அரசாங்கத்தின் தன்முனைப்பும் எதிர்க்கட்சிகளின் அதிகார போட்டியும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறதா? -ஐ.வி.மகாசேனன்-

உலகம் இயங்கு நிலையை மேற்காசிய போர் கடுமையாக பாதித்துள்ளது. ஹார்மூஸ் நீரிணை முடக்கத்தால் எரிபொருள் விலையேற்றம் முதன்மையான பொது உரையாடலை பெற்று வருகிறது. இது அனைத்து பொருட்களின் விலையேற்றத்திலும் ஏதொவொரு செல்வாக்கு செலுத்தும் காரணியாக காணப்படுகிறது. அதேவேளை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டின் ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து, அது வளைகுடா நாடுகளிடையே விஷ்தரிக்கப்பட்ட போது பெருமளவு தூரதேசங்களுக்கிடையிலான விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு-கிழக்கு நாடுகளுக்கிடையிலான விமான சேவையின் வழிப்பாதை மற்றும் இடைத்தங்கலாக வளைகுடா நாடுகளே பெருமளவில் காணப்படுகிறது. போரை காரணங்காட்டி மாற்றுவழியில் இயக்கப்படும் தூரதேசங்களுக்கிடையிலான விமான சேவையும் செலவீனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பெருமளவு சுற்றுலாவை நம்பி இருக்கும் நாடுகளுக்கு நெருக்கடியாக அமைகின்றது. இந்த பின்னணியில் மேற்காசியா போர் உலக நாடுகளுக்கு இசைவாக அல்லது ஒரு படி மேலாகவே இலங்கை பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் நிலைமைகளே காணப்படுகின்றது. எனினும் 2021-2022ஆம் ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து சமகால நிலைமை மாறுபட்டது என்ற புரிதல் அவசியம் ஆகிறது. இக்கட்டுரை மேற்காசியா போரின் பொருளாதார விளைவுகளை இலங்கை அரசியல் எதிர்கொள்ளும் முறைமையை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

‘அரசியலில் அறம் (Moral) என்பது அறவே அற்றது’ என்பதே ஈழத் தமிழ் அரசியலில் மூத்த அரசியல் வரலாற்று ஆய்வாளரான மு.திருநாவுக்கரசு அவர்கள் தொடர்ச்சியாக கூறிவரும் கருத்தாகும். அதாவது ‘உயிர் வாழ்வு என்பதே உயிரை கொன்று வாழ்தல் என்பதே’ அவரது கருத்தாகும். அவ்வாறிருக்க அதிகாரப் போட்டியை குறித்து இயங்கும் அரசியலில் அறம் குறித்து சிந்திப்பது மடமைத்தனமாகவே அமைகிறது.  இது யதார்த்தவாத உலகில் பொதுவான நிதர்சனமாகும். மேற்காசியா போர் உலக அளவில் ஏற்படுத்தி உள்ள தாக்கங்கள் அதனை அப்பட்டமாக உறுதி செய்கின்றது. இவ்அறமற்ற அதிகார தொனியிலேயே இலங்கை அரசியலும் இயங்குகின்றது. ஆளுந்தரப்பின் பிரச்சாரங்களும் எதிர்க்கட்சியின் விமர்சனங்களும் மக்கள் பிரச்சினை அல்லது அவஸ்தையை ஓரமாக வைத்து, அதிகாரத்தை பாதுகாப்பதும் அதிகாரத்தை அடைவதற்குமான இலக்குகளே மையமாக காணப்படுகின்றது.  இப்பொருளாதார நெருக்கடிக்குள் அவஸ்தைப்படும் மக்களைப் பற்றி பெரிய அளவில் சிந்திப்பதாகவோ அல்லது மக்களின் அவஸ்தைகளை களையக்கூடிய எண்ணங்களை கூட்டாக நடைமுறைப்படுத்துவதாகவோ காணப்படவில்லை. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகிறது.

