புதிய அரசியலமைப்பு உருவாக்க உரையாடல்களில் தமிழ் சிவில் சமூகங்களின் மௌனம்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தேசிய இனப்பிரச்சினை தீர்வில் ஜே.வி.பியின் உள்ளடக்கம், ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் நடத்தைகள் என்பதற்கு சமாந்தரமாக சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் மற்றும் கட்டமைப்புக்களின் செயற்பாடுகளும் மையமாக காணப்படுகிறது. அரசற்ற ஒரு தேசமாகிய தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியலை முன்னெடுக்க கூட்டுச் செயற்பாடும் பொறுப்பும் அவசியமாகிறது. அரசியல் அதிகாரப் போட்டியில் பிரதான பொறுப்பு தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கே உரியதாயினும், அரசியல் பிரதிநிதிகள் மெத்தனமாக செயற்படுகையில், தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பெரும் பொறுப்பு தமிழ் சிவில் சமூகத்திற்கு காணப்படுகிறது. அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுப் பொதியை அடையாளப்படுத்துவதில், அரசியல் கட்சிக்கு சமாந்தரமாக சிவில் சமூக பங்களிப்புக்களும் கடந்த காலங்களில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய தன்மையில் காணப்படுகிறது. எனினும் சமகாலத்தில் சிவில் சமூக செயற்பாடுகளில் சில வெற்றிடங்கள் காணப்படுகிறதோ என்ற விமர்சனம் பொதுவெளியில் காணப்படுகிறது. இக்கட்டுரை தேசிய இனப்பிரச்சினை தீர்வில் சிவில் சமூக தலையீட்டின் அவசியத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு சமூகத்தை தோற்ற சமூகமாகவும், அரசியல் பாதுகாப்பற்ற சமூகமாகவும் பிரச்சாரப்படுத்துகையில், அந்த சமூகம் உளவியல் ரீதியாக தன் சமூகம் மீதான நம்பிக்கையிழந்து, ஓரங்கட்டப்படும் இயல்பாக்கம் ஏற்படுகின்றது. அத்தகையதொரு இயல்பாக்க போரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சமகாலத்தில் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தி வருகின்றது. இதில் தமிழர்களை போதை கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்ட சமூகமாகவும், அரசியல் பிரதிகளற்ற சமூகமாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரச்சாரப்படுத்தி வருகின்றது. இத்தகைய குறைபாடுகள் தமிழ் மக்களிடையே காணப்படினும், இது தான் தமிழ் மக்களின் முழுமையான வடிவம் என வரையறுத்துவிட முடியாது. இத்தகைய குறைபாடுகளுக்கு பின்னால் தென்னிலங்கை அரசாங்கங்களின் செயற்பாடுகளும் காணப்பட்டுள்ளது. எனினும் அவற்றை மறைத்து தமிழ் சமூகத்தின் முழுமையான வடிவமாக அதனை பிரச்சரப்படுத்துவது, உளவியல் ரீதியாக ஈழத் தமிழர்கள் மத்தியில் தம் சமூகத்தின் மீதான நம்பிக்கையை சிதைத்து, தேசிய மக்கள் சக்தியை அல்லது தென்னிலங்கையை நம்பி இருக்கும் எண்ணங்களை உருவாக்குவதற்கான ஒரு வகையான அரசியல் போராகவே அமைகின்றது. இதில் அரசியல் கருத்தாளர்களும் ஏதோ ஒரு வகையில் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்கள். இவ்நுணுக்கமான அரசியல் பார்வையின் தேவைப்பாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசியல்துறைப் பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம் அவர்களே இப்பத்தி எழுத்தாளரிற்கு சுட்டிக்காட்டியிருந்தார். இது எதார்த்தமானமானதாகும்.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் தமிழ் தமிழ் அரசியல் தரப்புக்களின் மெத்தனமாக செல்கிறார்கள் அல்லது விட்டுக்கொடுப்புகளுடன் பயணிக்கிறார்களாயின், இது காலனித்துவ விடுதலைக்கு பின்னரான ஏறத்தாழ எட்டு தசாப்தத்தை அண்மிக்கும் அரசியல் தோல்வியின் விரக்தியே ஆகும். ஏதோவொன்றை பெற்றுக்கொடுத்திடுவோம் என்ற மனநிலைக்கு ஈழத்தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் நகர்த்தியுள்ளது. அதேவேளை ஓரமாக ஒதுங்கி கொள்ளும் நிலைக்கு தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் தள்ளியுள்ளது. தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் இத்தகைய மன விரக்தி அல்லது மனச்சோர்வு நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாது. எனினும் இத்தகைய சூழலை தென்னிலங்கை அரசாங்கங்களே உருவாக்கியிருந்தது என்பதும் எதார்த்தமானதாகும். சமஷ்டி கேட்ட தமிழ்ப் பிரதிநிதிகள் பிராந்திய சபை வரை கீழிறங்கிய போதோ அல்லது தமிழீழ பிரகடனத்தை மேற்கொண்ட அரசியல் பிரதிநிதிகள் மாவட்ட சபை வரை கீழிறங்கிய போது கூட தீர்வு விடயத்தில் தென்னிலங்கை அரசாங்கங்கள் உடன்பட்டிருக்கவில்லை.
