மாக்சிச மரபாய் பிரச்சாரப்படுத்தும் ஜே.வி.பி சுரண்டலை ஆதரிக்கிறதா! -ஐ.வி.மகாசேனன்-
மேற்காசியா போர் உலகை மீள பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. குறிப்பாக உலகிற்கான எரிபொருளின் மையம் மேற்காசியா சார்ந்தே காணப்படுகின்றது. மேற்காசியாவில் நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் சர்வதேச நாடுகள் பொருளாதார குழப்ப நிலைக்கு தள்ளப்படும் இயல்பு காணப்படுகின்றது. இம்முறை ஈரான் சார்ந்து எழுந்துள்ள மேற்காசிய போரும் ஹர்முஸ் நீரிணை முடக்கமும் உலகிற்கான எரிபொருளின் பெரும்பகுதியை தடை செய்துள்ளது. இது நீளும் அபாயமே காணப்படுகின்றது. ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, 'ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்க வேண்டும். எதிரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாக இதனை பயன்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். உலகின் எண்ணெயில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. இதன் முடக்கம் உலகளாவிய எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது. ஈரான் உயர் தலைவரின் எச்சரிக்கை அது நீடிக்கும் அபாயத்தையே குறித்து நிற்கின்றது. இக்கட்டுரை உலகளாவிய எண்ணெய் விலை உயர்வை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் திறனை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
மார்ச் முதல் வாரங்களில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் போர் ஆரம்பிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து யாழ்ப்பாணம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பெரும் நிரல்களை உருவாக்கினார்கள். அது தொடர்பில் சமூக ஊடகங்களில் கேலிக்கைகளும் நிரம்பியது. எனினும் விரைவாக இந்நிரல்கள் கொழும்பு உட்பட தென்னிலங்கையிலும் ஏற்பட்டது. இலங்கை அரசாங்கமும், ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளன என்ற அறிவிப்பையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. எனினும் யாழ்ப்பாண எரிபொருள் நிரப்பு நிலையங்களின் நிரல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் எரிபொருள்களை தேவைக்கும் இயலுமைக்கும் ஏற்ப நிரப்பியதும் நிரல்களும் இயல்பாக தளர்ந்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் அச்சப்பட்டது போன்றே ஒரு வார கால இடைவெளியில் மேற்காசியா போரை காரணங்காட்டி எரிபொருட்களின் விலையையும் எரிவாயுவின் விலையும் அரசாங்கம் உயர்த்தி உள்ளது. எரிபொருட்களின் விலை சராசரியாக 10 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஒக்டேன் 92 ரக பெற்றோல் 24 ரூபாவினாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் 25 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் 22 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 13 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மாதந்த எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கமைய விலை அதிகரிக்கப்பட்டு 10 நாட்களுக்குள் மீண்டும் விலை அதிகரிப்பை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. எரிபொருள் விலையேற்ற விமர்சனங்கள் தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை ஜனாதிபதி, 'நான் ஒரு எண்ணெய் கிணறு வைத்திருப்பதாலோ அல்லது ஒரு எண்ணெய் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாலும் இலாபம் ஈட்ட விரும்புவதாலோ நான் எரிபொருள் விலையை உயர்த்தவில்லை. நான் எந்த நிறுவனத்தின் முகவரும் அல்ல' என விசனப்பட்டுள்ளார். கடந்த கால அரசாங்கங்கள் விலையேற்றம் செய்கையில் சுரண்டல் என பிரச்சாரம் செய்து போராட்டங்களை நெறிப்படுத்திய ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசநாயக்க, ஜனாதிபதியாக விலையேற்றத்தை நியாயப்படுத்துவதும் விசனப்படுவதும் பொறுப்புக்கூறலில் இருந்து நழுவும் கடந்த கால அரசாங்கங்களின் தொடர்ச்சியைப் பேணுவதாகவே அமைகின்றது.