முதலாவது, இலங்கை சமகாலத்தில் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பது இலங்கைக்கு மாத்திரம் உரித்தானது அல்ல. அதாவது 2021-2022ஆம் ஆண்டு காலப் பகுதியை பிரதிபலிப்பது அல்ல. இது முழு உலகிற்கும் உரிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இலங்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுகின்ற நாடாக, ஏனைய நாடுகளிலிருந்து வேறுபடலாம். எனினும் எரிபொருளை மையப்படுத்தி எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி, உலக பொது பிரச்சினையாகும். அதேவேளை 2021-2022 பொருளாதார நெருக்கடி காலப்பகுதியில் இலங்கை வங்குரோத்து நிலையில் காணப்பட்டது இலங்கையின் கையிருப்பு பெருமளவு காலி செய்யப்பட்டிருந்தது. எனினும் சமகாலம் அவ்வாறானது அல்ல. இலங்கை எரிபொருளை இறக்குமதி செய்யக்கூடிய கையிருப்பை கொண்டுள்ளது. அதனையே செய்திகளும் உறுதி செய்கிறது. ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு எரிபொருள் கப்பல்கள் தாமதமாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மார்ச்-17அன்று மாலை தெரிவித்தார். சினோபெக் மற்றும் ஆர்.எம் பார்க்ஸ் நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல் எரிபொருள் விரைவில் வந்து சேரும் என செய்திகள் உறுதி செய்கிறது. மேலும், உள்ளூர் எரிபொருள் விநியோகத்தில் சுமார் நான்கில் ஒரு பங்கிற்குப் பொறுப்பான லங்கா இந்தியன் எண்ணெய் கம்பெனி (LIOC) கொள்வனவு செய்துள்ள ஒரு எரிபொருள் கப்பல், இன்னும் சில நாட்களில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது, இலங்கை அரசாங்கத்தின் நடைமுறை தாமதங்களே நெருக்கடியை அதிகரிப்பதாக விமர்சனத்தை பெறுகின்றது. இதுவொரு வகையில் அரசாங்கம் தன்முனைப்புடன் (Ego) செயற்படுவதனால் ஏற்படும் பிரச்சினையாகவே அமைகின்றது. கடந்த கால அரசாங்கங்கள் பின்பற்றிய நடைமுறைகளை புறக்கணிப்பதாகவும், இறுதி கட்டத்தில் வேறு தெரிவின்றி அவற்றை பின்பற்றும் நிலைக்கு அரசாங்கம் செல்கின்றது. இத்தகைய காலம் தாழ்த்திய முடிவுகள் நெருக்கடியை அதிகரிப்பதாக அமைகிறது. பெப்ரவரி-28அன்று மேற்காசியாவில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு விஷ்தரணம் பெறுகையில், எரிபொருள் பற்றிய பதட்டம் இலங்கை மக்களை தொற்றிக் கொண்டது. குறிப்பாக ஆரம்பத்தில் யாழ்ப்பாண மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று எரிபொருட்களை தேவைக்கு அதிகமாகவே சேமித்து கொண்டார்கள். இதுவொரு வகையில் போரின் உளவியல் தாக்க தொடர்ச்சியாகும். இதனை பலரும் கேலியாக பார்த்தார்களேயன்றி, அரசாங்கமும் இதனை கட்டுப்படுத்த வினைத்திறனாக செயலாற்ற தவறியிருந்தது. வெறுமனவே செய்திகளில் ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருட்கள் காணப்படுகின்றது என்பதையே தெரிவித்தார்கள். எனினும் மக்கள் தேவைக்கு அதிகமாக சேமிப்பை மேற்கொள்வதால் ஏற்படும் செயற்கை தட்டுப்பாடை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறி இருந்தார்கள். பலரும் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட க்யூ.ஆர் (QR) முறைமையை பின்பற்ற கோரியிருந்தார்கள். எனினும் அரசாங்கம் அதனை தவிர்த்து வந்தது. குறுகிய காலத்தில் எரிபொருள் விலையேற்றத்தையும் மேற்கொண்டிருந்தது. இது முழு இலங்கையிலும் எரிபொருள் சார்ந்த பதட்டத்தையும், மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையாவதையும் அதிகரித்தது. இதன் பின்னணியிலேயே இறுதிக்கட்டத்தில் க்யூ.ஆர் முறைமைக்கு இலங்கை அரசாங்கமும் நகர்ந்துள்ளது. எனினும் அதில் காணப்படும் தொழில்நுட்ப பிரச்சினைகளால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வெளியே வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பது இன்னும் காணப்படுகிறது.

