தேசிய மக்கள் சக்தியும் தொடரும் பேரினவாத அரசியலமைப்பு முயற்சியும்! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, அரசியலமைப்பு மாற்றம் என்பதாகவே இலங்கையின் ஆட்சியாளர்களிடமும் ஈழத்தமிழர் அரசியல் தரப்பினரிடமும் பொதுப் பிரக்ஞை உருவாக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்சவைத் தவிர, 1994ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முதல் ஆட்சிக்கு வந்திருந்த ஜனாதிபதிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் அரசியலமைப்பு மாற்றம் முதன்மையானதாக இருந்துள்ளது. சமகால அநுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளிலும் அரசியலமைப்பு மாற்றம் பிரதான நிலை பெற்றிருந்தது. எனினும் ஓராண்டுகளைக் கடந்தும் வெளிப்படையாய் அரசியலமைப்பு மாற்றத்திற்கான முன்னகர்வுகளை அறிய முடியவில்லை. அதேவேளை அரசியலமைப்பு மாற்றத்திற்கான கோரிக்கை, இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கானது என்பதுவும், ஈழத்தமிழர்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்கைக்கானது என்பதுவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்க காலப்பகுதியில் மலினப்பட்டுள்ளதையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் விவாத நிலைக்கு வெளியே சென்று, அரசியலமைப்பு மாற்றம் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பதே மையமாக வந்துள்ளது. இதுவொரு வகையில் 2015-2018ஆம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்க முயற்சியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் விட்டுக்கொடுப்புக்களும் ஏதொவொரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்ற முனைப்பும் ஏற்படுத்திய அரசியல் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது. இக்கட்டுரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை மையப்படுத்தியுள்ள அரசியல் உரையாடலாகவே அமைந்துள்ளது.

பாராளுமன்றத்தில் டிசம்பர்-19அன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு, பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளிக்கும் போது, 'ஒரு செழிப்பான தேசம் - ஒரு அழகான வாழ்க்கை என்ற கொள்கை அறிக்கையின் பக்கம் 194 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அரசாங்கம் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த வரைவு பொதுமக்களுக்கு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து உரையாடல் மற்றும் விவாதம் நடைபெறும், அதன் பிறகு தேவையான திருத்தங்கள் செய்யப்படும்' எனத் தெரிவித்திருந்தார். பிரதமர் குறிப்பிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கவில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தில் பகுதி 4.1இல் 'புதிய அரசியலமைப்பு - இலங்கை தேசிய ஒருங்கிணைப்பு' என்ற தலைப்பில், 'தேசியத்துவங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையையும் மத ரீதியான குரோதத்தையும் ஏற்படுத்தாத ஆண் - பெண் பால்நிலை அல்லது வேறு விடயங்களின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படாமை ஆகிய நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டதாக மொழிச்சுதந்திரத்தை உறுதி செய்தல்' என்பது மாத்திரமே தேசிய இனப்பிரச்சினையுடன் தொடர்புடையதாகும். அதிகாரப் பகிர்வு தொடர்பில் புதிய அரசியலமைப்பு உள்ளடக்கங்களில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. மாறாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் பகுதி 4.9இல் 'இலங்கை தேசம் - உலகளாவிய பிiஜை' என்ற தலைப்பில், '2015-2019 புதிய அரசியலமைப்பொன்றினை தயாரிப்பதற்காக கடைப்பிடித்த செயற்பாங்கினை துரிதமாக நிறைவு செய்து, சமத்தவம் மற்றும் சனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே நாட்டிற்குள் அனைத்து மக்களும் ஆட்சியில் தொடர்பு கொள்ளக்கூடியவாறு ஒவ்வொரு உள்ளுராட்சி நிறுவனத்திற்கும் மாவட்டத்திற்கும் மற்றும் மாகாணத்திற்கும் அரசியல் ரீதியானதும் நிர்வாக ரீதியானதுமான அதிகாரத்தை பகிர்ந்தளிக்கின்ற அரசாளுகைக்கான அனைத்து இனத்தவர்களினதும் அரசியல் பங்காண்மையை உறுதி செய்கின்ற புதிய அரசியலமைப்பொன்றினை தயாரித்தல்' என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உயர்ந்தபட்சமாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்ட விடயமாகும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தமிழரசுக்கட்சியின் ஆதரவு கோரி, யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் அநுரகுமார திசநாயக்க மற்றும் தமிழரசுகட்சியினரிடையே சந்திப்பு இடம்பெற்றிருந்தது. அச்சந்திப்பிலும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில், '2015-2019 அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்வதான' உரையாடலே மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலதிகமாக அதிகாரப் பகிர்வு உள்ளடக்கங்கள் தொடர்பில் தெளிவான உரையாடல்கள் மேற்கொண்டதாக அறிய முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வடங்களை கடந்துள்ள நிலையிலும், தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் காத்திரமான உரையாடலை ஆரம்பித்திருக்கவில்லை. வருட இறுதியில் நவம்பர்-19அன்று, தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. அவ்கலந்துரையாடலிலும், மாகாண சபைத் தேர்தல் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் ஆக்கிரமிப்பு பிரச்சினைகளே கலந்துரையாடப்பட்டுள்ளது. மாறாக 'தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் எதிர்வரும் ஆண்டு பேச ஆரம்பிப்போம்' என ஜனாதிபதி தெரிவித்ததாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் குறிப்பிட்டிருந்தார். 

எனினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஏற்கனவே அரசியலமைப்பு வரைபு முயற்சிகளை கட்சிக்குள் ஆரம்பித்துள்ளதாகவே பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 'புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், முந்தைய குழு அறிக்கைகள் மற்றும் பிற திட்டங்கள் இந்த செயல்முறையை வழிநடத்த ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், வரைவு குறித்த ஒரு கருத்துரு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்' எனவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் கருத்துக்களும் நடைமுறைகளும் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வுசார் உள்ளடக்கங்களில், சமகால தமிழ் அரசியல் பிரதிநிதிகளை புறக்கணிப்பதாகவும், 2015-2019களில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கிய தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்ட ஏக்கிய இராச்சிய வரைபு தழுவியதாகவே அமையவுள்ளதாகவுமே அறியக்கூடியதாக உள்ளது. இது தொடர்பில் தெளிவான பார்வை அவசியமாகின்றது.

முதலாவது, 2015-2019களில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணக்கத்துடன் உருவாக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு' தொடர்பில், அதனை ஏற்றுக்கொண்ட தமிழ் கட்சிகளுக்குள்ளேயே குழப்பங்கள் காணப்படுகின்றது. குறிப்பாக ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபு உருவாக்கத்தில் அரசியலமைப்பு சபையில் அங்கம் வகித்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பல சந்தர்ப்பங்களிலும் ஏக்கிய இராச்சிய வரைபின் ஒற்றையாட்சி தன்மைகளை ஏற்றுக்கொண்டுள்ளார். அதேவேளை தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பல ஊடகவியலாளர் சந்திப்புக்களில் தமது கட்சியும் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகவே கருத்துரைத்துள்ளார். எனினும் கடந்த காலத்தில் அதனை தமது கட்சி செயற்படுத்த முனைப்பாக செயற்பட்டமையை பேசி முழுகும் விதத்திலேயே கருத்துக்கள் அமைந்துள்ளது. இக்குழப்பகரமான கருத்துக்களுக்கு ஏக்கிய இராச்சிய வரைபின் பொருள் மயக்கமான சொற்பிரயோகங்களே காரணமாகும். அரசியலமைப்பு வரைபின் ஷஏக்கிய இராச்சியத்தின்' பொருள் கோடல் தென்னிலங்கையில் ஒற்றையாட்சியாகவும், வடக்கு-கிழக்கில் சமஷ;டியாகவும் விளக்கப்படுகின்றது. இன்றுவரை இக்குழப்பங்களுக்கு தீர்வில்லாத நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனை உள்வாங்குவதும் தொடர்வதுமான கருத்துக்கள் இழுபறிக்குள் நகர்த்தி செல்லும் விருப்பையே உறுதி செய்கின்றது.

இரண்டாவது, ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பில் உள்வாங்கப்படும் ஏக்கிய இராச்சிய வரைபின் உள்ளடக்கம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாக அமையக்கூடியதையே கடந்த கால நிகழ்வுகள் உறுதி செய்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியான அரசியலமைப்பு சபையில் உள்வாங்கப்பட்ட தர்மலிங்கம் சித்தார்த்தன், மத்திய-மாகாண உறவுகள் தொடர்பான உபகுழுவின் தலைவராக செயற்பட்டிருந்தார். அக்குழுவினூடாக உருவாக்கப்பட்ட அறிக்கையில் சமஷ;டிக்குரிய பண்புகள் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. இதனை அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையமும் சுட்டிக்காட்டியிருந்தது. ஆளுநரை பெயரளவிலான அதிகாரங்களைக் கொண்ட ஒரு பதவியாக வலுக் குறைத்தல், அவரது சட்டவாக்க, நிறைவேற்று, அதிகாரங்களை இல்லாதொழித்தல், மாகாணப் பொதுச் சேவையை முதலமைச்சரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரல், ஒருங்கிய நிரலை ஒழித்தல் போன்ற பல்வேறு முற்போக்கான அம்சங்கள் அதில் உண்டு. எனினும் சித்தார்த்தன் தலைமையிலான மத்திய-மாகாண உறவுகள் தொடர்பான உபகுழுவின் அறிக்கையில் அன்றைய கூட்டு எதிரணி (மகிந்த ராஜபக்ச அணி) மற்றும் இன்றைய ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க உள்ளடங்கலான ஜே.வி.பி பிரதிநிதிகள் கையெழுத்திட்டிருக்கவில்லை. இந்நிலையில் சித்தார்த்தன் தலைமையிலான குழுவின் அறிக்கைய சமரசம் செய்ய, தேசிய அரசாங்கத்தினால் தென்னிலங்கை கட்சி பிரதிநிதிகளை மாத்திரம் உள்ளடக்கிய தற்காலிக உபகுழு ஒன்று உருவாக்கப்பட்டது. இக்குழு 13ஆம் திருத்தத்திற்கு மேற்பட்டு அதிகாரப் பகிர்வு தேவையற்றது என வலியுறுத்தியது. மேலும், எது எவ்வாறிருப்பினும் நாடாளுமன்றத்திற்கு அனைத்து விடயங்கள் தொடர்பில் தேசிய கொள்கையை ஆக்கும் உரித்து தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் விதந்துரைத்தது. உபகுழு அறிக்கையில் அதிகாரப் பகிர்வு பண்புகளை ஏற்றுக்கொள்ளாத ஜே.வி.பி, ஆளுந்தரப்பாக அதிகாரப்பகிர்வை உள்வாங்கும் என்பது பகுத்தறிவான கற்பனையாக அமையாது.

