இனப்பிரச்சினைத் தீர்வு வரைபில் பெருகும் தீர்மானங்களும் முரண்பாடுகளும் எதிரியை பலப்படுத்துகிறது! -ஐ.வி.மகாசேனன்-
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, ஈழத் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும் என்ற கோரிக்கை அது பற்றிய உரையாடல் கடந்த ஒரு ஆண்டுகளாக ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் நிரவி காணப்படுகின்றது. குறிப்பாக 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு பின்னர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏக்கிய இராச்சிய அரசியல் வரைபை நிராகரிப்பது தொடர்பான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்தப் பின்னணில் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் சிவில் தரப்புக்களுடனும் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் திம்பு கோட்பாட்டை முன்னிறுத்திய அரசியல் தீர்வை கூட்டாக தயாரிப்பதற்கான முன்முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். அதேவேளை ஏக்கிய இராச்சிய வரைபு உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கிய தமிழரசுக்கட்சி மற்றும் இன்றைய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணினர் மீள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக ஏக்கிய இராச்சிய வரைபை பாதுகாக்கக்கூடிய சூழ்நிலைகள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிவில் தரப்பில் ஒரு பகுதியினர் 'ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று' என்ற கூட்டுப் பெயரில் அரசியல் தீர்வுப் பொதி ஒன்றை பேசி வருகின்றார்கள். இக்கட்டுரை தேசிய இனப்பிரச்சினைக்கான கூட்டு தீர்வு வரைபில் ஈழத்தமிழர் அரசியல் போக்கை இனங்காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி நடுப்பகுதியில் (15.02.2026) யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ் மக்களின் கூட்டு அபிலாசைகளை வெளிப்படுத்தும் வகையிலானதொரு தீர்வு வரைபை தயாரிக்கும் நோக்கில், ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடனான சந்திப்பினை ஒழுங்கமைத்து இருந்தார்கள். தமிழ்த்தேசியப் பேரவையில் கூட்டிணைந்துள்ள அரசியல் கட்சிகளை தவிர்த்து தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகியவை இச்சந்திப்பை தவிர்த்திருந்தன. எனினும் பரவலாக சிவில் தரப்புகள் கலந்து கொண்டிருந்தார்கள். இச்சந்திப்பின் தீர்மானமாக, '1985ஆம் ஆண்டு திம்புக் கோட்பாட்டை மீண்டும் அரசியல் உரையாடலின் மையமாகக் கொண்டுவருதல். அதனடிப்படையில், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு யோசனை மீள் பரிசீலனை செய்வதற்கு நிபுணர் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.'
பெப்ரவரி நடுப்பகுதியிலலே தமிழ்த் தேசியப் பேரவையின் ஒழுங்கமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்பினர் கலந்துரையாடலுக்கு முன்னைய நாள் (14.02.2026) ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு பொதி சார்ந்த கூட்டு தீர்மானத்திற்கான மற்றும் ஒரு சந்திப்பு 'ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று' என்ற தலைப்பின் கீழ் திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் 50இற்கும் மேற்பட்ட சிவில் பிரதிதிநிதிகள் கலந்து கொண்டிருந்தார்கள். திருமலை ஆயர், தென்கயிலை ஆதீனம் முதல்வர், ஆகியோர் உட்பட சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் சுயாதீனமான சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகளாக எவையும் கலந்து கொண்டிருக்கவில்லை. சிவில் தரப்பின் ஒன்று கூடலாகவே இக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், 'ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கான உள்ளக முறைகளை நிராகரித்தலும், வெளியகப் பொறிமுறை உருவாக்குவதற்குமான மூலதத்துவங்கள்' என்ற தலைப்பில் 20 பக்கத்திலும், இறுதியில் 20 விடயங்கள் முடிவான தீர்மானமாகவும் பிரகடனம் வெளியிடப்பட்டது.
