ஈழத்தமிழராய் ஏக்கிய இராச்சிய வரைபிற்கு பதிலளிக்க வேண்டும்! -ஐ.வி.மகாசேனன்-

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கம் தென்னிலங்கை அரசியல் தரப்பினரிடையே தெளிவான உரையாடலை கொண்டுள்ளது. குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய தென்னிலங்கை வாதங்களில் நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை நீக்கம் என்பதுவே முதன்மையான விடயமாக அவதானிக்கப்படுகிறது. மாறாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மங்கலான தன்மையையே கொண்டுள்ளது. அதில் ஏக்கிய இராச்சிய வரைபே பிரதான வெளிச்சத்தைப் பெறுகிறது. அதற்கானதொரு ஆதரவை தமிழ்த் தரப்பினுள் காட்டும் முயற்சியாகவே, மீள கட்டமைக்கப்படும் தமிழரசுக் கட்சி ஆதிக்க புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் பங்காளிகளின் சேர்க்கை அமைகின்றதோ என்ற சந்தேகங்களும் பொதுவெளியில் காணப்படுகின்றது. அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏக்கிய இராச்சிய வரைபுக்கு எதிரான பிரச்சாரத்தை பிராந்திய அரசு மற்றும் புலம்பெயர் தமிழர்களிடம் முன்னெடுத்து வருகின்றனர். தமிழ் சிவில் சமூகங்கள் புதிய அரசியலமைப்பு உள்ளடக்கங்கள் தொடர்பில் எவ்வித வினையாற்றலுமின்றி மௌனித்துள்ளார்கள். இவை தொடர்பான விபரணங்கள் கடந்த வாரங்களில் தொடர்ச்சியாக இப்பத்தியில் விவரிக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வாரம் புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கம் தொடர்பில் ஈழத்தமிழர்கள் விழிப்பாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை மையப்படுத்திய உரையாடலாகவே இக்கட்டுரை அமைய உள்ளது.

இலங்கை தொடர்பில், இலங்கையின் அரசியல் தொடர்பில் ஈழத்தமிழர்கள் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை. இது 1980களுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட ஓர் தோற்றப்பாடாகும். இத்தோற்றப்பாட்டின் பின்னணியில் ஈழத்தமிழர்களுக்கான நிழல் அரச செயற்பாடு அரணாக அமைந்தது. அது இலங்கையின் அரசியலை புறக்கணித்து தனி அரசியலை வழிநடத்தியது. 2009ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அவ்வடிவம் மாற்றமடைந்துள்ளது. அவ்அரணும் உடைக்கப்பட்டு விட்டது. இவ்எதார்த்த புரிதலே 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தென்னிலங்கை கட்சியான தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்றிருந்தது. இது ஈழத்தமிழர்களின் கரிசணையில் இலங்கை அரசியல் உள்வாங்கபட்டுள்ளதையே வெளிப்படுத்துகின்றது. எனினும் இக்கரிசணை ஆரோக்கியமான பகுத்தறிவுக்கு உட்பட்டதாக அமையவில்லை. இலங்கை சுதந்திர தின நாட்களில் தமிழர் பேஸ்புக் பதிவுகளை நிரப்பும் தீபச்செல்வனின் கவிதை வரிகளான, 'வழிகளைக் கடக்க என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது. பாலஸ்தீனரின் கையிலிருக்கும் இஸ்ரேலிய கடவுச்சீட்டைப் போல' என்பது போன்றதானவொரு கரிசணையே 2024 பொதுத் தேர்தல் முடிவுகளிலும் உள்ளது. இது வெறுமனவே பொருளாதார நலனை மையப்படுத்தியதாகும். அபிவிருத்தியை மையப்படுத்தியதாகும். இக்கரிசனை தொடர்பான தெளிவான புரிதல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும் காணப்படுகின்றது. இந்த பின்னணியிலேயே தேர்தல் வெற்றிக்குப் பின்னராக வடக்கு நோக்கிய தேசிய மக்கள் சக்தி அரசாங்க உறுப்பினர்களின் நடவடிக்கையும் விஜயங்களும் 'காட்சிப் புலப்படும் குறுகிய பொருளாதார அபிவிருத்தி' என்ற உரையாடலுக்குள்ளேயே காணப்படுகின்றது. இங்கே ஈழத் தமிழர்கள் தங்களது அடிப்படை பிரச்சினையை பாரியளவில் மறக்கடிக்கப்படும் சூழலொன்று உருவாகின்றது. இதன் வெளிப்பாடே ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க வலிவடக்கில் செய்த நடை பயிற்சியை பிரமித்து பார்ப்போர், அதே வலிவடக்கில் இராணுவத்தால் அடாத்தாக பிடித்து வைக்கப்பட்டுள்ள காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலேயே இரவு ஜனாதிபதி தங்கியிருந்தார் என்பதை மறந்து விட்டனர்.

