உலகளாவிய நெருக்கடியிலிருந்து இலங்கையை பாதுகாக்க ஜே.வி.பியின் நாயக விம்ப பிரச்சாரம் போதுமானதா? -ஐ.வி.மகாசேனன்-

மேற்காசிய போரின் செய்திகள், மார்ச் முதல் வாரங்களில் இருந்த பரபரப்பினை, மார்ச் இறுதி வாரங்களில் பொதுவெளியில் அவதானிக்க முடியவில்லை. அதன் பொருள் மேற்காசிய போர் நெருக்கடி குறைவடைந்தது என்பதற்கு மாறாக, மக்கள் அதன் விளைவுகளோடு வாழப்பழக ஆரம்பித்துள்ளார்கள் என்பதே நிதர்சனமாகும். ஆயினும் நெருக்கடியின் வீச்சுகள் உயர்வடைந்து கொண்டே செல்கின்றன. அண்மையில் பொதுவெளி உரையாடல் ஒன்றில் முச்சக்கர வண்டி ஓட்டுநர், ‘எரிபொருள் விலையேற்றத்துக்கு சமாந்தரமாக பயணக்கூலியை வாகன முற்பதிவு செயலிகளில் பெற முடியாமையால், கட்டிட கூலி வேலைக்கு செல்லப் போவதாக’ ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதேவேளை போர் நீடிப்பு எரிபொருள் விலையேற்றம் ரூபா 800/= வரை செல்லக்கூடிய அபாய எச்சரிக்கையையும் அப்பொதுவெளி உரையாடலில் கேட்கக்கூடியதாக இருந்தது. இந்த எரிபொருள் விலையேற்றம் பற்றிய எச்சரிக்கைகள் தொடர் விளைவுகள் சார்ந்து நீளக்கூடியதாகும். இக்கட்டுரை கடந்த வாரத்தின் நீட்சியாகவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளலை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றம் பற்றிய செய்தி தேடலில், மின்சார விரயத்தை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்புக்களை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. மேற்காசிய போர் நான்காவது வாரத்தில் நுழைந்ததால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்த நிலையில், அனைத்து அரச நிறுவனங்களும் குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். "நாம் நுகர்வைக் குறைந்தபட்சம் 25 சதவிகிதம் குறைக்க வேண்டும். நிபுணர்கள் குழுவால் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களைத் தனியார் துறையும் கடைப்பிடிக்கும் என நம்புகிறோம்" என கொழும்பில் செய்தியாளர்களிடம் ஜெயதிஸ்ஸ கூறினார். மின் கட்டமைப்பைப் பராமரிப்பதற்காக நாடு அதிக நிலக்கரி மற்றும் டீசலை எரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது என்றும், அதன் விளைவாக ஏற்பட்ட 300 மெகாவாட் மின்சாரத் தேவை அதிகரிப்பால், மின்சார வாகன உரிமையாளர்கள் இரவு நேரங்களில் மின்னேற்றம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கடந்த வாரம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். மின்சார நுகர்வை பெருமளவில் குறைக்காவிட்டால், நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எரிசக்தி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்செய்திகளின் தொகுப்பு நாடு விரைவில் இருளில் மூழ்கக்கூடிய அபாய முன்னறிவிப்பை வழங்குகிறது.

மேற்காசிய போரின் தாக்கங்களும் எரிபொருள் விலையேற்றமும் விவசாயத்திலும் கடுமையான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளமை செய்திகளில் அறிய முடிகிறது. தம்புள்ளை போன்ற பெரும்பாலும் விவசாய பகுதிகளில் சேகரிப்பு வையங்களாக செயல்படும் சிறப்பு பொருளாதார மையங்களில் காய்கறி விலைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன. ஏனெனில் டீசல் பற்றாக்குறையால் பெரும்பாலான லாரிகள் இயங்க முடியவில்லை. அதேவேளை டீசல் பற்றாக்குறையால் ஏற்பட்ட அதிக போக்குவரத்துச் செலவுகள் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக பிற இடங்களில் காய்கறி விலைகள் அதிகரித்துள்ளன. ஆனால் இந்த விலை உயர்வுகளால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைப்பதில்லை, வியாபாரிகளுக்கு மட்டுமே இது நன்மை அளிக்கிறது. மேலும், நெல் அறுவடைக்கு தேவையான டீசல் நெருக்கடியால், அறுவடைச் செலவு அதிகரித்துள்ளது. இதன் விளைவு அரிசி விலையில் பிரதிபலிக்கும். நெல் விளைச்சலில் ஏற்பட்ட கடும் சரிவின் காரணமாக புழுங்கல் அரிசி மற்றும் சம்பா அரிசியின் விலை ஜூன்-ஜூலை மாதங்களில் முறையே ரூபா 300 மற்றும் ரூபா 400ஆக உயரக்கூடும் என்றும், உரத்தட்டுப்பாடு காரணமாக நிலைமை மேலும் மோசமடையும் என்றும் முன்னாள் வேளாண்மை துறை இயக்குனர் கே.பி.ஹெரத் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். 

