திருகோணமலை புத்தர் சிலை விவகாரமும் அரசியலமைப்பின் பௌத்த சாசனத்திற்கான முன்னுரிமையும்! தமிழரசுக்கட்சி பொறுப்புக்கூற வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையில் அதிவிரைவாக இனவிகிதாசார மாற்றம் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில், மீண்டுமொரு இனரீதியான முரண்பாட்டின் வடு கடந்த வாரம் பதிவாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சட்டமீறலான மற்றும் ஆக்கிரமிப்பு தொனியில் புத்த சிலைகள் நிறுவுவது இயல்பானதொரு நிலைமைகளாகும். 2005ஆம் ஆண்டு திருகோணமலை நகரின் மத்தியில் திடிரென அமைக்கப்பட்ட சட்டத்துக்கு புறம்பான புத்தர் சிலை விவகாரம் தமிழர் மத்தியில் கொதிநிலையை உருவாக்கியது. இக்கொதிநிலை இருபதுக்கும் மேற்பட்டோரை கொலை செய்ததுடன் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோரை இடம்பெயர செய்தது. எனினும் பேரினவாதத்தின் மூர்க்கத்தால் சட்டத்துக்கு புறம்பான புத்தர் சிலை நிலையானதுடன் தொடரானது. திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வென்னீர் ஊற்று வளாகம், அரிசி மலை, திருகோணமலை கோட்டை, குச்சவெளி, தென்னமரவாடி என சட்டத்துக்கு முரணாக புத்த சிலை நிறுவுவதும் ஆக்கிரமிப்பதும் தொடர் செய்திகளாகவே அமைந்துள்ளது. இலங்கையில் வடக்கு-கிழக்கில் சட்டத்துக்கு முரணான புத்தர் சிலை நிறுவலும், அரச எந்திரத்தின் பாதுகாப்புடன் நிலைபெறுவதும் இயல்பானதாகவே அமைகின்றது. ஆட்சியாளர்களின் மாற்றங்கள் இவ்அரசியல் இயல்பில் மாற்றத்தை உருவாக்க கூடியது இல்லை என்பதையே அண்மைய திருகோணமலை விவகாரமும் அரசாங்கத்தின் எதிர்வினைகளும் உறுதி செய்துள்ளது. இக்கட்டுரை திருகோணமலை டச் பே கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர்சிலை தொடர்பான சர்ச்சைகளையும் அதனை மையப்படுத்திய தென்னிலங்கையின் பேரினவாத அரசியல் நிலைபேணுகையையும் தேடுவதாகவே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரத்தில் நவம்பர்-16அன்று அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் கல்யாணவன்சதிஸ்ஸ தேரர் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன் அதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். நவம்பர்-15அன்று இரவோடு இரவாக குறித்த பகுதியில் பெயர்ப்பலகை நடப்பட்டு, கட்டுமானப் பொருட்கள் இறக்கப்பட்டு கட்டுமான வேலைகள் இடம்பெற்று வந்தன. குறித்த சட்டவிரோத கட்டுமானப்பணிகள் தொடர்பாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் நவம்பர்-16அன்று முறைப்பாடு செய்யப்பட்டு, இது தொடர்பாக நீதிமன்றில் பொலிஸாரினால் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவோடிரவாக அவ்விடத்திற்கு புத்தர் சிலை கொண்டு வரப்பட்டது. பொதுமக்களிடையே ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரனின் தலையீட்டுடன் காவல்துறையினர் புத்த சிலையை அகற்றியிருந்தனர். எனினும் மறுநாள் நவம்பர்-17 பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, 'புத்தர் சிலை