2021ஆம் ஆண்டு செய்தி ஒன்று மீள் வாசிப்புக்கு உட்படுத்துவது பொருத்தமானதாக அமையும். 2021ஆம் ஆண்டு டிசம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அநியாயமாக அதிகரித்த எரிபொருள் விலையை அரசாங்கம் உடனடியாகக் குறைக்க வேண்டும் என்று கோரி தொடர் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. 'அதிகரிக்கப்பட்ட எண்ணெய் விலையைக் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குங்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாகக் குறைக்கவும்' என்ற தலைப்பில் இந்த தொடர் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இப்போராட்டத்தின் பின்னணியில் டிசம்பர்-21(2021) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது. அதன்படி, ரூபா.157ஆக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20 ரூபாவினாலும், ரூபா.184ஆக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் 23 ரூபாவினாலும், ரூபா.111ஆக இருந்த ஆட்டோ டீசல் 10 ரூபாவினாலும், ரூபா 77ஆக இருந்த மண்ணெண்ணெய் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது. இந்தப்பின்னணியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, ஜே.வி.பியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க, 'அரசாங்கத்தால் எரிபொருள் விலையில் ஏற்பட்ட நியாயமற்ற அதிகரிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அரசாங்கத்தின் அநீதியான விலை உயர்வுகளுக்கு எதிராக பொதுமக்களை அணிதிரட்ட ஜே.வி.பி நடவடிக்கை எடுக்கும்' என்றும் அவர் கூறினார். மேலும், 'டிசம்பர்-20 நள்ளிரவு முதல், அரசாங்கம் எரிபொருள் விலையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மீதான அழுத்தம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
2026ஆம் ஆண்டு அரசாங்கமாகவும் 2021ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளில் ஒன்றாகவும் விலையேற்றத்தை ஜே.வி.பி அணுகியுள்ள அரசியல் முறையை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகும்.
முதலாவது, 2021ஆம் ஆண்டு ஏறத்தாழ 10 சதவீத எரிபொருள் விலையேற்றத்தையே ஜே.வி.பி, அநியாய அதிகரிப்பாக பிரச்சாரப்படுத்தி மக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். இத்தொடர் போராட்டங்களே ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய அரகலய போன்றவற்றிற்கும் வழிவகுத்திருந்தது. 2021ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளில் ஒன்றாக ஜே.வி.பியின் குரல் மக்களின் குறைகளையே பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. ஆதலாலேயே அரகலயவின் அறுவடையையும் ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தியால் பெற்றுக்கொள்ளவும் முடிந்தது. எரிபொருட்களின் விலையேற்றம் தொடர் சங்கிலியாகும். அதன் தாக்கம் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் மக்களின் வாழ்க்கை சுமையை அதிகரிப்பதாக அமையும். 2022ஆம் அரகலயவின் ஆரம்பமும் எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தே ஆரம்பமானது. தற்போது ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சடுதியாக அதிகரித்துள்ள எரிபொருள் விலையேற்றமும் ஏறத்தாழ 10 சதவீதத்தினாலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆளுங்கட்சியாக சமீபத்திய விலையேற்றத்தை நியாயப்படுத்தும் கருத்துக்களையே ஜே.வி.பி முன்னெடுத்து வருகின்றது.
