தென்னிலங்கையின் அரசியலமைப்பு முயற்சி ஏமாற்றுக்களும் அதிகாரப் பகிர்வு முறைமையில் முரண்படும் தமிழ் கட்சிகளும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் ஆட்சியாளர்களும் சர்வதேச தரப்பினரும் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வாக அரசியலமைப்பு மாற்றத்தையே அடிப்படையாய் கருத்துரைக்கின்றார்கள். 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் பரிந்துரைக்கப்ட நிலைமாறுகால நீதியிலும் நிறுவனச்சீர்திருத்தம் என அரசியலமைப்பு மாற்றம் வலியுறுத்தப்பட்டது. அதற்கான முன்முயற்சிகளையும் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கமும் மேற்கொண்டிருந்தது. அன்றைய காலப்பகுதிகளில் தமிழ் மக்களுக்கு ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் புதிய அரசியலமைப்பு முயற்சிகளுக்கு இணக்கத்தை வழங்கியிருந்தது. இதன் விளைவாகவே ஏக்கிய இராச்சிய இடைக்கால வரைபும் உருவாக்கப்பட்டிருந்தது. அது அன்றைய தேசிய அரசாங்கத்தின் ஊடல் சீர்குலைந்ததால், இடைநிறுத்தப்பட்டது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இடைநிறுத்தப்பட்ட ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் அரசியலமைப்பு முயற்சிகளை முழுமைப்படுத்தப் போவதாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. எனினும் தமிழ் அரசியல் தரப்பிடம் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக உருவாக்கப்பட வேண்டிய அரசியலமைப்பு உள்ளடக்கம் தொடர்பில் இணக்கப்பாடுகளை அவதானிக்க முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அரசியலமைப்பு உருவாக்க முயற்சியின் அரசியல் நலன்கள் கடந்த வாரம் இப்பகுதியில் உரையாடப்பட்டிருந்தது. இக்கட்டுரை அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் அரசியல் தரப்பின் எதிர்வினைகனை அடையாளங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அழுத்தங்களில், தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அரசியலமைப்பு உருவாக்கம் என்ற போலியான வாக்குறுதியில் தமிழர்களின் தேசியக் கனவை சிதைக்கும் மற்றும் ஏமாற்றும் முயற்சிகளை காலத்துக்கு காலம் மேற்கொண்டு வந்துள்ளார்கள். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தேர்தல் பிரச்சாரத்தில், 'புலிகளுக்கு யுத்தம் தமிழ் மக்களுக்கு பொதி' என்பது பிரதான பிரச்சாரமாகவும் சர்வதேசத்துக்கான செய்தியாகவும் அமைந்தது. எனினும் 'அதிகாரப் பகிர்வுப் பொதி' (Devolution Package) என்ற பெயரில், பிராந்திய அதிகாரப் பகிர்வுகளை உள்ளடக்கிய கூட்டாட்சி ஏற்பாட்டில் தொடங்கி, இறுதியில் அரைகுறை தொகுதியாக தமிழர்களின் இறைமைக் கோரிக்கையை பலவீனப்படுத்தும் ஏற்பாடாகவே நிறைவு வடிவம் பெற்றது. அதுவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கடுமையான எதிர்ப்பால் அரசியலமைப்பு வடிவத்தை பெறமுடியவில்லை. மீள 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், ஐ.நாவிற்கும் சர்வதேச பிராந்திய நாடுகளுக்கு '13 பிளஸ்' (13+) பற்றிய பிரச்சாரத்தை மகிந்த ராஜபக்ச முன்னிறுத்தினார். எனினும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரிக்கும் 18ஆம் திருத்தத்துடன் அரசியலமைப்பு மாற்றத்தை மட்டுப்படுத்திக் கொண்டது. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கம் சர்வதேசத்துடன் ஒத்துழைத்து செயற்பட முன்வந்தது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானங்களையும் ஏற்றுக்கொண்டது. அரசியலமைப்பு உருவாக்க நாடகத்தை தொடர்ந்தது. எனினும் இடைக்கால அறிக்கை வரைபுடன் (Aekiya Raajya – ஒருமித்த நாடு) இடைநிறுத்திக் கொண்டது. பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருந்த ரணில் விக்கிரமசிங்க, '2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவுக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும்' எனும் அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்க்கட்சிகளை அழைத்து பேசியிருந்தார். எனினும் தீர்வு சார்ந்தோ அதன் வழி அரசியலமைப்பு மாற்றத்திற்கோ எத்தகைய முன்னகர்வையும் மேற்கொள்ளவில்லை.
சமகாலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தேர்தல் பிரச்சாரத்திலும் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அரசியலமைப்பு மாற்றத்தினை முன்னிறுத்தியுள்ளார்கள். எனினும் கடந்த ஒரு வருடங்களும் அரசியலமைப்பு மாற்றம் பற்றிய முன்னகர்வுகள் வெறுமனவே எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்களாக மாத்திரமே உள்ளது. செயற்பாட்டு வெளிப்படைத்தன்மையை அவதானிக்க முடியவில்லை. அரசியலமைப்பு மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் அரசியல் தரப்புடனான கலந்துரையாடல்களையும் அரசாங்கம் தவிர்த்துள்ளது. ஒரு தடவை மாத்திரம் தமிழரசுக்கட்சியின் கோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க அழைத்து உரையாடியிருந்தார். எனினும் அவ்உரையாடலிலும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பிலோ காத்திரமான உள்ளடக்கங்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் தமிழ்த்தரப்பு அரசியலமைப்பு உருவாக்கத்தில், தமிழ் மக்களின் இறைமையை பாதுகாக்கக்கூடிய அரசியல் கோரிக்கைகள் சரியாக உள்வாங்கப்படுவதற்கான காத்திரமான எதிர்வினையாற்றுகின்றார்களா என்பதிலும் வலுவான சந்தேகங்களே காணப்படுகின்றது. குறைந்தபட்சம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பிராந்திய அரசு மற்றும் புலம்பெயர் அமைப்புக்களிடம் ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பு வரைபுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னகர்த்தி வருகின்றார்கள். குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் தமிழக விஜயத்தின் முக்கியத்துவம் தொடர்பில் இப்பகுதியின் முன்னைய கட்டுரைகளிலும் விபரிக்கப்பட்டது. தமிழக விஜயத்தின் விளைவின் ஒரு பகுதியாக இந்தியப் பிரமதருக்கான தமிழக முதல்வரின் கடிதங்களில் மீளவும் ஈழத்தமிழர் அரசியல் இடம்பிடித்துள்ளது. தமிழக முதல்வரின் இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில், '1985 ஆம் ஆண்டு பூட்டானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் பிரதிநிதிகளால் வெளிப்படுத்தப்பட்ட திம்பு கொள்கைகளின் பொருத்தத்தை வலியுறுத்திய முதல்வர், இந்தக் கொள்கைகள் இலங்கைத் தமிழர்களை ஒரு தனித்துவமான தேசமாக அங்கீகரித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அவர்களின் பாரம்பரிய தாயகமாக அங்கீகரித்தல், அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துதல் மற்றும் மலைநாட்டுத் தமிழர்கள் உட்பட சமத்துவம், பாகுபாடு காட்டாமை மற்றும் முழு குடியுரிமை உரிமைகளை உறுதி செய்யும் கூட்டாட்சி அமைப்பை நிறுவுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன' எனக் குறிப்பிட்டுள்ளார். இது காத்திரமான செறிவைக் கொண்டுள்ளது. ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைக்கான பிராந்திய சக்தியின் மைய ஆதரவையும் குறிக்கின்றது.