அதன் பாதுகாப்பிற்காக அகற்றப்பட்டதாகவும், விரைவாக போலீஸ் பாதுகாப்பின் கீழ் அது கோவிலுக்குத் திருப்பி அனுப்பப்படுவதாகவும்' தெரிவித்தார். மேலும், 'சிலையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இன்று முதல் அமைதியைக் காக்கவும், சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை அமல்படுத்தவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக' பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இவ்இரட்டை நிலைப்பாடு தமிழ்ப்பரப்பில் பொதுமக்களிடையே விசனத்தையும் அரசியல்வாதிகளிடையே விமர்சனத்தையும் உருவாக்கியிருந்தது. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது கடந்த கால அனுபவத்தை சுட்டிக்காட்டி, குறிப்பாக இலங்கை சுதந்திர கட்சியின் அமைப்பாளராக செயற்பட்டமையை சுட்டி தென்னிலங்கை கட்சிகளிடம் இனப்பாரபட்சம் நிலையானது என்பதை குறிப்பிட்டு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரனினை தமது கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். மேலும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், 'பெரும்பான்மை சக்திகளின் தேவையற்ற அழுத்தங்களுக்கு அடிபணிந்ததற்காக அரசாங்கத்தின் நடத்தை மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் நடத்தையால் இலங்கை தமிழரசுக்கட்சி முற்றிலும் அதிருப்தி அடைந்துள்ளது' என்று ஒரு எக்ஸ் பதிவில் தெரிவித்திருந்தார். மேலும், 'பாதுகாப்பு காரணங்களுக்காக சிலை அகற்றப்பட்டதாகவும் இன்று அது மீண்டும் நிறுவப்படும் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெட்கமின்றி அறிவித்தபோது, அனைத்து மக்களையும் சமமாக நடத்துவதாக அவர்கள் கூறிய அனைத்து வார்த்தை ஜாலங்களும், தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் ஒரு இனவெறி, சிங்கள பௌத்த தேசியவாத சக்தியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வேறு எந்த அரசாங்கத்தையும் விட வேறுபட்டதல்ல. திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உட்பட தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆதரவு நிலைப்பாட்டாளர்கள் ஒரு சிலரும் ஆட்சி மாற்றம் அரசில் மாற்றத்தை உருவாக்கப் போவதில்லை எனவும், இலங்கை அரசு சிங்கள பௌத்த பேரினவாதத்தை மையப்படுத்தியது என்ற விளக்கத்தை வழங்க முற்படுகின்றார்கள். அத்துடன் தமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பாதுகாக்கும் முனைப்புடன் கடந்த கால அரசாங்கங்களிலிருந்து இவ்அரசாங்கத்தின் அணுகுமுறை மாறுபடுவதாக வழக்காட முனைகின்றார்கள். ஏனைய அரசாங்கங்கள் சட்டத்துக்கு முரணாக வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு அவ்விடத்திலேயே பாதுகாப்பு அளிப்பார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பளித்து விட்டு, காவல்துறையினரே சட்டத்துக்கு முரணான இடத்தில் புத்தர் சிலையை பாதுகாப்பாக வைப்பார்கள். இதுவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாறுபட்ட அணுகுமுறையாக காணப்படுகின்றது.
