ஈழத்தமிழ் அரசியலில் Gen-Z சமுகத்தின் மெத்தனமும் முன்னைய தலைமுறையினரின் பொறுப்பின்மையும்! -ஐ.வி.மகாசேனன்-
இளையோர் அரசியல் சர்வதேச அரசியல் பரப்பில் பேசு பொருளாகியுள்ளது. இணைய யுகத்தில் பிறந்து வளர்ந்துள்ள இன்றைய இளைய தலைமுறையாகிய Gen-Z பருவத்தினரின் இணையத்தள பயன்பாட்டின் ஊடான சமூகப் போராட்டங்களும், அரசியல் மாற்றங்களும் சர்வதேச அரசியல் கவனத்தை குவித்துள்ளது. அதன் அடிப்படையாக இலங்கையின் 2022ஆம் ஆண்டு அரகலயவே சுட்டிக்காட்டப்படுகிறது. எனினும் ஈழத்தமிழ் அரசியல் பரப்பில், குறிப்பாக இனப்படுகொலைக்கு எதிராக நீதியைக் கோரும் ஒரு சமூகத்தின் இளையோரின் அரசியல் விழிப்புணர்வும் செயற்பாடும் பொருத்தமான வழித்தடத்தை கொண்டுள்ளதாக என்பதில் வலுவான சந்தேகங்களே காணப்படுகிறது. 2024-2025ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தலின் முடிவுகளில் நகர்த்தப்படும் ஈழத்தமிழ் அரசியலும், இளையோரின் அரசியல் நடத்தைகளும் விருப்புக்களும் எதிரான விமர்சனத்தை உருவாக்கி வருகின்றது. தமிழ் அரசியல் கலாச்சாரம் மரபுகளை கடந்து செல்ல வேண்டும். நடைமுறையில் மரபுகளை கடந்து செல்லல் வளர்ச்சியை நிராகரித்து, எதிரான போக்கில் காணப்படுவதாக பொது விசனம் எழுந்துள்ளது. இக்கட்டுரை ஈழத்தமிழரசியலில் இளையோரின் வழித்தடத்தை அடையாளம் காட்ட முயல்வதாகவே அமைகிறது.
ஈழத்தமிழ் அரசியல் காலத்துக்கு காலம் அக்காலத்து இளைய பருவத்தினராலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரித்தானிய காலனித்துவ விடுதலைக்கு பின்னரான ஈழத்தமிழர்களின் ஆரம்ப காலங்களில், செல்வநாயகம் போன்ற அரசியல் தலைவர்களின் வீரியமிக்க அரசியல் செயற்பாடுகளுக்கு பின்னால் இளையோரின் திரட்சி வலுவான உந்துதலாக அமைந்துள்ளது. காலிமுகத்திடல் போராட்டம் மற்றும் சிங்கள ஸ்ரீ எதிர்ப்பு போராட்டங்களின் பிரபல்யம் தலைவர்களை சென்றடைந்தாலும், அதில் இளையோர் துடிப்பாகவும் வீரியமாகவும் செயற்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே அரசியல் கட்சி தலைவர்கள் கொள்கை நழுவுகையில் இளையோரின் அழுத்தங்களும் கனதியாக இருந்தது. சமஷ்டியை வலியுறுத்திய தமிழரசுக்கட்சி பண்டா-செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி-செல்வா ஒப்பந்தங்களில் பிராந்திய சபை அல்லது மாவட்ட சபைகளுக்குள் சுருங்குகையில், இளையோர் தமிழரசுக்கட்சியில் சமஷ்டிக் கொள்கையிலிருந்து விலகி, தமிழீழ கொள்கையினை முதன்மைப்படுத்தினர். அதேவேளை 1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் செயலாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இதனால் தமிழ்க்கட்சிகள் கூட்டாக இளையோரின் தமிழீழ கொள்கைக்கு ஜனநாயக அரசியல் தலைமையை வழங்க முன்வந்தனர். 1976ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) வட்டுக்கோட்டை தீர்மானத்தில், 'இந்த நாட்டில் தமிழ் தேசத்தின் இருப்பைப் பாதுகாப்பதற்காக, ஒவ்வொரு தேசத்திற்கும் உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட சுதந்திரமான, இறையாண்மை கொண்ட, மதச்சார்பற்ற, சோசலிச தமிழ் ஈழ அரசை மீட்டெடுப்பதும் மறுசீரமைப்பதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது' என அறிவித்தது. 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான மக்கள் ஆணையைக் கோரியே தேர்தலை எதிர்கொண்டிருந்தனர். இதுவொரு வகையில் அன்றைய இளையோர்களின் அழுத்ததமாகவும் அமைந்திருந்தது. குறிப்பாக 1974ஆம் ஆண்டு தியாக நிலைக்கு சென்ற பொன்.சிவகுமாரன் போன்ற தமிழ் மாணவர் பேரவை மற்றும் இதர இளையோர் அமைப்புக்களின் செயற்பாடுகளும் அழுத்தங்களுமே அரசியல் கட்சியின் ஒழுங்கை வடிவமைத்திருந்தது. 1977ஆம் ஆண்டு தமிழீழ பிரகடனத்தை முன்வைத்து தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமையை பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி, தேர்தலுக்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தின் மாவட்ட சபை தீர்மானத்திற்குள் சுருங்கியது. இது இளையோரிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வருகை தந்தபோது, மாணவர்கள் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியை பறித்து, அமிர்தலிங்கத்திற்கு எதிர்ப்பை காட்டி வெளியேற்றியிருந்தனர். அதேவேளை தொடர்ச்சியான தேர்தலிலும் அமிர்தலிங்கம் மக்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.
