தொல்லியல் ஆலோசனைக்குழு நியமனமும் மாற்றமில்லாத இனப்பாகுபாடும்! -ஐ.வி.மகாசேனன்-
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் தொல்லியல் துறை ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாவம்ச மனோநிலையில் கட்டமைக்கப்பட்டுள்ள பேரினவாத கருத்தியல்கள் வரலாறுதோறும் தொல்லியல் துறையினூடாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் தொல்லியல் மதக்கூறுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே தொல்லியல் திணைக்களமும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சின் கீழேயே செயற்படுகின்றது. அதுமட்டுமன்றி பல்லின கட்டமைப்பையும் வரலாற்றையும் கொண்ட இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்தின் சின்னத்தில் பௌத்த தர்ம சக்கரமும், பௌத்த விகாரையுமே இணைக்கப்பட்டுள்ளது. இந்தப்பின்னணியிலேயே ஈழத்தமிழர்களின் வாழ்விடங்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பிக்களும் தொல்லியல் என்ற பெயர்ப்பலகையுடன் அரச இயந்திரத்தின் பாதுகாப்புடன் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. ஆட்சி மாற்றங்களும் ஆட்சியாளர் மாற்றங்களும் அரச திணைக்களங்கள் குறிப்பாக தொல்லியல் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்புக்களை சீர்செய்ய முடியாத நிலைமைகளையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இந்நிலையிலேயே அண்மையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட...