ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளும் தென்னிலங்கையின் நட்பு சக்திகளின் ஆதரவும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அதன் வழி தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு என்பது நீண்ட விவாதங்களையும் ஆழமான உள்ளடக்கங்களையும் கொண்டதாகும். இந்தப் பின்னணியிலேயே இப்பத்தி தொடர்ச்சியாக அரசியலமைப்பு உருவாக்கத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பான வாய்ப்புகள் மற்றும் குறைபாடுகள் சார்ந்து சில கவனங்களை உள்வாங்கி வருகின்றது. தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வில் உள்ளகப் பொறிமுறை பற்றிய விவாதங்களில், ஈழத்தமிழர்கள் தென்னிலங்கை நட்பு சக்திகளை உருவாக்குவதும் ஒருங்கிணைந்து பயணிப்பதும் தொடர்ச்சியான பரிந்துரையாக காணப்படுகின்றது. கடந்த காலங்களில் குறிப்பாக 2009ஆம்ஆண்டு ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னரான தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்கிய தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையிலும் தென்னிலங்கையுடன் ஒருங்கிணைந்து பயணிப்பது பிரதானமாக காணப்பட்டது. மறைந்த இரா.சம்பந்தன் சிங்கக்கொடியை தூக்கியது தொடக்கம் சம்பந்தன்-சுமந்திரன் இலங்கை சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டமை முதலான பல நிகழ்வுகள் அதனை உறுதி செய்யக்கூடியதாக அமைகின்றது. இது தென்னிலங்கை நட்பு சக்திகளை ஒருங்கிணைக்கும் வழியா அல்லது தென்னிலங்கையுடன் ஒருங்கிணையும் வழியா என்பது தொடர்பான விமர்சனங்களும் பொதுவெளியில் உருவாகியது. இக்கட்டுரை தேசிய இனப்பிரச்சினைத் தீர்வில் ஈழத்தமிழர்களின் தேசிய அபிலாசைகள் உள்வாங்கப்படுவதற்கு தென்னிலங்கை நட்பு சக்திகளின் ஒருங்கிணைவு சார்ந்த அரசியல் சூழலை அணுகுவதாகவே அமைய உள்ளது.
தேசிய இனப்பிரச்சினைத் தீர்வை உள்ளகப் பொறிமுறையில் ஏற்படுத்திக்கொள்வதற்கு, அங்கே வாழும் தேசிய இனங்களிடையே பரந்துபட்ட இணக்கம் அவசியமாகின்றது. இலங்கையின் இனக்குடிப்பரம்பலில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை தேசிய இனங்களின் குடித்தொகையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அண்ணளவாக இலங்கையில் சிங்களவர்கள் 74.9 சதவீதமாகவும் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்கள் 25 சதவீதத்துக்குள்ளேயே தங்களது சதவீத கணக்கை பகிர்ந்து கொள்கின்றன. ஈழத்தமிழர்கள் 11.2 சதவீதமாக காணப்படுகின்றார்கள். இலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் விகிதாசார அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் சிறுபான்மை தேசிய இனக்குழுமங்கள் ஒன்றிணைந்து கூட பெரும்பான்மை சமூக முடிவுகளை கேள்விக்குட்படுத்துவது கடினமாகும். பெரும்பான்மை சமூகத்திடையே நம்பிக்கையையும் இணக்கத்தினையும் உருவாக்குவதனூடாக இலங்கை அரசியலமைப்பினூடாக நிலையான தீர்வினை உருவாக்க முடியும். வரலாறு தோறும் தமிழ்ப் பிரதிநிதிகள் தமது இணக்கத்தையும் நம்பிக்கையையும் தென்னிலங்கைக்கு வழங்கி வந்துள்ளார்கள். 1919ஆம் ஆண்டு இலங்கை தேசிய இயக்கம் உருவாக்குவதில் சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் முதல் 2015ஆம் ஆண்டு ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தின் உருவாக்கத்தில் இரா.சம்பந்தன் வரையில் இணக்கத்தை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்கலாம். எனினும் இது குறுகிய அளவில் அரசியல் தலைவர்களிடையேயே சுருக்கப்பட்டுள்ளது. மாறாக அந்த சமுகங்களிடையே ஒருங்கிணைவை அல்லது நம்பிக்கையை உருவாக்கக்கூடிய பொறிமுறையை செயற்படுத்தியிருக்கவில்லை. இவ்இணக்கங்கள் ஆட்சியதிகாரத்திற்கானதானதாகவே அமைந்திருந்தது. அதிகாரம் மேலாதிக்க நிலையை உறுதி செய்வதாகவே இலங்கை கலாசாரத்தில் தொடருகின்றது.