இரண்டாவது, 2021ஆம் ஆண்டில் 10 சதவீத எரிபொருள் விலையேற்றத்தை 'அரசாங்கத்தின் அநீதியான விலை உயர்வாக' கண்டித்திருந்த ஜே.வி.பியினருக்கு 2026ஆம் ஆண்டு 10 சதவீத எரிபொருள் விலையேற்றம் 'அரசாங்கத்தின் நியாயமான விலை உயர்வாக' அமைவது, ஜே.வி.பியின் கடந்த கால மக்கள் போராட்டங்களின் ஆர்வத்தை (Interest) கேள்விக்குட்படுத்துகின்றது. எதிர்க்கட்சியாக வெறுமனவே அரசாங்க செயற்பாடுகளை எதிர்ப்பவர்களாகவே மக்கள் போராட்டங்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்கள். மாறாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் இதய சுத்தியான எண்ணங்களை ஜே.வி.பி கொண்டிருக்கவில்லை. அவ்வாறான எண்ணங்களை கொண்டிருப்பில் சமகால விலையேற்றத்திற்கு மாறாக வேறு தெரிவுகளை சிந்தித்திருக்க வேண்டும். அல்லது விலையேற்றத்தின் விளைவாக ஏற்படக்கூடிய மக்களின் வாழ்க்கைச் சுமையை சீர்செய்யக்கூடிய உத்தியைக் கொண்டிருக்க வேண்டும். எனினும் ஜே.வி.பி அவை ஏதையும் கொண்டிருக்கவில்லை. மாறாக விலையேற்றத்தை மேற்காசிய போர் நெருக்கடியை காரணங்காட்டி தம்மை நியாயவாதிகளாக பாதுகாத்துக் கொள்ளவே முற்படுகின்றார்கள். மாறாக மக்களின் சுமை அதிகரிப்புக்கான தீர்வைப் பெற தயாரில்லை.
மூன்றாவது, அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களுக்கான விலையேற்றம் அப்பட்டமான சுரண்டலையே குறிக்கிறது. ஏற்கனவே இலங்கை அரசாங்கம் மார்ச் முதல் வாரங்களில் இலங்கையில் ஒரு மாத நுகர்வுக்கு போதுமான எரிபொருட்கள் காணப்படுவதாக அறிவித்திருந்தது. அதுமட்டுமன்றி மத்திய கிழக்கில் மோதல்கள் நடந்து வரும் போதிலும், இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் மற்றும் எரிசக்தி தடையின்றி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் தெரிவித்திருந்தார். இச்செய்திகள் இலங்கையில் முன்னைய எரிபொருள் கொள்வனவையே உறுதி செய்கின்றது. எனவே உலக சந்தையில் சமகாலத்தில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்குள் இலங்கையின் கையிருப்பில் உள்ள எரிபொருட்கள் நுகரப்பட்டிருக்கவில்லை. கையிருப்பில் உள்ளவை விலை குறைவுக்கு நுகரப்பட்டவையாகும். எனினும் உலகளாவிய சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பை, இலங்கையின் கையிருப்பில் உள்ள எண்ணெய்களுக்கு பொருத்துவது முதலாளிகளின் சுரண்டல் வியாபாரத்துக்கு இலங்கை அரசாங்கம் துணை போவதனையே உறுதி செய்கின்றது. பெற்றோலிய கூட்டுத்தாபன இயக்குனர் ஒருவர் விலை உயர்வை நியாயப்படுத்த, 'தற்போதுள்ள பெற்றோலிய இருப்புக்களின் விலைகளை அதிகரிப்பதன் மூலம், புதிய எரிபொருள் ஏற்றுமதிகள் வரும் போது பாரிய விலை உயர்வை தடுக்க அரசாங்கம் முயன்றதாக' தெரிவித்துள்ளார். எனினும் உலக சந்தையில் அமெரிக்கா மற்றும் ஜி-7 நாடுகள் தலையீட்டில் ஏற்கனவே எண்ணெய் விலை வெகுவாக குறைவடைந்துள்ளது. சுரண்டலை மறைக்க அரசாங்க விசுவாசிகள் தமது அரசாங்கத்தைப் போலவே கவர்ச்சிகரமாக மக்களை முட்டாளாக கருதும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நான்காவது, தி ஐலண்ட் (The Island) பத்திரிகையில் 'விலை நிர்ணயம் செய்பவராக அரசு' என்ற தலைப்பிலான ஆசிரியர் தலையங்கத்தில் 'ஜே.வி.