இரண்டு கூட்டங்களினதும் தீர்மானங்களினதும் அடிப்படை இலக்கு ஈழத்தமிழர்கள் சுயாதீனமாக வாழ்வதனையே வலியுறுத்துகின்றது. தமிழ்த் தேசியப் பேரவையின் ஒழுங்கமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்பினரின் கலந்துரையாடலில் மையமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 1985ஆம் ஆண்டு திம்புக் கோட்பாடு, 'தனித்தமிழீழ கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்ட விடுதலைப் போராட்டக் குழுக்களும் தமிமீழக் கோரிக்கைக்கு 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயகரீதியான அங்கீகாரத்தை பெற்றுக்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒன்றிணைந்து, ஈழத்தமிழர்களின் அபிலாசையை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும்.' திம்பு கோட்பாடு தமிழ் தேசியப் பிரச்சினைக்கான எந்தவொரு அர்த்தமுள்ள தீர்வும் முதன்மையாக நான்கு முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. ஒன்று, இலங்கைத் தமிழர்களை ஒரு தேசமாக அங்கீகரித்தல். இரண்டு, இலங்கையில் தமிழர்களுக்கு அடையாளம் காணப்பட்ட தாயகம் இருப்பதை அங்கீகரித்தல். மூன்று, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது. நான்கு, தீவை தங்கள் நாடாகக் கருதும் அனைத்து தமிழர்களின் குடியுரிமை உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது என்பன அடிப்படை உள்ளடக்கமாக வலியுறுத்தப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பேரவையின் ஒழுங்கமைப்பிலான இனப்பிரச்சினைத்தீர்வு இதனை மையமாக கொண்டுள்ளது. அதேவேளை ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் இறுதி தீர்மானம், 'கூட்டானதோர் அரசியல் அடையாளத்தாலும், வரலாற்றுத் தொடர்ச்சியாலும், பன்னாட்டு நீதிக்குட்பட்ட இயல்புரிமைகளாலும், ஈழத் தமிழர்கள் தமது இருப்புநிலையைத் தனித்துவமான ஒரு மக்களாகவும் தேசமாகவும்; மீளவும் உறுதி செய்துகொள்கிறார்கள்'; 'பன்னாட்டுச் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளதும், சட்டவியல் ரீதியாக நிறுவப்பட்டுள்ளதுமான சமூக, அரசியல், பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடு உள்ளிட்ட தமக்கேயுரித்தான பராதீனஞ்செய்யப்படவியலா சுயநிர்ணய உரிமையைத், தாமே சுயமாகத் தீர்மானித்து முன்னெடுப்பதற்கு உரித்துடையவர்கள் என்று மீளுறுதி பூண்கிறார்கள்' என்றவாறு 20 விடயங்களில் ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளம் மற்றும் சுயநிர்ணய உரிமையைய வலியுறுத்துகின்றார்கள். மேலதிகமாக பன்னாட்டு சட்டங்கள் எடுகோளாக முதன்மைப்படுத்துவதுடன் வெளியகப் பொறிமுறையை வெளிப்படையாக சுட்டிக்காட்டுகின்றார்கள். திம்புக் கோட்பாட்டின் சாரம்சத்தை பலப்படுத்துவதாகவே ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் தீர்மானமும் அமைகின்றது. எனினும் இரு தரப்பாக முரண்பாட்டு மனப்பாங்குடன் அணுகுவது இவர்களின் செயற்பாட்டின் உளத் தூய்மையையே கேள்விக்குட்படுத்துகின்றது. இதனை ஆழமாக நோக்குதல் அவசியமாகின்றது.
முதலாவது, 2005ஆம் ஆண்டு மாமனிதர் தராகி சிவராம், '1976ஆம் ஆண்டு நமது பிரச்சினைகளுக்கு சுதந்திரத் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்று முடிவு செய்வதற்கு எங்களுக்குப் பல காரணங்கள் இருந்தன. ஆனால் இன்று, 29 ஆண்டுகளுக்குப் பிறகு, எங்களுக்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன' எனக்குறிப்பிட்டிருந்தார். இக்கூற்று 2026ஆம் ஆண்டும் உயிர்ப்புடனேயே உள்ளது என்பதையே, ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சந்திப்புக்களும் தீர்மானங்களும் உறுதி செய்கின்றது. எனினும் இலங்கை அரசியலமைப்பின் 6ஆம் திருத்தம் ஏற்படுத்தியுள்ள இடர்பாடுகள், ஈழத்தமிழர்களின் சில அபிலாசைகளை வெளிப்படையாய் கூற முடியாது தடைசெய்கின்றது. இத்தடையை மீறி தமது அரசியல் அபிலாசையை வெளிப்படுத்தும் அணுகுமுறையிலேயே ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை ஆகிய இரு தரப்பும் வேறுபடுகின்றது. ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று, பொதுவில் சலாம்பலான உரையாடல்களில் இறுதி இலக்கை தீர்வாக கோருகின்றது. மாறாக தமிழ்த்தேசியப் பேரவை 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்குள் உரையாடக்கூடிய சொற்பதங்களூடாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்;கான வலியுறுத்தலை மேற்கொள்கின்றார்கள். அணுகுமுறையில் வேறுபடும் தரப்பினர் பலமாக முட்டிக்கொள்வதும் பொதுவான தன்மையின் இணங்கி செயற்பட மறுப்பது, கொள்கைரீதியாக முரண்படும் எதிரிகளுக்கே சாதகமான வாய்ப்புக்களை உருவாக்கக்கூடியதாக அமையும்.
