சுவிற்சர்லாந்து ஒருங்கிணைப்பு முயற்சியும் தமிழ்த் தேசியப் பேரவையின் கலந்துரையாடலும்! -ஐ.வி.மகாசேனன்-

பல்லின சமூக கட்டமைப்பில் அரசு மீது நம்பிக்கை அற்ற தேசிய இனங்கள், தமது உரிமைகளை பாதுகாத்திட சர்வதேச அரசுகளின் தலையீட்டை மற்றும் ஆதரவை கோருகின்றன. இலங்கையில் ஈழத் தமிழர்கள் நியாயமான அரசியல் தீர்வினை பெற்றுக்கொள்ளவும் பிராந்திய மற்றும் சர்வதேச அரசுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதும் அவசியமானது. எந்த ஒரு அரசும் தமது தேசிய நலனுக்குள்ளேயே இயங்கும் என்பதே எதார்த்தமான நடைமுறையாகும். இங்கு தார்மீக ஒழுக்கங்கள் கற்பனாவாதங்களாகும். இக்கற்பனாவாதங்களை களைந்து, எதார்த்த நடைமுறைகளை புரிந்து கொண்டே ஈழத்தமிழ் அரசியல் நகர்த்தப்பட வேண்டும். இலங்கையின் புவிசார் அரசியல் அமைவிடமும் அதுசார்ந்த ஈழத்தமிழர்களின் அரசியல் முக்கியத்துவம் சர்வதேச அரசுகளின் கவனத்தை குவிக்கின்றன. இதனால் பிராந்திய, சர்வதேச அரசுகள் ஈழத்தமிழர் அரசியலை தமது நலனுக்குள் வளைத்துக் கொள்ள முயல்வதும் இயல்பான நடைமுறை அரசியலாக அமைகின்றது. இவற்றை அடையாளம் காண்பதும், இவற்றிற்கு மாற்றீடாக பிராந்திய-சர்வதேச அரசுகளின் நலன்களுக்குள் ஈழத்தமிழர்களின் நன்களை ஒருங்கிணைப்பது அவசியமாகின்றது. இக்கட்டுரை இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைத்தீர்வு விடயத்தில் அதிக ஈடுபாட்டை வெளிப்படுத்தும், சுவிற்சர்லாந்து தூதரகத்தின் கரிசனையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் காலத்துக்கு காலம் பிராந்திய-சர்வதேச அரசுகளின் ஈடுபாடும் கரிசணையும் நிலையானதாகவே காணப்பட்டு வருகின்றது. இந்தியா, நோர்வே வரிசையிலேயே ஆயுதப் போராட்ட மௌனிப்புக்கு பின்னர் ஜெனீவா-சுவிற்சர்லாந்து ஏதொவொரு வகையிலான இணைப்பை பெற்று வருகின்றது. ஆரம்ப இணைப்பு ஜ.நா மனிதஉரிமைகளை சார்ந்ததாகவே அமைந்த போதிலும், 2020களுக்கு பின்னர் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இலங்கையின் சுவிஸர்லாந்து தூதரக செயற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு தாயகத்தின் எவ்வித கரிசணைகளுமற்று உருவாக்கப்பட்டு, கடுமையான விமர்சனங்களைப் பெற்றுக்கொண்ட இமயமலை பிரகடனம், சுவிற்சர்லாந்து அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் ‘போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தால்’ ஏற்பாடு செய்யப்பட்டது. இமாலய பிரகடனம் தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், சுவிற்சர்லாந்து தமது நேரடி ஆர்வத்தை மறுத்திருந்தது. எனினும் இம்மறுப்பின் நம்பகத்தன்மை பொதுவெளியில் விமர்சனநிலையிலேயே நோக்கப்பட்டது. தொடர்ந்து செப்டெம்பர்-2025இல், அமைதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (PHRD) மற்றும் கொழும்பில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில் கூட்டாட்சி, ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் குறித்து விவாதிக்க இலங்கை நாடாளுமன்றக் குழு சுவிற்சர்லாந்துக்கு விஜயம் செய்திருந்தது. இதில் தமிழ் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.