இத்தகையதொரு முன்அனுபவத்தினைக் கொண்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்களின் சமகால அரசியல் விழிப்புணர்வு மற்றும் பங்களிப்பு விமர்சனங்களையே கொண்டுள்ளது. குறிப்பாக சர்வதேச அரசியல் வெளியில் இன்றைய இளைய தலைமுறையினரான Gen-Z பருவத்தினர் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றனர். ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கண்டம் எனப் பரவலாக அரசியல், சமுக மாற்றத்தின் காரணியாக Gen-Z போராட்டங்கள் அமைந்துள்ளது. கடந்த வாரம் இப்பத்தி எழுத்தாளரும் '2025ஆம் ஆண்டு உலகளாவிய போராட்டங்கில் Gen-Z பருவத்தினர் ஏற்படுத்தியுள்ள அரசியல் மாற்றங்கள்' தொடர்பானதொரு கட்டுரை இப்பத்திரிகையில் எழுதியுள்ளார். சர்வதேச அளவில் இன்றைய இளம் தலைமுறை அரசியல் மாற்றத்தினை முதன்மைப்படுத்தியதொரு எழுச்சியை ஏற்படுத்துகையில், ஈழத்தமிழ் இளையோர் அரசியல் விழிப்புனர்வில் பின்னிற்பது விமர்சனத்தை அதிகரித்துள்ளது. இதனை நுணுக்கமாக அவதானிப்பதனூடாகவே மாற்றத்திற்கான பொறியை உருவாக்கக்கூடியதாக அமையும்.
ஒன்று, யுத்தம் ஈழத்தமிழ் இளையோர்களினை உலக ஒழுங்கிலிருந்து வெகுவாக பின்தள்ளியுள்ளது. இணையம் உலகை சுருக்கியுள்ளது மற்றும் விரைவான தகவல் பரிமாற்றத்தை உருவாக்கியுள்ளது என்பது எதார்த்தமானதேயாகும். எனினும் அத்தகைய இணைய பயன்பாட்டு வளங்களை சீராக பயன்படுத்தக்கூடிய வளத்திறனைப் பெற்றுக்கொள்வதில் ஈழத்தமிழ் இளையோர்கள் பின்னிற்கின்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய வாதமாகும். இப்பத்தி எழுத்தாளரின் அனுபவத்தில் இலங்கையில் இளங்கலைமானி மற்றும் முதுகலைமானி கற்கையை தொடர்ந்து, இந்தியாவின் புதுடெல்லியில் முதுகலைமானி கற்கையை தொடருகையில், கற்றலை இலகுபடுத்தக்கூடிய சில இணைய தொழில்நுட்ப உத்திகளை இந்திய நண்பர்கள் வெளிப்படுத்துகையில் புதிதாக இருந்தது. எனினும் இந்தியாவில் இது இயல்பானது மற்றும் நீண்டகாலம் பயன்பாட்டில் உள்ளதாகவும் நண்பர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள். அவ்இணைய தொழில்நுட்ப உத்திகள் இன்று ஈழத்தமிழ் இளையோரும் இயல்பான பயன்படுத்துகின்றார்கள். எனினும் இவ்அனுபவம் ஈழத்தமிழ் இளையோர் உலக இயல்பு நிலைக்குள் பெரும் இடைவெளியை உணரக்கூடியதாக இருந்தது. இன்றைய புநn-ண பருவத்து இளைஞர்களும் சில தொழில்நுட்ப இயல்புகளை கொண்டுள்ள போதிலும், முழுமையான இணைய தொழில்நுட்ப நன்மைகளை பெறக்கூடிய சூழலைக் கொண்டிருக்கவில்லை என்பது எதார்த்தமானதாகும்.
