இலங்கைத்தீவில் போதை கலாசாரத்தை வேரறுக்க கட்சி அரசியல் கலாசாரம் மாற்றப்படுமா! -ஐ.வி.மகாசேனன்-

கிணறு வெட்ட பூதம் வந்த கதையாக தான் போதைப்பொருளுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் நிலையும் மாறிவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வெற்றிகள்  இலங்கையின் அரசியல் மாற்றமாகவே சிலாகிக்கப்பட்டது. புதிய வேட்பாளர்கள் புதிய பிரதிநிதிகளூடாக இலங்கை அரசியல் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி பிரச்சாரப்படுத்தியது. எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகரின் போலிப்பட்டம் முதல் சில சச்சரவுகள் உருவாகிய போதிலும், தொடர்ச்சியான வேறுபட்ட பிரச்சினைகளுடன் போலிப்பட்ட சச்சரவு கரைந்து போனது. தற்போது போதை பொருளுக்கு எதிரான செயற்றிட்டத்தின் ஆரம்பத்தில் கடந்த கால அரசியல்வாதிகளின் போதைப்பொருள் வியாபார தொடர்புகள் இனங்காணப்பட்ட நிலையில், சமகாலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் போதைப் வியாபார தொடர்புகளும் விசாரணையில் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதுவொரு வகையில் தேசிய மக்கள் சக்தியின் தூய்மைப்படுத்தப்பட்ட அரசியல் பிரச்சாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் கேலிக்கைக்குரியதாகவும் மாற்றியுள்ளது என்ற பார்வையே பொதுவெளியில் உருவாகியுள்ளது. இக்கட்டுரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டம் இலங்கை அரசியலை தூய்மைப்படுத்தக்கூடிய திறனைக்கொண்டுள்ளதா என்பதை எச்சரிக்கை செய்வதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் போதைப் பொருள் மாபியா மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு கடந்த கால அரசாங்கங்களை (அதாவது சமகால எதிர்க்கட்சிகளை) குற்றஞ்சாட்டுவதாகவே தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரமும் செயற்றிட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. இதுவொரு வகையில் மறுக்க இயலாத எதார்த்தமாகவுமே காணப்பட்டது. பிரதானமாக இரண்டு சம்பவங்கள் போதைப் பொருள் மாபியா மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுடனான எதிர்க்கட்சிகளின் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டது. ஒன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் சம்பத் மனம்பேரியின் வீட்டில் ஐம்பதாயிரம் கிலோ ஐஸ் இரசாயண மாதிரிகள் கண்டறியப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். கைதுகளின் பின்னரான விசாரணைகளில் மீகசரே கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கியதாக சம்பத் மனம்பேரி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், பேக்கோ சமனின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் முக்கிய விநியோகஸ்தராக செயல்பட, அரசியல் செல்வாக்கு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்குள் உள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்கும் வசதி செய்ததாக மனம்பேரி வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு, ஒக்டோபர்-22அன்று வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரான 38 வயதான லசந்த விக்ரமசேகர, பொதுமக்கள் சந்திப்பின் போது இனந்தெரியாத நபரால் சுடப்பட்டு மரணிக்கப்பட்டார். இதனை எதிர்க்கட்சிகள் அரசியல் படுகொலையாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதாகவும் அரசாங்கத்தை கண்டித்தனர். காவல்துறை விசாரணைகளில், 'மிதிகம லாசா எனப்படும் லசந்த விக்ரமசேகர, ஒரு காலத்தில் பிரபல போதைப்பொருள் வியாபாரி நதுன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்புடையவர். லசந்த மீது குருநாகல், மாத்தறை மற்றும் காலி நீதிமன்றங்களில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டன. போதைப்பொருள் குற்றம் தொடர்பான வழக்கில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையைப் பெற்றிருந்தார். இந்தக் குற்றவியல் பதிவு இருந்தபோதிலும், 2025 மே மாதம் வெலிகம பிரதேச சபைத் தேர்தலுக்கு லசந்த விக்கிரமசேகரவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனுவை வழங்கியது. லசந்த விக்ரமசேகர கும்பல் நடவடிக்கைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாகவும், அவரது முன்னாள் பாதாள உலக தோழர்களுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும்' கூறப்படுகிறது.