இத்தொடரின் ஒருபகுதியாகவே தமிழ்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி ஒன்று இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரகத்தின் மத்தியஸ்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புகள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் கொழும்பில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட சந்திப்பு, காலவரையறை குறிப்பிடாது தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது. அதேவேளை சுவிற்சர்லாந்து தூதரக ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமைக்கு, ‘தமிழ்த்தேசிய பேரவையால் பெப்ரவரி-15அன்று தமிழ்க்கட்சிகள் மற்றும் சிவில் சமுகங்களை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டமை’ காரணமாக சில செய்திகள் குறிப்பிட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பெப்ரவரி-12அன்று ஊடகவியலாளர் சந்திப்பில், சுவிற்சர்லாந்து தூதரக அதிகாரிகளுடன் உரையாடிய விடயங்களை குறிப்பிட்டு, தமிழ்த்தேசியப் பேரவை மீது சில செய்திகள் பொய்யான விமர்சனங்களை முன்வைப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சுவிற்சர்லாந்து தூதரக ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், தமிழ்த்தேசியப் பேரவையின் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும் நுணுக்கமாக நோக்குதல் அவசியமாகின்றது.

முதலாவது, தேசிய இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் அரசுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலேயே சர்வதேச மத்தியஸ்தம் அவசியமானதாகும். எனினும் ஈழத்தமிழரசியலில் தமிழ்க் கட்சிகளிடையே ஒருங்கிணைவை உருவாக்குவதற்கு சர்வதேச மத்தியஸ்தத்தை நாடுவது, தமிழினத்தின் துயரமாகவே காணப்படுகின்றது. இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் ஒருங்கிணைக்கப்பட திட்டமிடப்பட்ட தமிழ்க்கட்சிகளிடையேயான சந்திப்பு, தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரின் கோரிக்கையிலேயே மேற்கொள்ளப்பட்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது உறுதியான தகவலாயின், இத்தகைய நடவடிக்கை தமிழ் அரசியலை சர்வதேச தரப்பிடம் பாரப்படுத்துவதற்கு ஒப்பானதாகவே அமையும். தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடிய தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் மக்களின் உயர்ந்தபட்ச நலன்களை முன்னிறுத்தி ஒருங்கிணைவை ஏற்படுத்த முடியாது, சர்வதேச தலையீட்டில் ஒருங்கிணைவினை எதிர்பார்ப்பது, தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனுக்குள் இயங்கவில்லை என்பதனையே உறுதி செய்கின்றது. தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் பெரிய கட்சியாகவும் அதிக பிரதிநிதிகளை கொண்டுள்ள தமிழ்க் கட்சியாகவும் அடையாளப்படுத்துவோர், தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தூய்மையான எண்ணங்களையும் மக்கள் நலனையும் கொண்டிருப்பின், வெளிப்படையாகவே தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தமது நிலைப்பாட்டை பொதுவெளியில் முன்னிறுத்தி தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். அவ்வாறில்லாது, சுவிற்சர்லாந்து தூதரகத்தின் பின்னால் தமிழரசுக்கட்சி மறைய முற்படுவது, அவர்களின் ஏமாற்றுத்தனத்தை குறிப்பதாகவே அமைகின்றது.