1949களுக்கு பின்னர் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வாக தமிழர்களால் பிரேரிக்கப்படும் அதிகாரப் பகிர்வு பொதியான 'சமஷ்டி அலகு' தென்னிலங்கை மக்களிடையே பிரிவினைக் கோட்பாடாக பேரினவாத தரப்புகளால் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கையில் சமஷ;டி அலகு பற்றிய கோரிக்கை தென்னிலங்கையில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவினாலேயே முதல்முறையில் பிரேரிக்கப்பட்டது. அத்தகைய சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் தலைமையை வழங்கிய ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றவர்களால் அதனை உள்வாங்கியிருக்க முடியவில்லை. எனினும் பின்னாளில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சமஷ;டிக் கொள்கையை முன்னிறுத்துகையில், பண்டாரநாயக்க அதிகாரத்தின் மேலாதிக்க நிலையில் நிராகரித்திருந்தார். இத்தகையதொரு பின்புலத்தையே தென்னிலங்கையின் நட்பு சக்தியுடனான இணக்கம் பற்றிய அச்சம் தமிழ்த்தரப்பில் அணுகப்படுகின்றது.
இனத்தொகை விகிதாசாரத்தினடிப்படையில், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை உறுதி செய்து கொள்ள சமூகங்களிடையே இணக்கம் அவசியமாகின்றது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் உறுதி செய்து கொள்ள தென்னிலங்கை நட்பு சக்திகளை அடையாளங் காண்பதும் இணைந்து செயற்படுவதும் அவசியமாகும். எனினும் தென்னிலங்கையில் நட்பு சக்தியை அடையாளப்படுத்துவதிலேயே ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியான ஏமாற்றங்களையும் நம்பிக்கையீனங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, காலத்துக்கு காலம் முற்போக்காகவும் ஆட்சியதிகாரத்திலிருந்து தூரமாக உள்ள தென்னிலங்கை தரப்புகளிடமிருந்து நட்பு சமிக்ஞைகள் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்பட்டே வந்துள்ளது. ஆயினும் அத்தகைய நட்பு சக்திகள் தென்னிலங்கை அதிகாரத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய பலமான நிலையினை பெற்றிருக்கவில்லை. குறிப்பாக சமகாலத்துக்கு தெரிந்தவராக மறைந்த நவசமசமாஜக் கட்சி தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தமிழ் மக்களின் மன நிலையினை உணர்ந்ததொரு தென்னிலங்கை அரசியல் தலைவராக இறுதி வரை இருந்தார். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தார். எனினும் இறுதிவரை ஆட்சியதிகாரத்திற்கு சவால் செய்யக்கூடிய நிலையிலான பலத்தைக்கூட விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சியினால் உருவாக்க முடியவில்லை. இப்பின்னணியில் தமிழ்த்தரப்பும் விக்கிரமபாகு கருணாரத்தனவுடன் பலமான நட்புறவை உருவாக்கவோ அல்லது அவரூடாக தென்னிலங்கை மக்களை அணுகவோ முன்வந்திருக்கவில்லை. 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்னிறுத்திய கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை நிராகரித்து, இறுதிப் போரின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை வழிப்படுத்தியது. விக்கிரமபாகு கருணாரத்னவின் மறைவுக்கு பின்னர் ஈழத்தமிழ் அமைப்புக்கள் பலவும் அவருக்கு இரங்கல் கூட்டங்களை ஒழுங்கமைத்திருந்தது. எனினும் அவர் உயிருடன் இருக்கையில் அவர் சரியாக பயன்படுத்தப்பட்டார என்பதில் சந்தேகங்கள் காணப்படுகின்றது. இது ஒருவகையில் தமிழ் மக்களின் பலவீனமான அணுகுமுறையாகவே அமைகின்றது.