இத்தகைய மறதியின் தொடர்ச்சியாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான தமது அபிலாசைகளை தமிழ் மக்கள்  பலமாக குரலெழுப்ப தவறின், மீளவொரு இனவழிப்பு தவிர்க்க முடியாததாகும். இவ்அபாயத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்திலும் விழித்துள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறை தமிழ் தேசத்திற்கு 'கடுமையான ஆபத்துகளை' ஏற்படுத்துகிறது என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 'முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒரு ஒற்றையாட்சி 'எக்கியராஜ்ய' (ஒற்றையாட்சி அரசு) மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது என்றும், இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம் அவர்களை மேலும் ஓரங்கட்டி, அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக' தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டு வடமாகாணத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அதிதியாக வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க, 'முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வட மகாண மக்கள் கூறினார்கள். ஆனால் முதல்முறையாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை அவர்களுடைய ஆட்சியாக நம்புகின்றார்கள்' எனத்தெரிவித்திருந்தார். இது ஒருவகையில் தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்கு உடன்படுவதாக செய்தி சொல்வதாகவே அமைகின்றது. இதனை தமிழ் மக்களே மறுப்பது அவசியமாகும். ஒற்றையாட்சி அரசியலமைப்பு உருவாக்கத்தை தமிழர்கள் ஏற்றுக் கொள்வதோ அல்லது மௌனித்து இருப்பதோ தமிழின அழிப்பை பாதுகாப்பதும் தொடர்வதுமாகும். இது தொடர்பான விழிப்பு மற்றும் கரிசணை ஈழத்தமிழர்களிடம் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் வலுவான சந்தேகங்கள் காணப்படுகின்றது

முதலாவது, கடந்த காலங்களில் தமிழ் மக்களை ஓர் அணியாய் திரட்டுவதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் வினைத்திறனான செயற்பாடுகளை கொண்டிருந்தது. அந்தப்பின்னணியிலேயே 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை திரட்சியாக கையாளும் முனைப்புடன் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டிருந்தது. மாணவர் ஒன்றியத்தினால் இம்முயற்சியை முழுமைப்படுத்தியிருக்க முடியவில்லை. எனினும் அனைத்து தரப்பினரையும் ஒரு அரங்கிற்கு கொண்டு வந்ததுடன், தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி 13 அம்ச திட்டத்தினையும் உருவாக்கி இருந்தனர். 'ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபை நிராகரிக்க வேண்டும்' என்ற 14வது கோரிக்கையை முன்வைத்தே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி குறித்த ஐக்கியத்திற்குள் வந்திருக்கவில்லை. 2017-2019களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகமும் ஏக்கிய இராச்சிய வரைபின் ஒற்றையாட்சி இயல்புகளை கடுமையாக சாடியிருந்தன. அவ்இடைக்கால வரைபையும் நிராகரித்திருந்தன. எனினும் 13 அம்சக் கோரிக்கையின் முதலாவது ஏற்பாடு வலிமையாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சி கோரிக்கையை வலியுறுத்தியமையால், ஐக்கிய முயற்சியின் நலன் கருதி ஏனைய கட்சிகளின் முடிவுகளுக்கு மாணவர் ஒன்றியமும் இணக்கம் தெரிவித்திருந்தனர். மேலும் அவ்அரங்கில் இடைக்கால வரைபு கடந்த ஆட்சியுடன் நீர்த்துப் போய்விட்டது என்ற கருத்தாடல்களும் ஏனைய கட்சிகளால் முன்வைக்கப்பட்டது. சமகாலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபை மீளத் தூசு தட்டும் வேலைகளை செய்கையில் அதனை எதிர்க்க வேண்டிய பொறுப்பு கடந்த காலத்தின் தொடர்ச்சியாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு உண்டு. 

இரண்டாவது, சமகாலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நிகழ் பிரச்சினைகளுக்கு ஊடக சந்திப்பு மற்றும் அறிக்கையிடலூடாக எதிர்வினையாற்றும் தரப்பாக காணப்படுகின்றார்களேயன்றி, நிலையான தீர்வுக்கான நகர்வுகளை மேற்கொள்வதில்லை. அரசியல்வாதிகளைப் போன்று அறிக்கையிடல் மற்றும் ஊடக சந்திப்புக்களுடன் சுருங்கும் நிலையிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் காணப்படுகின்றது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியிலும் தமிழ் மக்களினை அணி திரட்டும் கொள்கையுடன் செயற்படுத்தப்பட்ட தமிழ்ப் பொதுவேட்பாளர் கருத்தியலுக்கும் வெறுமனவே அறிக்கையிடல் மற்றும் ஊடக சந்திப்புக்களுடன் தமது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. இந்நிலையில் மாற்றங்களை உருவாக்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறைந்தபட்சம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை அரசியல்மயப்படுத்துவதும், சமகாலத்துக்கு தேவையான அரசியலமைப்பு உள்ளடக்கங்களை விவாதிக்கும் களமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மாற்றுவதும் அவசியமாகும். பல்கலைக்கழக மாணவர்களிடையே விதைக்கப்படும் கருத்தியலானது பரந்த அடிப்படையில் ஈழத்தமிழ் சமூகத்திற்குள் கொண்டு செல்வது இலகுவாகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பரந்த அடிப்படையில் வடக்கு-கிழக்கு கிராமங்களிலிருந்து வருகின்றார்கள். இந்தப் பின்னணியிலேயே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கான பலமும் கட்டமைக்கப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் மாணவர்களை அரசியல்மயப்படுத்த தவறுகையில், வெளிஅரங்கில் மாணவர் ஒன்றியம் முன்வைக்கும் அரசியல் கருத்துக்கள் பலவீனமடையும் நிலைமைகளேயே உருவாக்கும். அரசியலமைப்பு உருவாக்கத்தில் இலங்கை அரசாங்கம் ஒற்றையாட்சியை திணிப்பதால் ஏற்படக்கூடிய சவால்களையும், அதனை ஈழத் தமிழ் மக்கள் எதிர்க்க வேண்டிய தேவைப்பாட்டையும் மாணவர்களுக்கு அறிவியல்பூர்வமான கலந்துரையாடல்கள் மூலம் வழங்க வேண்டும். 2000ஆம் ஆண்டுகளில் பொங்குதமிழ் வெற்றி என்பது மாணவர்களுடனான கலந்துரையாடல்கள் மூலமே தமிழ் மக்களின் திரட்சியாய் சாத்தியப்படுத்த முடிந்தது. பொங்குதமிழ் நினைவு நாட்களை வருடந்தோறும் அனுஷ்டிக்கும் காலத்தை கடந்து, பொங்குதமிழ் போன்ற மக்கள் திரட்சியை உருவாக்குவதும் மக்களுக்கான அரசியல் தேவைகளை உணர்த்துவதும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கான பொறுப்பாக அமைகின்றது.