இரண்டாவது, போர் தந்துள்ள அழிவின் முன்அனுபவங்களிலிருந்து சமகால இளையோர் அரசியலை தவிர்த்து செல்லும் நிலையொன்றும் ஈழத்தமிழ் அரசியலில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஈழத்தமிழ் இளையோர் சமுகத்தின் மீது அதிக நாட்டம் மற்றும் சமுக சீர்திருத்தங்களில் ஈடுபாடுகள் கொண்ட தன்மைகள் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. முன்னைய காலங்களில் குறைந்தபட்சம் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களே நிறுவன உருவாக்கிகளாக சமுக நிறுவன தலைமைக்கு வந்துள்ளார்கள். எனினும் இன்றைய இளையோர் 20 வயது நிரம்பிய காலப்பகுதியிலேயே நிறுவன உருவாக்கிகளாகவும் சமுக நிறுவன தலைவர்களாகவும், சமுக சீர்திருத்த வேலைகளை தன்னார்வமாக செய்து வருகின்றார்கள். குறிப்பாக 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட சிறு ஜனநாய இடைவெளியில் இளையோர் தலைமையிலான சமுக நிறுவனங்களின் பெருக்கத்தை வடக்கு-கிழக்கில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. துமி அமையம், சிறகுகள், மனிதம், விதையனைத்தும் விருட்சம், உலகத் தமிழ் மாணவர் ஒன்றியம், சுவடுகள் எனப் பல அமைப்புகளின் உருவாக்குனர்கள் 1993களுக்கு பின் பிறந்தவர்களாவும்; செயற்பாட்டளார்கள் பெரும்பாலும் 2000களுக்கு பின் பிறந்தவர்களுமாகவே காணப்படுகின்றார்கள். இன்றும் பல சமுக நிறுவனங்கள் இளையோரால் உருவாக்கப்பட்டு சமுகத்திற்கு தேவையான சமுக சீர்திருத்த செயற்பாடுகள் மற்றும் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற முயற்சி செய்து வருகின்றது. எனினும் இவ்இளையோர் அமைப்புக்கள் அரசியல் சார்ந்த செயற்பாடுகளில் பெருமளவு பின்னிற்கின்ற நிலைகளே காணப்படுகின்றது. இதுவொரு வகையில் யுத்தம் ஏற்படுத்திய முன்அனுபவம், அச்சம் என்பவற்றுடன் சமகாலத்தில் இளையோருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய கட்டமைப்பு இன்மையும் காரணமாகும்.
மூன்றாவது, அரசியல் சார்ந்த எழுச்சி செயற்பாட்டுக்கு இளையோர் சிறு குழு முயற்சிகளை மேற்கொள்கின்ற போதிலும் அதில் தொடர்ச்சி தன்மை இன்மையால் அதன் முழுமையான அறுவடையை பெற முடியாது போகின்றது. 2025ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம், தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலைக்கு நீதி கோரி ஜூன் 23-25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நுழைவாயிலில் 'அணையா விளக்கு' என்ற போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டடிருந்தது. இது முழுமையாக 'மக்கள் செயல்' என்ற பெயரில் இளையோர்கள் ஒன்றிணைந்து தன்னார்வமாக மேற்கொள்ளப்பட்ட போராட்டமாகும். இப்போராட்ட ஒழுங்கமைப்பில் Gen-Z பருவத்தினரின் ஈடுபாடு குறைவாக காணப்பட்டினும், அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய இளந்தலைமுறையொன்றே முதன்மையாக செயற்பட்டிருந்தது. இப்போராட்டம் மக்கள் மத்தியிலும் குறிப்பிடத்தக்க கவனத்தை உள்வாங்கியது. கண்காட்சியுடன் பொருந்திய வேறுபட்ட அணுகுமுறை பயன்படுத்தப்பட்டது. ஜூன்-25அன்று ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வருகை தினத்தில் குறிப்பிடத்தக்களவு திரட்சியும் காணப்பட்டது. எனினும் அணையா விளக்கு போராட்டத்தின் தொடர்ச்சி அல்லது அதனை ஒழுங்குபடுத்திய அமைப்பின் நீட்சி கேள்விக்குறியாக அமைகின்றது. நீண்ட இடைவெளியில் 'மறுக்கப்பட்ட நீதி' தொடர்பில் கருத்தரங்கு ஒன்றை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். புநn-ண பருவத்தினருக்கு வரலாற்றை கடத்த வேண்டிய மற்றும் அரசியல் செயல்முறைக்கு பயிற்சி அளிக்க வேண்டிய முன்னைய தலைமுறையினரே தற்போது தான் அரசியல் போராட்டத்துக்கு முதல் படி எடுத்து வைக்கும் சூழலில், புநn-ண பருவத்தின் அரசியல் விழிப்பு மற்றும் அரசியல் போராட்டத்தின் சாத்தியப்பாடு சந்தேகத்திற்குரியதாகும்.