மேற்காசிய போர் எரிபொருள் நெருக்கீடு மாத்திரமின்றி, உலகளாவிய உர விநியோகத்திலும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஹார்மூஸ் நீரிணை வெறுமனவே எரிபொருள் நெருக்கடியை மாத்திரமன்றி, உலகளாவிய உர விநியோகத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நீரிணையாகும். பாரசீக வளைகுடா உலகளாவிய உர உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் ஒரு முக்கியமான மையமாகவும் விளங்குகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி ஈரான், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஓமான் ஆகியவை யூரியா மற்றும் அம்மோனியா உள்ளிட்ட நைட்ரஜன் உரங்களை ஏற்றுமதி செய்யும் உலகின் முன்னணி நாடுகள் ஆகும். இவை உலகளாவிய யூரியா ஏற்றுமதியில் சுமார் 30 தொடக்கம் 35 சதவீதத்தையும், அம்மோனியா ஏற்றுமதியில் சுமார் 20 தொடக்கம் 30 சதவீதத்தையும் கொண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக உலகளாவிய உர ஏற்றுமதியில் 30 சதவீதம் ஹார்மூஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. மேற்காசிய போர் விளைவால், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய உர விலைகள் சராசரியாக 15-20 சதவீதம் வரை உயரக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் பிரதிபலிப்பாக நெல் சாகுபடிக்கான உர விநியோகத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு நிர்பந்திக்கப்பட்டுள்ளது. பதுக்கலைத் தடுப்பதற்காக வேளாண் சேவை மையங்கள் மூலமாக மட்டுமே உரம் வழங்கப்படும் என்று வேளாண் மேம்பாட்டு துறையின் ஆணையர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இவை அச்சமூட்டும் நிலைமைகளாகும். இவையாவும் இலங்கைக்கு மாத்திரமன்றி உலகளாவிய நெருக்கடியின் ஒரு பகுதியாகவே காணப்படுகிறது. எனினும் உலகளாவிய நெருக்கடியை இலங்கை மக்களும் ஏற்றுக்கொண்டு பயணிக்க வேண்டும் எனும் வாதங்கள் பொருத்தமானதாக அமையாது. அத்தகையதொரு பிரச்சாரங்களை தேர்தல் காலப்பகுதியில் இலங்கையின் அரசியல் கட்சிகள் முன்வைப்பதில்லை. இலட்சியபூர்வமான கனவுகளை கிள்ளி தூவுவார்கள். அப்பிரச்சாரங்களை நம்பியே மக்களும் அரசியல் கட்சிகளுக்கு அதிகாரத்தினை கைமாற்றி அரசாங்கமாக மாற்றுகின்றது. அரசாங்கம் என்ற நிலையில், உலகளாவிய பிரச்சினை என எதனையும் கடந்து செல்வது முரண்நகையாகும். குறிப்பாக சமகால ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தம்மை ஓர் சோசிலிச அரசியல் பொறிமுறைக்குள்ளிருந்து வளர்ந்ததொரு அரசியல் இயக்கமாக பிரச்சாரம் செய்கின்றது. ஏறக்குறைய 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் வெற்றிகளை புரட்சியாக விளம்பரப்படுத்தியது. அப்புரட்சிக்குரிய மாற்றங்களை கடந்த ஒன்றரை வருடங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளார்களா? அல்லது குறைந்தபட்சம் நெருக்கடிக்கான மீட்சியை புரட்சிகர அரசாங்கமாக கையாள்கிறார்களா என்பதில் பொதுவெளியில் சந்தேகங்களே காணப்படுகின்றது. சமகால அரசாங்கத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் கடந்த கால அரசாங்கத்தின் தொடர்ச்சியாகவே அமைகின்றது, அதுவும் காலம் தாழ்த்தியதாக அமைகின்றது என்ற குற்றச்சாட்டே பரவலாக காணப்படுகின்றது. காலம் தாழ்த்திய முடிவுகள் நெருக்கடியை அதிகப்படுத்துவதாகவும் அமைந்து விடுகிறது.