மூன்றாவது, டிஜிற்றல் யுகத்தில் ஒரு குழு அல்லது ஒரு கட்டமைப்பு நெறிப்படுத்த வேண்டிய தேவை என்பது குறைவடைந்து செல்கின்றது. இலங்கையில் 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கான எதிர்வினையாக உருவாக்கப்பட்ட அரகலய எவ்வித தனிக்குழுவாலும் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படவில்லை. மாறாக சமூகம் மீது அக்கறை கொண்ட தனியன்கள் சமூக ஊடகத்தை கருவியாக கொண்டு பெரும் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்திக் காட்டியுள்ளார்கள். இம்முன்னுதாரணம் இன்று தென்பூகோள நாடுகள் பலவற்றிலும் பரவியுள்ளது. எனினும் ஈழத்தமிழர்கள் தமது பலவீனங்களை தம்மை நெறிப்படுத்தும் அரசியல்வாதிகள் மீதும் சிவில் சமுக கட்டமைப்புக்கள் மீதும் இலகுவாக சுமத்திக் கொண்டு தம்மை குற்றமற்றவர்களாக காண்பிக்க முயலுகின்றார்கள். இது அபத்தமானதாகும். தமிழ் மக்களின் நலன்களை ஓரங்கட்டும் அரசியல்வாதிகளும், மௌனித்து செல்லும் சிவில் சமுக பிரதிநிதிகளும் ஈழத்தமிழ் மக்களிலிருந்தே வருகின்றார்கள். அவர்களது எண்ணங்களும் செயற்பாடுகளும் அம்மக்களின் எண்ணங்களையும் செயற்பாடுகளையும் பிரதிபலிப்பவையாகவே அமையும். விடுதலைக்கு போராடும் தேசிய இனமாக அல்லது தொடர்ச்சியாக அரசு இயந்திரத்தால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் தேசிய இனமாக தமிழர்கள் தனியன்களாகவே குறைந்தபட்சம் விழிப்புடனாவது இருக்க வேண்டும். ஈழத்தமிழர்களிடம் அத்தகைய விழிப்புணர்வின்மையையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஜனரஞ்சக அரசியல் பயன்டுத்திக் கொள்கின்றது. இதில் மாற்றத்தை உருவாக்க ஒவ்வொரு தனியன்களும் சிந்திக்க வேண்டும். அச்சிந்தனை தூண்டலை சமூக ஊடகங்களூடாகவும் ஏற்படுத்த முடியும். ஒற்றையாட்சி அரசியலமைப்பு அல்லது பௌத்தத்திற்கான அரச பாதுகாப்பு என்பது எத்தகைய நெருக்கடிகளை உருவாக்கக்கூடியது என இன்றுவரை எதிர்கொள்கின்றோம். நீர்ப்பாசன திட்டத்தின் பெயரில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் ஹிவுல் ஓயா திட்டம் ஒற்றையாட்சி அரச முறைமை ஏற்படுத்தியுள்ள பாதாகமாகும். தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து பௌத்த விகாரை கட்டப்பட்டுள்ளமையும் அதற்கெதிராக போராடுவதை இலங்கை ஜனாதிபதி இனவாதமாக சித்தரிப்பதுவும் பௌத்தத்திற்கான அரச பாதுகாப்பின் பெறுபேறாகும். இத்தகைய அனுபவங்களுக்குள் தினசரி துன்பங்களை எதிர்கொள்ளும் தமிழ் மக்கள் மீளவும் ஒற்றையாட்சி அரச கட்டமைப்பு அல்லது பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஏக்கிய இராச்சிய வரைபை ஏற்றுக்கொள்வது அல்லது மௌனித்திருப்பது அறியாமையாகும். இவ்அறியாமை என்பது ஒவ்வொரு தமிழ் மக்களின் தவறாகவுமே காணப்படுகின்றது. தங்கள் வீடுகளுக்குள் ஆக்கிரமிப்பு வரும் வரை பக்கத்து வீட்டு ஆக்கிரமிப்பை இரசிக்கும் அல்லது கடந்து செல்லும் ஈழத்தமிழர்களின் எண்ணங்கள், ஒடுக்கப்படும் தேசிய இனத்திற்கு மேலும் மேலும் அழிவைத் தரக்கூடியதாகவே அமையும். 'கண்ணிற்கு முன்னாள் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்க மறுப்பவன், தனது நீதியையும் இழக்கிறான்' என்பதுவே எதார்த்தமான நீதி தத்துவமாகும்.

எனவே உருவாக்கப்படக்கூடிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வாக தமிழ் மக்களின் அபிலாசைகள் உள்வாங்கப்பட வேண்டின், தமிழ் மக்கள் விழிப்படைவது அவசியமாகும். தமது குறைகளை பிறர் தீர்த்து வைப்பார்கள் என்ற யோசனையை கடந்து ஈழத்தமிழர்கள் தமக்கு எதிராக இடம்பெறும் அநீதிகள் தொடர்பில் விழிப்படைவது அவசியமாகும். கடந்த காலத்தை கடந்து செல்ல வேண்டும். ஹென்றி போர்டு குறிப்பிடுவத போல், 'நீங்கள் செய்தவற்றை மேலும் சிறப்பாக செய்வதற்கான ஒரே வாய்ப்பு, தோல்வி மட்டுமே' ஆகும். கடந்த கால தோல்விகள் எதிர்கால சிறந்த செயற்பாட்டிற்கான முன்னோடி என்ற நேரிய முன்அனுபவத்தை உள்வாங்கி தமிழர்கள் தமது அரசியல் சார்ந்து விழிப்படைய வேண்டும். மாறாக பிறர் மீது பழி சுமத்தி, தங்கள் தேவையை தாம் குரலெழுப்ப தவறின், மீள தம்மீது திணிக்கப்படும் சுமையை அல்லது தோல்வியை ஈழத்தமிழர் சுமப்பதை தவிர்க்க முடியாத நிலையே ஏற்படும். 

Comments

Popular posts from this blog

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

இலங்கைத் தேசிய அரசும் கறுப்பு அரசும்; இராணுவத்தின் இரட்டை தோற்றம்! -ஐ.வி.மகாசேனன்-

இளையோர் அரசறிவியல் பங்குபற்றலை ஊக்குவிக்கும் IFES திட்டம்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஈடுபாடு வரவேற்கத்தக்கது! -ஐ.வி.மகாசேனன்-