தமிழ் சமூகத்திடமிருந்து அதிகாரப் பகிர்வை மையப்படுத்திய தீர்வு உள்ளடக்கமும் உரையாடலும் நிலையானதாக தொடர்ந்து வந்துள்ளது. இங்கு கூட்டாக பயணிக்க தவறியுள்ளார்கள் என்பதே பெருங்குறைபாடாகும். அவ்வாறே சிவில் சமூகத்தை பொறுத்த வரையிலும் அரசியலமைப்பு உருவாக்கத்திலும் தீர்வு விடயத்திலும் காலத்திற்கு காலம் ஏதொவொரு புள்ளியில் அதிகாரப் பகிர்வு சார் உரையாடல்களை முன்னெடுப்பதுடன், சில தீர்வுப் பொதிகளையும் பரிந்துரைத்துள்ளார்கள். எனினும் அதனை பாதுகாத்து தொடரும் போக்கை இழந்துள்ளார்கள். இதில் 2009ஆம் ஆண்டுக்கு பின்னரான அரசியலமைப்பு உருவாக்கங்களில் தமிழ் சிவில் சமுக பங்களிப்பை விளங்கிக் கொள்ளுதல் பொருத்தமானதாக அமையும்.
முதலாவது 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்க காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சியில், தமிழ் சிவில் சமுக கட்டமைப்பான தமிழ் மக்கள் பேரவையும் தீர்வுப் பொதி ஒன்றை பரிந்துரைத்தது. 2026இல் தமிழ் மக்கள் பேரவை என்ற பெயர் மாத்திரம் கட்டமைப்பினை பற்றிய புரிதலுக்கு போதுமா என்பதில் சந்தேகங்கள் காணப்படுகின்றது. ஏனெனில் 2019க்கு பின்னர் தமிழ் மக்கள் பேரவை காலாவதியானதொரு சிவில் சமூக கட்டமைப்பாகவே காணப்படுகின்றது. எனினும் சமகாலத்தில் தமிழ் சிவில் சமூகங்களின் அரசியல் தீர்வு பொதிகளில், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுப் பொதி காத்திரமான முக்கியத்துவத்தை பெறுகின்றது. ஏனெனில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அழுத்தம் கொடுக்கக்கூடிய சிவில் சமூக கட்டமைப்புகளும், தமிழ் மக்களின் அதிகார அரசியலை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து உருவாக்கிய தீர்வு பொதியாகவே தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுப் பொதி அமைகின்றது. எனினும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுப்பொதி உருவாக்கப்பட்ட காலப்பகுதியிலேயே, அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் அரசியல் பிரதிநிதிகள் பெரும் இழுபறிகளை செய்திருந்தார்கள். குறிப்பாக தமிழ் மக்களின் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான அன்றைய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையின் தீர்வுப் பொதியையே முன்னகர்த்தியிருந்தார். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுப் பொதியை தவிர்த்திருந்தார். அதேபோல தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுப் பொதி உருவாக்கத்தில் பங்காளியாக இருந்த புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் உபகுழு ஒன்றிற்கு தலைமை வழங்கியிருந்தார். எனினும் அரசாங்க கொள்கைக்குள் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுப் பொதியை காத்திரமாக உள்கொண்டு செல்ல தவறி இருந்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே இன்று வரை தமிழ் மக்கள் பேரவையின் தீர்ப்பொதியை பிரதான உரையாடலாக முன்னுறுத்தி வருகின்றார்கள். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு சார்ந்து தமிழ் அரசியல் கட்சிகளை கூட்டினைத்து செயல்படுவதற்கான முயற்சிகளிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுப் பொதியையே பிரதானமாக உள்வாங்கியிருந்தது. எனினும் 2019ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் சமூக கட்டமைப்பு முழுமையாக செயல் இழந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னகர்த்தும் தமிழ் மக்கள் பேரவை தீர்வுப் பொதியும் அரசியல் கட்சி சாயம் பூசப்பட்டு அவதானிக்கும் அல்லது உரையாடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இரண்டாவது, 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு பின்னராக ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சில வாக்குறுதிகளை வழங்கி இருந்தார். இக்காலப் பகுதியிலும் சில சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டிணைந்து புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சில உரையாடல்களை முன்னகர்த்தி இருந்தார்கள். இவ்உரையாடலின் முக்கியத்துவம் குறிப்பாக புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் ஒன்றிணைவிலும் புலம்பெயர் புலமைத்தளத்தின் ஈடுபாட்டை ஒன்றிணைப்பதிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. குறிப்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் சட்டத்துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எம்.சொர்ணராஜா மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் ஆகியோர் வரைபு உருவாக்கத்தை மேற்கொண்டிருந்தார்கள். இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருந்த காலப்பகுதியிலேயே, இலங்கையின் பொருளாதார நலனுக்குள் தமிழர்களின் அரசியல் தேவைகளை முன்னிறுத்தி உரையாடுவதற்கான களமாகவே இத்தீர்வுப் பொதி உருவாக்க முன்னகர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தீர்வு வரைபின் முன்னுரையில், 'நாட்டில் அமைதி காக்கும் முகமாக இலங்கையின் தமிழ் மக்கள் (தங்களது மதத் தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஊடாக) தற்போதைய சூழ்நிலையில், உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பின்பற்றி ஒரு தீர்வை உருவாக்க ஒப்புக்கொள்கிறார்கள். அந்த தீர்வு இலங்கை அரசுக்குள் மாகாணங்களுக்கான சுயாட்சியை அனுமதிப்பதாக அமைய வேண்டும். சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டைக் குழப்பி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை நிதி நெருக்கடியிலும், பட்டினியிலும் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மிகவும் அவசியமான பொருளாதார முன்னேற்றமானது சாத்தியமான ஒன்றாக அமையாது' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்முன்மொழிவு மத்திய அரசு மற்றும் மாகாணங்களின் தன்னாட்சி அரசாங்கங்களின் அதிகாரங்கள் தெளிவாகக் கூறப்பட்ட, மாகாணங்களின் சுயாட்சியின் அதிகாரங்களை உபயோகிப்பதில் எந்தவித தலையீடுமற்ற ஒரு கூட்டாட்சி முறைமையை பரிந்துரை செய்தது. எனினும் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை வெறுமனவே பிரச்சாரத்துடன் இடைநிறுத்திக் கொண்டமையால் இம்முயற்சியும் போதிய முன்னேற்றத்தையோ வெளிப்பாட்டையோ கொண்டிருக்கவில்லை.
