத்தில் அடையாளம் காண்பதையும் உள்ளடக்கியது. அரசியல்மயமாக்கப்பட்ட அடையாளம் என்பது வரையறையின்படி ஒரு உள்ளமைக்கப்பட்ட அடையாளமாகும். ஏனெனில் இது பாதிக்கப்பட்ட குழுவில் அடையாளம் காணப்படுவதையும், பகிரப்பட்ட குறைகள், விரோதப் பண்புக்கூறுகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான அடுத்தடுத்த அதிகாரப் போராட்டத்திற்கான சூழலை வழங்கும் மிகவும் உள்ளடக்கிய நிறுவனத்துடன் அடையாளம் காண்பதையும் உள்ளடக்கியது. ஈழத்தமிழ் இளையோரிடமும் சமகாலத்தில் அவர்களின் கூட்டு அடையாளத்துடன் அரசியல்மயமாக்கப்படுவதே தமிழர்களின் இருப்பை கடந்த கால வடிவத்துடன் பாதுகாக்க பொருத்தமான முன்முயற்சியாகும்.

எனவே, 2025ஆம் ஆண்டு மாவீரர் நினைவேந்தல்களும் அதுசார் எழுச்சிகளும் உணர்வுபூர்வமான ஈழத்தமிழ் அரசியல் நிலைகளை உறுதி செய்கின்றது. ஜே.வி.பியின் இரட்டை நிலைப்பாட்டை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளதுடன், ஈழத்தமிழர்களின் தன்னார்வ உணர்வுபூர்வ எழுச்சிக்கும் காரணமாகியுள்ளது. இது ஈழத்தமிழர்களுக்கு தேவையான தந்திரோபாய நகர்வாகும். இத்தகைய தந்திரோபாய நகர்வூடாகவே கிடைக்கும் வாய்ப்புக்களை தமதாக்க முடியும். அத்துடன் இவ்உணர்வுபூர்வ அரசியலை ஈழத்தமிழர்களின் அரசியல்மயமாக்கப்பட்ட அடையாளத்துடன் பேணுவதனூடாகவே உரிமைப் போராட்டத்தையும் மாவீரர்களின் தியாகங்களையும் பாதுகாக்க முடியும். மாறாக உணர்வு எழுச்சியை வியந்துகொண்டிருப்பது தற்காலிக மகிழ்வையும் நிலையான அழிவையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-