இரண்டாவது, தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வு விடயத்தை கூடி கதைப்பதற்கு சுவிற்சர்லாந்தின் உதவியை நாடுவது, ஒருவகையில் சுவிற்சர்லாந்திடம் சரணாகதிக்கு செல்லக்கூடியதாகவும் அமையும். தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் சுவிற்சர்லாந்து ஆரோக்கியமான முன்னறிவிப்புக்களை இதுவரை வழங்கியிருக்கவில்லை. கடந்த காலங்களில் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சுவிற்சர்லாந்து தூதரகம் ஈடுபட்டுள்ள தீர்வு விடயங்களும், தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்வாங்குவதாக அமைந்திருக்கவில்லை. தேசிய இனப்பிரச்சினையில் ஈழத்தமிழர்கள் ஒரு பகுதியினர் என்ற அடிப்படையில், ஈழத்தமிழர் பிரதிநிதித்துவத்தை உள்வாங்குகின்ற போதிலும் ஈழத்தமிழர்களின் அபிலாசைகளின் மீது எவ்வித கரிசனைகளையும் வெளிப்படுத்தி இருக்கவில்லை. குறிப்பாக இமாலய பிரகடனம் முழுமையாக சிங்கள பௌத்தத்தை திருப்திப்படுத்துவதாகவே அமைந்திருந்தது. எனினும் அதனை முன்னகர்த்தும் பிரதிநிதிகளாக புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இது இலங்கை அரசை குளிர்விக்கக்கூடியதாகவே அமையும். அவ்வாறே கடந்த ஆண்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவிற்கு சுவிற்சர்லாந்து கூட்டாட்சியை போதிக்கும் செயற்பாடொன்று ஒழுங்குபடுத்தப்பட்டது. சுவிற்சர்லாந்து கூட்டாட்சி தேசியங்களை புறந்தள்ளி மாவட்ட அலகு போன்றதொரு முறைமையையே கொண்டுள்ளது. அத்தகைய முறைமை பரிசோதனையையே தென்னிலங்கை ஆட்சியாளர்களும் விரும்புகின்றார்கள். இது ஈழத்தமிழரின் தேசிய அந்தஸ்தை பலவீனப்படுத்துவதாகும். இது சுவிற்சர்லாந்து ஈழத் தமிழர்களின் தேசியத்தை ஏற்றுக் கொள்ளாத அல்லது புரிந்து கொள்ளாத நிலையையே அடையாளப்படுத்துகிறது. இவ்வாறான பின்னணியில் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வின் அடிப்படை உரையாடலை சுவிற்சர்லாந்து மத்தியஸ்தத்தில் ஒருங்கிணைப்பது, ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை முற்றாக புறந்தள்ளும் செயலாகவே அமையக் கூடியதாகும். முதலில் சுவிற்சர்லாந்து அரசாங்கத்திற்கு ஈழத்தமிழர்களின் நிலைப்பாட்டை அரசியல் அபிலாசைகளை தெளிவுபடுத்துவது அவசியமாகின்றது.

மூன்றாவது, இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரக ஏற்பாட்டிலான, தேசிய இனப்பிரச்சினை தீர்வு சார்ந்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் சந்திப்புகளுக்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் கூடிக் கலந்துரையாடுவது மூலோபாய ரீதியாக பொருத்தமான நகர்வாகும். குறைந்தபட்ச ஈழத்தமிழர்களின் தேசியத்தை ஏற்றுக் கொண்ட அல்லது புரிந்து கொண்ட தரப்பு மத்தியஸ்தத்தை அல்லது ஏற்பாட்டை ஒருங்கிணைக்கையில், ஈழத்தமிழர்களின் அபிலாசைகளில் ஒரு தொகுதி ஏதோ ஒருவகையில் பிரதான உரையாடலையும் இறுதி தீர்மான உள்ளடக்கத்தையும் பெறக்கூடியதாக அமையும். எனினும் சுவிற்சர்லாந்து, ஈழத்தமிழர்கள் விடயத்தில் அத்தகைய ஒரு தெளிவான கரிசனையை இதுவரை வெளிப்படுத்தி இருக்கவில்லை. ஈழத்தமிழர்களும் அதற்குரிய நகர்வுகளை பயனுறுதிமிக்க வகையில் மேற்கொண்டிருக்கவில்லை.  கடந்த 14ஆண்டுகளாக சுவிற்சர்லாந்தின் ஜெனிவா அரங்கில் ஈழத்தமிழர்களின் சர்வதேச அரசியல் இடம்பெறுகின்றது. எனினும் அந்நாட்டின் அரசியல் ஆதரவை பலமாக ஒருங்கிணைக்காமை, ஈழத்தமிழர் அரசியல் தோல்வி என்பதே நிதர்சனம். தற்போது தமிழ் அரசியல் கட்சிகளை மாத்திரம் முன்னிறுத்தி ஒருங்கிணைவை ஏற்படுத்தும் ஏற்பாட்டை சுவிற்சர்லாந்து தூதரகம் மேற்கொள்கையில், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கூட்டாக வெளிப்படுத்தப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இல்லையேல் பெரும்பான்மை மற்றும் ஏற்பாட்டாளர்களின் எண்ணங்களுக்குள்ளும் விருப்புகளுக்குள்ளும் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயங்கள் கட்டமைக்கப்படுவதாக அமையும். தமிழரசுக்கட்சி ஏக்கிய இராச்சிய வரைபுக்குள் சுருங்கும் எண்ணங்களையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதனை புறந்தள்ளி தமிழ்மக்களின் தேசியத்தை அங்கீகரித்து இறையாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு உள்ளடக்கத்தில் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கவும் சுவிற்சர்லாந்தின் ஆதரவை இழுக்கவும், தமிழ்த்தேசியப் பேரவையின் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமுக சந்திப்பு இராஜதந்திர ரீதியான அவசியமாகும். இதனை அரசியல் கட்சிகள் சாதுரியமாக பயன்படுத்த முன்வர வேண்டும். மாறாக மக்கள் அரங்கின் சந்திப்புகளை புறந்தள்ளி மூடிய அறைக்குள் தூதரக ஒருங்கிணைப்பில்  மாத்திரமே கூடுவார்களாயின், அவர்களின் போலித்தேசியம் அல்லது மக்கள் நலனுக்கு பிறழ்வான செயற்பாடுகளை தோலுரிப்பதற்கும் இது பொருத்தமானதாக அமையும்.

எனவே, இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டிலான தேசிய இனப் பிரச்சனை தீர்வு சார்ந்து தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் உரையாடல்கள் விழிப்புடன் நகர்த்தப்படுவதே அவசியமானதாகும். ஈழத்தமிழர்கள் எந்தவொரு சர்வதேச ஆதரவையும் அழைப்பையும் நிராகரிக்க முடியாது. தேசிய இனமாக கிடைக்கப்பெறும் சர்வதேச தளங்களை சாதகமாக நகர்த்திச் செல்வதற்கான வியூகங்களையே வகுக்க வேண்டும். அரசுகளின் கையாள்கைக்குள் வளைந்து செல்லாது, சுழிந்து ஈழத்தமிழர் அரசியல் நலன்களையும் ஒருங்கிணைக்கும் பொறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். சுவிற்சர்லாந்து தூதரக ஒருங்கிணைப்பை வினைத்திறனாக கையாளக்கூடிய பொறிமுறையாக தமிழ் தேசிய பேரவை ஒழுங்குபடுத்தியுள்ள தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக சந்திப்பை, தமிழ் கட்சிகள் முன்னகர்த்த வேண்டும். குறிப்பாக தமிழ் தேசிய பேரவை ஏற்பாட்டிலான சந்திப்பில் தமிழ் மக்களின் உயரிய அபிலாசைகளை முன்னிறுத்திய தீர்வு திட்ட வரைவுகளுடன், தொடர்ச்சியாக சுவிற்சர்லாந்து ஏற்பாட்டிலான தமிழ் கட்சிகளின் ஒருங்கிணைந்த தீர்வு திட்ட உரையாடலினை பலப்படுத்த வேண்டும். இது ஒருங்கிணைப்பு ஏற்பாட்டாளர்களாக சுவிற்சர்லாந்து தூதரகத்தினையும் கூட்டுப் பொறுப்பாளியாக செயற்படுத்த வலியுறுத்த முடியும். இவ்வாறாக மூலோபாய நகர்வுகளை முன்னெடுப்பினேயே சிறிதளவேயினும் முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியும். எனினும் தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் அதற்கான வாய்ப்புகளை கூட்டாக அடையாளங் காண முடிவதில்லை.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-