இனப்பாரபட்சமற்ற அரசாங்கமாக தம்மை பிரகடனப்படுத்தி கொள்ளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அத்துமீறல்களையும் சட்டத்துக்கு முரணான விடயங்களையும் சலுகைகளூடாக கடந்து செல்லும் போக்கினையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக திருகோணமலை கடற்கரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை சட்டத்திற்கு உட்பட்டதா முரணானதா என்ற வாதப்பிரதிவாதங்களை கடந்து, புத்தர் சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் ஒருவர் மீது பௌத்த பிக்கு ஒருவர் கன்னத்தில் அறைந்திருந்த காணொளி சமுக வலைத்தளங்களில் வெளியாகியது. இது காவல்துறையின் செயற்பாட்டுக்கு இடையூறுவிளைவிக்கக்கூடிய குற்றமாகும். எனினும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் பௌத்த பிக்கு மீது எடுக்கப்படாத நிலையில், பௌத்த பிக்கு இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைக்கு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அணுகுமுறையிலும் பௌத்தம் ஏனைய மதங்களிலிருந்து விசேட சலுகையுடன் அணுகப்படுவதனையே உறுதி செய்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இனத்துவேச அரசியல் இயல்பானதாகும். கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மைய கட்சியான ஜே.வி.பி எனப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவின் தமிழ் மக்களுக்கு எதிரான விரோத செயற்பாடுகள் தொடர்பில் பல முன்னுதாரணங்கள் பொதுவெளியில் காணப்படுகின்றது. குறிப்பாக 2001-2005ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளை எதிர்த்து போராடியமை; 2004ஆம் ஆண்டு சுனாமி புனர்நிர்மாண பணிகளை எதிர்த்தமை; இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபையை நீதிமன்ற வழக்கு ஊடாக பிரித்தமை மற்றும் இறுதி யுத்தத்தில் சிங்கள இளையோரை இராணுவத்தில் இணைத்து கொண்டமை போன்ற பல விடயங்களில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை ஜே.வி.பி முன்னெடுத்திருந்தது. மேலதிகமாக திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரத்தில் 2005ஆம் ஆண்டு நகரப்பகுதியில் சட்டத்துக்கு முரணாக வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரமும் மீள் முன்னிலை பெறுகின்றது. 2005ஆம் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரத்தில் அன்றைய ஜே.வி.பியின் அனுசரணையும் பிரதான குற்றச்சாட்டாக காணப்படுகின்றது. குறிப்பாக 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு பின்னால் ஜெயந்த என்கிற அன்றைய ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் இருந்தார் என்பது குற்றச்சாட்டாக அமைகின்றது. இத்தகைய பின்புலத்தை கொண்டவர்களிடம் ஆரோக்கியமான அணுகுமுறை மாற்றத்தை எதிர்பார்ப்பது தமிழர்களின் அரசியல் அறியாமை அல்லது அரசியல் இயலாமையை குறிப்பதாகும்.
திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரத்தில் தமிழரசுக்கட்சியினர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை மாத்திரம் விழித்து விமர்சிப்பது, தமிழரசுக்கட்சி இலங்கையின் எதிர்க்கட்சி மனோநிலையில் செயலாற்றுவதையே உறுதி செய்கின்றது. மாறாக விடுதலைக்காக போராடும் ஒடுக்குமுறைக்குள்ளாகியுள்ள தேசிய இனத்தின் பிரதிநிதிகளாக சூழ்நிலையை சரியாக கணித்து எதிர்வினையாற்ற தவறியுள்ளார்கள். அல்லது சூழலுக்கு பொருத்தமான எதிர்வினை ஆற்றுவதனூடாக கடந்த காலங்களில் தாம் ஆதரித்தவர்களை குற்றஞ்சாட்டுவதை தவிர்த்துக்கொண்டுள்ளார்கள். இது தமிழரசுக்கட்சியின் பொறுப்புக்கூறலற்ற தன்மையையே அம்பலப்படுத்துகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனப்பாரபட்சமானது என்பதில் முரணான விவாதம் காணப்படவில்லை. எனினும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரனின் தலையீட்டில், புத்தர் சிலையை அகற்றும் நடவடிக்கையில் ஒரு படியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நவம்பர்-16 இரவு எடுத்திருந்தது என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். அதேவேளை மறுநாள் நவம்பர்-17இல் எதிர்க்கட்சி உறுப்பினரான தயாசிறி ஜெயசேகர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் சட்டத்துக்கு புறம்பான