போராட்டங்களால் வலுப்பெற்ற ஜே.வி.பி., போராட்ட சூழலை அரசாங்கமாக தடுக்கிறதா? -ஐ.வி.மகாசேனன்-
போராட்டங்கள், கிளர்ச்சிகள், புரட்சிகள் என்ற போர்வையில் உருவாக்கப்படும் அரசாங்கங்கள் மீள இன்னுமொரு ஒரு போராட்டம் கிளர்ச்சி மற்றும் புரட்சி என்பவற்றின் ஊடாக தமது ஆட்சி மாற்றப்படக்கூடாது என்பதில் முன்னேற்பாடாக செயல்படுகின்றார்கள். உலக அரசியலில் இது பொதுவான மரபாகவே காணப்படுகின்றது. இம்மரபுக்குள் 2024ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொண்டஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி நகரும் சந்தேகங்கள் பொதுவெளியில் எழுந்துள்ளது. இடதுசாரி போர்வையில் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி பற்றிய பொது சந்தேகங்களில் ஜனநாயகம் மீதான சவால் பெரும் கேள்விக்குறியாகவே ஆரம்பம் முதல் எதிர்த்தரப்புகளால் முன்வைக்கப்பட்டு வந்தது. அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் உருவாக்க முன்மொழியப்படும் சில சட்டங்கள் அதனை உறுதி செய்வதாகவே அமைகின்றது. குறிப்பாக ‘பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு’ (PTA) மாற்றாக முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்’ (PSTA), எதிர்ப்பு போராட்டங்களிலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் முன்மொழிவாக குற்றம் சாட்டப்படுகின்றதூ. இவ்வாறே பலவழிமுறைகளிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமக்கு எதிரான ஜனநாயக எதிர்ப்பை கட்டுப்படுத்தும் பொறிமுறைகளை உருவாக்குகின்றார்கள். இதுவொரு வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தாம் உருவாகிய பாதையில், மீண்டுமொரு அரசியல் இயக்கம் தமக்கு போட்டியாக உருவாகி விடக்கூடாது என்பதில் அவதானமாக செயற்படுகின்றார்களோ என்ற சந்தேகங்களையே உருவாக்கின்றது. இக்கட்டுரை சர்வதேச அனுபவத்தில் போராட்டங்களை கட்டுப்படுத்துவதனூடாக ஆட்சியை பாதுகாக்க தேசிய மக்கள் சக்தி முயலுகின்றதா என்பதை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலில் சீனாவின் தாக்கம் நீண்ட வரலாற்றை பகிருகின்றது. 2013களுக்கு பின்னர் தவிர்க்க முடியாத சக்தியாகவும் வளர்ந்துள்ளது. அதேவேளை சமகால ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆரம்ப படிமங்கள் சீன கொம்யூனிய அரசியல் இயக்கத்துடன் இணைகின்றது. 1960களில் சீன மாக்சிச கொம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தவொரு கிளையாகவே ரோகண விஜயவீர தலைமையில் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) உருவாக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு முதலாவது கிளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் துண்டுப்பிரசுரங்கள் உருவாக்கம் போன்றவற்றில் சீனாவின் ஒத்துழைப்பு ஜே.வி.பிக்கு கிடைக்கப் பெற்றதாக நம்பப்படுகிறது. பின்னாளில் சீன மாதிரி கொம்யூனிட் இயக்க வடிவம் தென்னாசிய இலங்கைத்தீவுக்கு பொருத்தமற்றது என்ற புரிதலுடன் மாற்று வடிவங்களை ஜே.வி.பி பரிசோதித்து 2024ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுள்ளது. எனினும் ஜே.வி.பி - சீன பந்தம் மற்றும் முன்மாதிரிகள் நிலையானதாக தொடருகின்றது. குறிப்பாக தாம் ஆட்சி அதிகாரத்தை பெற்ற வழியில் போட்டி சக்தி உருவாகாமல் தடுப்பதில் ஜே.வி.பி சீன மாதிரியை பேணுகின்றதா எனும் சந்தேகங்கள் காணப்படுகின்றது. இதனை விபரமாக நோக்குதல் அவசியமாகின்றது.