இரண்டாவது, தென்னிலங்கையின் நட்பு சக்திகளாக அடையாளப்படுத்தப்படும் ஒரு பகுதியினர் மேலாதிக்க சக்தியினரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது. அரகலய பெரும்பாலும் தென்னிலங்கை போராட்டமாகவே அமைந்திருந்தது. ஒப்பீட்டளவில் ஈழத்தமிழர்களின் பங்குபற்றல் குறைவாகவே இருந்தது. அரகலயவின் போது அரகலயவை முன்னிறுத்தி பல தென்னிலங்கை செயற்பாட்டாளர்களும், ஈழத்தமிழ் சிவில் செயற்பாட்டாளர்களை அணுகி ஆதரவைக் கோரியிருந்தார்கள். எனினும் ஈழத்தமிழ் சிவில் செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக தயக்கத்தையே வெளிப்படுத்தியிருந்தார்கள். இதன் பின்னணியில் அரகலய செயற்பாட்டாளர்கள் முழுமையாக ஈழத்தமிழ் மனங்களை புரிந்துகொண்டு இணக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய உரையாடல்கள் காணப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை பொருளாதாரத்துடன் மட்டுப்படுத்தும் குறுகிய உரையாடல்கள் காணப்பட்டது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் பக்கம் ஒரு காலப் பிரதிமை. அது நிராகரிக்கப்பட முடியாது. அதனை ஏற்றுக்கொள்ளாமை என்பது ஒரு வகையில் தமிழர்கள் மீதான சிங்கள-பௌத்த பேரினவாத இனவழிப்பை நிராகரிப்பதாகவே அமையும். 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இனவழிப்பு உரையாடலை நிராகரித்து, தமிழர்களின் தேசிய பிரச்சினையை அணுகவும் முடியாது. எனினும் முற்போக்காகவும் நட்புக்கரத்தை வழங்குவதாகவும் முன்வரும் ஒருசில தென்னிலங்கை சக்திகள் இனவழிப்பு உரையாடலை நீர்த்துப்போகச் செய்ய விரும்புகின்றார்கள். இத்தகைய நீக்க அரசியல் என்பது தென்னிலங்கை மேலாதிக்க சக்தியின் மறுவடிவமாகவே அமைகின்றது. இத்தகைய தரப்பின் நட்புக் கோரிக்கை ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை மலினப்படுத்தும் மற்றொரு யுக்தியாக அமையக்கூடியதாகும்.
மூன்றாவது, நட்பு சக்திகள் அதிகாரத்திற்கு முன் மற்றும் அதிகாரத்திற்கு பின் என மாறுபட்ட வடிவங்களை காலத்துக்கு காலம் வெளிப்படுத்தி வந்துள்ளது. பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் யாழ்ப்பணத்திற்கு வந்து சமஷ;டி பற்றி பிரச்சாரம் செய்திருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவே பின்னர் 1956களில் தனிச்சிங்கள சட்டத்தினூடாக இலங்கையின் ஒற்றையாட்சி அலகை கூர்மைப்படுத்தினார். 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டத்தை நிராகரித்து, 'இலங்கையின் இரண்டு இரத்தப்போக்கு பகுதிகளை உருவாக்கும்' என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் என்.எம்.பெரேரா வாதிட்டார். பின்னாளில் லங்கா சமசமாஜக் கட்சியின் கூட்டுடன் லங்கா சமசமாஜக் கட்சியின் கொல்வின் ஆர்.டி சில்வா தலைமையிலேயே பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஒற்றையாட்சி அலகைப் பேணும் முதலாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இது தொடரானதாகும். சமகால ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரையில் நட்பு சக்திகள் அதிகாரத்திற்கு வந்த பின் மேலாதிக்கத்தை பாதுகாக்கும் மற்றும் பலப்படுத்தும் சக்திகளாக மாறும் ஏமாற்றங்களே காணப்படுகின்றது.
நான்காவது, புத்திஜீவிகளிடம் ஒருவகையிலான பகுத்தறிவு எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுத்தறிவின் துணைகொண்டு இலங்கையின் தேசியப் பிரச்சினையை அணுகுவார்களாயின், ஈழத்தமிழர்களுக்கு பலமான தென்னிலங்கை நட்பு சக்தியாக தென்னிலங்கை புத்திஜீவிகளே காணப்படுவார்கள். ஏனெனில் புத்திஜீவிகள் திரளான எதிர்கால தலைமுறையொன்றை உருவாக்குகின்றார்கள். எனினும் அத்தகையதொரு பலமான பிணைப்பை இலங்கையில் அவதானிக்க முடியவில்லை. பகுத்தறிவு சுயநலப் போக்கை வளர்த்தெடுக்கும் முறைமையிலேயே புத்திஜீவிகளும் உருவாக்கப்படுகின்றார்கள். இது குறுகிய இனவாதத்திற்கு துணைபோகின்றது. ஈழத்தமிழர்களின் தேசிய உரிமையை புறக்கணிக்கிறது. முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் வெற்றியில் வியத்கம அமைப்பின் பங்களிப்பு முதன்மையானது. இதில் தென்னிலங்கை புத்திஜீவிகளின் பங்களிப்பும் அதிகமாக காணப்பட்டது. எனினும் இவ்அமைப்பிடம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய பார்வை பொருளாதார பிரச்சினையாகவே காணப்பட்டது. மேலும் கோத்தபாய ராஜபக்ச காலத்தில் நிராகரிக்கப்பட்ட அமெரிக்காவின் மிலேனியம் திட்டத்தில், திருகோணமலையை மையப்படுத்திய அபிவிருத்தி தென்னிலங்கைக்கு ஆபத்தானது என கொழும்பு பல்கலைக்கழக ஒரு சில சிங்கள பேராசிரியர்களின் அறிக்கை சுட்டிக்காட்டியதாகவும் செய்திகள் உண்டு. இத்தகைய பேராசிரியர்களால் வளர்த்தெடுக்கப்படும் தலைமுறைகளிடமும் இனவாதம் இயல்பாக்கமடையும் நிலைமைகளே காணப்படுகின்றது.