இவ்வாறான பின்புலங்களில் போதைப்பொருள் மாபியா மற்றும் பாதாள உலகக் குழுக்கள் விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் எதிர்க்கட்சிகளையே குற்றஞ்சாட்டியது. இதுவொரு வகையில் போட்டி அரசியல் கட்சி நலன் சார்ந்த பிரச்சாரமாகவும் அமைந்திருந்தது. சம்பத் மனம்பேரி மீது குற்றஞ்சாட்டப்பட்ட ஆரம்ப கால செப்டெம்பர் முன்னரைப்பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ வாராந்த அமைச்சரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில், சம்பத் மனம்பேரி மீதான குற்றச்சாட்டிற்கு பொதுஜன பெரமுனவின் தலைமையை சாடியிருந்தார். 'இந்த மனம்பேரி குடும்பம், தங்காலை, மித்தேனியா மற்றும் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் நெருக்கமாகத் தொடர்பு கொண்டு பார்வையிட்ட ஒரு குடும்பம். எனவே, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய விசயம், சம்பத் மனம்பேரியை காவல்துறையிடம் ஒப்படைப்பதாகும்...' என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். அவ்வாறே லசந்த விக்ரமசேகர விவகாரத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்க பிரதிநிதிகள் ஐக்கிய மக்கள் சக்தியை சாடியிருந்தனர். பாராளுமன்ற விவாதத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால, 'வெலிகம பிரதேச சபைத் தலைவரான லசந்த விக்ரமசேகர, மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், ஒரு பாதாள உலகக் குற்றவாளி. அவருக்கு ஆறு நீதிமன்ற வழக்குகள் உள்ளன. அவர் பாதாள உலக நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர், இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையை அனுபவித்து வருகிறார். சமீப காலங்களில் பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே தகராறுகள் ஏற்பட்டுள்ளன. இதுவும் அப்படிப்பட்ட ஒரு தகராறுதான், இந்த தகராறுகள் கொலைகளாக அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாது' எனத் தெரிவித்திருந்தார். இவ்விவாதம் 'ஒரு குண்டர் கும்பலுக்கு வேட்புமனு வழங்கியதற்காக' தேசிய மக்கள் சக்தியயை அவமானப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. 

தனிநபர் கைதுகளும் கொலைகளும் பின்னணியில் கட்சியையும் கட்சி தலைமைகளையும் முன்னிறுத்தி அரசாங்க உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ள ஊடகவியலாளர் சந்திப்புக்களும் பாராளுமன்ற விவாதங்களும் தெளிவான ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு அரசியல் கட்சி போட்டியையே உறுதி செய்கின்றது. சிரேஷ;ட ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பில் எழுதியுள்ள, 'மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்கிரமசேகரவின் கொலை: அரசியல் படுகொலையா அல்லது கும்பல் மரணதண்டனையா?' எனும் தலைப்பிலான ஆங்கில கட்டுரையில், தேசிய மக்கள் சக்தியின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் பாராளுமன்ற விவாதத்தின் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, லசந்த விக்ரமசேகர கொலை விவகாரத்தில் அரசாங்கம் கட்சி அரசியல் போட்டியை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்டதை பிரதிபலிப்பதாக அமைகின்றது. டி.பி.எஸ்.ஜெயராஜ் தனது கட்டுரையில், 'பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, யாரும் கைது செய்யப்படுவதற்கு முன்பே இந்தக் கொலையை ஒரு கும்பல் படுகொலை என்று கூறி கடுமையாக சாடியுள்ளார். பாதிக்கப்பட்டவர் ஒரு குற்றவாளி என்ற அடிப்படையில் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்ததை நியாயப்படுத்தவும் அவர் முயன்றுள்ளார். மேலே இருந்த நபரிடமிருந்து (பொதுப் பாதுகாப்பு அமைச்சர்) தெளிவான குறிப்பைப் பெற்று, விக்ரமசேகர உண்மையில் கும்பல்களால் அல்லது ஒப்பந்தக் கொலையாளிகளால் கொல்லப்பட்டார் என்பதை நிரூபிக்க காவல்துறை தனது முழு பலத்தையும் பயன்படுத்தத் தொடங்குகிறது. அரசியல் எஜமானர்களை மகிழ்விக்கும் அவசரத்தில், காக்கி உடை அணிந்த சகோதரத்துவம் கைது செய்யப்பட்ட கொலையாளியின் வாக்குமூலங்களை சமூக ஊடகங்களில் பரப்பும் அளவிற்குச் செல்கிறது' எனப் பதிவு செய்துள்ளார். இது தேசிய மக்கள் சக்தியின் கட்சி அரசியல் போட்டியை வெளிப்படுத்துவதுடன், தேசிய மக்கள் சக்தியின் போதை மாபியா மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதாள குழுக்களுக்கு எதிரான அரச கொள்கை செயற்றிட்டங்களையும் சந்தேகத்திற்குள்ளாக்கிறது. கடந்த கால அரசியல் ஒழுங்குகள் அவ்வாறானதாகவே அமைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியும் கடந்த கால பிரதிபலிப்புக்குள்ளேயே பெருமளவு நகர்கின்றது.