மார்க்சிஸ்டுகளுக்கு, சீனப் புரட்சி மனித வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய நிகழ்வாகும். 1917ஆம் ஆண்டு ரஷ்சியாவில் போல்ஷிவிக் புரட்சிக்குப் பிறகு இரண்டாவது சோசலிசப் புரட்சி இதுவாகும். மாபெரும் உள்நாட்டு போரின் முடிவிலேயே 1949ஆம் ஆண்டு சீன கொம்யூனிச அரசு உருவாக்கப்பட்டது. இவ்உருவாக்கத்தில் சீனத் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகள் பங்குகள் உயர்வாகவே காணப்பட்டது. சீனப்புரட்சியில், ‘போர் என்பது அரசியலின் தொடர்ச்சியே’ என்ற கிளாஸ்விட்ஸஸின் புகழ்பெற்ற கருத்தும் தாக்கம் செலுத்தியது. இவ்வாறு மக்கள் பங்குபற்றலுடனான புரட்சியில் உருவாக்கப்பட்ட சீன அரசில், 1989ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் மிகவும் மிலேச்சத் தனமாக படுகொலையுடன் முடக்கப்பட்ட வரலாறும் பதிவாகின்றது.
ஏப்ரல் 1989இல், பெய்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தியனன்மென் சதுக்கத்தில் கூடி, அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மையமாகக் கொண்ட கோரிக்கைகளின் பட்டியலை வரைந்தனர். அதேநேரத்தில் ஊழல், தணிக்கை மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான வரம்புகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அழைப்புகளையும் முன்வைத்தனர். அதைத் தொடர்ந்து வந்த வாரங்களில், அவர்களின் கோரிக்கைகள் ஓய்வூதியம் பெறுவோர் முதல் இராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகள் என பரந்த பொது ஆதரவைப் பெற்றன. சீனா முழுவதும் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டங்களில் மில்லியன் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையிலேயே மே 20, 1989அன்று இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஜூன் 3, 1989 அன்று இரவு, பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் இருந்து ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற கனரக ஆயுதமேந்திய துருப்புக்களும் நூற்றுக்கணக்கான கவச வாகனங்களும் கொண்டு வரப்பட்டது. ஜூன் 4, 1989அன்று தியனன்மென் சதுக்கத்திலும் அதைச் சுற்றியும் அரசியல் சீர்திருத்தங்களுக்காக அமைதியாகப் போராடி வந்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது சீனப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இது ஆயிரக்கணக்கானதாக இருக்குமென நம்பப்படுகிறது. அதைத் தொடர்ந்து நடந்த அடக்குமுறையில் சீனா முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர் அல்லது நியாயமற்ற விசாரணைகளுக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் 'எதிர்ப்புரட்சிகர' குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டனர். தியனன்மென் சதுக்கத்தின் படுகொலையின் தாக்கம், அதற்கு பின்னரான 37 ஆண்டுகளில் கொம்யூனிஸ்ட் அரசாங்கத்துக்கு எதிரான எதிர் நடவடிக்கை நினைப்புகளே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நெப்போலியனின் சீனா பற்றி குறிப்பில், "இந்த ராட்சதன் விழித்தெழும்போது, உலகம் நடுங்கும்" என்பது கவனிக்கத்தக்கது. இதனைக்கொண்டே கொம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதேவேளை மீள விழித்தெழுந்து தமது ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதையும் தடுக்கிறது.
மக்கள் ஆதரவுடனான புரட்சியில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி கொண்ட சீன கம்யூனிச கட்சி, மீள ஒரு மக்கள் போராட்டம் அல்லது மக்கள் புரட்சிக்கான வாய்ப்புகளை முடக்குகின்றமையையே 1989ஆம் ஆண்டு தியனன்மென் சதுக்க படுகொலை உறுதிசெய்கின்றது. அத்தகைய ஒரு கட்டுப்பாட்டை சட்டப்போர்வையில் முன்னெடுக்கும் நகர்வுகளையே ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் சட்ட சீர்திருத்தங்களில் செய்ய முற்படுகின்றன்மையை அவதானிக்க கூடியதாக உள்ளது.