நான்காவது, தவறான செயற்பாட்டை விட செயலற்று இருப்பது ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானதாகும். எனினும் ஈழத்தமிழ் Gen-Z பருவத்தினர் வரலாற்றை அறியாதவர்களாய், மரபை மாற்றுவதாக கருதி சிதைக்கும் வேலைகளுக்கு துணை போகின்றார்கள். ஈழத்தமிழ் மக்கள் ஏனைய மக்கள் போன்று சில விடயங்களை சில மாற்றங்களின் ஏற்படும் பாதகங்களை இயல்பாக கடந்து விட முடியாது. இம்மக்கள் அரசியல் அங்கீகாரமற்று, அரசியல் விடுதலைக்காக போhhடும் தேசிய இனமாகும். தேசிய இனத்திற்குரிய கூறுகளை பாதுகாப்பதனூடாகவே விடுதலைக்கான பாதையை கட்டமைக்க முடியும். தேசிய இனத்தின் கூறுகளில் அம்மக்களின் பண்பாடு மற்றும் வரலாறு முக்கியமானதாகின்றது. பண்பாட்டையும் வரலாற்றையும் மறந்த சமுகம் தன் இனத்தின் தனித்துவத்தை இழந்து முழுமையாக கரைந்து போகும் சூழலுக்கே தள்ளப்படும். ஈழத்தமிழர்களின் சமகால இளைய தலைமுறையாகிய Gen-Z பருவத்தினர் தமது பண்பாடு மற்றும் வரலாறு பற்றிய புரிதலின்றி செயற்படுவதனையே அண்மைய நடவடிக்கைகள் சிலவற்றில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கில் ஜே.வி.பிக்கு கிடைக்கப் பெற்ற வெற்றியும், அதன் பின்னால் சில இளையோர் இழுபட்டு செல்வதும் வரலாற்றின் மறதியையே உணர்த்துகின்றது. அதுமட்டுமன்றி வடக்கு-கிழக்கில் போதை, மது மற்றும் மாது பயன்பாட்டின் அதிகரிப்பும் இயல்பாக்கும் நிலைகளும் கலாசாரத்தை தொலைப்பதாகவே அமைகின்றது. இது தென்னிலங்கையினால் திட்டமிட்டு செய்யப்படுவதாகும். இதற்கு துணைபோவர்களாக Gen-Z பருவத்தினரே காணப்படுகின்றனர்.
எனவே, உலகளாவிய போராட்டங்களில் அரசியல் மாற்றங்களில் தாக்கத்தை செலுத்தும் Gen-Z பருவத்தினர் ஈழத்தமிழர் அரசியல் போராட்டத்தில் எதிர் மாற்றங்களுக்கு துணை போவது அவலமானதாகும். இது முழுமையாக ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை சிதைக்கக்கூடிய ஆபத்தையே உணர்த்துகின்றது. இதனை முன்னுணர்ந்து மடைமாற்ற வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கும், சிவில் சமுகத்தினருக்கும் காணப்படுகின்றது. அதேவேளை பல்பரிமாண அனுபவங்களை வளர்ச்சியடைந்த நாடுகளில் பெற்றுக்கொள்ளும் ஈழத்தமிழ் புலம்பெயர் உறவுகளும், தம் அனுபவங்ளை முன்னிறுத்தி தாயகத்தின் சமகால இளையோரை உலக ஒழுங்கிற்கு ஏற்றவாறு நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பை கொண்டுள்ளார்கள். பெரியோர்கள் தமது பொறுப்பை தவிர்த்து செல்வதால் சிறியோர் நெறிகெட்டு போவது மாத்திரமின்றி, ஈழத்தமிழர் இருப்பையே அழிக்கக்கூடிய நிலைக்கு மாறியுள்ளார்கள். இளைய தலைமுறையின் விழிப்புக்கு முன்னைய தலைமுறைகளின் விழிப்பும், காத்திரமான செயற்பாடுகளும் தாயகத்திலும் புலம்பெயர் தளத்திலும் அவசியமாகின்றது.

Comments
Post a Comment