இரண்டாவது, தமிழ்த்தேசியப் பேரவை மற்றும் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று ஆகிய இரு தரப்புக்களையும் தவிர்த்து ஈழத்தமிழர்களின் பெரிய கட்சியாக உள்ள தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியையும் இணைத்துக் கொண்டு தமது ஏக்கிய இராச்சிய வரைபை பூரணப்படுத்துவதற்கான முனைப்பை கொண்டுள்ளார்கள். ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஏக்கிய இராச்சிய வரைபை பூரணப்படுத்துவதற்கான ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தார்கள். மேலும் தேர்தலுக்கு பின்னரும் அமைச்சர்கள் மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏக்கிய இராச்சிய வரைபை பூரணப்படுத்துவதற்கான சமிக்ஞையையே வெளிப்படுத்தி வருகின்றார்கள். தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சில ஊடகவியலாளர் சந்திப்புக்களில் ஏக்கிய இராச்சிய வரைபை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனக்கருத்துரைத்துள்ளார். எனினும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் தொடர்ச்சியாக ஏக்கிய இராச்சிய வரைபை வக்காளத்து வாங்கும் உரையாடல்களையே மேற்கொண்டு வருகின்றார்கள். அத்துடன் ஏக்கிய இராச்சிய வரைபை நிராகரித்து, தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசையும் தமிழரசுக்கட்சியின் ஸ்தபாக கொள்கையுமான சமஷ;டியை வலியுறுத்தும் கூட்டுத் தீர்மானத்திற்கான தமிழ்த்தேசியப் பேரவையின் அழைப்பை, தமிழரசுக்கட்சி தொடர்ச்சியாக நிராகரித்தே வருகின்றது. இப்போக்கு தமிழரசுக்கட்சி, தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஏக்கிய இராச்சிய வரைபை தமிழ் மக்கள் மீது திணிக்கும் கைங்கரியத்துக்கு உடன்போகக்கூடிய ஏதார்த்தங்களையே உறுதி செய்கின்றது. இப்பின்னணியிலேயே ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தக்கூடிய ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று மற்றும் தமிழ்த்தேசியப் பேரவை ஆகிய இரு தரப்பும் குறைந்தபட்சம் ஏக்கிய இராச்சிய வரைபை நிராகரிக்கும் செயற்பாட்டிலாவது ஒன்றிணைய வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது.
மூன்றாவது, 1972ஆம் ஆண்டு மற்றும் 1978ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கள் முழுமையாக தமிழ் மக்களின் எதிர்ப்பின் மத்தியிலேயே உருவாக்கப்பட்டது. ஆதலினாலேயே இன்று வரை உள்ளகப் பொறிமுறையின் கீழ் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பாதுகாக்கப்படாது என்ற கோசத்துடன், வெளியகப் பொறிமுறை அவசியம் என்ற நியாயாதிக்கத்தை வழங்கக்கூடியதாக உள்ளது. எனினும் ஏக்கிய இராச்சிய வரைபு நடைமுறைப்படுத்தப்படுமாயின் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் ஒற்றையாட்சி பண்புகளை கொண்டதொரு அரசியலமைப்பு தமிழ் மக்களின் அதிக பெரும்பான்மையை கொண்டுள்ள தமிழ் அரசியல் கட்சியின் இணக்கத்துடனேயே நிறைவேற்றப்பட்டதாக அமையும். இத்தகைய சூழலை கடப்பதற்கு ஏக்கிய இராச்சிய வரைபை நிராகரிக்கும் தமிழ் கட்சிகள், சிவில் சமுக அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களிடம் கூட்டு ஒத்துழைப்பு அவசியமாகின்றது. எனினும் நடைமுறையில் ஏக்கிய இராச்சிய வரைபை நிராகரிப்பதாக கூறிக்கொள்பவர்களும் தமக்குள் மோதிக் கொள்வது ஒருவகையில் எதிரிக்கு சேவகம் செய்யக் கூடியதாகவே அமைகின்றது.