ஈழத்தமிழர்களின் இறைமையை பாதுகாக்கக்கூடிய அரசியல் தீர்வு அதிகாரப் பகிர்வினை அடிப்படையாக கொண்டது என்பது 1949ஆம் ஆண்டு சமஷ்டி கட்சி (இன்றைய தமிழரசுக்கட்சி) உருவாக்கத்திலிருந்து பரவலாக உரையாடப்பட்டு வந்துள்ளது. பின்னாளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உட்பட தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளிடையே அதிகாரப் பகிர்வு என்பதில் ஒருமித்த கருத்துக்களையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இலங்கைக்கு அதிகார பகிர்வின் பொருத்தப்பாடு தொடர்பான அறிஞர்களின் கருத்தும் நீண்ட பாரம்பரியத்தை உடையதாக காணப்படுகின்றது. 1904 முதல் 1911 வரை இலங்கையின் வடக்கு தொடக்கம் தெற்கு வரை பல பிரதேசங்களில் காலனித்துவ அரசு ஊழியராக செயற்பட்ட லியோனார்ட் வூல்ப் (Leonard Woolf), 1938ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் ஆலோசகராக பணியாற்றுகையில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றிய கேள்விகளைப் பிரதிபலித்தார். குறிப்பாக அரசியலமைப்பு ஏற்பாட்டில் அதிகார பகிர்வுக்கு ஆதரவான கருத்தில், 'இலங்கையில் உள்ளதைப் போன்ற சூழ்நிலைகளில் சுவிஸ் கூட்டாட்சி மண்டல அமைப்பு அசாதாரணமான வெற்றியை நிரூபித்துள்ளது. அதாவது இனம், மொழி மற்றும் மதம் ஆகியவற்றால் ஒருவருக்கொருவர் கூர்மையாக வேறுபடுத்தப்பட்ட வெவ்வேறு அளவிலான சமூகங்களின் ஒரு ஜனநாயக அரசின் சகவாழ்வு' எனக்குறிப்பிட்டுள்ளார். இது ஒரு பெரிய அளவிலான அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துகிறது அல்லது சுவிஸ் மாதிரியில் ஒரு கூட்டாட்சி முறையை ஆதரிக்கிறது.
இவ்வாறான அனுபவங்களில் அதிகாரப்பகிர்வு என்பதில் ஒருமிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளிடம் அதிகாரப் பகிர்வுக்கான முறைமை தொடர்பில் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமைகளில் எவ்வித விட்டுக்கொடுப்புமற்ற வகையில் அதிகாரப் பகிர்வின் உயர் நிலையின் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை அமைய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மாறாக தமிழரசுக்கட்சி விட்டுக்கொடுப்புகளுடன் அரசியல் தீர்வுக்கு இணங்கி செல்லும் நிலைமைகள் காணப்படுகின்றது. இவ்விரண்டு எதிர்நிலை வேறுபாடுகள் இதய சுத்தியுடனும் வினைத்திறனான திட்டமிடல்களை கொண்டிருப்பின் அச்சமுகத்துக்கு நன்மைபயக்கக்கூடியதாகும். தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இறுக்கமான நிலைகளை சுட்டிக்காட்டி, மிகவும் கீழிறங்குகையில் மக்களிடம் தமது செல்வாக்கு வலுவிழக்கும் என்ற பேரம் பேசலுக்கு ஆரோக்கியமானதாகும். எனினும் தமிழ் அரசியல் அனுபவங்களில் அத்தகைய வலுவான பேரம் பேசல்களை அவதானிக்க முடியவில்லை. 