ஐந்தாவது, ஊடகங்களின் கோட்பாடு நடுநிலைமையை வலியுறுத்துவதாகும். இது ஜனநாயகத்தின் நான்காவது தூணாகும். எனினும் இலங்கையின் ஊடகங்களில் அத்தகைய நடுநிலைமைகளையோ அல்லது ஜனநாயக பண்புகளையோ அவதானிக்க முடியவில்லை. ஜனநாயகம் மக்களாட்சி கோட்பாட்டை புறந்தள்ளி பெரும்பான்மை சிந்தனையை பிரதிபலிப்பதாகவே அமைகின்றது. தென்னிலங்கை ஊடகச் செய்திகள் பரவலாக சிறிய இலங்கைத் தீவை சிங்களத் தீவாக சுருக்குவதாகவே அமைகின்றது. மாறாக ஈழத்தமிழ் செய்திகளை மறைப்பதாகவும் நிராகரிப்பதாகவுமே அமைகின்றது. ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முன்னிறுத்தும் ஆய்வுக் கட்டுரைகளை உள்வாங்காவிடினும், குறைந்தபட்சம் ஈழத்தமிழ் போராட்டங்களை மற்றும் அரசியல் கோரிக்கைகளை செய்தியாக்கினாலாவது ஈழத்தமிழர் பிரச்சினை தென்னிலங்கை மக்களுக்கு கொண்டு சேர்க்கக்கூடியதாக அமையும். எனினும் தென்னிலங்கை ஊடகங்கள் ஈழத்தமிழர் அரசியல் கோரிக்கைகளையும் அவலங்களையும் முழுமையாக நிராகரிப்பதுடன், ஈழத்தமிழ் கோரிக்கைகள் மீது பூசப்படும் இனவாதத்தையே காவுகின்றார்கள். இது நட்பை நிராகரித்து பகைமையை வளர்ப்பதாகவே அமைகின்றது.
எனவே, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை உள்ளகப் பொறிமுறையில் அரசியலமைப்பு மாற்றத்தினூடாக தீர்வினை அடையாளங்காணவும் நடைமுறைப்படுத்தவும் தேசிய இனங்களிடையே இணக்கம் அவசியப்படுகின்றது. ஈழத்தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு புரிய வைப்பது அவசியமாகின்றது. பெரும்பான்மை சிங்கள மக்களை அணுகுவதற்கு தென்னிலங்கையின் நட்பு சக்திகளை ஒருங்கிணைப்பது அவசியமாகின்றது. எனினும் அத்தகைய நட்பு சக்திகளை அடையாளங்காண்பதும் நிலையாக பேணுவதும் சிரமமாக காணப்படுகின்றது. நட்பு சக்திகளாக செயற்பட வேண்டிய புத்திஜீவிகளும், ஊடகங்களும் முழுமையான இனவாத சக்திகளாகவே காணப்படுகின்றார்கள். மேலும் முற்போக்காளர்களாக அடையாளப்படுத்தப்படுபவர்களும் பலவீனமானவர்களாகவும் இல்லையேல் அதிகாரத்தை பெறுகையில் மேலாதிக்க சக்தியின் மறுவடிவமாக தொடரும் அவலங்களே காணப்படுகின்றது. இத்தகைய நெருக்கடிக்குள் ஈழத்தமிழர்கள் தென்னிலங்கை நட்பு சக்திகளை அடையாளங்காண்பதே கடினமாக அமைகின்றது. இதில் தென்னிலங்கை நட்புகளுடன் ஒருங்கிணைவதும், தென்னிலங்கை மக்களுக்கு ஈழத்தமிழர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை கொண்டு சேர்ப்பதும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை காண்பதும் சிக்கலான தொடராகவே அமைகின்றது.

Comments
Post a Comment