மேற்காசிய போரும் இலங்கையின் வெளியுறவும்! 'நடுநிலைமை மற்றும் மனிதாபிமானம்' -ஐ.வி.மகாசேனன்-

மேற்காசியாவின் போர் ஆரம்ப நிலையில் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கீட்டை வழங்கக்கூடிய ஆபத்தையே சர்வதேச அரசியல் அவதானிகள் ஆருடம் கூறி வந்தார்கள். ஹார்மூஸ் நீரிணை இடைமறிப்பு மற்றும் எண்ணெய் வர்த்தக நெருக்கீடுகள் பற்றிய உரையாடலே சர்வதேச பிரச்சினையாக அணுகப்பட்டது. எனினும் இலங்கைக்கு அருகில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஈரான் கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதல், மேற்காசியப் போரை இந்து சமுத்திரப் பிராந்தியம் வரை விஷ்தரித்துள்ளதா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இலங்கையின் வெளியுறவுக்கொள்கைக்கு நேரடியான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழ்நிலை எதிர்வுகூறப்படுகின்றது. தி ஹிந்து பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா, 'பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் சிறிய நாடுகளுக்கு, குறிப்பாக இலங்கைக்கு, வெளிப்புற  அதிர்ச்சி இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அதைத் தாங்கும் அளவுக்கு போதுமான இடையகங்களை இன்னும் உருவாக்க முடியவில்லை' எனத் தெரிவித்துள்ளார். அதேவேளை 'நெருக்கடியான நிலையில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்தப் போவதில்லை. அரசாங்கம் என்ற அடிப்படையில் எனது பொறுப்பை நிறைவேற்றுவேன்' என இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க சூளுரைத்துள்ளார். இக்கட்டுரை 'அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போரில்' (மேற்காசியா போர்) இலங்கையின் வெளியுறவுக்கொள்கை அணுகுமுறையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச்-04அன்று, இலங்கையின் காலி கடற்பரப்பிலிருந்து சுமார் 40 கடல்மைல் தொலைவில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஈரானின் கடற்படைக் கப்பலான ஐரிஸ் டெனா (IRIS Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தி தாக்குதலை நடாத்தியது. இதில் பயணித்த 180இற்கும் மேற்பட்ட கடற்படை இராணுவ பணியாளர்களில் 32 பேரையே இலங்கை கடற்படை மீட்டு, காலி தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சையை வழங்கியுள்ளது. 84 பேரின் உடல்களையும் கண்டுபிடித்துள்ளது. தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், 'இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்க நீர்மூழ்கி ஒன்றினால் ஓர் எதிரியின் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவை' என்று சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கடற்பரப்பிற்குள் ஈரானிய கடற்படைக் கப்பல் தாக்குதலுக்குள்ளான விவகாரம் தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், 'இலங்கைக் கடற்பரப்புக்கு அப்பாற்பட்ட கடலில் மூழ்கும் நிலையிலிருந்த ஈரான் கடற்படைக்குச் சொந்தமான கப்பலிலிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச கடல்சார் சட்டம், கடல்சார் உடன்படிக்கைகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் மீட்கப்பட்டார்கள்' என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

மறுநாள் மார்ச்-05அன்று, இரண்டாவது ஈரானிய கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியையும், ஈரான் கப்பல் பயணிகளை பாதுகாப்பாக நாட்டிற்குள் அனுமதிப்பதற்கான தகவலையும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க காணொளி செய்தியூடாக வெளியிட்டிருந்தார். இலங்கை அரசாங்கம், ஐரின்ஸ் புஷேர் (IRINS Bushehr) என்ற ஈரானிய கடற்படை கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்துவுதற்கு அநுமதி வழங்கியதுடன், கப்பலில் இருந்த 208 பேரையும் பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்து சென்றுள்ளனர். கப்பலில் ஒரு இயந்திரம் சிக்கலில் இருந்ததாகவும், இலங்கை மனிதாபிமான உதவியை வழங்கியதாகவும் கப்பலின் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஈரானிய கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கான அனுமதியை வழங்கிய பின்னர் அநுரகுமார திசநாயக்க வெளியிட்ட காணொளி செய்தியில், 'எங்கள் கடல்களையும் வானத்தையும் மற்றொரு நாடு தங்கள் சொந்த லாபத்திற்காகவோ அல்லது மற்றொரு நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதற்காகவோ பயன்படுத்த முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கடற்பரப்புக்குள் ஈரானிய கடற்படை கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலும் மறுநாள் ஈரானிய கடற்படை கப்பலை இலங்கையின் தரித்து நிற்பதற்கான அனுமதியும், மேற்காசிய போரில் (அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டு எதிர் ஈரான்) இலங்கையின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்துகின்றது. இலங்கை தனது நடவடிக்கையை 'மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றும் போதும் நடுநிலைமை' என்றவாறு விழிக்கிறது. எனினும் மேற்காசிய போரின் முதல் வாரத்திலேயே ஒரு டசின் நாடுகள் நேரடி போர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது. ஏற்கனவே அஜர்பைஜான் மீதான ஈரானிய ட்ரோன் தாக்குதலால் மத்திய ஆசிய வரை நீண்டுள்ள மேற்காசிய போர், தெற்காசியாவில் இலங்கையினையும் இழுத்துச்செல்கின்றதா என்ற கேள்விகள் சர்வதேச வெளியில் பரவலாக காணப்படுகின்றது. இலங்கையின் வெளியுறவுக்கொள்கையை பொறுத்தவரை, 'தேயிலைக்கு எண்ணெய்' (Oil for Tea) என்ற நீண்டதொரு பண்டமாற்று நட்பை நெருக்கீடுகளுக்குள்ளும் பாதுகாப்பதா என்பதான நட்பு சோதிக்கப்படுகிறது. மறுதளத்தில் ஈரானுக்கு உதவியதற்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கோபப்படுத்தும் சாத்தியக்கூறுகளுக்கு எதிராக அதன் தேசிய நலனை எடைபோட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இலங்கையின் சிக்கலான இராஜதந்திர, மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு சவால்களைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.

முதலாவது, இலங்கைத்தீவின் இறையாண்மை என்றும் பெரிய நாடுகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியும் யதார்த்தத்தையே, மார்ச்-04அன்று இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதல் உறுதி செய்கின்றது. இது இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு எதார்த்தமானதாகும். எனினும் இந்நெருக்கீட்டுக்குள்ளும் இலங்கை ஜனாதிபதி தமது ஜனரஞ்சக அரசியலை பாதுகாக்கும் வீரதீர பிரச்சாரங்களை பாதுகாத்து வருகின்றார். குறிப்பாக இரண்டாவது ஈரானிய கடற்படை கப்பலான ஐரின்ஸ் புஷேரினை இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதித்தமைiயும் கப்பல் பயணிகளை பாதுகாத்தமையையும் தமது கடல் மற்றும் வானின் இறையான்மையை பாதுகாக்கும் நடவடிக்கையாக சூளுரைக்கும் இலங்கை ஜனாதிபதி, முதல் நாள் ஈரானிய கடற்படை கப்பலான ஐரிஸ் டெனா அமெரிக்காவினால் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் தாக்கப்பட்டமையை மறப்பது தான் சீரான இராஜதந்திர வெளிப்பாடாகும். இதுவே எதார்த்தமானதாகும். மறுபக்கத்தில் இது ஜே.வி.பிக்கு உரித்தான போலி ஜனரஞ்சக உரையாடலின் தொடர்ச்சியையும் ஜனாதிபதி தனது காணொளி செய்தியில் உள்நாட்டு அரசியலுக்காக தொடர்ந்துள்ளார்.

இரண்டாவது, ஈரானிய கடற்படை கப்பலான ஐரின்ஸ் புஷேரினை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தாது திருகோணமலையில் நிறுத்தியுள்ளமை ஒருவகையில் இலங்கை தனது பிராந்திய பாதுகாப்பை இந்தியாவிடம் பாரப்படுத்திய செயலாகவும் மதிப்பிடப்படுகின்றது. மார்ச்-05ஆம் திகதி இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற ரைசினா உரையாடலிலும், மேற்காசியா போர் சார்ந்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் எழுந்துள்ள பதட்டத்தை சீர்செய்வதும் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் இந்தியாவின் பொறுப்பு என்ற கருத்தை சிறிய தீவுகளின் பிரதிநிதிகள் பரிந்துரைத்துள்ளனர். மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், 'போர் எங்கள் கடல் எல்லைக்குள் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தப் போர் எங்களுக்குத் திரும்பி வருவது கவலையளிக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா இந்தப் பிராந்தியத்தில் நிகர பாதுகாப்பு வழங்குநராக உள்ளது. மேலும் இந்தியா அந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று தெரிவித்துள்ளார். ஹர்ஷா டி சில்வா இந்தியாவின் தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய செய்தியில், 'கடல்சார் விவகாரங்களைப் பொறுத்தவரை கூட்டாண்மையுடன் பணியாற்றுவதற்கு நாங்கள் இந்தியாவை சார்ந்து இருக்கிறோம் என்பது தெளிவாகிறது' எனக்குறிப்பிட்டுள்ளார். இத்தகைய முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டே இலங்கை அரசாங்கமும் ஈரானிய கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்த அனுமதியித்துள்ளது என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றது. இலங்கையின் வடக்கு-கிழக்கு பிராந்தியத்தில் இந்தியாவின் பார்வை உயர்வாகவே இருந்து வந்துள்ளது. அண்மைக் காலங்களில் திருகோணமலையை மையப்படுத்திய இந்தியாவின் நாட்டம் செய்திகளில் முதன்மையாகவே இருக்கின்றது. குறிப்பாக கடந்த வருடம் இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமரின் முதலீடுகள் பலவும் திருகோணமலையை மையப்படுத்தியதாகவே இருந்தது. இந்தப்பின்னணியிலேயே ஈரானின் கடற்படை கப்பலுக்கான பாதுகாப்பான இடமாக இலங்கை திருகோணமலையை தெரிவு செய்துள்ளது என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றது. இது இலங்கையின் வலுவான இராஜதந்திர நகர்வாகவே காணப்படுகின்றது.

மூன்றாவது, இலங்கையின் ஈரானுக்கான மனிதாபிமான உதவி என்பது எதிர்கால சர்வதேச ஆதிக்கத்தின் நட்பை வலுப்படுத்துவதற்கான முற்கூட்டிய நகர்வா எனும் சந்தேகங்களும் சர்வதேச அரசியல் அவதானிகளின் தேடலை ஊக்குவித்துள்ளது. மேற்காசியா மோதலில் சீனா நேரடியான தலையீட்டைக் கொண்டிராத போதிலும் ஈரானுக்கான ஆயுத தொழில்நுட்ப ஆதரவாளராக சீனாவின் தாக்கம் சர்வதேச சூழலில் சந்தேகிக்கப்படுகின்றது. குறிப்பாக ஈரானின் உயர்தலைவர் அயதுல்லா அலிகமேனியின் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு முன்னரே சீனாவிடமிருந்து ஈரானுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டதாக செய்திகளும் காணப்படுகின்றது. மறுபக்கம் சர்வதேச அரசியலில் சீனாவின் நேரடி போட்டியாளரான அமெரிக்க மேற்காசிய போரில் நேரடியாக களமிறங்கியுள்ளது. கடந்த ஒரு வார போரில் அமெரிக்கா ஆயுத தொழில்நுட்ப அளவில் பாரிய இழப்பை எதிர்கொண்டுள்ளது. போர் நீடிக்கும்பட்சத்தில் அமெரிக்காவின் உயர் தொழில்நுட்ப ஏவுகணைகளுக்கு பற்றாக்குறை ஏற்படுமென்ற செய்தியும் பென்டகனில் கசியப்பட்டுள்ளது. இவ்வாறான போக்கில் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவினால் வெற்றியை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படின், உலக ஒழுங்கில் சீனாவின் உயர்ச்சிக்கு ஒரு வலுவான பங்களிப்பை வழங்கக்கூடியதாக அமையும். இவ்வாறான கணிப்புகளிலேயே ஈரானுக்கான இலங்கையின் மனிதாபிமான ஆதரவு வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகங்களும் காணப்படுகின்றது. குறிப்பாக ஈரான் கப்பல் காலிக்கு அருகாமையிலேயே பாதுகாப்பு தஞ்சத்தை கோரியுள்ளது. காலியை அண்மித்த அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்தின் 99 வருட குத்தகை கவனிக்கத்தக்க விடயமாகும். மேலும் சீன மாக்சிச மரபுவழி ஸ்தாபகத்தைக் கொண்ட ஜே.வி.பி-சீன உறவும் இங்கு வலுவான சான்றுக் காரணியாகவும் அமைகின்றது. இவற்றை முன்னிறுத்தியே ஈரானுக்கான இலங்கையின் மனிதாபிமான உதவி சீனா விம்பத்தில் அணுகப்படுகின்றது.

எனவே, இலங்கை வரலாறுதோறும் தனது மூலோபாய முக்கியத்துவத்தின் எடையை சரியாக கையாள்வதனூடாக பெரிய அரசுகளையும் பிராந்திய அரசுகளை திறம்பட இராஜதந்திரமாக கையாண்டுள்ளது. அத்தகையதொரு இராஜதந்திர நகர்வின் தொடர்ச்சியையே ஈரானிய கடற்படை கப்பல்களை இலங்கை கையாளும் முறைமையிலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இறையாண்மை என்ற விவாதங்களை கடந்து இலங்கை தனது பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. அதேவேளை எரிபொருள் நெருக்கீட்டிலிருந்து வரக்கூடிய ஆபத்தை தற்காலிகமாக சீர்செய்துள்ளது. கடந்த காலத்தில் ஏற்பட்ட அரகலய மற்றும் அதன் விளைவான ஆட்சி மாற்றத்துக்கான உடனடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடே காரணமாகும். மேற்காசியாவில் போர்ப் பதட்டம் ஆரம்பிக்கையிலேயே இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வரிசை கட்டத் தொடங்கினார்கள். இது அரசாங்கத்திற்கு நெருக்கீட்டுக்கான செய்தியாகவே அமைந்தது. இதனை சீர்செய்யக்கூடிய உத்தி ஈரானுக்கான 'மனிதாபிமான உதவியில்' உள்ளது. எனினும் ஏற்கனவே வரிவிதிப்புகள் மூலம் சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்திற்கு பெரும் இடர்பாட்டை வழங்கும் அமெரிக்காவின் கோபத்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய வரி சுமைகளை சுயபரிசோதனை செய்ய வேண்டிய தேவை உள்ளது.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-