இலங்கைத்தீவின் கட்சி அரசியல் எதையும் விட்டுவைக்கவில்லை. அரசியல்வாதிகள் எல்லாவற்றிலிருந்தும் அரசியல் ஆதாயம் பெற பாடுபட்டுள்ளார்கள். 'தேசிய செயல்திட்டங்கள்' என்று அழைக்கப்படுபவை வெறும் அரசியல் பிரச்சாரங்களாகவே மாறி, காலப்போக்கில் தமக்கு பாதிப்பாகுகையில் வேகம் குறைந்து போவதே வரலாறாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ச போர் வெற்றியை தமக்கு சாதகமாக்கி அல்லது தமதாக்கி அரசியல் செய்தனர். தனது அரசியல் எதிரிகளை விடுதலைப் புலிகளை பாதுகாப்பவர்களாக சித்தரித்து துரோகிகள் என்று முத்திரை குத்தியது. மைத்திரிபால சிறிசேன தனது மறுதேர்தல் முயற்சிக்கு களமிறங்குவதற்காக போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார். மேலும் தனது விமர்சகர்களை மோசடி செய்பவர்கள் என்று கண்டித்தார். இவ்வாறான பின்னணியிலேயே ராஜபக்சாக்களின் தங்காலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் கண்டறிதல் அதிகரிப்பைப் பயன்படுத்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா போதைப்பொருள் வியாபாரிகளின் கட்சி என்பதை தேசிய மக்கள் கட்சி காட்டியது. அதனையும் ஓர் உள்காரணமாக கொண்டே ஒக்டோபர்-30இல் பெரும் விளம்பரத்துடன் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக, 'முழு நாடுமே ஒன்றாக' (A Nation United) என்ற தேசிய செயற்றிட்டத்தை, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க ஆரம்பித்து வைத்திருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி வேட்பாளரின் போதைப் பொருள் வியாபார தொடர்பை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சாரம், தற்போது தேசிய மக்கள் சக்தி பக்கமும் திரும்பியுள்ளது. 

செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி அரசியல்வாதிகளுடன் இனங்காணப்பட்ட போதைப்பொருள் வியாபாரம் தற்போது ஆளும் தரப்பாக தேசிய மக்கள் சக்தி அரசியல்வாதிகளுடனும் இனங்காணப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு எதிரான தீவிர விசாரணைகள் இலங்கை அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் எதிரான சூழலையே உருவாக்கியுள்ளது. பேலியகொட நகரசபையின் தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சல குமாரி என்பவரின் கணவர் மற்றும் மகன்  ஹெராயின் வைத்திருந்ததாக அநுராதபுர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். சந்தேக நபரிடமிருந்து சுமார் ரூ.20 மில்லியன் மதிப்புள்ள 1.185 கிலோ ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தேகநபர் பாடசாலை அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நகரசபை உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சலா குமாரி, பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜியின் உறவினர் என்பதையும் போலீசார் வெளிப்படுத்தினர். இக்கைது அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு எதிர்க்கட்சிக்கு உரமாக அமைந்துள்ளது.