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இணக்கத்துடன் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் இடைக்கால வரைபு பேரினவாதத்தின் தொடர்ச்சியை பாதுகாப்பதாகவே அமைந்திருந்தது. தமிழரசுக்கட்சி கடந்த காலத்தில் எதிர்த்திருந்த பௌத்தத்துக்கான முன்னுரிமையை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு விட்டுக்கொடுப்பு நகர்ந்திருந்தது. மறுபக்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக்கட்சியின் விட்டுக்கொடுப்பு அரசியலை மக்கள்மயப்படுத்தக்கூடிய உழைப்பை களத்தில் வழங்கவில்லை. ஒப்பீட்டளவில் செயற்பாட்டுத்திறன்மிக்க இளைஞர் படையை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கொண்டிருந்தது. கடந்த காலங்களில் தமிழ்த் மக்கள் பேரவையின் எழுக தமிழ் எழுச்சிகளின் வெற்றிக்கு பின்னால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பங்களிப்பு அளப்பெரியதாகும். அத்துடன் மாகாண சபை முறைமை மற்றும் 13ஆம் திருத்தத்தை தொடக்க புள்ளியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை வலியுறுத்தி வடக்கு-கிழக்கில் வலிமையான பேரணியை முன்னகர்த்தியுள்ளார்கள். எனினும் தமிழரசுக்கட்சியின் ஆதரவு ஏக்கிய இராச்சிய வரைபினால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் போதிய மக்கள்மயப்படுத்தப்பட்ட அரசியலை செய்யத் தவறியுள்ளார்கள். சமகாலத்திலும் பிராந்திய அரசியலின் ஆதரவை திரட்ட தமிழகத்திற்கு விஜயம் செய்து தமிழக அரசியல் கட்சிகளை சந்தித்திருந்தார்கள். தற்போது புலம்பெயர் சமுகத்தின் ஆதரவிற்கு ஐரோப்பிய விஜயம் செய்துள்ளார்கள். மாறாக களத்தில் தாயகத்தில் மக்கள் திரட்சியை உருவாக்கக்கூடிய அரசியலை செய்ய தவறுகின்றார்கள். இது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் மீதும் நம்பிக்கையீனத்தையே உருவாக்குகின்றது. இத்தகைய தமிழர் நலனை பொருட்படுத்தாத தமிழ் அரசியல் கட்சிகளின் முரண்பாட்டை, ஆளுங்கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் நிலைமைகளே காணப்படுகின்றது.
எனவே, தமிழ் கட்சிகள் வலியுறுத்தும் அதிகாரப் பகிர்வு உரையாடலும் ஒரு வகையில் தென்னிலங்கை கட்சிகளின் அரசியல் தீர்வு சார்ந்து அரசியலமைப்பு மாற்றுவதாக பிரச்சாரம் செய்யும் ஏமாற்று வேலைகளை ஒத்ததாகவே காணப்படுகின்றது. ஈழத்தமிழர்களின் நலன்களுடன் தமிழ்த்தேசிய முலாம் பூசப்பட்ட கட்சிகள் சிந்தித்து செயற்பாடுமாயின் கட்சிகளிடையேயான முரண்பாட்டை தந்திரோபாயமாக பேரம் பேசும் உத்தியாக பயன்படுத்துவார்கள். எனினும் தமிழரசுக்கட்சியும் வலிமையான பேரம் பேசலை மேற்கொள்வதாக இல்லை. அதேவேளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் பேரம் பேசலுக்கு வலுவான உந்துதலை தம்மை பலப்படுத்தும் மக்கள் திரட்சி ஊடாக மேற்கொள்ள தவறி வருகின்றார்கள். இதுவொரு வகையில் இருதரப்புக்கும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இதய சுத்தியிலான விருப்பமின்மையையே வெளிப்படுத்துகின்றது. இவ்வெளிப்பாடுகளின் விளைவாகவே, தமிழ்க்கட்சிகளிடம் நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தென்னிலங்கையை சேர்ந்த ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பெரும்பான்மையை வழங்கியிருந்தனர். தமிழ்க்கட்சிகள் இன்னும் தமது பலவீனங்கனை சரிசெய்யவில்லையாயின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முடிவுகள் ஏனைய வடக்கு-கிழக்கு தமிழர் பெரும்பான்மை மாவட்டங்களிலும் பிரதிபலிக்கக்கூடியதாகவே அமையும்.

Comments
Post a Comment