மூன்றாவது, 2015-2019ஆம் ஆண்டு ரணில் மைத்திரி தேசிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு உருவாக்க முயற்சி, அறுதிப் பெரும்பான்மையற்ற தேசிய அரசாங்கத்தின் முயற்சியாகும். இரு பிரதான எதிர்க்கட்சிகளின் இணை செயற்பாட்டிலேயே இவ்அரசாங்கம் கட்டமைக்கப்பட்டிருந்தது. அதேவேளை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்திருந்த ஒரு கட்சியின் ஒரு தொகுதியினர் பேரினவாத கருத்தியலை முன்னிறுத்தி கூட்டு எதிரணியாக செயற்பட்டிருந்தனர். இப்பின்னணியில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம் உறுதியற்ற அரசாங்கம் ஆகும். எனவே, இவ்அரசாங்கம் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை மேற்கொண்ட போது பேரினவாதிகளும் இணக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய ஏற்பாட்டுடனேயே அரசியலமைப்பு உருவாக்க வேண்டிய தேவைப்பாடு காணப்பட்டது. அதன் பின்னணியிலேயே உபகுழு அறிக்கைகளிடையே சமரசத்தை தேடல் மற்றும் பொருள் மயக்க சொல்லாடல்களை கையாளல் என குழப்பகரமான இடைக்கால வரைபு ஒன்று உருவாக நிர்ப்பந்திக்கப்பட்டது. எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் பண்டா-செல்வா ஒப்பந்தம் முதல் தமிழ்ப் பிரதிநிதிகள் தென்னிலங்கையுடன் விட்டுக்கொடுப்புடன் சென்று குறைந்தளவு நன்மையாவது பெற்றிட வேண்டுமென்ற முனைப்புடனே ஜனநாயக அரசியலில் செயற்பட்டுள்ளார்கள். இதன் தொடர்ச்சியையே இரா.சம்பந்தனும் 'ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு' உருவாக்க முயற்சியில் பின்பற்றினார். எனினும் 2015-2019 காலத்து அரசாங்கத்தின் தங்கி வாழும் சுயாதீனமற்ற நிலைமை, 2024ஆம் ஆண்டு உருவாகிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை. அதுமட்டுமன்றி கடந்த கால பேரினவாத அரசியல் காலாசாரத்தை நீக்கி, புதிய முற்போக்கான அரசியல் பாய்ச்சப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தகைய தரப்பினர் கடந்த கால பேரினவாதிகளுடன் சமரசம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபை' தொடர்வதாக தெரிவிப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பேரின வடிவத்தை உறுதி செய்வதாகவே அமைகின்றது.

எனவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவாக்க முயற்சி என்பது கடந்த கால பேரினவாத அரசியலின் தொடர்ச்சியாக அமையக்கூடிய எதார்த்தங்களே பொதுவில் காணப்படுகின்றது. பல இடங்களில் எதார்த்தமான சூழலுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தேர்தலுக்கு முன்னரான பிரச்சாரங்களை கடந்தே செயற்பட்டு வருகின்றது. அத்தகையதொரு நடத்தையையே அரசியலமைப்பு மாற்றம் பற்றிய உள்ளடக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பேரினவாத அரசியல் கலாசாரத்தை அனுசரிப்பதுவும், ஒற்றையாட்சியை பேணுவதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவாக்க முயற்சியில் ஒரு பகுதியாகவே அமைகின்றது. அதனையே '2015-2019 புதிய அரசியலமைப்பொன்றினை தயாரிப்பதற்காக கடைப்பிடித்த செயற்பாங்கினை துரிதமாக நிறைவு செய்து' என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன உள்ளடக்கமும், 'முந்தைய குழு அறிக்கைகள் மற்றும் பிற திட்டங்கள் இந்த செயல்முறையை வழிநடத்த' எனும் சமகால உரையாடல்களும் உறுதி செய்கின்றது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-