சிலை அகற்றப்பட்டமையை பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடாக இனத்துவ கருத்துக்களை பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தனர். இனத்துவ கருத்துக்களை வினைத்திறனாக கையாளவோ அல்லது கட்டப்படுத்தவோ திராணியற்ற நிலையிலேயே பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை மற்றும் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதியை கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பேரினவாத அழுத்தத்திற்கு அடிபணிந்தது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, சட்டவிரோத சர்ச்சைக்குரிய புத்தர் சிலைக்கு கோயிலுக்கு காவல்துறை பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியிருந்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பின்வாங்கல் அவர்களின் இயலாமை அல்லது அவர்களிடம் ஆழமாக பொதிந்துள்ள சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனைகள் என்பது எதார்த்தமானதேயாகும். எனினும் அத்தகைய சூழ்நிலை உருவாக்கத்தில் எதிர்க்கட்சிகள் ஆழமான செல்வாக்கு செலுத்துகின்றது என்பதுடன் எதிர்க்கட்சிகளின் உரைகள் ஈழத்தமிழ் அரசியல் தரப்பின் கடந்த கால அரசியல் தவறையும் சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சட்டவிரோத சர்ச்சைக்குரிய புத்த சிலை அகற்றலை தேசிய பிரச்சினையாக விழித்திருந்தார். அத்துடன் தனது உரையில் அரசியலமைப்பு பௌத்தத்துக்கு அளித்துள்ள முன்னுரிமையை சுட்டிக்காட்டி, 'புத்தர் சிலை அல்லது அறப்பள்ளி தொடர்பான எந்தவொரு சர்ச்சையும் போலீஸ் நடவடிக்கை மூலம் அல்லாமல் மூன்று தலைமை பீடங்களுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்' என வலியுறுத்தினார். இங்கு பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பது அரசியலமைப்பின் ஏனைய சட்டங்களிலிருந்து பௌத்த மதம் விலக்கு பெற்றுள்ளது என்பதாகவே சஜித் பிரேமதாசவின் கருத்து காணப்படுகின்றது. இத்தகைய பௌத்த பேரினவாத எண்ணப்பபாங்கை பேணும் சஜித் பிரேமதாசவிற்கே 2019 மற்றும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்குமாறு தமிழரசுக்கட்சியினரும் கோரி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தது. அதுமட்டுமன்றி பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஏக்கிய இராச்சிய இடைக்கால அறிக்கையை சஜித் பிரேமதாசா நிறைவேற்றுவார் என்பதை மையப்படுத்தியே தமிழரசுக்கட்சி சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவையும் வழங்கியிருந்தது. இவ்வாறான பின்னணியில் சஜித் பிரேமதாசவின் பேரினவாத கருத்தியலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடமை தமிழரசுக்கட்சிக்கு காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை பொறுப்புக்கூறலடிப்படையில் இராஜினாமாவை கோரும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர், சஜித் பிரேமதாசவின் தெரிவு தொடர்பிலான தனது முடிவின் தவறுக்கு பொறுப்புக்கூறி தனது கட்சிப் பதவியை இராஜினாமா செய்வாரா என்பதையும் சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. அல்லது சஜித் பிரேமதாசவின் பேரினவாத கருத்தை தமிழரசுக்கட்சி ஏற்றுக்கொள்கின்றது என்ற புரிதலையே வழங்குவதாக அமையும்.
எனவே, திருகோணமலை கடற்கரையில் புத்தர் விகாரை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினது இனப்பாரபட்ச அரசியலின் தொடர்ச்சியை அம்பலப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி தென்னிலங்கை அரசியல் கட்சிகள் யாவும் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையில் ஒரு புள்ளியில் ஒன்றினைவதும் மீளவும் உறுதியாகியுள்ளது. தேர்தலின் அறுதிப் பெரும்பான்மை மற்றும் நிறைவேற்றுத்துறையை விட உயர்ந்த நிலையில், இலங்கை அரசியல் கலாசாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள சிங்கள பௌத்த பேரினவாத கருத்தியல் காணப்படுவதனையும் உறுதி செய்கின்றது. இது இலங்கையில் ஜனநாயகம் பாழடைந்துள்ளது என்பதையே மீள மீள வெளிப்படுத்துகின்றது. இச்சகதிக்குள் தமிழ் அரசியல் கட்சியினரும் கரைந்து போவதையே சஜித் பிரேமதசவிற்கு பகிரங்க எதிர்ப்பை வெளிப்படுத்தாமை உறுதி செய்கின்றது.

Comments
Post a Comment