பி மார்க்சியத்தை ஆதரிப்பதாகக் கூறுவதை விட கார்ல் மாக்ஸின் மரபுக்கு பெரிய அவமானம் எதுவும் இருக்க முடியாது' என ஆரம்பிக்கப்படுகின்றது. ஜே.வி.பி தொடர்ந்து ஆட்சியை பாதுகாக்க முற்படின், இதனை சுயபரிசோதனைக்கு உட்படுத்துவது அவசியமாகும். ஜே.வி.பியின் வெற்றி என்பது விபத்தினால் உருவாக்கப்பட்டது. அரகலய என்ற விபத்தே அதனை உருவாக்கியது. அவ்விபத்தில் ஜே.வி.பியின் மாக்சிச பிரச்சாரங்கள் கவர்ச்சிகரமானதாக அமைந்தது. சுரண்டலுக்கு எதிரான அறைகூவல்கள் மக்கள் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவும், அரசாங்க குறைகளை சுட்டுவதாகவும் அமைந்தது. சமகால அரசியல் சூழலும் அரகலய பின்னணியை ஒத்ததாகவே அமைகின்றது. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி என்பது வெறுமனவே கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான பெரமுன அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை சறுக்கல்களால் மாத்திரம் உருவாகியது இல்லை. 2020-2021 கொரோனோ மற்றும் 2022 பெப்ரவரியில் ஆரம்பமான ரஷ்சியா-உக்ரைன் போர் ஆகியன ஏற்படுத்திய உலகப் பொருளாதார தாக்கமும் ஒருவகை காரணமாகும். சமகாலங்களில் பாகிஸ்தான், மாலைதீவு என பல நாடுகளும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தன. அத்தகையதொரு பொது உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை மேற்காசிய போர் உருவாக்கியுள்ளது. அதனோடு இணைந்து இலங்கையின் முழுமையாக மீட்சி பெறாத பொருளாதார நெருக்கடி இலங்கையை மேலும் ஆபத்துக்குள் தள்ளக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. சமீபத்திய எரிபொருள் விலை உயர்வு பொதுமக்களுக்கு சவால்களை உருவாக்கியுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளை அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த பணவீக்கம் அதிகரிப்பதற்கு பங்களிக்கக்கூடும். இவ்அபாயங்கள் மீளவும் அரகலயாக்கான தேவையை உருவாக்கலாம். 2022இல் மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினையை ஜே.வி.பி கையாண்டது போன்று 2026இல் புதியதொரு அணி கையாளும் எனில் ஜே.வி.பியின் சரிவும் தவிர்க்க முடியாததாகும்.
எனவே, மேற்காசிய போரினை முதலீடாக கருதி எண்ணெய் வியாபாரிகளின் சுரண்டலுக்கு முன்னைய அரசாங்கங்கள் போல் இசைபடையும் ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முன்னைய அரகலய அனுபவங்கள் பிரதியீடு செய்யக்கூடிய எதார்த்தங்கள் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களிலும் பிரதான எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பாடற்ற போதும் கவர்ச்சிகர பிரசங்கிகளான 3 சதவீத வாக்குகளை கொண்டிருந்த ஜே.வி.பி மக்கள் பிரச்சினை மற்றும் எதிர்ப்பின் பலனை அறுவடை செய்தது. அத்தகையதொரு எதிர்வினையை ஜே.வி.பி என்றும் நினைவில் கொள்வது அவசியம். அவ்வாறு நினைவில் கொண்டாலேயே குறைந்தபட்சமேனும் மக்கள் நலனை பற்றிய சிந்தனைகள் துளிர்விடும். இல்லையேல் முதலாளிகளின் சுரண்டலுக்கு இசைவடைந்து மக்கள் சுமையை அதிகரிக்கும் வழக்கத்தையே ஜே.வி.பி தொடர்வது தவிர்க்க இயலாததாக அமையும். இக்கட்டுரை முழுமையாக ஜே.வி.பி தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்ற முனைப்பில் கடந்த கால பாதையை நினைவுபடுத்தும் தொனியிலேயே எழுதப்பட்டுள்ளது.

Comments
Post a Comment