நான்காவது, கடந்த காலங்களில் விட்டுக்கொடுப்புகளுக்கு முரண்பட்டு, தூய்மைவாத பிரச்சாரங்களால் எதிரிக்கு சேவகம் செய்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சமகாலத்தில் முதிர்ச்சியான அரசியலை வெளிப்படுத்துகின்றது. இது வரவேற்கத்தக்கதாகும். அண்மையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் சந்திப்பில் கலந்து கொண்டு, இணைந்து பயணிக்க வேண்டிய விருப்பையும் இரு தரப்பும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையில் ஒரே புள்ளியில் இணையும் தன்மைகளையும் குறிப்பிட்டுள்ள காணொளி சமுக வலைத்தளங்களில் பார்க்கக்கூடியதாக இருந்தது. இது வரவேற்கத்தக்க முதிர்ச்சியாகும். எனினும் செல்வராசா கஜேந்திரனின் பங்குபற்றல் தொடர்பில் முகநூலில் பதிவு செய்துள்ள ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் முதன்மையான செயற்பாட்டளர் ஒருவர், செல்வராசா கஜேந்திரன் தமது தீர்மானத்துடன் முரண்பட்டுள்ளதாக மாத்திரம் குறுகிய காணொளியுடன் குறிப்பிட்டுட்டுள்ளார். இது அருவருக்கத்தக்க அரசியல் கலாசாராமாகும். இது ஈழத்தமிழர் போராட்டங்களை பிளவுபடுத்துவதற்கு மாத்திரமே துணை புரியும். இதய சுத்தியுடன் தமிழ்த்தேசிய அரசியலை வென்றிட சிந்திப்பவர்களும் செயலாற்றுவர்களும் இத்தகைய அருவருக்கத்தக்க அரசியலை செய்ய மாட்டார்கள். எனினும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் பெரும்பாலும் தமது சுய விருப்பு வெறுப்புக்களை தமிழ் மக்களின் விடுதலை அரசியலுக்குள் இணைப்பவர்களாகவே காணப்படுவது தமிழினத்தின் துயரமாகும்.
எனவே, தமிழ்த்தேசியப் பேரவை மற்றும் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இதய சுத்தியுடன் செயற்படுபவர்களாயின், தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை கடந்து தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பாதுகாக்கும் நோக்குடன் செயற்ட வேண்டும். எதிரி யார் என்பதை சரியாக இனங்கண்டு, எதிரிக்கு எதிரான கூட்டைப் பலப்படுத்த வேண்டும். மாறாக தேநீரில் உப்பு இல்லை சீனி இல்லை என குடும்பத்துக்குள் முரண்படுவது போல் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தை அணுகுவார்களாயின், எதிரி தேநீரே கிடைக்க முடியாத சூழலை உருவாக்குவான். இத்தகைய சூழலே ஈழத்தமிழரசியலில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த காலங்களைப் போலல்லாது, இம்முறை தென்னிலங்கை அரசாங்கம் அரசியலமைப்பு விடயங்களை முதன்மைப்படுத்துவதற்கு முன்னரே, தமிழ் அரசியலில் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு விடயங்கள் விவாதிப்பது ஆரோக்கியமான முன்னேற்றமாகும். எனினும் அதில் முரண்பாட்டை வெளிப்படுத்துவது தமிழினத்தின் சாபமாகவும் துயராகவும் அமைகின்றது. தமிழ் மக்களின் ஷசுயநிர்ணய உரிமை' என்ற மையத்தில் ஒருங்கிணைந்து செயலாற்றுவதே தமிழ்த்தேசியத்தை பாதுகாக்கவும் பலப்படுத்தக்கூடியதுமான உபாயமாக அமையும்.

Comments
Post a Comment