சோசலிசம் பற்றிய இலட்சியபூர்வ அறிவியல் பார்வை கார்ள் மாக்ஸ் சிந்தனையில் பிரதிபலிக்கப்பட்டது. நடைமுறையில் 1917ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ரஷ்ய புரட்சி வெறுமனவே சார் மன்னரின் ஆட்சி மாற்றத்தோடு குறித்து நிற்பதில்லை. அரசியல் மற்றும் கலாசார மாற்றத்தை அடிமட்டத்திலிருந்து குறித்து நிற்கின்றது. ரஷ்சியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின்மயமாக்கல் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. 1920 நவம்பரில், லெனின், ரஷ்யா கம்யூனிசத்தை நோக்கிய பாதையில் எஞ்சியிருக்கும் ஒரே படி மின்சாரம்தான் என்று அடையாளப்படுத்தும் ஒரு முழக்கத்தை வெளியிட்டார். “கம்யூனிசம் என்பது சோவியத் சக்தி மற்றும் நாடு முழுவதையும் மின்மயமாக்குவதற்குச் சமம்.”  சமீப காலம் வரை மாஸ்கோவில் உள்ள மத்திய மின் நிலையத்தில் அலங்கரித்திருந்த லெனினின் இந்த அறிக்கை, மின்சாரம் ஒரு கற்பனாவாதத்தின் முதன்மையான தொழில்நுட்பக் கருவியாக அரசால் அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்ட தருணமாக மக்களின் கூட்டு நினைவில் நிலைத்திருக்கிறது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், அக்காலத்தில் ரஷ்யாவில் பெருமளவிலான மின்மயமாக்கல் என்பது ஒரு நிறைவேறாத கனவாகவே கருதப்பட்டது என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளும்போது, ​​இந்த முன்மொழிவு துணிச்சலானதாக அமைகிறது. 20ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற தொழில்மயமான நாடுகளில் மின்சாரம் என்பது அன்றாட வீட்டு உபயோகத் தொழில்நுட்பமாகவும், சமூக மாற்றத்திற்கான ஒரு மாபெரும் சக்தியாகவும் விளங்கத் தொடங்கியது. எடிசனின் மின்விளக்கு மற்றும் சீமென்ஸ் நிறுவனத்தின் டைனமோக்கள் போன்ற கண்டுபிடிப்புகளின் வணிகரீதியான ஊக்குவிப்பும், மலிவான பெருமளவிலான விநியோகமும் அன்றாட வாழ்க்கையை அடியோடு மாற்றியமைத்திருந்தன. உண்மையில், ஒரு இலட்சிய அரசு கட்டாயம் "மின்மயமாக்கப்பட" வேண்டும் என்ற லெனினின் நம்பிக்கை, மேற்கு ஐரோப்பாவில் மின்சாரத்தின் மாற்றியமைக்கும் விளைவுகள் குறித்த அவரது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து உருவானது. 1908இல் ஜெர்மனி வழியாகப் பயணம் செய்தபோது, ​​வரவிருக்கும் காலத்தில் மின்சாரத் தொழில்நுட்பம் "முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வலிமையான கருவியாக" உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார். 

முதலாளித்துவ பொருளாதாரத்தின் வலிமையான கருவியை தமது சூழலுக்கு ஏற்ப லெனின் பயன்படுத்திக் கொண்டார். விவசாயம் உட்பட நாட்டின் பொருளாதாரத்தை, நவீன பெரிய அளவிலான உற்பத்தி எனும் ஒரு புதிய தொழில்நுட்ப அடித்தளத்தில் நிலைநிறுத்துவதே அது. மின்சாரம் மட்டுமே அந்த அடித்தளத்தை வழங்குகிறது என அடையாளப்படுத்தப்பட்டது. கம்யூனிசம் என்பது சோவியத் அதிகாரமும், அதனுடன் நாடு முழுவதையும் மின்மயமாக்குவதும் இணைந்ததாகும். இல்லையெனில், நாடு ஒரு சிறு விவசாய நாடாகவே இருக்கும், இதை நாம் தெளிவாக உணர வேண்டும் எனப் பிரச்சாரப்படுத்தப்பட்டது. உலக அளவில் மட்டுமல்ல, நாட்டிற்குள்ளும் முதலாளித்துவத்தை விட சோசலிசம் 1920களில் பலவீனமானது என்பதை லெனின் ஏற்றுக் கொண்டிருந்தார். இந்த பின்னணியிலேயே பொருளாதார அடித்தளத்தை சிறு விவசாய அடிப்படையிலிருந்து ஒரு பெரிய அளவிலான தொழில்துறை அடித்தளமாக மாற்றுவதை நோக்கி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. நாடு மின்மயமாக்கப்பட்டு, தொழில், விவசாயம் மற்றும் போக்குவரத்து ஆகியவை நவீன பெரிய அளவிலான தொழில்துறையின் தொழில்நுட்ப அடித்தளத்தில் நிலைநிறுத்தப்படும்போது மட்டுமே, ரஷ்ய புரட்சி முழுமையான வெற்றியைப் பெறும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவ்ஒழுங்கிலேயே செயற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