மூன்றாவது, ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெகுஜன அரசியல் விம்பத்தின் தோல்வியும் ஒருவகையில் பதட்டத்தை செயற்கையாக அதிகரித்துள்ளது எனலாம். ஜே.வி.பி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி ஒன்றரை வருடங்களை கடந்தும், ‘எல் பலகை’ (L Board) அரசாங்க நிலையிலிருந்து மாற முடியாதவர்களாய் உள்ளனர். கடந்த கால அரசாங்கங்கள் பின்பற்றிய நெருக்கடிகள் நடைமுறைகளை ஜே.வி.பி எதிர்க்கட்சியாக பெருமளவுக்கு எதிர்த்து விமர்சித்து வந்துள்ளது. மாற்று வழிமுறைகளும் திட்டங்களும் தங்களிடம் காணப்படுவதாக தெரிவித்து வந்தார்கள். அரசாங்கம் நிலையிலும் தெரிவித்து வருகிறார்களே அன்றி, நடைமுறைபடுத்த தவறுகின்றார்கள். கடந்த கால அரசாங்கங்களின் நடைமுறையைக் கூட பூரணமாக சாத்தியப்படுத்த தெரியாதவர்களாகவும் காணப்படுகின்றார்கள். க்யூ.ஆர் மூலம் கட்டுப்படுத்தப்படும் எரிபொருள் பங்கீட்டு முறையில் உள்ள ஆரம்பகட்ட சிக்கல்கள், மூன்று காரணங்களுக்காக வழக்கத்தை விட நீண்ட காலம் நீடிக்கின்றன என்பதை தி ஜலண்ட் (The Island) பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒன்று, சில அமைப்புசார் குறைபாடுகள். இரண்டு, சில க்யூ.ஆர் குறியீடுகளை, குறிப்பாக 2022இல் வெளியிடப்பட்ட பழைய குறியீடுகளை ஸ்கேன் செய்வதில் எரிபொருள் நிரப்பும் நிலையப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள். மூன்று, பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துபோகக் காரணமாக அமைந்த விநியோகப் பற்றாக்குறை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தேர்தல் பிரச்சாரத்திலும் ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தை வழங்குவதாகவும் உறுதியளித்தது. அதேவேளை ஒரு இலட்சியமிக்க டிஜிட்டல் கொள்கையையும் வெளியிட்டது. ஆனால், 2022இல் எரிபொருள் நெருக்கடியைத் தீர்க்க வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட க்யூ.ஆர் அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையைச் சீராக மீண்டும் செயல்படுத்துவதை அதனால் உறுதிசெய்ய முடியவில்லை என்பது வெகுஜன அரசியலின் தோல்வியையே உறுதி செய்கிறது. 

நான்காவது, இலங்கை பெருமளவு சார்பு பொருளாதாரத்தையே கொண்டுள்ளது. 2021-2022 காலப்போகுதியில் ஏற்பட்ட வங்குரோத்து நிலை, குறிப்பிட்ட நான்கு ஆண்டுகளில் ஓரளவு சீசெய்யப்பட்டதன் பின்னணியில், சார்பு நாடுகளின் உதவி பாரியளவு காணப்பட்டிருந்தது. குறிப்பாக இந்தியாவின் ஒத்துழைப்பு கவனிக்கத்தக்கது. அதேவேளை 2021-2022 நெருக்கடியில் செயற்கை தட்டுப்பாடுகளில் சார்பு நாடுகளின் வகிபாகம் சந்தேகத்திற்குரியதாகவும் உள்ளது. 2021-2022 காலப்பகுதியில் அப்போதைய அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யும் ஒரு உத்தியின் பகுதியாக, இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோகம் தாமதப்படுத்தப்பட்டது செய்திகளாக உள்ளன. பல வெளிநாட்டு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குத் சீராக எரிபொருள் வருவதில்லை என்ற புகார்கள் பரவலாக இருந்தன. சமகாலத்திலும், எரிபொருள் பற்றாக்குறையால் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் சமகால சூழல், 2021-2022இலிருந்து வேறுபட்டது என்பதும் எதாத்தமானதாகும். இலங்கை பொருளாதார வங்குரோத்து நிலையை அனுபவித்த காலப்பகுதியில் இலங்கையின் பிராந்திய மற்றும் சர்வதேச வல்லாதிக்க நாடுகள் பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரமான நிலையில் காணப்பட்டது. அந்தப்பின்னணியில் தமக்கு மேலதிகமானவையை இலங்கைக்கு பகிர்வது, அரசியல் உறவாகவும் இயல்பானதாகும் அமைந்திருந்தது. எனினும் சமகால நடைமுறை வேறுபட்டது. இலங்கை தங்கி வாழும் பல நாடுகளும் எரிபொருள் சார்ந்த இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளது. சமகால எரிபொருள் நெருக்கடியின் ஆரம்ப கட்டத்தில், இலங்கை பிராந்திய அரசாகிய இந்தியாவிடம் உதவியை கோரியிருந்தது. எனினும் இந்தியாவும் எரிபொருள் பற்றாக்குறைக்கான அச்சத்தை கொண்டுள்ளது. இந்திய செய்திகளிலும் மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு சார்ந்து வரிசையில் நிற்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்த சூழலில் இந்தியா அல்லது சீனா இலங்கைக்கு உதவும் என்று எதிர்பார்ப்பது ஒரு வகையில் அரிதானதாகவே காணப்படுகின்றது. இது இலங்கையின் பொதுவான சார்பு கலாசாரத்தினால் ஏற்பட்டுள்ள பலவீனமான நிலையையே வெளிப்படுத்துகின்றது.

ஐந்தாவது, சமகாலத்தில் பொருளாதாரத்தில் எழக்கூடிய நெருக்கடியை உடனடியாக தீர்க்க முடியாது விடினும், எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இலங்கை தற்சார்பு நோக்கி நகர்வதற்கான முதலீடுகளையும் திட்டங்களையும் இலங்கை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். கடந்த காலத்திலும் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்த போது பல பொருளார நிபுணர்களும் அரசியல் அவதானிகளும் இலங்கையின் தற்சார்பு பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டிய தேவைப்பாட்டை உரையாடி இருந்தார்கள். இப்பத்தியிலும் அது தொடர்பான விடயங்கள் முன்னைய காலங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும் அன்றைய அரசாங்கங்கள் வெளிப்படையாக ஒரு தாராள முதலாளித்துவ இயல்பின் பிரதிபலிப்புகளாக இருந்தமையால், தற்சார்பு பொருளாதாரம் சார்ந்து போதிய கவனத்தை உள்வாங்கவில்லை. எனினும் ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தம்மை மாக்சிச மரபிலிருந்து வந்தவர்களாக அடையாளப்படுத்துவோர். மாக்சிச பொருளாதார இயல்புகளை சிறிதளவேனும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும். உதாரணமாக இலங்கை பெருமளவு வெப்ப வலய பிரதேசமாகும். இச்சூழலை கையாண்டு சூரிய மின்கலம் சார்ந்த சக்தி பயன்பாட்டை இலங்கை அதிகரித்திருப்பின், எரிபொருள் சார்ந்த பற்றாக்குறை அல்லது விலையேற்றத்திற்கு பெருமளவு சிரமப்பட வேண்டிய தேவை இல்லை. எனினும் இலங்கை தற்சார்பு பற்றிய போதிய விழிப்பை கொண்டிராமையினாலேயே, வெப்ப வலய பிரதேசத்தில் நீர்வீழ்ச்சிகளை கொண்டுள்ள சிறு தீவில், எரிபொருள் பற்றாக்குறை நீடிக்குமாயின் மின்சார துண்டிப்பும் ஏற்படும் என்ற செய்திகள் வருகிறது.