ஜே.வி.பி 1994ஆம் ஆண்டு தேர்தல் அரசியல் கட்சி வடிவத்தை பெற்றிருந்த போதிலும் ஆட்சி அதிகாரத்தின் பிரதான நிலையை பெற முடியவில்லை. 10 சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வீதத்தையே கொண்டிருந்தது. குறிப்பாக 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 3.84 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தது. இந்நிலையில் 2024ஆம் ஆண்டு தேர்தலில் ஜே.வி.பி.யின் வெற்றி மற்றும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்டமைக்கு பின்னால் 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவான அரகலயவும் பிரதான காரணமாக அவதானிக்கப்படுகின்றது. அரகலயவில் ஈடுபட்ட மாணவர் ஒன்றியங்கள் மற்றும் சில தொழிற்சங்கங்களின் பின்னணியில் ஜே.வி.பி காணப்பட்டது. அதன் விளைவாகவே அரகலயவில் ஏனைய அரசியல் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அனுரகுமார திசநாயக்க கொண்டாடப்பட்டிருந்தார். இத்தகைய காட்சிப்படுத்தல்களே 2024ஆம் ஆண்டு ஜே.வி.பியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
ஆட்சியதிகாரத்தினை தொடர்ச்சியாக பாதுகாத்துக்கொள்ள, தமது அதிகாரத்தை பலப்படுத்திய தொழிற்சங்க போராட்டங்கள் மற்றும் மாணவர் ஒன்றியங்களை பலவீனப்படுத்தக்கூடிய சட்ட உருவாக்கங்களை ஜே.வி.பி திட்டமிடுகின்றது. அதன் மையமாகவே, ‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட’ முன்மொழிவு காணப்படுகிறது. இதன் உள்ளடக்கங்கள் வெகு குழப்பமானதாக அமைகின்றது. பயங்கரவாதத்துக்கான வரையறையை மிகவும் பரந்துபட்டதாக்கியுள்ளது. அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை விமர்சிப்பதோ, வீதியில் இறங்கிப் போராடுவதோ அல்லது ஒரு ஊழலை அம்பலப்படுத்துவதோ கூட அரசின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பயங்கரவாத செயலாக அடையாளப்படுத்த வழிவகுக்கிறது. இச்சட்டம் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும்’ எனும் பெயர்பலகையின் கீழ் ‘அரசாங்கத்தை எதிர்ப்பு போராட்டங்களிலிருந்து பாதுகாக்கும்’ சட்ட முன்வரைபாகவே காணப்படுகின்றது. தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என்றே தேர்தல் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சிப்பீடத்தில் ஏறிய பின்னர் அந்நிலைப்பாட்டிலிருந்து விலகி, பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்ய முற்படும் இரட்டை நிலைப்பாடு, பயங்கரவாத போர்வையில் கடந்த அரசாங்கங்களைப் போல எதிரிகளை வேட்டையாடும் நிகழ்ச்சியையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கொண்டுள்ளதா என்ற சந்தேகங்களையே பலப்படுத்துகிறது. அதனை உறுதி செய்யும் வகையிலேயே புதிய வரைபில் பயங்கரவாதத்துக்கான வரையறை மக்களின் ஜனநாயக போராட்டங்களையும் குறிவைப்பதாகவும் அமைந்துள்ளது. மக்கள் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் சாத்தியமென்பதும், தமது ஆட்சியும் கவிழ்க்கப்படலாம் என்பதை தேசிய மக்கள் சக்தி சுயஅனுபவங்களுக்குள்ளால் புரிந்து கொண்டவர்கள். அதனை தடுக்கவும், தம்மை பாதுகாக்கவுமே பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட முன்மொழிவை அரசாங்கம் கொண்டு வருகிறது என்பது தவிர்க்க இயலாத சந்தேகமாகவே காணப்படுகிறது.