போதைப்பொருள் வியாபாரிகள் மிகவும் நுட்பமானவர்கள். அவர்கள் தங்கள் மோசமான நடவடிக்கைகளை மறைக்க பல முகப்புகளையும் முன்மாதிரிகளையும் பயன்படுத்துகிறார்கள். அதிலொரு பகுதியே அரசியல் கட்சிகளை வளைத்துக் கொள்வதாகும். வடக்கு-கிழக்கிலும் கூட தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் உறவினர்கள் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் ஆழமாக ஊறிப்போயுள்ள அரசியல் கட்சி போட்டியும் நலனும் போதை வியாபாரிகளுக்கு சாதகமாகின்றது. ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு கட்சிகளுக்குள் பரவலாக போதைப்பொருள் வியாபாரிகள் உள்நுழைந்து கொண்டுள்ளார்கள். இந்தப்பின்னணியில் கட்சி நலனுக்குள் இயங்கும் அரசியல் கட்சிகள் போதை வியாபாரத்தால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய தீங்குகளை புறந்தள்ளி கட்சி நலனுக்குள் மோதுவதனால் போதைக்கு எதிரான செயற்றிட்டங்கள் பலவீனப்படும் நிலைமைகள் உருவாக்கப்படுகின்றது. 'முழு நாடுமே ஒன்றாக' எனும் செயற்றிட்டத்தை போதைப் பொருள் மாபியாவிற்கு எதிராக ஆரம்பித்திருந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதனை எதிர்க்கட்சிகளுக்கு எதிரான பிரச்சாரமாகவே பரவலாக பயன்படுத்தி கொண்டுள்ளார்கள். ஆதலால் எதிர்க்கட்சிகள் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டத்தில் ஒன்றிணையாது, ஆளுந்தரப்பை விமர்சிப்பதிலேயே அதிக அக்கறையை வெளிப்படுத்தினார்கள். தற்போது ஆளுந்தரப்பு உறுப்பினரும் போதை வியாபாரத்தில் தொடர்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை பலப்படுத்துவதாகவே அமையக்கூடியதாகும். இந்நிலைமையில் இலங்கையின் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டம் என்பது அரசாங்கமும் எதிர்க்கட்சியும் தங்கள் சேற்றை வாரி இறைக்கும் பிரச்சார களமாக மாறக்கூடிய அபாயத்தையே அடையாளப்படுத்துகின்றது. இது போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

எனவே, இலங்கையில் அதிகரிக்கும் போதை கலாச்சாரம் சீர்செய்யப்பட வேண்டுமெனில், இலங்கை அரசியலில் ஆழமாக வேரூன்றியுள்ற கட்சி அரசியல் போட்டி மற்றும் நலன்கள் சீர்செய்யப்பட வேண்டும். தேசிய செயற்றிட்டங்கள் கட்சி போட்டிகளை கட்சி நலனிலிருந்து வேறுபட்டு தேசியக் கூறின் பிரதானிகளான மக்கள் நலனை மையப்படுத்தியதாக அமைதல் வேண்டும். அவ்வாறானதொரு அரசியல் கலாசார மாற்றமே இலங்கையினை போதைக்கலாசாரத்திலிருந்து மாற்றக்கூடிய சூழலாகும். ஜனநாயக சமூகங்களில் ஆட்சிகள் மாறுகின்றன. குறைந்து வரும் உயரடுக்கு ஒரு புதிய மற்றும் மிகவும் தீவிரமான ஒன்றால் மாற்றப்படுகிறது. இதைத்தான் வில்ஃப்ரெடோ பரேட்டோ உயரடுக்கின் சுழற்சி என்று அழைத்தார். இந்நாட்டில் ஆட்சி மாற்றங்கள் பாதாள உலக நபர்களின் சுழற்சிக்கும் வழிவகுக்கும். அவர்கள் பல்வேறு வழிகளில் தங்கள் அரசியல் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டு, அனைத்து அரசாங்கங்களின் கீழும் தங்கள் மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இவ்வாறாக நுட்பமாக செயற்படும் போதை வியாபாரத்தை தோற்கடிக்க அரசியல் நுட்பமாகவும் மாற்றமாகவும் செயற்படுவது அவசியமாகும். நடைமுறையில் அவதானிக்கக்கூடிய வகையில் போதையால் ஏற்படக்கூடிய அழிவுகளை புறந்தள்ளி, கட்சி போட்டி வாதங்கள் முதன்மைப்படுத்தப்பட்டு தொடருவது இலங்கைத் தீவிவை போதை வியாபாரத்தின் மத்திய நிலையமாக மாற்றும் சூழலையே விரைவுபடுத்தும். தமிழ் அரசியல் களமும் இதில் அதீத அக்கறையை செலுத்த வேண்டும். வழமைபோன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எதிர் தமிழரசுக்கட்சி என மோதிக் கொள்வது, போதை வியாபாரிகளின் எதிர்பார்ப்பும் அவர்களுக்கான வாய்ப்புமாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-