ஆறாவது, எதிர்க்கட்சிகள் அதிகார போட்டி பற்றிய சிந்தனைகளை கொஞ்சம் ஒதுக்கி, மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பதே இன்றைய தேவையாகும். தற்போதைய எரிபொருள் பற்றாக்குறையானது 2021-2022இல் அனுபவித்ததிலிருந்து வேறுபட்டது. இன்று, எண்ணெய் இறக்குமதிக்காக டொலர்கள் உள்ளன. ஆனால் ஈரான் மோதல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைச் சீர்குலைத்துள்ளது. இதற்கு மாறாக, 2021-2022இல் உலகச் சந்தையில் எண்ணெய் எளிதில் கிடைத்து வந்த நிலையில், அதற்கான அந்நியச் செலாவணி இலங்கையிடம் இருக்கவில்லை. எனவே, எதிர்க்கட்சியினர் சம்பந்தமில்லாத விஷயங்களை ஒப்பிடுவதையும், தற்போதைய எரிபொருள் நெருக்கடியிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதையும் நிறுத்த வேண்டும். மாறாக சிறந்த பரிந்துரைகளை அரசாங்கத்துக்கு வழங்குவதுடன், அதனை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வர முயல வேண்டும்.

எனவே, இலங்கையின் சமகால நெருக்கடி உலகின் பொதுவான பிரச்சனை என்பதை ஏற்றுக் கொண்டு, அரசாங்கமும் எதிர்க்கட்சியும் மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. பிரதானமாக ஆளும் தரப்பும் எதிர் தரப்பும் அரசியல் இலாபங்களை கணக்கிடாது, மக்கள் நலன் சார்ந்து, தன்முனைப்புகளை களைந்து செயல்பட வேண்டும். அரசாங்கம் தொடர்ச்சியாக வெகுஜன அரசியலூடாக தம்மை பாதுகாக்க முயலுவதோ அல்லது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிப்பதனூடாக தம்மை பலப்படுத்த முயலுவதோ மக்களை நெருக்கடிக்கு தள்ளும் செயலாகவே அமையும். அரசாங்கம் அதிகாரத்தை கொண்டுள்ளவர்களாக பாரிய பொறுப்பை கொண்டுள்ளார்கள். எதிர்க்கட்சிகள் எதிர் வரிசையில் எத்தகைய விமர்சனங்களையும் முன்வைக்கலாம். கடந்த காலங்களில் ஜே.வி.பியும் அத்தகைய நிலையையே கொண்டிருந்தது. எனினும் சமகாலத்தில் அரசாங்கமாக மக்கள் நலனை பாதுகாக்க கூடிய பொறுப்பு காணப்படுகிறது. அதனைப் புரிந்து கொண்டு, தன்முனைப்பை களைந்து, அனைவரையும் ஒன்று திரட்டி, நெருக்கடியை இயன்றளவு கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளை திட்டமிடுவதும் நடைமுறைப்படுத்துவதும் அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என்பதை ஜே.வி.பி ஏற்றுக்கொள்வதும் நடைமுறைப்படுத்துவதும் கட்டாயமானதாகும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-