மூன்றாவது, 2022 ரணில் விக்கிரமசிங்க-பெரமுன ஆட்சிக் காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தொடர் கருத்தரங்கு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. அறிவியல் தளத்தில் இக்கருத்தரங்கின் நோக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கை அரசியல் பரப்பில் தென்னிலங்கையின் தீர்வுப் பொதிகளாகவும் தமிழர்களின் தீர்வுப் பொதிகளாகவும் பல அடுக்குப் பொதிகள் விரவி காணப்படுகின்றது. எனினும் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கங்களும் தீர்வு பற்றிய உரையாடல் என்பதை கால இழுத்தடிப்புக்கான தந்திரமாக பயன்படுத்தி வருகின்றார்கள். அதேவேளை தமிழ்த் தரப்புக்குள் காணப்படும் முரண்பாடுகளையும் சாதகமாக்கி தீர்வு வரைபுகளை இழுத்தடிப்பு செய்கின்றார்கள். இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முனைப்பில் தென்னிலங்கை மற்றும் தமிழ் தரப்புக்களின் தீர்வு முன்முயற்சிகளை கலந்துரையாடி தேசிய இனப்பிரச்சினைக்கானதொரு ஒருமித்த தீர்வுப் பொதியை அறிவியல் அங்கீகாரத்துடன் பரிந்துரைக்கும் முனைப்புடனேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை 'இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்' எனும் தலைப்பில் தொடர் கருத்தரங்கினை ஒழுங்கமைத்திருந்தது. குறிப்பாக இலங்கை-இந்திய ஒப்பந்ததத்தின் அறுவடையான 13ஆம் திருத்தம், சந்திரிக்காவின் தீர்வுப் பொதி, தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுப் பொதி, வடக்கு மாகாண சபையின் தீர்வுப் பொதி எனப் பரவலான தலைப்புக்களில் அறிவியல் உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய ரணில் விக்கிரமசிங்கவின் உரையாடல் தளர்ச்சியும் அரசறிவியல் துறையினால் தொடர் கருத்தரங்கினை முழுமைப்படுத்தியிருக்க முடியவில்லை. எனினும் கருத்தரங்கின் உரைகள் யாவும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினால் சிறு வெளியீடாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆக சமகாலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ அதனை முழுமைப்படுத்துவது சிரமமாக இருக்காது.
எனவே இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்வுப் பொதிகள் விடயத்தில், தமிழ் சிவில் சமூகங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகின்றமையை, கடந்த ஒரு தசாப்தத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான முயற்சிகளில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. எனினும் அரசியல் கட்சிகள் போன்றே சிவில் சமூகங்களும் நிலையான தன்மையை கொண்டிருக்கவில்லை. சிதறுண்டு பல அடுக்கு தீர்வுப் பொதிகளையே அதிகரித்துள்ளார்கள். காலத்துக்கு காலம் அரசாங்கங்கள் அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி உரையாடப்பட்ட காலங்களில், தமிழ் சிவில் சமுகங்களும் தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் தீர்வு முன்மொழிவுகளை வெளியிட்டு வந்துள்ளார்கள். எனினும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின் முன்முயற்சி காத்திரமானதாக அமைகின்றது. புதியதொரு உரையாடலை மீள ஆரம்பிப்பதை தவிர்த்து கிடப்பில் உள்ளவற்றை தூசி தட்டுவது கால இழுத்தடிப்பை தவிர்க்கக்கூடியதாக அமையும். எனினும் அது முழமை பெறமுடியவில்லை என்பது துயரமானதாகும். சமகாலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்துள்ள அரசியலமைப்பு உருவாக்க உரையாடல்களுக்கு தமிழ் அரசியல் கட்சிகளிடமிருந்தே அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்வினைகள் வருகின்றது. எனினும் சிவில் சமூகம கடந்த கால தொடர்ச்சியை பேணும் வகையிலான பங்களிப்பை வழங்க இதுவரை முன்வரவில்லை. இப்பின்னணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை முழுமைப்படுத்தாத, அறிவியல் அங்கீகாரத்துடனான தீர்வுப் பொதியில் ஒருமித்த குரலை கட்டமைக்கும் முயற்சியை, தொடர்வது காலத்திற்கு பொருத்தமாகவும் அவசியமாகவும் அமையும். இது சிவில் சமூக பங்களிப்பை மீள தூண்டுவதுடன், தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தல் நலன்களுக்குள் தன்னிச்சையாக இயங்கும் தன்மையை கட்டுப்போடுவதாகவும் அமையும்.

Comments
Post a Comment