ஜே.வி.பி கடந்த காலங்களில் தாம் பலமடைந்த அல்லது பரிணாமமடைந்த பாதைகளில் இன்னொரு சக்தி வளர்ந்து விடக்கூடாது என்பதில் விழிப்பாக உள்ளமையை பல்கலைக்கழ மாணவர்கள் செயற்பாட்டை கண்காணிக்க எடுத்துள்ள முயற்சிகள் மேலும் உறுதி செய்கிறது. ஜே.வி.பி.யின் எழுச்சியின் பிரதான தூணாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களே காணப்பட்டது. குறிப்பாக தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களில் ஜே.வி.பி.யின் தாக்கம் உயர்வாகவே காணப்பட்டது. அரசாங்கங்களுக்கு எதிரான போராட்டங்களில் மாணவர் ஒன்றியங்களில் ஈடுபாடு ஜே.வி.பி.யின் தூண்டலாகவே அமைந்தது. அரகலயவில் அனுரகுமார திசநாயக்க கொண்டாடப்பட்டதும் மாணவர் ஒன்றிய ஈடுபாட்டின் பலமான ஆதரவே காரணமாகும். இத்தகைய பின்னணியில் எழுச்சியுற்ற ஜே.வி.பி சமகாலத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதனூடாக மாணவர் ஒன்றியங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முற்படுகிறது. பெப்ரவரி 06, 2026 அன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள உத்தரவு அறிவித்தலில், "மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து பல்கலைக்கழக நிகழ்வுகளும் மறு அறிவிப்பு வரும் வரை ஒரு பொறுப்பான பல்கலைக்கழக அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்று இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. ஒத்திகைகள் மற்றும் தயாரிப்புகளின் போது (அலங்காரங்களை அமைப்பது உட்பட), நிகழ்வின் போதும், நிகழ்வுக்குப் பிறகு அனைத்து மாணவர்களும் கலைந்து செல்லும் வரை ஒரு ஊழியர் அல்லது பொறுப்பான பல்கலைக்கழக அதிகாரி எல்லா நேரங்களிலும் இருப்பதை உறுதிசெய்யவும். மேற்கண்ட உத்தரவுக்கு இணங்காத நிகழ்வுகள் எந்த சூழ்நிலையிலும் நடத்தப்படக்கூடாது" குறிப்பிடப்பட்டுள்ளது. இது நேரடியாகவே, மாணவர்களை கண்காணிப்பதன் ஊடாக மாணவர் ஒன்றிய செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே அமைகின்றது.
எனவே, ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சீன மாதிரி தியனன்மென் சதுக்க அனுபவங்களில் சட்ட இறுக்கங்களூடாக இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பை பாதுகாக்கும் முன்னாயர்த்தங்களாக கொண்டுள்ளார்களா என்பது பொதுவெளியில் வலுக்கும் சந்தேகங்களாக அமைகின்றது. தமது பாதையில் இன்னொரு மாற்றத்திற்கான பிரச்சாரம் வலுப்பெறக்கூடாது என்பதில் அரசாங்கம் விழிப்புடன் செயற்படுகின்றமை அண்மைய பயங்கரவாத சட்ட முன்மொழிவு மற்றும் பல்கலைக்கழக சுற்று நிரூபணங்களில் தெளிவாக வெளிப்படுகின்றது. பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட முன்மொழிவினை எதிக்கட்சிகள் மாத்திரமின்றி ஆளுந்தரப்பு ஆதரவாளர்களும் ஜனநாயகத்தை பாதுகாக்க எதிர்க்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் என்.சரவணன் அத்தகைய குரலை எழுப்பியுள்ளார். பசுத்தோல் போர்த்திய புலியாக விழித்துள்ளார். பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம் உட்பட பலரும் 2024இல் ஜே.வி.பியின் எழுச்சி இனங்காணப்படுகையில், ‘ஜே.வி.பி ஆட்சி அதிகாரத்தை பெறின், ஜனநாயகம் முற்றாக அழிக்கப்பட்டு, ஒரு கட்சி ஆதிக்கம் தொடரும்’ என்ற எச்சரிக்கையை வழங்கியிருந்தார். அத்தகைய விமர்சனங்களை உறுதி செய்வதாகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சட்ட முன்மொழிவுகளும் சுற்றுநிரூபணங்களும் அமைகின்றது. இவ்ஆபத்து முளையிலேயே கடுமையான மக்கள் எதிர்ப்புகளூடாக சீர்செய்யாவிடில், இலங்கையின் குறைந்தபட்ச ஜனநாயகமும் இவ்ஆட்சியில் முழுமையாக மூடுவிழாவை காணநேரிடும்.
.jpg)
Comments
Post a Comment