2024இல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இத்தகைய புரட்சிகர செயற்றிட்டங்களை இதயசுத்தியுடன் நடைமுறைப்படுத்துகிறதா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. போலியான பிரச்சாரங்களுடனேயே பெருமளவு நகருகின்றது. Clean Sri Lanka என்பதுள் போதைக்கு எதிரான பிரச்சாரம் என்பன அவ்வாறானதாகவே அமைகின்றது. மாறாக இலங்கையில் சுதேச பொருளாதாரத்தின் அடிப்படைகளை முதலாளித்துவத்தின் கருவிகளை மக்களின் சமத்துவ நலனுக்குள் வளைத்து பயன்படுத்தக் கூடிய திட்டங்களை வகுத்துள்ளார்களா? நடைமுறைப்படுத்தியுள்ளார்களா? என்பதில் போதிய விளக்கங்கள் காணப்படவில்லை. மேற்காசிய நெருக்கடியிலும் அமெரிக்காவினை ஜனாதிபதி துணிச்சலாக நிராகரித்தார்; ஈரான் போர்க்கப்பலுக்கு இலங்கை ஜனாதிபதி மனித நேயத்தை வெளிப்படுத்தினார்; ஜனாதிபதியின் தற்துணிவால் ஈரான் இலங்கையுடனேயே உள்ளது என நாயக விம்ப அரசியலையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. மாறாக துயரங்களுக்கு அரசாங்கத்தை புறந்தள்ளி, அதனை சர்வதேச விவகாரமாக புறந்தள்ளும் நிலைமைகளே காணப்படுகின்றது. இது முதலாளித்துவ வெகுஜன அரசாங்க இயல்பின் போலிகளின் தொடர்ச்சியை குறிப்பதாகவே அமைகின்றது.

எனவே, மேற்காசிய போர் உலகளவில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடி மற்றும் அபாய எச்சரிக்கைகள் பொதுமையானதாகும். எனினும் அதிலிருந்து மீட்சியை ஒவ்வொரு அரசும் தமது சூழலுக்கு ஏற்ப எதிர்வினையாற்றுவதனூடாகவே தமது மக்களை பாதுகாத்து கொள்ள முடியும். இலங்கையின் ஜே.வி.பி பரிணாம தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தம்மை மாக்சிச மரபிலிருந்து அடையாளப்படுத்துகின்ற போதிலும், நடைமுறை முரண்நகையானது என்பதே நெருக்கடிக்கான எதிர்வினைகள் உறுதி செய்கின்றது. ஆட்சி மாற்றம் புரட்சியை குறிப்பதில்லை. இலங்கையில் 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றமே புரட்சியாக கருதப்பட்டது. எனினும் அப்புரட்சி எத்தகைய அடிப்படை மாற்றங்களையும் உருவாக்கவில்லை என்பதை, மேற்காசியப் போரின் நெருக்கடிக்கான எதிர்வினைகள் உறுதி செய்கின்றது. இது முழு இலங்கை மக்களையும் நெருக்கடிக்கு தள்ளுகின்றது. தேசிய மக்கள் சக்தி பாதுகாத்துக் கொள்ளும் வெகுஜன நாயக விளம்பர போலி பிரச்சாரம் மக்களின் துயரை துடைக்க போதுமானதல்ல. ரஷ்ய புரட்சியில் லெனின், ரஷ்யாவின் அடிப்படையை உள்வாங்கி ஏற்படுத்திய மாற்றத்தை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் அடிப்படையை உள்வாங்கி மாற்றத்தை ஏற்படுத்தும் போது மாத்திரமே இலங்கை சுய பொருளாதாரத்தில் தன்னிறைவை உருவாக்கி, உலக நெருக்கடியிலிருந்து இலங்கையை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

சிவபூமி திருக்குறள் வளாகம்; தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அஸ்திவாரம்!

தென்னிந்திய திரைக்கலையில் ஈழத்தமிழர் கதை! -ஐ.வி.மகாசேனன்-

யாழில் இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையம் தமிழ்த்தேசிய பணியில் உன்னதமான முயற்சி! -ஐ.வி.மகாசேனன்-